திருப்புகலூர் - 2






                                             6. 070     பொது
                                         திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தில்லைச்சிற் றம்பலமும், செம்பொன் பள்ளி,
         தேவன் குடி,சிராப் பள்ளி, தெங்கூர்,
கொல்லிக் குளிர்அறைப் பள்ளி, கோவல்
         வீரட்டம், கோகரணம், கோடி காவும்,
முல்லைப் புறவம் முருகன் பூண்டி,
         முழையூர், பழையாறை, சத்தி முற்றம்,
கல்லில் திகழ்சீரார் காளத்தியும்
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :தில்லைச்சிற்றம்பலம், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர், கொல்லி அறைப்பள்ளி, கோவல் வீரட்டம், கோகரணம், கோடிகா, முல்லைக் கொடிகளை உடைய காடுகளை உடைய முருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்திமுற்றம், குறிஞ்சி நிலத்தில் திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.


பாடல் எண் : 2
ஆரூர்மூ லட்டானம், ஆனைக் காவும்,
         ஆக்கூரில் தான்தோன்றி மாடம், ஆவூர்,
பேரூர், பிரமபுரம், பேரா வூரும்,
         பெருந்துறை, காம்பீலி, பிடவூர், பேணும்
கூர்ஆர் குறுக்கைவீ ரட்டா னம்மும்,
         கோட்டூர், குடமூக்கு, கோழம் பமும்,
கார்ஆர் கழுக்குன்றும், கானப் பேரும்,
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :ஆரூர் மூலட்டானம், ஆனைக்கா, ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம், ஆவூர், பேரூர், பிரமபுரம், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், எல்லோரும் விரும்பும் சிறப்பு மிக்க குறுக்கை வீரட்டம், கோட்டூர், குடமூக்கு, கோழம்பம், மேகங்கள் தங்கும் கழுக்குன்றம், கானப்பேரூர் ..... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.


பாடல் எண் : 3
இடைமருது, ஈங்கோய், இராமேச் சரம்,
         இன்னம்பர், ஏர்இடவை, ஏமப் பேறூர்,
சடைமுடி, சாலைக் குடி,தக்களூர்,
         தலையாலங் காடு, தலைச்சங் காடு,
கொடுமுடி, குற்றாலம், கொள்ளம் பூதூர்,
         கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக் காடு,
கடைமுடி, கானூர், கடம்பந் துறை,
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர்இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.


பாடல் எண் : 4
எச்சில் இளமர், ஏம நல்லூர்,
         இலம்பையங் கோட்டூர், இறையான் சேரி,
அச்சிறு பாக்கம், அளப்பூர், அம்பர்,
         ஆவடு தண்துறை, அழுந்தூர், ஆறை,
கைச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக்
         கோயில், கரவீரம், காட்டுப் பள்ளி,
கச்சிப் பலதளியும், ஏகம் பத்தும்,
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங் கோட்டூர், இறையான்சேரி, அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், ஆவடுதுறை, அழுந்தூர், ஆறை, கைச்சினம், கற்குடி, கச்சூர், ஆலக் கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி, கச்சிப்பலதளி, ஏகம்பம் .... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.


பாடல் எண் : 5
கொடுங்கோளூர், அஞ்சைக் களம்,செங் குன்றூர்,
         கொங்கணம், குன்றியூர், குரக்குக் காவும்,
நெடுங்களம், நன்னிலம், நெல்லிக் காவு,
         நின்றியூர், நீடூர், நியம நல்லூர்,
இடும்பா வனம்,எழுமூர், ஏழூர், தோழூர்,
         எறும்பியூர், ஏர்ஆரும் ஏம கூடம்,
கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளும்
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்கா, நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், அழகிய ஏமகூடம், கடம்பை இளங் கோயில் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.


பாடல் எண் : 6
மண்ணிப் படிக்கரை, வாழ்கொளி புத்தூர்,
         வக்கரை, மந்தாரம், வார ணாசி,
வெண்ணி விளத்தொட்டி, வேள்விக் குடி,
         விளமர், விராடபுரம், வேட்க ளத்தும்,
பெண்ணை அருட்டுறை,தண் பெண்ணா கடம்,
         பிரம்பில், பெரும்புலியூர், பெருவே ளூரும்,
கண்ணை, களர்,காறை, கழிப்பா லையும்,
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை, மந்தாரம், வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங் கரையிலுள்ள அருட்டுறை, பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூர், கண்ணை, களர், காறை, கழிப்பாலை, முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

  
பாடல் எண் : 7
வீழி மிழலை,வெண் காடு, வேங்கூர்,
         வேதிகுடி, விசய மங்கை, வியலூர்,
ஆழி அகத்தியான் பள்ளி, அண்ணா
         மலை,ஆலங் காடும், அரதைப் பெரும்
பாழி, பழனம்,பனந் தாள், பாதாளம்,
         பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட் டூர்,தண்
காழி, கடல்நாகைக் காரோ ணத்தும்,
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர், வேதிகுடி, விசயமங்கை, வியலூர், ஆழி, அகத்தியான்பள்ளி, அண்ணாமலை , ஆலங்காடு, அரதைப் பெரும்பாழி, பழனம், பனந்தாள், பாதாளம், பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், காழி, கடற்கரையை அடுத்த நாகைக்காரோணம் .... ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் .


பாடல் எண் : 8
உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர்,
         உருத்திர கோடி, மறைக்காட்டு உள்ளும்,
மஞ்சுஆர் பொதியின்மலை, தஞ்சை, வழுவூர்
         வீரட்டம், மாதானம், கேதா ரத்தும்,
வெஞ்சமாக் கூடல், மீயச்சூர், வைகா,
         வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றி யூரும்,
கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக் கையும்,
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திர கோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர்வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .


பாடல் எண் : 9
திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன் பள்ளி,
         தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை,
கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல்,
         குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு,
அண்டர் தொழும்அதிகை வீரட் டானம்,
         ஐயாறு, அசோகந்தி, ஆமாத் தூரும்,
கண்டியூர் வீரட்டம், கருகா வூரும்,
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், கருகாவூர், ... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.



பாடல் எண் : 10
நறையூரிற் சித்தீச் சரம், நள் ளாறு,
         நாரையூர், நாகேச்சரம், நல்லூர், நல்ல
துறையூர், சோற்றுத்துறை, சூல மங்கை,
         தோணிபுரம், துருத்தி, சோமேச் சரம்,
உறையூர், கடல் ஒற்றி யூர்,ஊற் றத்தூர்,
         ஓமாம் புலியூர்,ஓர் ஏட கத்தும்,
கறையூர், கருப்பறியல், கன்றாப் பூரும்,
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :நறையூரிலுள்ள சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சரம், நல்லூர், மேம்பட்ட துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமேச்சரம், உறையூர், கடலை அடுத்த ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர் , ஒப்பற்ற ஏடகம், கறையூர், கருப்பறியல், கன்றாப்பூர்....ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.


பாடல் எண் : 11
புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர்,
         புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர்,
வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல்,
         வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி,
நிலமலிநெய்த் தானத்தோடு, எத் தானத்தும்
         நிலவுபெருங் கோயில்பல கண்டால், தொண்டீர்,
கலிவலிமிக் கோனைக் கால் விரலால் செற்ற
         கயிலாய நாதனையே காண லாமே.

         பொழிப்புரை :புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கைநல்லூர், வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி, வளமான நிலத்தை உடைய நெய்த்தானம் முதலிய எந்த ஊரிலும் விளங்குகின்ற பெருங் கோயில்கள் பலவற்றைக் கண்டால், தொண்டர்களே ! செருக்கிய வலிமை மிக்க இராவணனைத் தன் கால் விரலால் நசுக்கிய கயிலாய நாதனை அவ்விடங்களிலெல்லாம் காணலாம்.                                                      திருச்சிற்றம்பலம்



4. 074    பொது                        நினைந்த திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதற் பவளம்ஏய்க்கும்
கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும்
வித்தினை, வேத வேள்விக் கேள்வியை, விளங்க நின்ற
அத்தனை, நினைந்த நெஞ்சம், அழகிதா நினைந்த வாறே.

         பொழிப்புரை :முத்து, மணி, பொன், சிறந்த பவளக்கொத்து, வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய், தேவர்கள் வழிபடும் வித்து , வேதவேள்வி , வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை , நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே !


பாடல் எண் : 2
முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை, முனிகள் ஏத்தும்
இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை அஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம், அழகிதா நினைந்த வாறே.

         பொழிப்புரை : வலியனாய் , உலகுக்கெல்லாம் தலைவனாய், முனிவர்கள் துதிக்கும் இன்பனாய் , ஞான ஒளி வீசும் தலைவனாய் உள்ள , பார்வதி அஞ்சுமாறு தாருகவன முனிவர் யாகத்தில் புறப்பட்ட வலிய பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத்தோலை உரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .


பாடல் எண் : 3
கரும்பினும் இனியான் தன்னை, காய்கதிர்ச் சோதி யானை,
இருங்கடல் அமுதம் தன்னை, இறப்பொடு பிறப்பு இலானை,
பெரும்பொருட் கிளவி யானை பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம், அழகிதா நினைந்த வாறே.

         பொழிப்புரை : கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய் , சூரியன் போன்ற ஒளி உடையவனாய் , கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய் , பிறப்பு , இறப்பு இல்லாதவனாய் , மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள , பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .


பாடல் எண் : 4
செருத்தனை அருத்தி செய்து, செஞ்சரம் செலுத்தி ஊர்மேல்
கருத்தனை, கனக மேனிக் கடவுளை, கருதும் வானோர்க்கு
ஒருத்தனை, ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை, நினைந்த நெஞ்சம், நேர்பட நினைந்த வாறே.

         பொழிப்புரை : போரிடுவதில் விருப்பம் கொண்டு , நேராக அம்பைச் செலுத்தி முப்புரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அழித்தவனாய் , பொன்மேனி அம்மானாய் , தன்னைத் தியானிக்கும் தேவர்களுக்கு ஒப்பற்ற தலைவனாய் , பார்வதிபாகமாகியும் அவளிடத்து ஆசை நீங்காத கூத்தனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேரிதாகவே நினைந்தவாறு என்னே !


