திருச் சிவபுரம்
சோழ நாட்டு, காவிரித்
தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில்
சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையில்
"பட்டாமணி ஐயர் பேருந்து நிறுத்தம்" பக்கத்தில் பிரியும் சிவபுரி கிளைப்
பாதையில் 2 கி. மீ. சென்றால்
சிவபுரத்தை அடையலாம்.
இறைவர்
: சிவகுருநாதசுவாமி, சிவபுரீசுவரர், பிரமபுரீசுவரர், சிவபுரநாதர்.
இறைவியார் :
ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி.
தல
மரம் : சண்பகம் (தற்போதில்லை)
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள்: 1. சம்பந்தர் - 1. புவம்வளி கனல்புனல், 2.
இன்குர
லிசைகெழும்,
3.
கலைமலி
யகலல்குல்.
2. அப்பர் - வானவன்காண்
திருமால் வெள்ளைப்
பன்றி வடிவிலிருந்து பூசித்து பேறு பெற்ற திருத்தலம்.
இவ்வூரில்
பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனாலேயே திருஞானசம்பந்தர்
முதலியோர் இத்தலத்தில் நடக்காமல்,
அங்கப்பிரதட்சணம்
செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று
பெருமானைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை' என்றும் அழைக்கப்படுகிறது.
குபேரன் பூசித்த
வரலாறு
- ஒருமுறை இராவணன், தூய்மையற்றவனாய்
இறைவனை வழிபட வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். உண்மையறியாது குபேரன் இராவணனுக்காகப்
பரிந்து பேச, நந்தி சாபமளித்தார்.
தளபதி என்னும் பெயருடன் பேராசைக்காரனாக இறைவனை வழிபட்டு வந்தான். ஒரு நாள்
வடக்குப் பிரகாராத்தில் கோமுகம் அருகில் காணப்பட்ட செப்புப் பட்டயத்தில் இருந்த
சுலோகத்தைப் படித்தான். மாசி மாதத்தில் சிவராத்திரி, சோமவாரம், பிரதோஷம் இவை மூன்றும் சேர்ந்து வரும்
நாளில் உடற் குறையில்லாத ஆண் குழந்தையை பெற்றோர் பிடிக்க அரிந்து - ரத்தத்தால்
சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று அறிந்தான். அவ்வாறே
வறுமையால் வாடிய தம்பதிகட்குப் பொருள் தந்து அவர்களைச் சம்மதிக்க வைத்து - மன்னன்
வாள் கொண்டு அரியும் போது - குழந்தை, அன்னை
சிங்கார வல்லியை வேண்டிட, அத்தாயும் இறைவனிடம்
வேண்டினாள். இறைவன் மகிழ்ந்து தளபதியின் சாபம் நீங்கவே இவ்வாறு நேர்ந்ததாக அருளி, தளபதியைக் குபேரன் ஆக்கினார். இதை
நினைவூட்டும் வகையில் பெருமானின் முடியில் இரத்தத் துளி போன்று இருப்பதைக்
காணலாம். தாயாக வந்த இந்திராணியும் - தந்தையாக வந்த இந்திரனும் - குழந்தையாக வந்த
அக்னியும்; கிழக்குப்
பிரகாரத்தில் சிவலிங்கத் திருமேனி தாங்கி இருப்பதாகவும் கூறுவர்.
இவ்வூரிலுள்ள
பட்டினத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது.
பட்டினத்தாரின் தமக்கை இவ்வூரில் வாழ்ந்தார்.
குபேரபுரம், பூகயிலாயம், சண்பகாரண்யம் என்பன இத்தலத்தின் வேறு
பெயர்கள்.
மூலவர் கம்பீரமான
சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி;
மகாவிஷ்ணு
பூசித்தது.
இங்குள்ள நடராசர்
திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலை அமெரிக்காவுக்குக்
கடத்தப்பட்டுவிட்டது. பின்னர் அது கண்டு பிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெரு முயற்சியால்
திரும்பக் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு கருதி, திருவாரூர்த் திருக்கோயிலில்
பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வேறொரு நடராசத் திருவுருவம்
சிவகாமியுடன் எழுந்தருளுவித்து வழிபடப்படுகிறது.
இங்குள்ள நால்வர்
பிரதிஷ்டையில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.
இங்குள்ள பைரவர் சிறப்பு. இவருக்கு காலை சந்தி, அர்த்தசாமம் காலங்களில்
அபிடேகம் செய்து, வடைமாலை சாத்தி, தயிர் நசாதமும், கடலை உருண்டையும் நிவேதித்து,
சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்து வந்தால், வழக்குகளில் வெற்றி கிட்டும்,
தீராத நோய் தீரும் என்பது இன்றும் நம்பிக்கையில் உள்ளது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "தரிசனத்து எக்காலம் சிவபுரத்தைக் காதலித்தோர் தங்கள் துதி ஏலும்
சிவபுரத்தில் எம்மானே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 404
அங்கண்
இனிது அமரும் நாள்,
அடல் வெள் ஏனத்து
உருவாய்ச்
செங்கண்
நெடுமால் பணியும்
சிவபுரத்துச் சென்று அடைந்து,
கங்கை
சடைக் கரந்தவர் தம்
கழல் வணங்கி, காதலினால்
பொங்கும்
இசைத் திருப்பதிகம்
முன் நின்று போற்றி இசைத்தார்.
பொழிப்புரை : அவ்வரிசில்கரைப்
புத்தூரில் பிள்ளையார் எழுந்தருளியிருந்த பொழுது, வன்மையுடைய வெண்மையான பன்றி வடிவைக்
கொண்ட சிவந்த கண்களையுடைய திருமால் வணங்கும் சிவபுரத்திற்குச் சென்று, கங்கையைச் சடையில் அடக்கிய இறைவரின்
திருவடிகளை வணங்கி, மிக்க விருப்பத்தால்
இசை பெருகும் திருப்பதிகங்களைத் திருமுன்பு நின்று பாடினார்.
இப்பதியில் அருளிய
பதிகங்கள் மூன்று.
1. புவம்வளி : தி.1 - ப.21 - நட்டபாடை
2. இன்குரல் : தி.1 - ப.112 - வியாழக்குறிஞ்சி
3. கலைமலி : தி.1 - ப.125 - வியாழக்குறிஞ்சி
பெ.
பு. பாடல் எண் : 405
போற்றி
இசைத்துப் புனிதர் அருள்
பெற்றுப் போந்து, எவ்வுயிரும்
தோற்றுவித்த
அயன்போற்றும்
தோணிபுரத்து
அந்தணனார் ,
ஏற்றும்
இசை ஏற்று உகந்த
இறைவர் தமை
ஏத்துதற்கு,
நால்திசையோர்
பரவு திருக்
குடமூக்கு நண்ணினார்.
பொழிப்புரை : போற்றி, இறைவரின் திருவருளைப் பெற்று, எவ்வுயிர்களையும் இறைவரின் ஆணையின்
வண்ணம் பிறவியில் புகுத்தும் நான்முகன் வணங்கும் திருத்தோணி புரத்தில் தோன்றிய
பிள்ளையார், ஆனேற்றின் மீது
வருதலை விரும்பிய இறைவரைப் போற்றுதற்காக, நாற்றிசையில்
உள்ளவரும் வணங்கும் திருக்குடமூக்கை அடைந்தார்.
திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்
1. 021 திருச்சிவபுரம் பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
புவம்வளி
கனல்புனல் புவிகலை
உரைமறை, திரிகுணம் அமர்நெறி,
திவமலி
தருசுரர் முதலியர்
திகழ்தரும் உயிர்அவை
அவைதம
பவமலி
தொழில்அது நினைவொடு,
பதுமநன் மலர்அது
மருவிய
சிவனது
சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிலை
பெறுவரே.
பொழிப்புரை :விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும், எண்ணெண் கலைகளை உரைத்தருளும்
வேதங்களையும், முக்குணங்களையும், விரும்பத்தக்க மார்க்கங்களையும், வானுலகில் வாழும் தேவர்கள்
முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும், தம்முடைய
படைப்பாற்றல் நினைவோடு நல்ல தாமரைமலரில் விளங்கும் நான்முகனை அதிட்டித்து நின்று
உலகைத் தோற்றுவித்தருளும் சிவபெருமானது சிவபுரத்தலத்தை நினைப்பவர் வளமையான
இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வர்.
இது இறைவனே
சிருட்டித்தொழில் இடையறாது நிகழ்த்தத் திருவுள்ளங் கொள்கின்றார். அத்தொழிலைச்
செய்யும் பிரமன் அந்தப்பாவனையில் இருந்து சிருட்டிக்கின்றான். ஆதலால் பவமலி
தொழிலது நினைவொடு இருக்கும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிவபுரத்தை
நினைப்பவர் நிலைபேறான வாழ்வடைவர் என்கின்றது.
பாடல்
எண் : 2
மலைபல
வளர்தரு புவியிடை
மறைதரு வழிமலி
மனிதர்கள்,
நிலைமலி
சுரர் முதல் உலகுகள்,
நிலைபெறு வகைநினை
வொடுமிகும்
அலைகடல்
நடுஅறி துயில்அமர்
அரிஉரு இயல்பரன்
உறைபதி
சிலைமலி
மதிள்சிவ புரம்நினை
பவர்,திரு மகளொடு
திகழ்வரே.
பொழிப்புரை :மலைகள் பல வளரும்
இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள், விண்ணில் நிலை பேறுடையவராய் வாழும்
தேவர்கள் ஆகியோரும் மற்றுமுள்ள உலக உயிர்களும் நிலைபெற்று வாழ்தற்குரிய காத்தல்
தொழில் நினைவோடு, மிகுந்துவரும் அலைகளை
உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்துநின்று
காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதி, கற்களால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த
சிவபுரமாகும். அதனை நினைப்பவர் திருமகளொடு திகழ்வர்.
இது எல்லா உலகங்களும்
தத்தம் கால எல்லை வரையில் நிலைபெறுக என்னும் திருவுள்ளக் குறிப்போடு பாற்கடல் மேல்
பள்ளிகொள்ளும் திருமால் உருவின் இயல்போடு அரன் உறையும்பதி. நினைப்பவர் திருமகளோடு
திகழ்வர் என்கின்றது.
பாடல்
எண் : 3
பழுதுஇல
கடல்புடை தழுவிய
படிமுத லியஉல குகள்,மலி
குழுவிய
சுரர்பிறர் மனிதர்கள்
குலம்மலி தரும்உயிர்
அவைஅவை
முழுவதும்
அழிவகை நினைவொடு
முதல்உரு இயல்பரன்
உறைபதி
செழுமணி
அணிசிவ புரநகர்
தொழும்அவர்
புகழ்மிகும் உலகிலே.
பொழிப்புரை :பழுதுபடாத, கடலால் சூழப்பட்ட நிலவுலகம் முதலிய
எல்லா உலகங்களையும், அவ்வுலகங்களில்
நிறைவுடன் குழுமிவாழும் தேவர்கள் நரகர்கள் மற்றும் மனிதர்கள் ஏனையோர் ஆகிய அனைவர்
உயிர்களையும் அழிக்கும் வகையான நினைவோடு உருத்திரனை அதிட்டித்து அவனுருவில்
அழித்தலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதியாகிய செழுமையான மணிகள் அழகு
செய்யும் சிவபுரநகரைத் தொழுவோரின் புகழ் உலகில் மிகும்.
இது நிலம் முதலிய
உலகுகள் முழுவதும் அழியும்படி உருத்திராம்சத்தோடு எழுந்தருளும் இறைவன் பதியைத்
தொழுமவர் புகழ் உலகில் மிகும் என்கின்றது.
பாடல்
எண் : 4
நறைமலி
தரும்அள றொடுமுகை
நகுமலர் புகைமிகு
வளர்ஒளி
நிறைபுனல்
கொடு,தனை நினைவொடு
நியதமும் வழிபடும்
அடியவர்,
குறைவுஇல
பதம்அணை தரஅருள்
குணம்உடை இறைஉறை
வனபதி,
சிறைபுனல்
அமர்சிவ புரம்அது
நினைபவர் செயமகள்
தலைவரே.
பொழிப்புரை :மணம் மிகுந்த சந்தனம், அரும்புகள், இதழ் விரிந்த மலர்கள், குங்கிலியம், சீதாரி முதலிய தூபம், ஒளி வளர் தீபங்கள், நிறைந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு
நீராட்டியும், மலர் சூட்டியும் ஒளி
காட்டியும் தன்னை நாள்தோறும் நினைவோடு வழிபடும் அடியவர், குறைவிலா நிறைவான சாமீபம் முதலான
முத்திகளை அடைய அருள்செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய பதி, நீர் நிலைகள் பலவற்றாலும் வளம் நிரம்பி
விளங்கும் சிவபுரமாகும். அதனை நினைபவர் சயமகள் தலைவராவர்.
இது அபிஷேக ஆராதனைப்
பொருள்களோடு நியதியாக வழிபடும் அடியார்களுக்குக் குறைவிலாப் பதத்தைக் கொடுக்கும்
மகேச்சுரனது பதியை வழிபடுமவர்கள் செயமகளுக்குத் தலைவராவர் என்கின்றது.
பாடல்
எண் : 5
சினமலி
அறுபகை, மிகுபொறி,
சிதைதரு வகைவளி
நிறுவிய,
மனன்உணர்
வொடுமலர் மிசைஎழு
தருபொருள் நியதமும்
உணர்பவர்,
தனதுஎழில்
உருஅது கொடுஅடை,
தகுபரன் உறைவது நகர்,மதிள்
கனம்மரு
வியசிவ புரம்நினை
பவர்,கலை மகள்தர நிகழ்வரே.
