இவர்க்கு இது துரும்பு




13. இவர்க்கு இது துரும்பு

தாராள மாகக் கொடுக்குந் தியாகிகள்
     தமக்குநற் பொருள் துரும்பு,
தன்னுயிரை யெண்ணாத சூரனுக் கெதிராளி
     தளமெலாம் ஒருதுரும்பு,

பேரான பெரியருக் கற்பரது கையினிற்
     பிரயோச னந்துரும்பு,
பெரிதான மோட்சசிந் தனையுள் ளவர்க்கெலாம்
     பெண்போகம் ஒருதுரும்பு,

தீராத சகலமும் வெறுத்ததுற விக்குவிறல்
     சேர்வேந்தன் ஒருதுரும்பு,
செய்யகலை நாமகள் கடாட்சமுள் ளோர்க்கெலாஞ்
     செந்தமிழ்க் கவிதுரும்பாம்.

வாராரும் மணிகொள்முலைவள்ளிதெய் வானையை
     மணம்புணரும் வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

           இதன் பொருள் ---

     வார் ஆரும் மணிகொள் முலை வள்ளி தெய்வானையை மணம் புணரும் வடிவேலவா --- கச்சு அணியப் பெற்ற,
மணிமாலைகளை அணிந்த முலைகளை உடைய வள்ளி நாயகி, தெய்வயானை அம்மை ஆகிய இருவரையும் மணம் புணர்ந், கூர்மை பொருந்திய வேலாயுதத்தினை உடையவனே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     தாராளமாகக் கொடுக்கும் தியாகிகள் தமக்கு நல்பொருள் துரும்பு --- தன்பால் வந்தவருக்கு வரையறை இல்லாமல் வழங்கும் வள்ளல்களுக்கு நல்ல பொருள் என்பது துரும்பு ஓன்றது ஆகும்.

     தன் உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி தளம் எலாம் ஒரு துரும்பு --- தன்னுடைய உயிரைப் பொருளாக எண்ணாத வீரனுக்குப் பகைவரின் படைகள் ஒரு துரும்புக்குச் சமம்.

     பேரான பெரியருக்கு அற்பரது கையினில் பிரயோசனம் துரும்பு --- புகழ்பெற்ற பெரியோர்களுக்குக் கீழ்மக்கள் கையால் பயன்பெறுதல் துரும்புக்கு நிகர் ஆகும்.

     பெரிதான மோட்ச சிந்தனை உள்ளவர்க்கு எலாம் பெண்போகம் ஒரு துரும்பு --- மேலான வீடுபேற்றிலேயே சிந்தையை வைத்து உள்ளவர்களுக்குப் பெண்களால் பெறும் இன்பம் துரும்புக்கு நேர் ஆகும்.

      தீராத சகலமும் வெறுத்த துறவிக்கு விறல் சேர் வேந்தன் ஒரு துரும்பு --- விட முடியாத எல்லாவற்றையும் வெறுத்துவிட்ட துறவிக்கு, வலிமை பொருந்திய அரசன் ஒரு துரும்புக்கு ஒப்பு ஆனவன்.

     செய்ய கலை நாமகள் கடாட்சம் உள்ளோர்க்கு எலாம் செந்தமிழ்க் கவி துரும்பு ஆம் --- நன்மை தரும் கலை வடிவமான கலைமகளின் அருள் பெற்றவர்களுக்கு எல்லாம் செந்தமிழிலே கவிகளைப் பாடுதல் துரும்பு ஆகும்.

     விளக்கம் ---  துரும்பு - பயன் அற்றது. தியாகி --- பிறர் பொருட்டுத் தன்னலம் துறந்தவன். அற்பர் - கீழ்மக்கள். பிரயோசனம் - பயன்பாடு, ஆதாயம்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...