பாடல் எண் : 5
கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள்ஏறு
ஏற்றனை, இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை, அடியர் ஏத்தும் அமுதனை, அமுத யோக
நீற்றனை, நினைந்த நெஞ்சம், நேர்பட நினைந்த வாறே.

         பொழிப்புரை : கூற்றுவனை உதைத்த பாதங்களை உடைய இளையவனாய் , இளைய வெண்ணிறக் காளையை ஊர்பவனாய் , தேவர்கள் போற்றப் பெரிய சடைக் கற்றையில் கங்கையைச் சூடியவனாய் , அடியார்கள் போற்றும் அமுதமாய் , சிவாமுதம் நல்கும் திருநீற்று மேனியனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே .


பாடல் எண் : 6
கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன்,
விருப்பனை, விளங்கு சோதி வியன்கயி லாயம் என்னும்
பொருப்பனை, பொருப்பன் மங்கை பங்கனை, அங்கை ஏற்ற
நெருப்பனை, நினைந்த நெஞ்சம், நேர்பட நினைந்த வாறே.

         பொழிப்புரை : கரிய , பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனாய் , நீலகண்டனாய் , எல்லா ஆன்மாக்களையும் விரும்புபவனாய் , சோதி வடிவினனாய் , கயிலை மலையினனாய் , பார்வதி பாகனாய் , உள்ளங்கையில் நெருப்பை ஏற்பவனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே .


பாடல் எண் : 7
நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை,
சாதியை, சங்கவெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர்
சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா
ஆதியை, நினைந்த நெஞ்சம், அழகிதா நினைந்த வாறே.

         பொழிப்புரை : விதிப்படி தியானிக்கப்படுபவனாய் , சாதி மாணிக்கமாய் , சங்கைப்போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய் , வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய் , தூண்டா விளக்காய் உள்ள , ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .


பாடல் எண் : 8
பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனைப் பொருப்போடு ஒக்கும்
மழகளி யானையின் தோல் மலைமகள் நடுங்கப் போர்த்த
குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை, நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.

         பொழிப்புரை : உலகத்தாருக்கெல்லாம் பழகுதற்கு இனியவனாய் , பெருவடிவுடையவனாய் , மலையை ஒத்த இளைய மதயானையின் தோலைப் பார்வதி நடுங்குமாறு போர்த்த இளையனாய் , பிறையைக் குளிர்ந்த சடையிலே சூடிய அழகனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .


பாடல் எண் : 9
விண்இடை மின்ஒப் பானை, மெய்ப்பெரும் பொருள்ஒப்பானை,
கண்இடை மணிஒப் பானை, கடுஇருள் சுடர்ஒப் பானை,
எண்இடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை, நினைந்த நெஞ்சம், அழகிதா நினைந்த வாறே.

         பொழிப்புரை : வானில் தோன்றும் மின்னலை ஒப்பவனாய் , தனக்குத் தானே ஒப்பாகும் பெரிய மெய்ப்பொருளாய் , கண்ணில் மணி போலவும் , செறிந்த இருளில் சுடர்போலவும் ஒளிதருபவனாய் , திருமாலும் , பிரமனும் தம் மனத்தில் எண்ணமுடியாத வகையில் அவர்கள் அஞ்சுமாறு நீண்ட தீத்தம்பமாகிய தலைமையுடைய பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .


பாடல் எண் : 10
உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி, மூன்றூர்
நிரவனை, நிமிர்ந்த சோதி, நீண்முடி அமரர் தங்கள்
குரவனை, குளிர்வெண் திங்கள் சடையிடைப் பொதியும் ஐவாய்
அரவனை, நினைந்த நெஞ்சம்,  அழகிதா நினைந்த வாறே.

         பொழிப்புரை : ஞான வடிவினனாய் , திரண்ட வலிய தோள்களை உடைய இராவணனை நசுக்கியவனாய் , மும்மதில்களையும் அழித்தவனாய் , மிக்க ஒளியும் , நீண்ட கிரீடமும் உடைய தேவர்களுக்குக் குருவாய் , குளிர்ந்த பிறையைச் சடையில் கொண்டவனாய் உள்ள , ஐந்தலைப் பாம்பை ஆட்டும் பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

                                             திருச்சிற்றம்பலம்


4. 075    பொது                             தனித்திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தொண்டனேன் பட்டது என்னே, தூயகா விரியின் நல்நீர்
கொண்டு, இருக்கு ஓதி ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி,
இண்டைகொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பி ரானை,
கண்டனைக் கண்டு இராதே, காலத்தைக் கழித்த வாறே.

         பொழிப்புரை : தூய காவிரியின் தீர்த்தத்தைக் கொண்டு மந்திரங்களை ஓதி அபிடேகம் செய்து குங்குமக் குழம்பைச் சார்த்தி, தலையில் மாலையை அணிவித்து, நீலகண்டனாய் எம் தலைவனாய் இருக்கின்ற ஈசனை கண்குளிர நோக்கி மகிழாமல், காலத்தை வீணாக்கின செயலிலே அடியேன் ஈடுபட்டவாறு வருந்தத்தக்கது.


பாடல் எண் : 2
பின்இலேன் முன்இலேன் நான், பிறப்புஅறுத்து அருள்செய் வானே,
என்இலேன் ஆயினேன் நான், இளம்கதிர்ப் பயலைத் திங்கள்
சில்நிலா எறிக்குஞ் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே,
நின்அலால் களைகண் ஆரே, நீறுசேர் அகலத் தானே.

         பொழிப்புரை : முதலும் முடிவும் இல்லாத அடியேனுடைய பிறவித் துயரைப் போக்கி அருள் செய்பவனே ! இளைய கதிர்களை உடைய பிறை தலையிலே சிறிதளவு ஒளிவீசும், தேவர்கள் தலைவனாய்ச் சிவபுரத்து இருப்பவனே ! திருநீறணிந்த மார்பினனே ! அடியேனுக்கு என்று ஒரு பொருளும் இல்லாதேன் நான் . எனக்கு உன்னைத் தவிர பற்றுக்கோடு ஆவார் எவர் ?


பாடல் எண் : 3
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கி,
தெள்ளியேன்ஆகி நின்று தேடினேன், நாடிக் கண்டேன்,
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன்இருந்து அறிதி என்று
வெள்கினேன், வெள்கி நானும் விலாஇறச் சிரித்திட் டேனே.

         பொழிப்புரை :வஞ்சனை உடையயான், போலித் தொண்டனாய், காலத்தைப் பல ஆண்டுகள் வீணாக்கி, பின் மனத்தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன். நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவருடனேயே உள்ளத்தில் இருந்து கொண்டு, நீ அறிகின்றாய் என்பதை அறிந்து நான் வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன்.


பாடல் எண் : 4
உடம்புஎனும் மனை அகத்து உள்ளமே தகளி ஆக,
மடம்படும் உணர்நெய் அட்டி, உயிர்எனும் திரி மயக்கி,
இடம்படும் ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்,
கடம்புஅமர் காளை தாதை கழல்அடி காணல் ஆமே.

         பொழிப்புரை :உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாக, பசு ஞானமான உணர்வே நெய்யாக, உயிரே திரியாக, சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி, அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில் கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும், முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம்.


பாடல் எண் : 5
வஞ்சப்பெண் அரங்கு கோயில் வாள்எயிற்று அரவம் துஞ்சா
வஞ்சப்பெண் இருந்த சூழல் வான்தவழ் மதியம் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழல் உற்று,
வஞ்சப்பெண் உறக்கம் ஆனேன், வஞ்சனேன் என்செய் கேனே.

         பொழிப்புரை :வஞ்சனை உடைய பெண்ணாகிய கங்கை தங்கு மிடம் சடைமுடி. அந்தச் சடைமுடியிலே ஒளிபொருந்திய பற்களை உடைய பாம்புகள் உறங்காவாய் உள்ளன. அந்தச் செஞ்சடைச் சூழலிலே பிறை கங்கையில் தோய்ந்தவாறு உள்ளது. அந்தக் கங்கையினுடைய வாழ்க்கையை ஆள்பவன் சிவபெருமான். அவனைப் போன்ற வாழ்வை வாழத் தொடங்கி, வஞ்சனை உடைய அடியேன், வஞ்சனை உடைய பெண்ணின் உறக்கத்தைப் போலப் பொய் வாழ்க்கை வாழ்ந்து யாது செய்ய வல்லேன்?


பாடல் எண் : 6
உள்குவார் உள்ளத் தானை, உணர்வுஎனும் பெருமை யானை,
உள்கினேன் நானும், காண்பான் உருகினேன், ஊறி ஊறி
எள்கினேன், எந்தை பெம்மான் இருதலை மின்னு கின்ற
கொள்ளிமேல் எறும்பு என் உள்ளம், எங்ஙனம் கூடு மாறே.

         பொழிப்புரை :நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவனாய்ச் சிவஞானமாகிய பெருமையை உடையவனாய் உள்ள பெருமானை நானும் காண்பதற்கு நினைத்து , உருகி அன்பு ஊறி , உள்ளம் உருகினேன் . எந்தையாகிய பெருமானே ! உன்னை இரண்டு பக்கமும் பற்றி எரிகின்ற கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பு போன்ற என் உள்ளம் எங்ஙனம் அடைய இயலும் ?


பாடல் எண் : 7
மோத்தையைக் கண்ட காக்கை போல,வல் வினைகள் மொய்த்து,உன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்க,நான் மயங்கு கின்றேன்,
சீத்தையை, சிதம்பு தன்னை செடிகொள்நோய் வடிவுஒன்று இல்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வு தா, உலக மூர்த்தீ.

         பொழிப்புரை : பிணத்தைக் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய தீய வினைகள் அடியேனைச் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன். உலகத்துக்குத் தலைவனே! வெறுக்கத்தக்கதாய், பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய், நோய்க்கு இருப்பிடமாய் அழகிய வடிவில்லாத இந்த உடலை அடியோடு போக்கும் வண்ணம் அடியேனுக்குச் சிவ ஞானத்தை அருளுவாயாக .