பொழிப்புரை :காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் ஆறு பகைகளையும்
வென்று, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கும்
வகையில், காற்றை நிறுத்தியும்
விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமத்தைப் புரிந்தும், தியானித்தலால் உள்ளத்தில் தோன்றியருளும்
ஒளிப்பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் உணர்பவராகிய யோகியர்கட்குத் தனது
எழிலுருவாகிய சாரூபத்தைத் தந்தருளும் சிவபிரான் உறைந்தருளும் நகர், மேகந் தவழும் மதில்கள் சூழ்ந்த
சிவபுரமாகும். அதனை நினைபவர், கலைமகள் தன் அருளைத்
தர வாழ்வர்.
இது அகப்பகை ஆறும்
வென்று ஐம்பொறி அடக்கி, பிராணவாயுவை
ஒழுங்குபடுத்திய யோகியர்க்குச் சாரூபம் தரும் பரசிவன் பதியாகிய சிவபுரத்தை
நினைப்பவர் சாரூபர்கள் ஆவார்கள் என்கின்றது.
பாடல்
எண் : 6
சுருதிகள்
பலநல முதல்கலை,
துகள்அறு வகைபயில்
வொடு,மிகு
உருஇயல்
உலகுஅவை புகழ்தர
வழிஒழுகு மெய்உறு
பொறிஒழி,
அருதவ
முயல்பவர் தனதுஅடி
அடைவகை நினைஅரன்
உறைபதி,
திருவருள்
சிவபுரம் நினைபவர்
திகழ்குலன் நிலன்இடை
நிகழுமே.
பொழிப்புரை :வேதங்களையும், பலவாகிய நன்மைகளைத் தரும் தலைமையான
கலைகளையும், குற்றம் அறப் பயின்று, உலகியலில் பழி பாவங்களுக்கு அஞ்சித் தூய
ஒழுக்க சீலராய் உலகம் புகழ விளங்கி உடலின்கண் உள்ள பொறிகள்வழி ஒழுகாது அரிய தவத்தை
மேற்கொண்ட அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகை சங்கற்பிக்கும் சிவபிரான்
உறையும் பதி திருவருள் தேங்கிய சிவபுரமாகும். அத்தலத்தை நினைவோர்தம் விளக்கமான
குலம் உலகிடை நின்று நிகழும்.
வேதம் முதலான
கலைகளைக் குற்றமறப்பயின்று உலகம் புகழ, பொறிவாயில்
அவித்து, அருந்தவம்
முயல்வார்கள் திருவடி ஞானத்தைப்பெறத் திருவுளங்கொண்டருள்கின்ற பரமசிவன் உறை
பதியைச் சிந்திப்பவர் குலம் நிலத்திடை நீடுவாழும் என்கின்றது.
பாடல்
எண் : 7
கதமிகு
கருஉரு வொடுஉகிர்
இடை,வட வரைகண கணஎன,
மதமிகு
நெடுமுகன் அமர்வளை
மதிதிகழ் எயிறுஅதன்
நுதிமிசை
இதம்அமர்
புவியது நிறுவிய
எழில்அரி வழிபட
அருள்செய்த
பதம்உடை
யவன்அமர் சிவபுரம்
நினைபவர் நிலவுவர்
படியிலே.
பொழிப்புரை :திருமால் வராக
அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு, தனது
நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின்
முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து
விளங்க, அப்பூமியை உலகின்கண்
அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை
உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு
விளங்குவர்.
ஆதிவராகமான அரிவழிபட
அருள் செய்தவரது சிவபுரத்தை நினைபவர் என்றும் விளங்குவர் என்கின்றது.
பாடல்
எண் : 8
அசைவுறு
தவமுயல் வினில்,அயன்
அருளினில் வருவலி
கொடு,சிவன்
இசைகயி
லையைஎழு தருவகை
இருபது கரம்அவை
நிறுவிய
நிசிசரன்
முடிஉடை தர,ஒரு
விரல்பணி கொளும்அவன்
உறைபதி,
திசைமலி
சிவபுர நினைபவர்
செழுநில
னினில்நிகழ்வு உடையரே.
பொழிப்புரை :உடல் வருத்தத்தைத்
தரும் கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற
வலிமையைக் கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது பெயரும்வகையில் இருபது
கரங்களை அம்மலையின் கீழ்ச்செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில் உள்ள முடிகள்
சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனைப்
பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி, எண்
திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும். அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில்
எஞ்ஞான்றும் வாழ்வர்.
பாடல்
எண் : 9
அடன்மலி
படைஅரி அயனொடும்
அறிவுஅரி யதொர்அழன்
மலிதரு
சுடர்உரு
வொடுநிகழ் தர,அவர்
வெருவொடு துதியது செய,எதிர்
விடமலி
களம்,நுதல் அமர்கண்
அதுஉடைஉரு வெளிபடும், அவன்நகர்
திடமலி
பொழில்எழில் சிவபுரம்
நினைபவர் வழிபுவி
திகழுமே.
பொழிப்புரை :வலிமை மிக்க
சக்கராயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட திருமாலும் நான்முகனும் அறிதற்கரிய வகையில்
அழல்மிக்க பேரொளிப்பிழம்பாய் வெளிப்பட்டருள அதனைக் கண்ட அவர்கள், அச்சங் கொண்டு துதி செய்த அளவில்
அவர்கட்கு எதிரே விடம் பொருந்திய கண்டமும் நெற்றிக் கண்ணும் உடைய தனது உருவத்தோடு
காட்சி நல்கிய சிவபிரான் எழுந்தருளிய தலம், உறுதியான மரங்கள் செறிந்த
பொழில்கள்சூழ்ந்த எழில் பெற்ற சிவபுரமாகும். அதனை நினைபவரும் அவர் மரபினரும்
உலகில் புகழோடு விளங்குவர்.
பாடல் எண் : 10
குணம்அறி
வுகள்நிலை இல,பொருள்
உரைமரு வியபொருள்
களும்இல,
திணம்எனும்
அவரொடு செதுமதி
மிகுசம ணருமலி, தமதுகை
உணல்உடை
யவர்உணர்வு அருபரன்
உறைதரு பதி,உல கினில்நல
கணமரு
வியசிவ புரம்,நினை
பவர்எழில் உருஉடை
யவர்களே.
பொழிப்புரை :குணங்களும் அறிவும்
நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப்
பொருள்களும், உரைக்கும் உரையால்
உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும்,
அவ்வாறே
அழிந்து தோன்றுமியல்பின, இது திண்ணம் எனவும், கணபங்க வாதம் புரியும் கேட்டிற்குக்
காரணமான அறிவினராகிய புத்தர்களும்,
தமது
கையில் நிறைந்த உணவை வாங்கி உண்ணும் சமணர்களும், உணர்தற்கரிய சிவபிரான் உறையும் பதி, இவ்வுலகில் நல்லவர்கள் திரளாய் வாழும்
சிவபுரமாகும். அதனை நினைப்பவர் அழகிய உருவோடு விளங்குவர்.
பாடல்
எண் : 11
திகழ்சிவ
புரநகர் மருவிய,
சிவன்அடி இணைபணி, சிரபுர
நகர்இறை, தமிழ்விர கனதுஉரை,
நலமலி ஒருபது
நவில்பவர்,
நிகழ்குலம், நிலம்,நிறை திரு,உரு,
நிகர்இல கொடை,மிகு சயமகள்,
புகழ்,புவி வளர்வழி, அடிமையின்
மிகைபுணர் தர,நலம் மிகுவரே.