பாடல் எண் : 8
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து,
பங்கத்தைப் போக மாற்றி, பாவித்தேன், பரமா, நின்னை,
சங்கு ஒத்த மேனிச் செல்வா, சாதல் நாள் நாயேன், உன்னை
எங்கு உற்றாய் என்ற போதா, இங்கு உற்றேன் என்,கண் டாயே.

         பொழிப்புரை : மேம்பட்டவனே ! சங்கை ஒத்த வெண்மையான மேனியை உடைய செல்வனே ! இந்த உடம்பு மண்ணிற்பொருந்துமாறு நெடிது வீழ்ந்து விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்துப் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி , உன்னையே ஞான பாவனையால் மனத்திற் கொண்டுள்ளேன் . என் உயிர் போகின்ற அன்று நாயைப் போன்று இழிந்த அடியேன் உன்னை , எங்கிருக்கின்றாய் என்று வினவினால் , இங்கிருக்கிறேன் என்று அருள் செய்வாயாக .


பாடல் எண் : 9
வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்து,என்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு,  உறங்குநான், புடைகள் போந்து,
கள்ளரோ புகுந்தீர், என்ன, கலந்துதான் நோக்கி நக்கு,
வெள்ளரோம் என்று நின்றார், விளங்குஇளம் பிறைய னாரே.

         பொழிப்புரை : விளங்குகின்ற இளம்பிறையைச் சூடிக் கங்கையைச் சடையில் ஏற்ற பெருமான் , ஏதோ என்னை வினவுபவர் போல வந்து என் உள்ளத்துக்குள்ளே புகுந்து நின்றாராக , உறங்கின நான் விழித்தெழுந்து இங்கு புகுந்த நீர் கள்ளரோ என்று வினவ , என் உள்ளத்தில் கலந்திருந்து , தாம் என்னைப் பார்த்துச் சிரித்து கங்கை ஆகிய வெள்ளத்தை உடையோம் என்று நின்றார் .


பாடல் எண் : 10
பெருவிரல் இறைதான் ஊன்றப் பிறைஎயிறு இலங்க அங்காந்து
அருவரை அனைய தோளான் அரக்கன்அன்று அலறி வீழ்ந்தான்,
இருவரும் ஒருவன் ஆய உருவம்அங்கு உடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு, காண்க,நான் திரியு மாறே.

         பொழிப்புரை : பார்வதி பாகனாய் உள்ள உருவத்தையுடைய வள்ளலாகிய சிவபெருமான் , தம் காற் பெருவிரலைச் சிறிது ஊன்றிய அளவில் மலையைப் போன்ற தோள்களை உடைய இராவணன் பிறையைப் போன்ற பற்கள் வெளித்தோன்ற வாயைப் பிளந்து கொண்டு அலறிக் கீழே சாய்ந்தான் . சிறிதும் வலிமையில்லாத அடியேன் அம்மையப்பனாகிய அப்பெருமானுடைய திருவடிகளைத் தலையில் சுமந்து கொண்டு எங்கும் திரிகின்றவாற்றைக் காண்க .

                                             திருச்சிற்றம்பலம்   

4. 076    பொது                            தனித்திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மருள்அவா மனத்தன் ஆகி மயங்கினேன், மதி இலாதேன்,
இருள்அவா அறுக்கும் எந்தை இணையடி நீழல் என்னும்
அருள்அவாப் பெறுதல் இன்றி, அஞ்சிநான் அலமந்தேற்குப்
பொருள்அவாத் தந்த வாறே, போதுபோய்ப் புலர்ந்தது அன்றே.

         பொழிப்புரை : அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும் விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளி பரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.


பாடல் எண் : 2
மெய்ம்மையாம் உழவைச் செய்து, விருப்புஎனும் வித்தை வித்தி,
பொய்ம்மையாம் களையை வாங்கி, பொறைஎனும்  நீரைப் பாய்ச்சி,
தம்மையும்  நோக்கிக் கண்டு, தகவுஎனும் வேலி இட்டு,
செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே.

         பொழிப்புரை : சரியை முதலிய உண்மை வழிகளாகிய உழுதலைச் செய்து, விருப்பம் என்னும் விதையை விதைத்து, பொய்ம்மை ஆகிய களைகளை நீக்கிப் பொறுமை என்னும் நீரைப் பாய்ச்சிச் சிவரூபத்தால் ஆன்மதரிசனமும் சிவ தரிசனத்தால் ஆன்மசித்தியும் பெற்று, திருநீறு சிவவேடங்கள் முதலிய தகுதிகளாகிய வேலியை அமைத்துச் சிவத் தியானமாகிய செந்நெறியில் நிற்பார்களானால் சிவகதி என்ற பயிர் விளையும்.


பாடல் எண் : 3
எம்பிரான் என்றதே கொண்டு, என்உளே புகுந்து நின்றுஇங்கு
எம்பிரான் ஆட்ட ஆடி, என்னுளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கும் என்றால்,
எம்பிரான் என்னின் அல்லால், என்செய்கேன் ஏழை யேனே.

         பொழிப்புரை : எம்பெருமான்! என்று அடியேன் அழைத்த ஒன்றனையே அடியேனுடைய தகுதியாகக் கொண்டு என் உள்ளத்தில் புகுந்து நின்று எம் பெருமான் செயற்படுத்தச் செயற்பட்டு, என்னைச் செயற்படுத்தும் தலைவனை எனக்குள்ளேயே தேடித் திரிகின்ற, அடியேன் தன்னை இன்னான் என்று கண்டு கொண்ட பிறகு எம்பெருமான் என்னைத் தன்னுள்ளே மறையச் செய்வான் என்றால் எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றலேயன்றி அறிவற்ற அடியேன் வேறு யாது செயற்பாலேன்?


பாடல் எண் : 4
காயமே கோயில் ஆகக் கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக
நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈச னார்க்குப் போற்றுஅவிக் காட்டி னோமே.

         பொழிப்புரை : இந்த உடம்பையே கோயிலாகவும், உலகியலை நீக்கிய மனம் அடிமையாகவும், தூய்மை உடைய மனமே பரம்பொருள் தங்கும் கருவறையாகவும் எம்பெருமான் அருட்சத்தியான மனோன் மணியே அவன் இலிங்க உருவமாகவும் அமைய, அடியேனுடைய அன்பே நெய்யும் பாலுமாக அவ்விலிங்கமூர்த்தியை மனம் நிறைவு பெற அபிடேகித்துப் பூசிக்கும் அப்பெருமானுக்கு எங்கள் வணக்கங்களையே நிவேதனப் பொருள்களாகப் படைத்தோம்.


பாடல் எண் : 5
வஞ்சகப் புலைய னேனை வழிஅறத் தொண்டில் பூட்டி
அஞ்சல்என்று ஆண்டு கொண்டாய், அதுவும் நின் பெருமைஅன்றே,
நெஞ்சகம் கனிய மாட்டேன், நின்னைஉள் வைக்க மாட்டேன்,
நஞ்சுஇடங் கொண்ட கண்டா, என்னென நன்மை தானே.

         பொழிப்புரை : நீலகண்டனே! வஞ்சனையான செயல்களில் ஈடு பட்ட கீழ்மகனாகிய அடியேனைத் தீநெறி கெட நன்னெறியில் ஈடு படுத்தி அஞ்சேல் என்று அடிமை கொண்டாய். அதுவும் உன் பெருமையை வெளிப்படுத்தும் செயலாகும். அடியேனோ உள்ளம் உருகி உன்னை என் உள்ளத்தில் நிலையாக வைக்கமாட்டாதேனாய் உள்ளேன். எனது நன்மை அதாவது நான் பெற்ற நன்மைதான் யாதோ?


பாடல் எண் : 6
நாயினும் கடைப்பட் டேனை நல்நெறி காட்டி ஆண்டாய்,
ஆயிரம் ஆரவம் ஆர்த்த அமுதனே, அமுதம் ஒத்து
நீயும்என் நெஞ்சின் உள்ளே நிலாவினாய், நிலாவி நிற்க,
நோய்அவை சாரும் ஆகில் நோக்கிநீ அருள்செய் வாயே.

         பொழிப்புரை : பல பாம்புகளை அணிகலன்களாக அணிந்த, அடியேனுக்கு அமுதம் போன்றவனே! நாயினும் கீழ்ப்பட்ட அடியேனை நல்ல நெறியைக் காண்பித்து அடிமையாகக் கொண்டுள்ளாய். நீயும் அடியேன் உள்ளத்தில் அமுதத்தைப் போல வந்து தங்கி விட்டாய். நீ அப்படித் தங்கியிருக்கவும் அடியேனுக்குத் துயரங்கள் ஏற்படுமாயின் அடியேனுடைய துயர நிலையை நோக்கி, அது நீங்குமாறு அருள் செய்வாயாக.


பாடல் எண் : 7
விள்ளத்தான் ஒன்றும் மாட்டேன், விருப்புஎனும் வேட்கையாலே
வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டி டாமே
உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதி யேனும்
கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணு மாறே.

         பொழிப்புரை : விருப்பம் என்னும் பற்றுள்ளத்தாலே பாத்திரத்தில் இருக்கும் தேனைப் பருகுவதுபோல உன்னை வாயிற்புகுத்தி உண்ண இயலாதபடி நீ என் உள்ளத்தினுள்ளே இருக்கின்றாய் என்றாலும் என் மூச்சுக் காற்றினுள்ளே கலந்திருக்கின்றாய் என்றாலும் கண்களுக்குப் புலனாகாதபடி மறைந்திருக்கின்றாய். ஆதலின் உன்னைக்காணும் வழி இன்னது என்று வாய்விட்டுச் சொல்லச் சிறிதும் வல்லேன் அல்லேன்.


பாடல் எண் : 8
ஆசைவன் பாசம் எய்தி அங்குஉற்றேன் இங்குஉற் றேனாய்
ஊசல் ஆட்டுண்டு வாளா உழந்து நான் உழி தராமே
தேசனே தேச மூர்த்தீ திருமறைக் காடு மேய
ஈசனே, உன்தன் பாதம் ஏத்துமாறு அருள்எம் மானே.

         பொழிப்புரை : ஆசை என்ற கயிற்றால் கட்டப்பட்டு இயக்கப் படுதலின் மேல் உலக ஆசையால் ஒரு பக்கமும், இவ்வுலக இன்ப நுகர்ச்சி விருப்பினால் வேறொரு புறமுமாகச் சலனப்பட்டு ஒன்றும் உறுதியாகச் செய்ய இயலாதேனாய் வருந்தி நான் சுழலாதபடி, பேரொளி உடையவனும், எல்லா உலகிற்கும் தலைவனும் திருமறைக் காட்டில் விரும்பி உறைந்து உயிர்களை ஆள்பவனும் ஆகிய உன் திருவடிகளைப் போற்றும் செயலிலேயே அடியேன் ஈடுபடுமாறு அருள் செய்வாயாக.


பாடல் எண் : 9
நிறைவுஇலேன், நேசம் இல்லேன், நினைவுஇலேன், வினையின் பாச
மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள், என் எம்மான்,
சிறை இலேன், செய்வது என்னே, திருவடி பரவி ஏத்தக்
குறைவு இலேன், குற்றம் தீராய், கொன்றைசேர் சடையி னானே.

         பொழிப்புரை : கொன்றைப்பூவினைத் தரித்த சடையை உடையவனே! எதிலும் மனநிறைவு இல்லாதேனாய், யாரிடத்தும் உண்மையான அன்பு இல்லேனாய், உன்னை விருப்புற்று நினைத்தல் இல்லேனாய், இருவினையால் கட்டப்பட்ட சூழலிலே அகப்பட்டுத் தடுமாறும் அடியேன் அதனை விடுத்துப் புறப்பட்டு வெளியேறும் நிலையை என் தலைவனாகிய நீ எனக்கு அருளுவாயாக. இவ்வுடலாகிய இருப்பிடத்தில் இருக்கும் அடியேன் யாது செயற்பாலேன்? உன் திருவடிகளை முன் நின்று போற்றி வழிபடும் திறத்தில் குறைபாடு ஏதும் இல்லேனாம் வகையில் என் குற்றங்களை எல்லாம் போக்கி அருளுவாயாக.


பாடல் எண் : 10
நடுவுஇலாக் காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா
அடுவன அஞ்சு பூதம் அவைதமக்கு ஆற்றல் ஆகேன்
படுவன பலவும் குற்றம் பாங்குஇலா மனிதர் வாழ்க்கை
கெடுவதுஇப் பிறவி சீசீ கிளர்ஒளிச் சடையி னீரே.

         பொழிப்புரை : செந்நிற ஒளி வீசும் சடையை உடைய பெருமானே! நீதி உணர்வு இல்லாத கூற்றுவன் வந்து நெருங்கும்போது உம்மை அறிவதற்கு உடன்படாது என்னைவருத்தும் ஐம்பொறிகளும் என்னை வருத்துவதனைப் பொறுக்க இயலாதேனாய் உயிருக்குத் துணையாக உதவாத இந்த மனித வாழ்விலே பல குற்றங்களும் நிகழ் கின்றமையின் இதனை இகழ்ந்து இப்பிறவிப் பிணியை அடியோடு அழித்தொழிக்க வேண்டி உம் அருளை வேண்டுகின்றேன்.

                                             திருச்சிற்றம்பலம்
        

4. 077    பொது                         தனித்திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கடும்பகல் நட்டம் ஆடிக் கையில்ஓர் கபாலம் ஏந்தி
இடும்பலிக்கு இல்லம் தோறும் உழிதரும் இறைவ னீரே,
நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரைய தேஓ.

         பொழிப்புரை : நடுப்பகலிலே கூத்தாடிக்கொண்டு கையில் ஒரு மண்டையோட்டினை ஏந்தி வழங்கப்படும் பிச்சைக்காக வீடுகள் தோறும் உலாவித்திரிகின்ற பெருமானே ! இமவான் மகளாகிய சிறந்த அணிகலன்களையும் சுருண்ட மெல்லிய கூந்தலையும் , வளைந்த காதணியையும் உடைய பார்வதி உமக்கு மனைவியாக வந்தபோதும் , இடுப்பில் கோவணத்துடன்தான் இருந்தீரோ ?


பாடல் எண் : 2
கோவணம் உடுத்த வாறும், கோள்அரவு அசைத்த வாறும்
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப் புலிஉரி அரைய னாரை
ஏவணச் சிலையி னாரை யாவரே எழுது வாரே.

         பொழிப்புரை : கோவணத்தை உடுத்து , கொடிய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி , தீப்போன்ற செந்நிற உடம்பில் சாம்பலைப் பூசி , அழகிய வடிவினராய் , செந்தாமரைக் காடு அனைய நிறத்தை உடையவராய் , புலித்தோலை இடையில் அணிந்தவராய் , அம்புக்கு ஏற்ற அழகிய வில்லை உடையவருமான பெருமானின் வடிவழகினை ஓவியத்தில் எழுதவல்ல ஆற்றல் உடையவர் யாவர் ?


பாடல் எண் : 3
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்,
துளக்கில் நன் மலர் தொடுத்தால் தூயவிண் ஏறல் ஆகும்,
விளக்குஇட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம்ஆகும்,
அளப்புஇல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே.

         பொழிப்புரை : திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல அதனை மெழுகுவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும் . ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால் , தூய வீட்டுலகத்துக்கு இவ்வான்மா மேல் நோக்கிச் செல்லும் . கோயிலில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானமாகிய பேறு பெறுவர். எல்லையில்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன .


பாடல் எண் : 4
சந்திரன்  சடையில் வைத்த சங்கரன், சாம வேதி,
அந்தரத்து அமரர் பெம்மான், ஆன் நல் வெள் ஊர்தியான் தன்
மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால்,
வெந்து அறும் வினையும் நோயும் வெவ்அழல் விறகுஇட்டு அன்றே.

         பொழிப்புரை : பிறையைச் சடையில் சூடி , எல்லோருக்கும் நன்மை செய்யும் பெருமானாய் , சாம வேதம் ஓதுபவனாய் வானத்திலுள்ள தேவர்களுக்கும் தலைவனாய் , பெரிய வெண்ணிறக் காளை வாகனனாய் உள்ள பெருமானுடைய திருவைந்தெழுத்தை ஓதி , திருநீற்றை அணிந்தால் கொடிய நெருப்பில் இடப்பட்ட விறகு போல நம்முடைய நோய்களும் , வினைகளும் வெந்து சாம்பலாகும் .


பாடல் எண் : 5
புள்ளுவர் ஐவர் கள்வர், புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர், சூறை கொள்வர் , தூநெறி விளைய ஒட்டார்,
முள்உடை அவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல்
உள்இடை மறைந்து நின்றுஅங்கு உணர்வினால் எய்யல்ஆமே.

         பொழிப்புரை : வேடர்களும் , திருடர்களும் போன்ற ஐம்பொறிகளும் என் உள்ளத்தில் புகுந்து நின்று மகிழ்வோடு துள்ளிக் கொண்டு , அடியேன் தூய வழியிலே செயற்பட ஒட்டாமல் என்னைக் கொள்ளையடிக்கின்றன . தீமை புரிவதில் நுண்மை உடைய அவற்றைச் சிவபெருமானுடைய திருவடி நிழலிலே , அவை காணாதபடி மறைந்து நின்று சிவஞானம் என்னும் அம்பினால் எய்து அழித்து விடலாம் .


பாடல் எண் : 6
தொண்ட னேன்பிறந்து, வாளாத் தொல்வினைக் குழியில் வீழ்ந்து,
பிண்டமே சுமந்து, நாளும் பெரியது ஓர் அவாவில் பட்டேன்,
அண்டனே, அமரர் கோவே, அறிவனே, அஞ்சல் என்னாய்,
தெள்திரைக் கங்கை சூடும் திகழ்தரு சடையி னானே.

         பொழிப்புரை : தேவனே ! தேவர்தலைவனே ! முக்காலமும் அறிபவனே ! தெளிந்த அலைகளை உடைய கங்கையைச் சூடிய செவ்வொளி விளங்கும் சடையனே ! உன் அடியவனாகிய யான் , மனிதனாகப் பிறந்து வீணாகப் பழைய வினைகளாகிய குழியிலே விழுந்து இந்த உடம்பைச் சுமந்து கொண்டு நாள்தோறும் பெரிய ஆசையில் அகப்பட்டுத் தடுமாறுகின்றேன் . அடியேனை அஞ்சேல் ! என்று அருளுவாயாக .


பாடல் எண் : 7
பாறினாய் பாவி நெஞ்சே, பன்றிபோல் அளற்றில் பட்டு,
தேறி நீ நினைதி ஆயில், சிவகதி திண்ணம் ஆகும்,
ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதி னாயே.

         பொழிப்புரை : தீவினையை உடைய நெஞ்சமே ! பன்றியைப் போல இந்த உலகவாழ்வாகிய சேற்றில் அகப்பட்டு , பல திசைகளிலும் ஓடுகின்றாய் . உப்பு நீர் ஊறி நாற்றமெடுத்துக் குருதி ஒழுகும் துவாரங்கள் மேற்கூரையாகிய தோலாலே மூடப்பட்டு உள்ள உடம்பின் நிலையை நீ அழகாகக் கருதுகிறாய். இதன் புன்மையைத் தெளிந்து நீ இறைவனை விருப்புற்று நினைப்பாயானால் உனக்கு நிச்சயமாகச் சிவகதி கிட்டும் .


பாடல் எண் : 8
உய்த்தகால் உதயத்து உம்பர் உமையவள் நடுக்கம் தீர
வைத்தகால் அரக்கனோ தன் வான்முடி தனக்கு நேர்ந்தான்,
மொய்த்தகால் முகிழ்வெண் திங்கள் மூர்த்தி, என் உச்சி தன்மேல்
வைத்தகால் வருந்தும் என்று வாடிநான் ஒடுங்கி னேனே.

         பொழிப்புரை : இராவணன் , கயிலை மலையை எடுக்கத் தொடங்கிய காலத்தில் , பார்வதிக்கு ஏற்பட்ட அச்சம் தீர , பெருமான் தன்னுடைய கால் விரலை வைத்து அழுத்த அதற்கு இலக்காக இராவணன் , தன் பெரிய தலைகளைக் கொடுத்தான் . பிறை சூடிய மூர்த்தியாகிய பெருமானுடைய , வண்டுகள் மொய்க்கும் நறுமணம் உடைய மலர் போன்ற திருவடிகளை அப்பெருமான் கரடுமுரடான என் தலைமீது வைத்தால் அத்திருவடிகள் வருந்துமென்று அவை என் தலையைச் சாராதவாறு நான் தாழ்ந்து ஒடுங்கினேன் .