பொழிப்புரை :இவ்வுலகில் புகழால்
விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற
சிரபுரநகர்த் தலைவனும், தமிழ் விரகனுமாகிய
ஞானசம்பந்தன் பாடிய உரைச்சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும்
ஓதி வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை, மிக்க வெற்றித்திரு, இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன
தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப்பெறுவர்.
இதுவரை பாடல்தோறும் சிவனியல்பும், அவர் எழுந்தருளியுள்ள நகரழகும், அவரை அடைவார் அடைந்து வந்த பயன்களும்
கூறிவந்த பிள்ளையார் இப்பாட்டில் இப்பதிகத்தைப் படிப்பார் எய்தும் பயனைத்
தொகுத்துக் கூறுகின்றார். குலம் (6)
நிலம்
(8) நிறை திரு (2) உரு (10) சயமகள் (4) கலைமகள் (5) புகழ் (3) புவி வளர்வழி (9) அடிமை.
ஒரு
குறிப்பு ----
திருவள்ளுவரகம், குலசை, இராமநாத அடிகள் என்பாரைத் தமிழுலகம்
அறியாமல் இருக்க முடியாது. சமயநூல்கள், சங்க
நூல்கள், மெய்கண்ட
சாத்திரங்கள் அனைத்திற்கும் உரை வடித்த பெரியவர். திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற் பதிப்புக்களை அறிந்தவர்கள் பலரும் உண்டு. சென்னை, சைதாப்பேட்டையில், செந்தமிழ்ச் சிவநெறிக் கழகம் வாயிலாக
அருமையான வகுப்புக்களைப் பலகாலம் நிகழ்த்தி, அருமையான அன்பர்கள் பலரையும் உருவாக்கிய
பெருந்தகை. சைதைத் தமிழ்ச்சங்கம் என்னும் திருநெறி வளர்க்கும் கூட்டத்தை உருவாக்கி, அதன் தலைமைப் புலவராக வீற்றிருந்து, அரும்பணிகள் பலவற்றை
ஆற்றிய பெருந்தகை. திருக்கோயில் வழிபாட்டு மலர் ஒன்றை சைவ அன்பர்களுக்காகத்
தொகுத்து வழங்கியவர். இறைவனுக்கு அருச்சனை
தொடங்கு முன், உறுதி, தீர்மானம் அல்லது சங்கல்பம் என்று ஒரு
நிகழ்வு உள்ளது. வேண்டுதல் என்றும் சொல்லலாம். "அருச்சனைத் தொடக்கம்"
என்று அந்த நிகழ்வைத் தமிழில் நமக்குக் காட்டி, அதில் ஓத வேண்டிய
பாடல்களைக் குறித்து, இறைவழிபாட்டின் மூலம்
அன்பர்கள் பெறும் பயன்ளைக் காட்டி இருந்தார்.
அவை,
1. தன்அடைந்தார்க்கு
இன்பங்கள் தருவானை, தத்துவனை,
கன்அடைந்த
மதில் பிரமபுரத்து உறையும் காவலனை
முன்அடைந்தான்
சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார்,
பொன்அடைந்தார், போகங்கள் பல அடைந்தார், புண்ணியரே.
என்னும் திருஞானசம்பந்தப் பெருமான்
பாடல்,
2. மேற்குறித்த பாடல்,
3 எண்இல் ஆகமம் இயம்பிய இறைவர், தாம் விரும்பும்
உண்மை
ஆவது பூசனை என உரைத்து அருள
அண்ணலார்தமை
அருச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின்
நல்லவள் ஆயின பெருந்தவக் கொழுந்து.
என்னும் பெரியபுராணப் பாடல்,
4. கொய்தபன்மலர் கம்பைமா
நதியில்
குலவுமஞ்சனம், நிலவுமெய்ப் பூச்சு,
நெய்தரும் கொழும் தூபதீபங்கள்
நெய்தரும் கொழும் தூபதீபங்கள்
நிறைந்த சிந்தையின், நீடிய அன்பின்,
மெய்தரும்படி
வேண்டின எல்லாம்
வேண்டும்போதினில் உதவ, மெய்ப்பூசை
எய்த, ஆகம விதிஎலாம் செய்தாள்
உலகம் யாவையும் ஈன்றஎம்பிராட்டி
என்னும் பெரியபுராணப் பாடல்,
5. மற்றுநீ வன்மை பேசி, வன்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை, நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின்
மிக்க
அற்சனை
பாட்டே ஆகும், ஆதலால், மண்மேல் நம்மைச்
சொல்தமிழ்
பாடுக என்றார், தூமறை பாடும் வாயார்.
என்னும் பெரியபுராணப் பாடல், ஆகிய ஐந்தும் ஆகும்.
திருச்சிற்றம்பலம்
1.112 திருச்சிவபுரம் பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
இன்குரல்
இசைகெழும் யாழ்முரலத்
தன்கரம்
மருவிய சதுரன்நகர்,
பொன்கரை
பொருபழங் காவிரியின்
தென்கரை
மருவிய சிவபுரமே.
பொழிப்புரை :இனிய ஒலியும் இசையும்
பொருந்திய யாழ் முரலு மாறு தனது கரத்தின்கண்ணே அதனை ஏந்தி விளங்கும் சதுரனது நகர், அழகிய கரையினை மோதும் பழமையான
காவிரியாற்றின் தென்கரையில் விளங்கும் சிவபுரமாகும்.
பாடல்
எண் : 2
அன்றுஅடல்
காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட
உதைசெய்த புனிதன்நகர்,
வென்றிகொள்
எயிற்றுவெண் பன்றி,முன்னாள்
சென்றுஅடி
வீழ்தரு சிவபுரமே.
பொழிப்புரை :முற்காலத்தில்
மார்க்கண்டேயன் பொருட்டு வலிய காலனைக் காலால் அழியுமாறு உதைத்தருளிய புனிதனது நகர், தனது கோரைப் பல்லால் வெற்றி பெறும்
வெள்ளைப் பன்றியாகத் திருவவதாரம் கொண்ட திருமால், முற்காலத்தில் வந்து திருவடியைப்
பணிந்து வழிபாடு செய்ததலமாகிய சிவபுரமாகும். (திருமால் வெண்ணிறப் பன்றியாகத் திரு
அவதாரம் செய்த செய்தி தேவாரத்திலேயே உள்ளது. திவ்வியப் பிரபந்தத்தில் இல்லை.)
பாடல்
எண் : 3
மலைமகள்
மறுகிட மதகரியைக்
கொலைமல்க
உரிசெய்த குழகன்நகர்,
அலைமல்கும்
அரிசிலின் அதன்அயலே
சிலைமல்கு
மதிள்அணி சிவபுரமே.
பொழிப்புரை :மலைமகளாகிய
பார்வதிதேவி அஞ்சுமாறு மதம் பொருந்திய யானையைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்த குழகனது
நகர், அலைகள் நிரம்பிய அரிசிலாற்றின்
கரையருகே விளங்குவதும் மலை போன்ற மதில்களை உடையதுமான சிவபுரமாகும்.