திருச்சிற்றம்பலம்

4. 078    பொது                           குறைந்த திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வென்றிலேன் புலன்கள்ஐந்தும், வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன், ஆதலாலே, செந்நெறி அதற்கும் சேயேன்,
நின்றுஉளே துளும்பு கின்றேன், நீசனேன், ஈசனே, ஓ!
இன்றுஉளேன், நாளை இல்லேன், என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை :எல்லோரையும் ஆளும் பெருமானே ! அடியேன் ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன் . வென்ற சான்றோர்கள் உடைய சூழலிலுஞ் சென்றேன் அல்லேன் . ஆதலால் நேர்மையான வழிக்கு அப்பாற்பட்டவனாய் , உள்ளூர வருந்துகின்றேன். இன்று உயிருடன் இருக்கும் நான் நாளை உயிருடன் இருப்பேன் என்ற உறுதி இல்லை . அங்ஙனம் ஒருபயனும் எய்தாமையின் எதற்காகத் தோன்றினேன் நான் ?


பாடல் எண் : 2
கற்றிலேன் கலைகள் ஞானம்,  கற்றவர் தங்க ளோடும்
உற்றிலேன், ஆதலாலே, உணர்வுக்கும் சேயன் ஆனேன்,
பெற்றிலேன், பெருந்தடங்கண்  பேதைமார் தமக்கும் பொல்லேன்,
எற்று உளேன், இறைவனே, நான் என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : ஞானக் கலைகளைக் கல்லாத நான் அவற்றைக் கற்ற ஞானிகளோடு தொடர்பு கொள்ளாததனால் நல்லுணர்வுக்கு அப்பாற்பட்டு விட்டேன் . அத்தகைய நல்லறிவு இல்லாத நான் பெரிய நீண்ட கண்களை உடைய மகளிருக்கும் பொலிவு இல்லாதவனாய் உள்ளேன் . இறைவனே ! நான் எதற்காக இருக்கிறேன் ? இம்மை மறுமை வீடுகளுள் எதனையும் தேட இயலாதவனாயினேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?


பாடல் எண் : 3
மாட்டினேன் மனத்தை முன்னே, மறுமையை உணர மாட்டேன்,
மூட்டிநான் முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்,
பாட்டி நாய் போல நின்று, பற்றதாம் பாவம் தன்னை
ஈட்டினேன், களைய மாட்டேன், என்செய்வான் தோன்றினேனே.

         பொழிப்புரை : என் மனத்தை இம்மையில் செலுத்தி , மறுமையை உணராது , வாழ்வின் தொடக்கத்திலேயே இறைவனை வணங்காது , பெருமை இல்லாத நாய் போல நின்று , உலகப் பற்றாகிய பாவத்தைத் தேடி , அதனை நீக்காதவனாய் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

  
பாடல் எண் : 4
கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல்விடம் உண்ட கண்டன்
உரைக் கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன், ஆத லாலே,
அரைக் கிடந்து அசையும் நாகம் அசைப்பனே, இன்ப வாழ்க்கைக்கு
இரைக்கு அடைந்து உருகுகின்றேன், என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : கரையைக் கடந்து வெள்ளம் பெருகும் கடலில் தோன்றிய விடத்தை உண்ட கழுத்தை உடைய சிவபெருமான் சொல்லையும் கடந்த பெருமையை உடையவன் . ஆதலின் அவனைப் பற்றிப்பேசும் தன்மை உணராதேன் . ஆதலின் இடையில் பாம்பினை இறுகக் கட்டிய அப் பெருமானை நோக்கி , சிற்றின்பம் விளைக்கும் உலக வாழ்விற்கும் , பசியைப் போக்கும் உணவிற்கும் அடையத் தகாதாரை அடைந்து நெஞ்சு உருகிப் பொழுது போக்கும் நான் எதற்காகப் பிறப்பெடுத்தேன் என்று கூறி அவன் அருளை வேண்டுகின்றேன் .


பாடல் எண் : 5
செம்மைவெண் நீறு பூசும் சிவன், அவன் தேவ தேவன்,
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி,
அம்மை நின்று அடிமை செய்யா, வடிவுஇலா முடிவில் வாழ்க்கைக்கு
இம்மை நின்று உருகு கின்றேன், என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : செம்மையான மேனியில் , திருநீற்றைப் பூசும் சிவபெருமானாகிய , கொடிய வினைகளைப் போக்கும் தேவ தேவன் ஆகிய அந்த விகிர்தன்பால் விருப்புற்று முற்பிறப்பில் அடிமை செய்யாத பயனற்ற வாழ்க்கைச் செயலை நினைத்து , இப்பிறப்பில் உருகுகின்றேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?


பாடல் எண் : 6
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர் தமைப் புறமே பேசக்
கூச்சிலேன், ஆதலாலே , கொடுமையை விடுமாறு ஓரேன்,
நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன்,
ஏச்சுளே நின்று மெய்யே என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலை நீங்காதேனாய், கொடுமையை நீக்குமாறு அறியேனாய் , சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டேனாய் , இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன் . யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான் ?


பாடல் எண் : 7
தேசனைத் தேசம் ஆகும் திருமால்ஓர் பங்கன் தன்னை,
பூசனைப் புனிதன் தன்னை, புணரும்புண் டரிகத் தானை,
நேசனை, நெருப்பன் தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை
ஈசனை, அறிய மாட்டேன், என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : ஒளிஉடையவனாய் , உலகங்கள் புகழும் திருமாலை ஒரு பாகமாக உடையவனாய் , எல்லாராலும் வணங்கப்படுபவனாய் , தூயவனாய் , அடியாருடைய உள்ளத் தாமரையில் இருப்பவனாய் , அன்பனாய் , தீயை ஏந்தியவனாய் , செம்பொருளாய் உள்ள பெருமானை அறிய முடியாதவனாகின்றேன் . எதற்காகப் பிறந்தேன் நான் ?


பாடல் எண் : 8
விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன், இயல வெள்ளம்
திளைக்கின்ற முடியினான் தன் திருவடி பரவ மாட்டாது,
இளைக்கின்றேன், இருமி ஊன்றி, என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : இன்ப துன்பப் பயன்களை நல்கும் வினையை நினைத்து மயிர் வெளுத்த பிறகும் முளைத்து வளருகின்ற வினையைப் போக்குதற்கு முயலாது , கங்கை தங்கிய சடையை உடைய சிவபெருமானுடைய திருவடிகளை முன்நின்று வழிபட மாட்டாமல் , வீணாக இருமிக்கொண்டு , தடியை ஊன்றி இளைக்கும் நிலையினன் ஆகின்றேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?


பாடல் எண் : 9
விளைவுஅறிவு இலாமை யாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து,
களைகணும் இல்லேன், எந்தாய், காமரம் கற்றும் இல்லேன்,
தளைஅவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பம் எய்த
இளையனும் அல்லேன், எந்தாய், என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : எந்தாய் ! பின் விளையும் பயனை அறியாமையால் வேதனையாகிய குழியிலே விழுந்து , ஆழ்ந்து பற்றுக்கோடு இல்லாது இருக்கின்றேன் . உன்னை வசீகரிக்கும் இசையைக் கற்றேனும் அல்லேன் . மாலையை அணிந்த பெண்களோடு இன்பமாக வாழ இளையேனும் அல்லேன் . அடியேன் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான்?


பாடல் எண் : 10
வெட்டன உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட
அட்டமா மூர்த்தி ஆய ஆதியை, ஓதி நாளும்
எள் தனை எட்ட மாட்டேன், என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : கடும் போக்கு உடையனாகி , தன் வீரத்தைக் காட்டக் கயிலை மலையைப் பெயர்க்கத் தொடங்கிய தீயவனாகிய இராவணனின் செருக்கை அடக்கி அவன் வாயினின்றும் சுவையாகச் சாம வேதகீதம் கேட்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானுடைய பெருமையைச் சொல்லி அவனை எள்ளளவும் அணுகமாட்டேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?
                                             திருச்சிற்றம்பலம்


4. 079    பொது                            குறைந்த திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தம்மானம் காப்பது ஆகித் தையலார் வலையுள் ஆழ்ந்து,
அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய
செம்மான ஒளிகொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை, நினைய மாட்டேன், என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : மகளிருக்கு அவமானம் உண்டாகாதவாறு காக்கும் முயற்சியில் ஈடுபட்டு , அவர்களுடைய கண்வலையிற்பட்டு , அதனால் , தலைவனாய் அமுதம் போன்று இனியனாய் , எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் தானாக உள்ளவனாய் , செம்மேனி அம்மானாய் , அடியேனுடைய உள்ளத்தில் நிலைபெற்றிருக்கும் எம்முடைய தலைவனை விருப்புற்று நினையமாட்டேன் . யாது செய்வதற்காக இவ்வுலகிற் பிறப்பெடுத்துள்ளேன் நான் ?


பாடல் எண் : 2
மக்களே மணந்த தாரம் அவ்வயிற்று அவரை ஓம்பும்
சிக்குஉளே அழுந்தி, ஈசன் திறம்படேன், தவம்அது ஓரேன்,
கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும்,
இக் களேபரத்தை ஓம்ப என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : மனைவி , மக்கள் , அவர்களுடைய மக்கள் ஆகியவர்களைப் பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில் ஈடுபடாது , தவம் என்பதனை உணராது , நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப் பாதுகாப்பதற்கே முயல்கின்றேன். யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?


பாடல் எண் : 3
கூழையேன் ஆக மாட்டேன், கொடுவினைக் குழியில் வீழ்ந்து,
ஏழின் இன் இசையி னாலும் இறைவனை ஏத்த மாட்டேன்,
மாழைஒண் கண்ணின் நல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையேன் ஆகி, நாளும் என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய் , ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய் , இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன் . என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான்?