பாடல்
எண் : 4
மண்புனல்
அனலொடு மாருதமும்
விண்புனை
மருவிய விகிர்தன்நகர்,
பண்புனை
குரல்வழி வண்டுகிண்டிச்
செண்பக
மலர்பொழில் சிவபுரமே.
பொழிப்புரை :மண், புனல், அனல், காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களாய்ப்
பொருந்தி விளங்கும் விகிர்தனது நகர், பண்
பொருந்திய குரலோடு வண்டுகள் சூழ்ந்து கிளர மலரும் செண்பகப் பூக்களோடு கூடிய
பொழில்கள் சூழ்ந்த சிவபுரமாகும்.
பாடல்
எண் : 5
வீறுநன்கு
உடையவள் மேனிபாகம்
கூறுநன்கு
உடையவன் குளிர்நகர்தான்,
நாறுநல்
குரவிரி வண்டுகிண்டித்
தேறல்உண்டு
எழுதரு சிவபுரமே.
பொழிப்புரை :அழகால் தனிப் பெருமை
பெற்ற உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு
பாகமாக உடையவனாகிய சிவபிரானது குளிர்ந்த நகரம், மணம் வீசும் நல்ல குராமலரை வண்டுகள்
கிண்டித் தேனை உண்டு மகிழ்ந்து எழும் பொழில் சூழ்ந்த சிவபுரமாகும்.
பாடல்
எண் : 6
மாறுஎதிர்
வருதிரி புரம்எரித்து
நீறுஅது
ஆக்கிய நிமலன்நகர்
நாறுஉடை
நடுபவர் உழவரொடும்
சேறுஉடை
வயல்அணி சிவபுரமே.
பொழிப்புரை :பகைமை உணர்வோடு
மாறுபட்டுத் தன்னை எதிர்த்துவந்த அசுரர்களின் திரிபுரங்களை எரித்து நீறாக்கிய
நிமலனது நகர், உழவர்களோடு
நாற்றுநடும் மகளிர் பலரைக் கொண்ட சேற்று வளம் மிக்க வயல்களால் அழகு பெறுவதாகிய
சிவபுரமாகும்.
பாடல்
எண் : 7
ஆவில்ஐந்து
அமர்ந்தவன் அரிவையொடு
மேவிநன்கு
இருந்ததொர் வியன்நகர்தான்,
பூவில்வண்டு
அமர்தரு பொய்கை,அன்னச்
சேவல்தன்
பெடைபுல்கு சிவபுரமே.
பொழிப்புரை :பசுவிடம் உண்டாகும்
பால், தயிர் முதலிய ஐந்து
பொருள்களை விரும்புபவனாகிய சிவபிரான் உமையம்மையோடு கூடி மகிழ்வுடன் இருக்கின்ற
பெரிய நகர், தேனுண்ண வண்டுகள்
மொய்க்கும் மலர்களை உடைய பொய்கைகளில் அன்னச் சேவல் தன் பெண் அன்னத்தைத் தழுவி
மகிழும் அழகுடைய சிவபுரமாகும்.
பாடல்
எண் : 8
எழில்மலை
எடுத்தவல் இராவணன்தன்
முழுவலி
அடக்கிய முதல்வன்நகர்
விழவினில்
எடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகில்
அடுக்கும்வண் சிவபுரமே.
பொழிப்புரை :அழகிய கயிலை மலையைப்
பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் முழுமையான வல்லமையை அடக்கிய முதல்வனாகிய சிவபிரானது
நகர், விழாக் காலங்களில்
எடுக்கப்பட்ட வெண்மையான கொடிகள் நிறைந்து கரிய மேகங்களை நெருங்கிச் செறியும்
வளமையான சிவபுரமாகும்.
பாடல்
எண் : 9
சங்குஅள
வியகையன், சதுர்முகனும்
அங்குஅளவு
அறிவுஅரி யவன்நகர்தான்
கங்குலும்
பறவைகள் கமுகுதொறும்
செங்கனி
நுகர்தரு சிவபுரமே.
பொழிப்புரை :சங்கேந்திய
கையினனாகிய திருமாலும் நான்முகனும் முற்காலத்தில் அடிமுடி தேடி அளந்தறியப் பெறாத
சிவபிரானது நகர், இரவிலும் பறவைகள், கமுக மரங்கள் தோறும் தங்கிச் செங்கனிகளை
நுகரும் வளம் மிக்க சிவபுரமாகும்.
பாடல்
எண் : 10
மண்டையில்
குண்டிகை மாசுதரும்
மிண்டரை
விலக்கிய விமலன்நகர்,
பண்டுஅமர்
தருபழம் காவிரியின்
தெண்திரை
பொருதுஎழு சிவபுரமே.
பொழிப்புரை :உண்கலன் குண்டிகை
ஆகியனவற்றை ஏந்திய வராய், மாசேறிய உடலினராய்த்
தருக்கொடுதிரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர், பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம்
சேர்க்கும் பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும்.
பாடல்
எண் : 11
சிவன்உறை
தருசிவ புரநகரைக்
கவுணியர்
குலபதி, காழியர்கோன்,
தவமல்கு
தமிழ்இவை சொல்லவல்லார்
நவமொடு
சிவகதி நண்ணுவரே.
பொழிப்புரை :சிவபெருமான்
எழுந்தருளிய சிவபுரநகரைப் போற்றிக் கவுணியர் குலபதியாகிய காழியர் தலைவன்
ஞானசம்பந்தன் பாடிய தவத்தைத் தருவனவாகிய இப்பதிகத் தமிழை ஓதவல்லவர் புதுமைகள்
பலவும் பெற்று முடிவில் சிவகதி சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
1.125 திருச்சிவபுரம் திருவிராகம் பண் -
வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கலைமலி
அகல்அல்குல் அரிவைதந் உருவினன்,
முலைமலி
தருதிரு உருவம் அதுஉடையவன்,
சிலைமலி
மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி
வினை,இரு மையும்இடர்
கெடுமே.
பொழிப்புரை :மேகலை பொருந்திய
அகன்ற அல்குலை உடைய உமையம்மை இடப்பாகமாகப் பொருந்திய திருவுருவினனும், அதனால் ஒரு கூற்றில் நகில் தோன்றும்
திருவுருவை உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கருங்கற்களால் இயன்ற மதில்களால்
பொதியப்பட்டுள்ள சிவபுரநகரைத் தொழுதால் நம்மை நலியும் வினைகள் இல்லை. இருமையிலும்
இடர்கெடும்.
பாடல்
எண் : 2
படர்ஒளி
சடையினன், விடையினன், மதில்அவை
சுடர்எரி
கொளுவிய சிவன்அவன் உறைபதி
திடல்இடு
புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும், உயர்கதி பெறுவது
திடனே.
பொழிப்புரை :ஒளி விரிந்த
சடையினனும், விடை ஊர்தியனும்
அசுரர்களின் மும்மதில்களை விளங்கும் எரி கொள்ளுமாறு செய்தழித்தவனுமாகிய சிவன் உறையும்
பதிஆகிய, இடையிடையே திடலைக்
கொண்ட நீர் சூழ்ந்த வயல்களை உடைய சிவபுரத்தை அடைந்து தொழுதால் நம் இடர்கெடும்.
உயர்கதி பெறுவது உறுதி.
பாடல்
எண் : 3
வரைதிரி
தர,அரவு அகடுஎழல் எழஅரு
நுரைதரு
கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு
புனல்அரி சில்அதுஅடை சிவபுரம்
உரைதரும்
அடியவர் உயர்கதி யினரே.
பொழிப்புரை :மந்தரமலை மத்தாகச்
சுழல அதில் கயிறாகச் சுற்றிய வாசுகி என்னும் பாம்பின் வயிற்றிலிருந்து அழலாகத்
தோன்றி, நுரையுடன் வெளிப்பட்ட
விடம், கடலில் பொருந்த, ஆலகாலம் என்னும் அந்நஞ்சினை உண்டவனுடைய, அழகு விளங்கக் கரையில் மோதும் நீர்
நிறைந்த அரிசிலாற்றங்கரையில் விளங்கும் சிவபுரத்தின் பெயரைக் கூறுபவர் உயர்
கதிகளைப் பெறுவர்.
பாடல்
எண் : 4
துணிவுடை
யவர்,சுடு பொடியினர், உடல்அடு
பிணிஅடைவு
இலர்,பிற வியும்அற
விசிறுவர்,
தணிவுஉடை
யவர்,பயில் சிவபுரம்
மருவிய
மணிமிட
றனதுஅடி இணைதொழும் அவரே.
பொழிப்புரை :அடக்கமுடைய மக்கள்
வாழும் சிவபுரத்தில் எழுந்தருளிய நீலமணிபோலும் மிடற்றினை உடைய சிவபிரானுடைய
திருவடிகளை வணங்குவோர் துணிபுடையவராவர். திருநீறு பூசும் அடியவர் ஆவர். உடலை
வருத்தும் பிணிகளை அடையார். பிறவியும் நீங்கப் பெறுவர்.
பாடல்
எண் : 5
மறையவன், மதியவன், மலையவன், நிலையவன்,
நிறையவன், உமையவள் மகிழ்நடம்
நவில்பவன்,
இறையவன், இமையவர் பணிகொடு
சிவபுரம்
உறைவுஎன
உடையவன், எமைஉடை யவனே.
பொழிப்புரை :தேவர்கள் செய்யும்
பணிவிடைகளை ஏற்றுச் சிவபுரத்தைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் எம்மை அடிமையாகக்
கொண்டவனுமாகிய சிவபிரான் வேதங்களை அருளியவன். பிறை சூடியவன். கயிலை மலையைத் தனது
இடமாகக் கொண்டவன். நிலைபேறு உடையவன். எங்கும் நிறைந்தவன். உமையம்மை கண்டு மகிழும்
நடனத்தைப் புரிபவன். எல்லோர்க்கும் தலைவன்.
பாடல்
எண் : 6
முதிர்சடை
இளமதி நதிபுனல் பதிவுசெய்து,
அதிர்கழல்
ஒலிசெய அருநடம் நவில்பவன்,
எதிர்பவர்
புரம்எய்த இணைஇலி அணைபதி
சதிர்பெறும்
உளம்உடை யவர்சிவ புரமே.
பொழிப்புரை :முதிர்ந்த
சடையின்மீது இளம்பிறை, கங்கை நதி
ஆகியவற்றைப் பொருந்த அணிந்து, காலில் அசையும்
கழல்கள் ஒலிக்குமாறு அரிய நடனம் புரிபவனும், தன்னை எதிர்த்த அசுரர்களின்
முப்புரங்களை எய்தழித்த ஒப்பற்றவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியதலம், திறமையான மனம் உடைய அடியவர் வாழும்
சிவபுரமாகும்.
பாடல்
எண் : 7
வடிவுடை
மலைமகள் சலமகள் உடன்அமர்
பொடிபடும்
உழைஅதள் பொலிதிரு உருவினன்,
செடிபடு
பலிதிரி சிவன்உறை சிவபுரம்
அடைதரும்
அடியவர் அருவினை இலரே.
பொழிப்புரை :அழகிய வடிவினைக்
கொண்ட மலைமகள் நீர் மகளாகிய கங்கை ஆகியோருடன் புள்ளி பொருந்திய மானினது தோல்
விளங்கும் அழகிய உருவத்தைக் கொண்டவனும், தீ
நாற்றம் வீசும் மண்டையோட்டில் பிச்சையை ஏற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும்
சிவபுரத்தை அடையும் அடியவர் நீங்குதற்கரிய வினைகள் இலராவர்.
பாடல்
எண் : 8
கரம்இரு
பதும்,முடி ஒருபதும்
உடையவன்
உரம்நெரி
தர,வரை அடர்வுசெய்
தவன்உறை
பரன்என
அடியவர் பணிதரு சிவபுர
நகர்அது
புகுதல், நம் உயர்கதி அதுவே.
பொழிப்புரை :இருபது கைகளையும், பத்துத் தலைகளையும் உடையவனாகிய இராவணனின்
மார்பு நெரியுமாறு கயிலை மலையால் அடர்த்தருளிய சிவபிரான் உறைவதும், மேலான பரம் பொருள் இவனேயாவான் என
அடியவர் வழிபாடு செய்வதும் ஆகிய சிவபுரத்தை அடைதல் நமக்கு உயர்கதியைத் தரும்.
பாடல்
எண் : 9
அன்றுஇயல்
உருவுகொள் அரிஅயன் எனும்அவர்
சென்று,அள விடல்அரி யவன்உறை
சிவபுரம்
என்றுஇரு
பொழுதுமுன் வழிபடும் அவர்,துயர்
ஒன்றுஇலர், புகழொடும் உடையர்இவ்
உலகே.
பொழிப்புரை :தங்கள் செயலுக்கு
மாறுபட்ட தன்மையொடு கூடிய பன்றி அன்னம் ஆகிய வடிவங்களைக் கொண்ட திருமால் பிரமன்
ஆகியோர் சென்று அளவிடுதற்கு அரியவனாய் ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் சிவபுரம்
என்று இருபொழுதுகளிலும் நினைத்து வழிபடும் அடியவர் ஒரு துன்பமும் இலராவர்.
இவ்வுலகில் புகழோடும் பொருந்தி வாழ்வர்.
பாடல்
எண் : 10
புத்தரொடு
அமணர்கள் அறவுரை புறவுரை,
வித்தகம்
மொழிகில, விடையுடை அடிகள்தம்
இத்தவம்
முயல்வுறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக
வழிபடல் விழுமிய குணமே.
பொழிப்புரை :புத்தர்களும்
சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை.
அவற்றை விடுத்து விடையூர்தியை உடைய தலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும்
இத்தவத்தைச் செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச்
சென்றடைந்து வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத்தரும்.