பாடல் எண் : 4
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்,
பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன், பேதையேன் நான்,
என்உளே மன்னி நின்ற சீர்மை அதுஆயி னானை,
என் உளே நினைய மாட்டேன், என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : முற்பிறப்பில் செய்த என் வினைப்பயனாலே பெருமானை நினைக்க இயலாத அடியேன் உலகியலிலே ஈடுபட்டு இவ்வுலக இன்பங்களையே மேம்பட்டனவாகப் பிதற்றிக் கொண்டிருப்பேனானேன் . அறிவில்லாத அடியேன் என் உள்ளத்தினுள்ளே நிலை பெற்றிருத்தலை தமது சிறப்பியல்பாக உள்ள பெருமானை என்னுள் வைத்துத் தியானிக்க மாட்டாதேனாகின்றேன் . வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் தோன்றினேன் நான் ?


பாடல் எண் : 5
கறையணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்,
பிறைநுதல் பேதை மாதர் பெய்வளை யார்க்கும் அல்லேன்,
மறைநவில் நாவி னானை மன்னிநின்று இறைஞ்சி, நாளும்
இறையேயும் ஏத்த மாட்டேன், என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : நீலகண்டனை வசப்படுத்த இசைத்துறைகளைக் கற்றேனும் அல்லேன் . பிறைபோன்ற நெற்றியை உடைய வளையலை அணிந்த பேதைமைக் குணத்தை உடைய மகளிரை வசப்படுத்தும் திறத்தேனும் அல்லேன் . வேதங்களை ஓதும் நாவினை உடைய எம் பெருமானை நிலையாக நின்று ஒருநாளும் சிறிதளவும் போற்ற மாட்டாதேனாகிறேன் . வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான் ?


பாடல் எண் : 6
வளைத்துநின்று ஐவர் கள்வர் வந்துஎனை நடுக்கம் செய்யத்
தளைத்துவைத்து உலையை ஏற்றித் தழல்எரி மடுத்த நீரில்
திளைத்துநின்று ஆடுகின்ற ஆமைபோல் தெளிவு இலாதேன்,
இளைத்து நின்று ஆடுகின்றேன், என்செய்வான் தோன்றி னேனே.

         பொழிப்புரை : ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால் , எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க , அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன் . வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 415
ஆர்உயிரின் திருவிருத்தம், தசபுரா ணத்துஅடைவும்,
பார்பரவும் பாவநா சப்பதிகம், பன்முறையும்
நேர்படநின்று அறைகூவும் திருப்பதிகம், முதல்பிறவும்,
பேர்அருளின் கடல்அளிக்கும் பெருமானைப் பாடினார்.

         பொழிப்புரை : `ஆருயிர்த் திருவிருத்தமும்`, `தசபுராணத்` திருப்பதிகமும், உலகம் போற்றி உய்யும் `பாவநாசத்` திருப்பதிகமும் பலமுறையும் நேர்படும்படி நின்று இறைவரைக் கருதிச் `சரக்கறையோ` என்று அறை கூவும் `சரக்கறைத் திருப்பதிகமும்` என்று இவை முதலான பதிகங்களால், பேரருட்கடலாம் அடியார்க்கு அளிக்கும் சிவபெருமானைப் பாடியருளினார்.

         குறிப்புரை :
1.    ஆருயிர்த் திருவிருத்தம் - `எட்டாந் திசைக்கும்` (தி.4 ப.84).

2.    தசபுராணத் தடைவு - `பருவரை` (தி.4 ப.14), பண்: பழம்பஞ்சுரம்.

3.    பாவநாசப் திருப்பதிகம் - `பற்றற்றார்சேர்.` (தி.4 ப.15) பண்:                                     பழம்பஞ்சுரம்.
4.    அறைகூவும் திருப்பதிகங்கள்:
(அ) `சிவனெனும் ஓசை` (தி.4 ப.8) பண்: பியந்தைக் காந்தாரம்.
(ஆ) பசுபதித்திருவிருத்தம்: `சாம்பலைப் பூசி` (தி.4 ப.110).
(இ) சரக்கரைத் திருவிருத்தம்: `விடையும் விடைப்பெரும்` (தி.4 ப.111).
(ஈ) தனித் திருவிருத்தங்கள்:  (1) `பவளத் தடைவரை` (தி.4 ப.113)
                                              (2) `வெள்ளிக் குழை` (தி.4 ப.112) 
(உ) வினாவிடைத் திருத்தாண்டகம்: `அண்டம் கடந்த`(தி.6ப.97).


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

4. 084    பொது                            ஆருயிர்த் திருவிருத்தம்
                                             திருச்சிற்றமபலம்
பாடல் எண் : 1
எட்டுஆம் திசைக்கு இருதிசைக்கும் இறைவா முறைஎன்று
இட்டார் அமரர்வெம் பூசல் எனக்கேட்டு எரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுரம் மூன்றையும் ஓர்அம்பினால்
அட்டான் அடிநிழல் கீழது அன்றோ என்றன் ஆருயிரே.

         பொழிப்புரை : கிழக்கு தென்கிழக்கு முதலிய எட்டுத்திசைகளொடு மேல் கீழ் ஆக இருதிசைகள் ஆகப் பத்துத்திசைகளுக்கும் தலைவனே ! ` எங்களைத் திரிபுரத்து அசுரர்களிடமிருந்து காத்தல் நினக்கே உரிய செயலாகும் ` என்று தேவர்கள் வேண்டிய கூக்குரலைக் கேட்டுத் தீப்போல விழித்துத் தங்களோடு நட்புறவினால் பொருந்தாத கீழ்மக்களுடைய வானத்தில் உலவும் மும்மதில்களையும் ஓரம்பினால் அழித்த சிவபெருமானுடைய திருவடி நிழலின் கீழ் அல்லவோ என் அரிய உயிர் தங்கியுள்ளது .


பாடல் எண் : 2
பேழ்வாய் அரவின் அரைக்குஅமர்ந்து ஏறிப் பிறங்குஇலங்கு
தேய்வாய் இளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழுவுல கோடுமண் விண்ணும் மற்றும்
ஆவான் ஆடிநிழல் கீழது அன்றோ என்றன் ஆருயிரே.

         பொழிப்புரை : பிளந்த வாயை உடைய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி , ஒளிவீசும் உருத்தேய்ந்த இளம் பிறையைச் சிவந்த சடையின்மேல் வைத்த தேவர்பிரானாய் , மூப்பும் இளமையும் இலாது என்றும் ஒரே நிலையனாய் , இந்நிலவுலகும் தேவருலகும் மற்ற உலகங்களுமாகி உள்ள சிவபெருமானுடைய திருவடி நிழலின் கீழ் அல்லவோ அடியேனது அரிய உயிர் நிலைத்துள்ளது .


பாடல் எண் : 3
தரியா வெகுளியன் ஆய்த்தக்கன் வேள்வி தகர்த்து உகந்த
எரியார் இலங்கிய சூலத்தி னான் இமை யாதமுக்கண்
பெரியான் பெரியார் பிறப்புஅறுப் பான் என்றும் தன்பிறப்பை
அரியான் அடிநிழல் கீழது அன்றோ என்றன் ஆருயிரே.

         பொழிப்புரை : தாங்குதற்கரிய சினம் கொண்டு தக்கன் செய்த வேள்வியினை அழித்து மகிழ்ந்தவனாய் , நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கிய சூலப்படையை உடையவனாய் , இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய பெரியவனாய் , மேம்பட்ட அடியார்களின் பிறவித்தொடர்பை அறுப்பவனாய் , தான் பிறவா யாக்கைப் பெரியோனாய் இருக்கும் சிவபெருமானுடைய அடி நிழல் கீழது எம் ஆருயிரே . ( பிறப்பை + அறியான் பிறத்தலை இல்லாதவன் . அருமை - இன்மை .)


பாடல் எண் : 4
வடிவுஉடை வாள்நெடுங் கண் உமையாளை யொர்பால்மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவிப்
பொடிகொள் அகலத்துப் பொன்பிதிர்ந்து அன்ன பைங்கொன்ற அம்தார்
அடிகள் அடிநிழல் கீழது அன்றோ என்தன்ஆருயிரே.

         பொழிப்புரை : பேரழகுடைய , மாவடு போன்ற மையுண்ட கண்களை உடைய பார்வதியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று , பொந்துகளை இருப்பிடமாகக் கொண்ட பாம்பினை வேங்கையின் தோலாகிய ஆடைமேல் இறுகச் சுற்றி , மேலே பூசப்பட்ட நீற்றின்மீது பொன்னைச் சிதறவிட்டாற்போன்ற பசிய கொன்றைமாலையை அணிந்த சிவ பெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர் .


பாடல் எண் : 5
பொறுத்தான் அமரர்க்கு அமுது அருளி நஞ்சம் உண்டு, கண்டம்
கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செஞ்சடைமேல்
செறுத்தான் தனஞ்சயன் சேண்ஆர் அகலம் கணை ஒன்றினால்
அறுத்தான் அடிநிழல் கீழதுஅன் றோஎன்தன் ஆருயிரே.

         பொழிப்புரை : தேவர்களுக்கு அமுதம் வழங்க விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருத்தி நீலகண்டனாய் அந்தக் கறுப்பினைத் தனக்கு அழகாகக் கொண்டவனாய் , கங்கையைச் சிவந்த சடைமீது அடக்கினவனாய் , அருச்சுனனுடைய பரந்த மார்பினை அம்பு ஒன்றினால் புண்படுத்திய சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர் .


பாடல் எண் : 6
காய்ந்தான் செறற்குஅரி யான்என்று காலனைக் கால் ஒன்றினால்
பாய்ந்தான் பணைமதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால்
மேய்ந்தான் வியன்உலகு ஏழும் விளங்க விழுமியநூல்
ஆய்ந்தான் அடிநிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே.

         பொழிப்புரை : மார்க்கண்டேயன் எமனாற் பகைத்துயிர் கவரப்படுதற்குரியனல்லன் என்று அவனைக் கோபித்தவனாகிய கூற்றுவனைத் திருவடி ஒன்றினால் பாய்ந்துதைத்தான் . பெரிய மதில்கள் மூன்றனையும் அம்பு என்ற ஒள்ளிய தீயினில் மூழ்கிச் சாம்பலாகச் செய்து , இடமகன்ற ஏழுலங்களும் விளங்கும் படியாக மேம்பட்ட நூல்களை ஆய்ந்துள்ள சிவபெருமான் அடிநீழற் கீழதல்லவோ எனதாருயிர் .