பாடல்
எண் : 11
புந்தியர்
மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன
தமிழ்கொடு சிவபுர நகர்உறை
எந்தையை
உரைசெய்த இசைமொழி பவர்,வினை
சிந்தி,முன் அற,உயர் கதிபெறு வர்களே.
பொழிப்புரை :அறிவுடையவர்கள் ஓதும்
வேதங்களை ஓதி உணர்ந்த புகலி மன்னனாகிய ஞானசம்பந்தன் தமிழைக் கொண்டு சிவபுரநகரில்
உறையும் எந்தையைப் போற்றி உரைசெய்த இவ்விசை மாலையை ஓதி வழிபடுபவர் வினைகள்
முற்பட்டு நீங்க உயர்கதி பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பாடல்
எண் : 301
பொங்கு
புனல்ஆர் பொன்னியினில்
இரண்டு கரையும், பொருவிடையார்
தங்கும்
இடங்கள் புக்குஇறைஞ்சி,
தமிழ்மா லைகளும்
சாத்திப்போய்,
எங்கும்
நிறைந்த புகழாளர்,
ஈறுஇல் தொண்டர்
எதிர்கொள்ள,
செங்கண்
விடையார் திருஆனைக்
காவின் மருங்கு
சென்று அணைந்தார்.
பொழிப்புரை : பொங்கி வருகின்ற
காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல
ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும்
நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற
தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண்
விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.
இத்திருப்பதியிலிருந்து
திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள
திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப்
பதிகளாவன:
1. திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72)
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100)
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21)
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89)
2. திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13)
3. திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71)
4. திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48)
5. திருப்பந்தணை
நல்லூர்:
`நோதங்கம்` (தி.6 ப.10)
6. திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90)
7. திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73)
8. தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63)
9. திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72)
10.திருக்கருவிலிக்
கொட்டிட்டை:
`மட்டிட்ட` (தி.5 ப.69)
11.திரு
அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61)
12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87)
13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76)
14.திருஅன்பில்ஆலந்துறை: `வானம் சேர்` (தி.5 ப.80)
15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86)
16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி:
`மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) -
6. 087 திருச்சிவபுரம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வானவன்காண், வானவர்க்கும் மேலா
னான்காண்,
வடமொழியும்
தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண், ஆன்ஐந்தும் ஆடி
னான்காண்,
ஐயன்காண், கையில்அனல் ஏந்தி
ஆடும்
கானவன்காண், கானவனுக்கு அருள்செய்
தான்காண்,
கருதுவார் இதயத்துக்
கமலத்து ஊறும்
தேனவன்காண், சென்றுஅடையாச்
செல்வன் தான்காண்,
சிவன்அவன்காண், சிவபுரத்து
எம்செல்வன் தானே.
பொழிப்புரை :சிவபுரத்து எம்
செல்வன் ஆம் சிவபெருமான், வானிடத்து உறைபவனும், தேவர்களுக்கு மேலானவனும், வட மொழியும் இனிய தமிழ் மொழியும் மறைகள்
நான்கும் ஆனவனும், ஆன்ஐந்தாம்
பஞ்சகவ்வியத்தில் ஆடினவனும், கானவனாகிய
கண்ணப்பனுக்கு அருள் செய்தவனும்,
தன்னைக்
கருதுவார் இதயத் திடத்து, தாமரை மலரிடத்து
ஊறும் தேன் போன்றவனும், முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்றடையும்
பெற்றியதன்றி இயல்பாகவே உள்ள செல்வனும் ஆவான்.
பாடல்
எண் : 2
நக்கன்காண், நக்குஅரவம் அரையில்
ஆர்த்த
நாதன்காண், பூதகணம் ஆட ஆடும்
சொக்கன்காண், கொக்குஇறகு சூடி
னான்காண்,
துடியிடையாள்
துணைமுலைக்குச் சேர்வுஅதுஆகும்
பொக்கன்காண், பொக்கணத்த
வெண்ணீற்றான்காண்,
புவனங்கள்
மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண், செக்கர்அது திகழும்
மேனிச்
சிவன்அவன்காண், சிவபுரத்து
எம்செல்வன் தானே.
பொழிப்புரை :சிவபுரத்து எம்
செல்வன் ஆம் சிவபெருமான் உடை இல்லாதவனும், ஒளியுடைய பாம்பினை இடையிற்கட்டிய
தலைவனும், பூதகணங்கள் ஆட
அவற்றுடன் தானும் ஆடும் அழகனும்,
கொக்கிறகைச்
சூடினவனும், துணை முலைகளை உடைய
துடிபோலும் இடையாளுக்குச் சேரப்படும் இடமாந் தகுதிபெற்ற பொலிவையுடையவனும், சம்புடத்துக்கொண்ட வெள்ளிய திருநீற்றை
உடையவனும், புவனங்கள்
மூன்றிற்கும் உயிராய் நின்ற புகலிடமானவனும், செவ்வானம் போலத்திகழும்
மேனியையுடையவனும் ஆவான்.
பாடல்
எண் : 3
வம்பின்மலர்க்
குழல்உமையாள் மணவா ளன்காண்,
மலரவன்மால்
காண்புஅரிய மைந்தன் தான்காண்,
கம்பமதக்
கரிபிளிற உரிசெய் தோன்காண்,
கடல்நஞ்சம்
உண்டுஇருண்ட கண்டத் தான்காண்,
அம்பர்நகர்ப்
பெருங்கோயில் அமர்கின் றான்காண்,
அயவந்தி உள்ளான்காண், ஐயா றன்காண்,
செம்பொன்எனத்
திகழ்கின்ற உருவத் தான்காண்,
சிவன்அவன்காண்
சிவபுரத்து எம்செல்வன் தானே.
பொழிப்புரை : சிவபுரத்து எம்
செல்வனாம் சிவபெருமான் மணங்கமழும் மலர்களையணிந்த கூந்தலையுடைய உமையம்மையின்
கணவனும், நான்முகனும்
திருமாலும் காணமுடியாத வலிமையுடையவனும், அசையுமியல்பினை
யுடைய மதயானை துன்பமிகுதியால் பிளிற, அதன்
தோலை உரித்தவனும், கடலில் தோன்றிய நஞ்சை
உண்டதால் இருண்ட கண்டத்தவனும், அம்பர் நகரத்துப்
பெருங் கோயிலில் விரும்பி உறைபவனும், அயவந்தித்
திருக்கோயிலில் உள்ளவனும், ஐயாறனும், செம்பொன்போல் திகழும் திருவுருவத்தவனும், ஆவான்.
பாடல்
எண் : 4
பித்தன்காண், தக்கன்தன் வேள்வி
எல்லாம்
பீடுஅழியச் சாடி
அருள்கள் செய்த
முத்தன்காண், முத்தீயும் ஆயினான்
காண்,
முனிவர்க்கும்
வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண், புத்தூரில்
அமர்ந்தான் தான்காண்,
அரிசில் பெருந்துறையே
ஆட்சி கொண்ட
சித்தன்காண், சித்தீச் சரத்தான் தான்காண்,
சிவன்அவன்காண், சிவபுரத்து
எம்செல்வன் தானே.
பொழிப்புரை :சிவபுரத்தெம்
செல்வனாம் சிவபெருமான். பித்தனாய்,
தக்கன்
வேள்வியை முழுதும் பெருமையிழக்க அழித்துப் பின் அனைவருக்கும் அருள்கள் செய்த
முத்தனாய், முத்தீயும் ஆனவனாய், முனிவர்க்கும் தேவர்க்கும் முதலாகும்
மேன்மை மிக்க தந்தையாய், புத்தூரில்
அமர்ந்தவனாய், அரிசிற்பெருந்துறையை
இருந்து ஆளுமிடமாகக்கொண்ட சித்தனாய், நறையூர்ச்
சித்தீச்சரத் தவனாய்த் திகழ்பவன் ஆவான்.
பாடல்
எண் : 5
தூயவன்காண், நீறு துதைந்த மேனி
துளங்கும்
பளிங்குஅனைய சோதி யான்காண்,
தீஅவன்காண், தீயவுணர் புரம்செற்
றான்காண்,
சிறுமான்கொள்
செங்கைஎம் பெருமான்தான் காண்,
ஆயவன்காண், ஆரூரில் அம்மான்
தான்காண்,
அடியார்கட்கு ஆரமுதம்
ஆயி னான்காண்,
சேயவன்காண், சேமநெறி ஆயி னான்காண்,
சிவன்அவன்காண், சிவபுரத்து
எம்செல்வன் தானே.
பொழிப்புரை :சிவபுரத்தெம் செல்வனாம்
சிவபெருமான், தூயவனும், ஒளி விளங்கும் பளிங்கு போன்று, திருநீறு செறிந்த மேனிச் சோதியனும், தீயாய்த் திகழ்பவனும், கொடிய அசுரருடைய புரங்களை அழித்தவனும், சிறுமானைச் செங்கையிலேந்திய எம்
பெருமானும், தாய் போன்றவனும், ஆரூரில் அம்மானாய்த் திகழ்பவனும், அடியவர்க்கு ஆரமுதம் ஆனவனும், மற்றையர்க்குத் தொலைவில் உள்ளவனும், பாதுகாவலான நெறியினனும் ஆவான்.
பாடல்
எண் : 6
பார்அவன்காண், பார்அதனில் பயிர்
ஆனான்காண்,
பயிர்வளர்க்கும்
துளிஅவன்காண், துளியில் நின்ற
நீர்அவன்காண், நீர்சடைமேல்
நிகழ்வித் தான்காண்,
நிலவேந்தர் பரிசாக
நினைவுற்று ஓங்கும்
பேர்அவன்காண், பிறைஎயிற்று வெள்ளைப்
பன்றிப்
பிரியாது பலநாளும்
வழிபட்டு ஏத்தும்
சீர்அவன்காண், சீர்உடைய தேவர்க்கு
எல்லாம்
சிவன்அவன்காண், சிவபுரத்து
எம்செல்வன் தானே.
பொழிப்புரை :சிவபுரத்தெம்
செல்வனாம் சிவபெருமான், விளைநிலமானவனும், விளைநிலத்தில் பயிரானவனும், பயிரை வளர்க்கும் மழையானவனும், அம்மழைத்துளியில் நின்ற நீரானவனும், தன் சடைமேல் நீர்நிற்கச் செய்தவனும், நிலவேந்தர் தம் ஆட்சியால் தாம் பெறும்
பரிசாகத் தம் மனத்தில் எஞ்ஞான்றும் நினைக்குமாறு ஓங்கும் புகழானவனும், பிறை போன்ற விளைந்த பல்லினை உடைய வெள்ளைப்
பன்றியாகிய திருமால் இந்நகரின் நீங்காது பலநாளும் வழிபட்டு வணங்கும் புகழினன்
ஆனவனும், சிறப்புடைய தேவர்
எல்லாருக்கும் இன்பக் காரணன் ஆனவனும் ஆவான்.
பாடல்
எண் : 7
வெய்யவன்காண், வெய்யகனல் ஏந்தி
னான்காண்,
வியன்கெடில வீரட்டம்
மேவி னான்காண்,
மெய்யவன்காண், பொய்யர்மனம் விரவா
தான்காண்,
வீணையோடு இசைந்துமிகு
பாடல் மிக்க
கையவன்காண், கையில்மழு ஏந்தி
னான்காண்,
காமன்அங்கம்
பொடிவிழித்த கண்ணி னான்காண்,
செய்யவன்காண், செய்யவளை மாலுக்கு
ஈந்த
சிவன்அவன்காண், சிவபுரத்து
எம்செல்வன் தானே.
பொழிப்புரை :சிவபுரத்தெம் செல்வனாம்
சிவபெருமான், கொடியவர்க்குக்
கொடியவனும், வெப்பமிகு கனலை
ஏந்தியவனும், பரந்த கெடிலநதிக்கரை
மீதுள்ள அதிகை வீரட்டானத்து அமர்ந்தவனும், மெய்ப்பொருளினனும், பொய்யர் மனத்துட் புகாதவனும், இனிமைமிகும் பாடல் வீணையோடு இயைந்து
இனிமை மேலும் மிகுதற்குக் காரணமான விரலினனும், கையில் மழுவாயுதத்தை ஏந்தியவனும், காமனது உடல் எரிந்து சாம்பல் ஆக விழித்த
கண்ணினனும், செம்மை நிறத்தவனும், திருமகளைத் திருமாலுக்கு ஈந்தவனும்
ஆவான்.
பாடல்
எண். 8, 9. **********
பாடல்
எண் : 10
கலைஆரும்
நூல்அங்கம் ஆயி னான்காண்,
கலைபயிலும் கருத்தன்காண், திருத்தம் ஆகி,
மலைஆகி, மறிகடல்ஏழ் சூழ்ந்து
நின்ற
மண்ஆகி, விண்ஆகி நின்றான்
தான்காண்,
தலையாய
மலைஎடுத்த தகவு இலோனைத்
தகர்ந்துவிழ
ஒருவிரலால் சாதித்து ஆண்ட
சிலைஆரும்
மடமகள்ஓர் கூறன் தான்காண்,
சிவன்அவன்காண், சிவபுரத்து
எம்செல்வன் தானே.
பொழிப்புரை :சிவபுரத்தெம்
செல்வனாம் சிவபெருமான், கலைகள் எல்லாம்
பொருந்திய வேதநூலும் அங்கங்களும் ஆனவனும், கலைகளிற் பொருந்திய கருத்துக்களாய்
உள்ளவனும், தீர்த்த மாயும், மலையாயும், அலைகள் மடங்கி வீழ் கடல்கள் ஏழும்
சூழ்ந்து நின்ற நிலவுலகமாயும், விண்ணாயும், நின்றவனும், சிறந்த கயிலாய மலையை எடுத்த பண்புகெட்ட
இராவணன் வலியிழந்து விடுமாறு ஒரு விரலால் முடித்தவனும், மலையில் தோன்றி வளர்ந்த மட மகளாம்
பார்வதியைத் தன் கூறாகக் கொண்டு ஆண்டவனும் ஆவான்.
திருச்சிற்றம்பலம்
Om namah shivaya
ReplyDelete