 
பாடல் எண் : 7
உளைந்தான் செறுதற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால்
களைந்தான் அதனை நிறைய நெடுமால் கண் ஆர் குருதி
வளைந்தான் ஒருவிரலின்னொடு வீழ்வித்துச் சாம்பர் வெண்நீறு
அளைந்தான் அடிநிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே.

         பொழிப்புரை : பிரமனுடைய தவறான செயலைக் கண்டு வருந்தினனாய் , அச்செயலுக்கு உரிய ஒறுப்புக்காக வெல்லுதற்கு அரிய அவன் தலையை நகம் ஒன்றினால் நீக்கியவனாய் , அம்மண்டையோடு நிறையுமாறு திருமாலுடைய உடம்பிலுள்ள குருதியை நிரப்பினனாய் , இராவணனை ஒருவிரலை அழுத்திக் கயிலைமலையின் கீழ் விழச் செய்தவனாய் , சாம்பலாகிய நீற்றினை உடல் முழுதும் பூசியவனுமான சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர் .


பாடல் எண் : 8
முந்துஇவ்வட் டத்துஇடைப் பட்டது எல்லாம் முடி வேந்தர் தங்கள்
பந்திவட் டத்து இடைப் பட்டு அலைப் புண்பதற்கு அஞ்சிக் கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும் நக்கசென்னி
அந்திவட் டத்து ஒளி யான்அடிச் சேர்ந்தது என் ஆருயிரே.

         பொழிப்புரை : என் இந்த வாழ்க்கையின் முற்பகுதியில் யான் செய்தனவற்றை எல்லாம் உட்கொண்டு அரசர்களுடைய பரிசனங்களாகிய தொகுதியினரிடம் அகப்பட்டு அவர்களால் பலவகையாகத் துன்புறுத்தப்படுவதற்கு அஞ்சிப் போலும் நந்தியா வட்டப்பூவும் கொன்றைப் பூவும் ஒளிவீசும் சென்னியும் மாலை வானம் போன்ற செம்மேனியுமுள்ள அம்மானுடைய அடிநிழலைச் சேர்ந்தது என் ஆருயிர் .


பாடல் எண் : 9
மிகத்தான் பெரியதொர் வேங்கை அதள்கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவ நல்லாளை நடுக்கு உறுப்பான் வரும்பொன்
முகத்தால் குளிர்ந்து இருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த
அகத்தான் அடிநிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே.

         பொழிப்புரை : மிகப்பெரிய வேங்கையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திப் பார்வதியை உள்ளம் அஞ்சி நடுங்கச் செய்பவனாய்த் தன்னை நோக்கி வந்த பொன் போன்ற பொலிவை உடைய கங்கையைத் தன் சடையில் முகந்து கொண்டதால் சடை குளிர அதனால் மனத்தில் மகிழ்வெய்தியவனாய் , என்னை அடிமையாக ஏற்றுக் கொள்ள இசைந்த சிவபெருமானுடைய அடிநிழல் கீழது அல்லவோ எனதாருயிர் .


பாடல் எண் : 10
பைம்மாண் அரவு அல்குல் பங்கயச் சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை அட்ட கடவுள் முக்கண்
எம்மான் இவன்என்று இருவரும் ஏத்த எரிநிமிர்ந்த
அம்மான் அடிநிழல் கீழதுஅன் றோ என்தன் ஆருயிரே.

         பொழிப்புரை : படம் எடுக்கும் மேம்பட்ட பாம்பினை ஒத்த அல்குலை உடையவளாய்ச் சிறிய பாதங்களை உடையளான பார்வதி அஞ்சக் கையிலே மேம்பட்ட கட்டமைந்த வில்லை ஏந்திய மன்மதனை அழித்த தெய்வமாகிய முக்கண்ணனாம் எம்பெருமான் என்று பிரமனும் திருமாலும் புகழும்படி தீத்தம்பமாக ஓங்கி வளர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடைய அடி நிழல் கீழதல்லவோ எனதாருயிர் .


பாடல் எண் : 11
பழகு அவ்வூர் ஊர்தி அரன் பைங்கண் பாரிடம் பாணிசெய்யக்
குழலும் முழவொடு மாநடம் ஆடி உயர் இலங்கைக்
கிழவன் இருபது தோளும் ஒருவிர லாலி்இறுத்த
அழகன் அடிநிழல் கீழது அன்றோ என்தன்ஆருயிரே

         பொழிப்புரை : ஊர்ந்து செலுத்தக் காளையை வாகனமாக உடையவனாய் , தீயவர்களை அழிப்பவனாய் , பூதங்கள் தாளம் போடக் குழலும் முழவும் ஒலிக்க மேம்பட்ட கூத்து நிகழ்த்துபவனாய் , மேம்பட்ட இலங்கை அரசனாகிய இராவணனுடைய இருபது தோள்களையும் தன் திருவடியின் ஒருவிரலால் நெரித்த அழகனாகிய சிவபெருமானுடைய அடிநிழலின் கீழல்லவோ அடியேனுடைய அரிய உயிர் பாதுகாவலாக உள்ளது .

                                             திருச்சிற்றமபலம்


4. 014   பொது  -  தசபுராணம்            பண் - பழம்பஞ்சுரம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பருவரை ஒன்றுசுற்றி அரவங்கைவிட்ட
         இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடு மால் நிறத்தை அடுவான்விசும்பு
         சுடுவான் எழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றுஇதற்குஒர் பிதிகாரம் ஒன்றை
         அருளாய் பிரானே எனலும்
அருள்கொடு மாவிடத்தை எரியாமல்உண்ட
         அவன் அண்டர் அண்டர் அரசே.

         பொழிப்புரை : பெரிய மலையைச் சுற்றிக் கடைகயிறாகக் கொண்ட பாம்பினை விடுத்து நீங்கிய தேவர் ஓடி அஞ்சும்படியாகத் திருமால் திருமேனியை ஒழித்தற்பொருட்டும் , விண்ணைச்சுடும் பொருட்டும் எழுந்து விசையொடு சென்று அந்நஞ்சு எங்கும் பரவ, ` பெருமானே ! இவ் விடத்துன்பம் நீங்குதற்கு ஒரு கழுவாய் அருளிச்செய்வாயாக ` என்று எல்லோரும் வேண்டவும் அருளினால் , அப்பெரிய விடத்தை , மற்றவர்களைத் தாக்காதவாறு உண்ட பெருமானே எல்லா அண்டங்களுக்கும் அரசனாவான் .


பாடல் எண் : 2
நிரஒலி வெள்ளம்மண்டி நெடுஅண்டம்மூட
         நிலம்நின்றுதம்பம் அது அப்
பரம்ஒரு தெய்வம்எய்த இது ஒப்பதுஇல்லை,
         இருபாலும் நின்று பணியப்
பிரமனும் மாலும் மேலை முடியோடுபாதம்
         அறியாமைநின்ற பெரியோன்,
பரமுதல் ஆயதேவர் சிவனாயமூர்த்தி
         அவனா நமக்குஒர் சரணே.

         பொழிப்புரை : பரவிய ஓசையை உடைய வெள்ளப்பெருக்கு மேற் சென்று நீண்ட கண்டங்களை மூழ்க்க , நிலத்திலே நின்ற தீத்தம்பத்தில் பரம்பொருளாகிய ஒப்பற்ற தெய்வம் அடைய , பிரமனும் திருமாலும் இதனை ஒத்த தீப்பிழம்பு முன்னும் இல்லை என்று கருதி அந்நாளில் இரு பக்கங்களிலும் நின்று பணியுமாறு அவர்கள் அதன் முடியையும் அடியையும் அறிய முடியாமல் நின்ற பெரியோனாய் மேம்பட்ட முற்பட்ட தேவனாம் சிவமூர்த்தியாகிய பெருமானே நமக்குப் பாதுகாவல் நல்கும் சரணியன் ஆவான் .


பாடல் எண் : 3
காலமும் நாள்கள்ஊழி படையாமுன்,ஏக
         உருவாகி, மூவர் உருவில்
சாலவும் ஆகி, மிக்க சமயங்கள்ஆறின்
         உருவாகிநின்ற தழலோன்,
ஞாலமும் மேலைவிண்ணோடு உலகுஏழும் உண்டு
         குறளாய் ஒர்ஆலின் இலைமேல்
பாலனுமாய் அவற்கொர் பரமாயமூர்த்தி ,
         அவனாநமக்குஒர் சரணே.

         பொழிப்புரை : நாண்மீன்கள் முதல் ஊழி முடியப் பாகுபட்ட காலத்தையும் படைத்தற்கு முன்பு ஒன்றாய் நின்றவனாய் , மும் மூர்த்திகள் உருவிலும் அவர்கள் உயிருக்கு உயிராய் அமைந்தவனாய் , அறுவகைச் சமயத்தோருக்கும் அவ்வவர் பொருளாய் விளங்கி நிற்பவனாய் , உள்ள சோதி வடிவான பெருமான் வாமனனாகி மண்ணும் மேலை விண்ணுலகும் அடங்கிய ஏழுலகமும் உண்டு , ஓர் ஆலிலை மேல் சிறு குழந்தையாய்ப் பள்ளி கொண்ட திருமாலுக்கும் மேம்பட்ட மூர்த்தியாய் உள்ளவன் . அவன் தான் நமக்கு ஒப்பற்ற சரணியன்.


பாடல் எண் : 4
நீடுஉயர் விண்ணும்மண்ணும் நெடுவேலைகுன்றொடு       
        உலகு ஏழும் எங்கும் நலியச்
சூடிய கையர்ஆகி இமையோர்கணங்கள்
         துதிஓதிநின்று தொழலும்,
ஓடிய தாரகன்தன் உடலம்பிளந்தும்
         ஒழியாதகோபம் ஒழிய,
ஆடிய மாநடத்து எம்அனலாடி பாதம்
         அவையா, நமக்குஒர் சரணே.

         பொழிப்புரை : நெடிது உயர்ந்த விண்ணும் மண்ணும் நெடிய கடல் மலைகளொடு ஏழுலகமும் முழுதும் வருந்த வருத்திய தாரகனுடைய கொடுமைகளுக்கு ஆற்றாமல் தேவர் கூட்டத்தார் குவித்த கையராகிப் பெருமானுடைய புகழ்களைக் கூறியவாறு தொழுத அளவில் , தன் இறுதியை நினைத்து உயிர்தப்பி ஓடிய தாரகனுடைய உடலைப் பிளந்தும் நீங்காத கோபம் நீங்குதற்பொருட்டு மகாதாண்டவத்தை ஆடிய தீயாடியப்பருடைய திருவடிகளே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குவன .


பாடல் எண் : 5
நிலைவலி இன்றிஎங்கும் நிலனோடுவிண்ணும்    
       நிதனஞ்செய்து ஓடு புரம் மூன்று
அலைநலி வஞ்சிஓடி அரியோடுதேவர்
         அரணம்புகத் தன் அருளால்
கொலைநலி வாளிமூள அரவங்கைநாணும்
         அனல்பாயநீறு புரமா
மலைசிலை கையில்ஒல்க வளைவித்த வள்ளல்
         அவனா நமக்குஒர் சரணே.

         பொழிப்புரை : எதிர்த்து நிலைத்து நிற்பதற்குரிய வலிமை இல்லாமையால் , மண்ணையும் , விண்ணையும் எங்கும் அழித்துக் கொண்டு சஞ்சரிக்கும் திரிபுரங்கள் துன்புறுத்தும் துயரத்துக்கு அஞ்சி ஓடித் திருமாலோடு தேவர்கள் அடைக்கலம் என்று அடையத் தன் அருளால் கொலைத் தொழிலால் வருத்தும் திருமாலாகிய அம்பில் தீக்கடவுள் இணையவும் , கையிலுள்ள வாசுகி என்ற பாம்பாகிய நாணில் தீப்பாயவும் மேருமலையாகிய வில் கையில் தளரவும் முப்புரங்களும் சாம்பலாகிவிடுமாறு வில்லை வளைவித்துச் செயற்படுத்திய அருட் கொடையாளனாம் அப்பெருமானே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .


பாடல் எண் : 6
நீலநன் மேனிசெங்கண் வளைவெள்எயிற்றன்
         எரிகேசன் நேடிவருநாள்,
காலைநன் மாலைகொண்டு வழிபாடுசெய்யும்     
      அளவின்கண்வந்து குறுகி,
பாலனை ஓடஓடப் பயம் எய்துவித்த
         உயிர்வவ்வு பாசம் விடும் அக்
காலனை வீடுசெய்த கழல்போலும்,அண்டர்
         தொழுது ஓதுசூடு கழலே.

         பொழிப்புரை : கருநீல மேனியனும் சிவந்த கண்ணினனும் வளைந்த வெள்ளைக் கோரப் பற்களை உடையவனும் நெருப்புப் போன்ற சிவந்த மயிர் முடியை உடையவனும் ஆகிய காலன் , மார்க்கண்டேயனைத் தேடிவந்த அன்று , அம்முனிவன் காலையிலே நல்ல மலர் மாலைகளைக் கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்த நேரத்தில் அவனிடத்து வந்து அணுகி அவனை மிகவும் அச்சுறுத்தி அவன் உயிரைக் கவரக்கயிற்றை வீசினானாக , அக்காலனை உதைத்து அழித்த சிவபெருமான் திருவடிகளே தேவர்கள் தொழுது வாழ்த்தித் தலைமேல் சூடும் திருவடிகளாகும் .


பாடல் எண் : 7
உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்விதன்னில்
         அவி உண்ணவந்த இமையோர்,
பயமுறும் எச்சன்அங்கி மதியோனும் உற்ற
         படிகண்டுநின்று பயமாய்,
அயனொடு மாலும் எங்கள் அறியாமைஆதி
         கமிஎன்று இறைஞ்சி அகல,
சயம்உறு தன்மைகண்ட தழல்வண்ணன்,எந்தை ,   
       கழல்கண்டுகொள்கை கடனே.

         பொழிப்புரை : தவத்தில் மேம்பட்ட தக்கன் நிகழ்த்திய மிகச் சிறப்பான வேள்வியில் அவியைப் பெற்று உண்ண வந்த தேவர்களும் அச்சம் மிக்குற்ற வேள்வித் தலைவனும் அக்கினியும் சந்திரனும் ஒறுக்கப்பட்டு அடைந்த நிலைமையை நோக்கி அச்சத்தோடு நின்று பிரமனும் , திருமாலும் , ` எங்கள் அறியாமை முதலிய குற்றங்களைப் பொறுத்தருள்வாய் `, என்று வணங்கி அப்பாற் செல்ல , வெற்றியுற்ற தன்மையைக் கண்ட , தீயைப் போன்ற செந்நிறத்தன் ஆகிய எங்கள் தந்தையின் திருவடிகளைக் கண்டு வழிபடுவதே பிறவாதிருக்க விரும்பும் உயிர்களின் கடமையாகும் .


பாடல் எண் : 8
நலமலி மங்கைநங்கை விளையாடிஓடி
         நயனத்தலங்கள் கரமா
உலகினை எழுமுற்றும் இருண்மூட,மூட
         இருள்ஓட,நெற்றி ஒருகண்
அலர்தர அஞ்சி,மற்றை நயனம்கைவிட்டு
         மடவாள்இறைஞ்ச, மதிபோல்
அலர்தரு சோதிபோல அலர்வித்தமுக்கண்
         அவனாநமக்குஒர் சரணே.

         பொழிப்புரை : அழகும் பண்பும் மிக்க பார்வதி எம்பெருமானோடு ஓடி விளையாடிய பொழுது அவனுடைய கண்களைக் கைகளால் பொத்த , ஏழு உலகங்களையும் முழுதுமாக இருட்டுக் கவர்ந்து கொள்ளவே , எம்பெருமானுடைய ஒற்றை நெற்றிக்கண் அந்த இருள் அகலுமாறு திறக்க , அதுகண்டு அஞ்சிப் பார்வதி கண்களை மூடிய கைகளை எடுத்துவிட்டு எம்பெருமானை வணங்க , சந்திரனைப் போலவும் , சூரியனைப் போலவும் ஏனைய இருகண்களையும் ஒளிவிடச் செய்த அம்முக்கண் மூர்த்தியே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .


பாடல் எண் : 9
கழைபடு காடுதென்றல் குயில்கூவ,அஞ்சு   
         கணையோன் அணைந்து புகலும்,
மழைவடி வண்ணன் எண்ணி மகவோனைவிட்ட  
       மலரானதொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ, இமையோர்கணங்கள்   
         எரியென்று இறைஞ்சி அகல,
தழல்படு நெற்றிஒற்றை நயனம் சிவந்த     
         தழல்வண்ணன், எந்தை சரணே.

         பொழிப்புரை : கரும்புகள் காடுபோல வளர்ந்துள்ள கருப்பங் கொல்லையில் தென்றல் உலவ, குயில்கூவ, ஐந்துமலரம்புகளை உடையவனாய் நெருங்கி வந்து , தனக்குப் பக்க பலமாக இருப்பதாகக் கூறிய கார்மேக வண்ணனாகிய திருமாலையும் இந்திரனையும் விட்டு நீங்கிய , மலர் அம்புகளை விடுத்த மன்மதனுடைய அழகிய உடல் சாம்பலாகித் தரையில் விழ அதனைக் கண்ட தேவர் கூட்டங்கள் நெருப்பு என்று சொல்லி அஞ்சி நீங்குமாறு நெருப்பை வெளிப் படுத்தும் நெற்றியின் ஒற்றைக்கண் சிவந்த தீ நிறத்தவனாகிய எங்கள் தந்தையே நமக்குச் சரணியன் ஆவான் .


பாடல் எண் : 10
தடமலர் ஆயிரங்கள் குறை ஒன்றுஅதாக,
         நிறைவு என்றுதன்கண் அதனால்,
உடன்வழி பாடுசெய்த திருமாலை, எந்தை
         பெருமான் உகந்து, மிகவும்
சுடர்அடி யால் முயன்று சுழல்வித்து அரக்கன்
         இதயம்பிளந்த கொடுமை
அடல்வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த,
         அவனா நமக்குஒர் சரணே.

         பொழிப்புரை : பெரிய தாமரைப் பூக்கள் ஆயிரத்தில் ஒன்று குறைய , வழிபாடு நிறைவதற்காகத் தன் செந்தாமரைக் கண் ஒன்றை இடந்து அதனால் அருச்சித்து வழிபாட்டை நிறைவு செய்த திருமாலை எம் தந்தையாகிய பெருமான் மகிழ்ந்து , தன் ஒளிமிக்க சேவடியால் வட்டமாகச் சக்கரத்தை உண்டாக்கி அதனைச் சுழலச் செய்து , சலந்தரனுடைய மார்பைப் பிளந்த கொடுமை மிக்க வலிமை உடைய சக்கரத்தைப் பாற்கடலையுடைய திருமாலுக்கு அளித்தான் . அவனே எமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவனாவான் .


பாடல் எண் : 11
கடுகிய தேர்செலாது, கயிலாயமீது
         கருதேல்உன்வீரம் ஒழிநீ,
முடுகுவது அன்றுதன்மம், எனநின்றுபாகன்
         மொழிவானை, நன்று முனியா,
விடுவிடு என்றுசென்று, விரைவுற்று, அரக்கன்
         வரையுற்று எடுக்க, முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரல் உற்றபாதம்
         நினைவு உற்றது, என்தன் மனனே.

         பொழிப்புரை : `விரைந்து செல்லும் தேராயினும் அது கயிலை மலை மீது செல்லாது ; உன் வீரத்தைப் பெரிதாகக் கருதாது விட்டு ஒழி . என்னிடத்தில் கோபிப்பது அறம் அன்று ` என்று நிறுத்திய தேரில் நின்று கூறிய பாகனை வெகுண்டு , வேகமாகச் சென்று விரைவாக இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட , அவனுடைய தலைகளும் தோள்களும் நெடுநெடு என்னும் ஓசையோடு இற்றுவிழுமாறு அழுத்தியது சிவபெருமானுடைய திருவடியின் விரல் ஒன்று . அத்தகைய திருவடிகளை என் உள்ளம் எண்ணலுற்றது .

                                             திருச்சிற்றம்பலம்

                                                                           ----- தொடரும் -----

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...