திருப்புகலூர் - 3





4. 015 பொது - பாவநாசத் திருப்பதிகம்      பண் - பழம்பஞ்சுரம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பற்றுஅற் றார்சேர் பழம்பதியை,
         பாசூர் நிலாய பவளத்தை,
சிற்றம் பலத்துஎம் திகழ்கனியை,
         தீண்டற்கு அரிய திருவுருவை,
வெற்றி யூரில் விரிசுடரை,
         விமலர் கோனை, திரைசூழ்ந்த
ஒற்றி யூர் எம் உத்தமனை,
         உள்ளத்து உள்ளே வைத்தேனே.

         பொழிப்புரை : உலகப் பற்றற்றவர்கள் சேரும் பழைய திருத்தலங்களில் திகழ்பவன் , பாசூரில் உறையும் பவளம் , சிற்றம்பலத்தில் உள்ள கனி , தீண்டுதலுக்கு அரிய திருஉருவம் , வெற்றியூரில் விரிந்த ஒளி , தூயவர்கள் தலைவன் , கடல் ஒருபுறம் சூழ்ந்த ஒற்றியூர் உத்தமன் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தில் நிலையாக இருத்தினேன்.


பாடல் எண் : 2
ஆனைக் காவில் அணங்கினை,
         ஆரூர் நிலாய அம்மானை,
கானப் பேரூர்க் கட்டியை,
         கானூர் முளைத்த கரும்பினை,
வானப் பேரார் வந்தேத்தும்
         வாய்மூர் வாழும் வலம்புரியை,
மானக் கயிலை மழகளிற்றை,
         மதியை, சுடரை, மறவேனே.

         பொழிப்புரை : ஆனைக்காவில் உள்ள தெய்வம் , ஆரூரில் உறையும் தலைவன் , கானப் பேரூரில் உள்ள கரும்பின் கட்டி , கானூரில் முளைத்த கரும்பு, வானத்தினின்றும் நீங்காதவராகிய தேவர் வந்து வழிபடும் திருவாய்மூரில் உறையும் வலம்புரிச் சங்குபோல்வான் . பெருமைமிக்க கயிலைமலையில் உறையும் இளைய களிறு , சந்திரனும் , சூரியனும் ஆகியவன் என்னும் பெருமானை அடியேன் மறக்க மாட்டேன் .


பாடல் எண் : 3
மதியம் கண்ணி ஞாயிற்றை
         மயக்கந் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை
         ஐயாறு அமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள்
         வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை
         நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே.

         பொழிப்புரை : பிறையைக் குறுங்கண்ணியாக உடைய சூரியன் , உலகமயக்கத்தைப் போக்கும் மருந்து , திருவதிகையாகிய பழைய ஊரில் உறையும் அரசு , திருவையாற்றில் விரும்பி உறையும் தலைவன் , வேதவிதியாக உள்ளவன் , எல்லாப் புகழும் தன்பால் வந்து சேரும் மெய்ப்பொருள் , தேவர்கள் விரும்பித்தேடும் ஞானஒளி , பெருஞ்செல்வம் , ஞானக் கொழுந்து , ஆகிய பெருமானை விருப்புற்று நினைத்த அளவில் அடியேனுடைய உள்ளம் மகிழ்ச்சியில் நிறைவுற்றது .


பாடல் எண் : 4
புறம்ப யத்துஎம் முத்தினை,
         புகலூர் இலங்கு பொன்னினை,
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி
         உலகம் விளக்கும் ஞாயிற்றை,
கறங்கும் அருவிக் கழுக்குன்றில்
         காண்பார் காணும் கண்ணானை,
அறம்சூழ் அதிகை வீரட்டத்து
         அரிமான் ஏற்றை அடைந்தேனே.

         பொழிப்புரை : புறம்பயத்தில் உறையும் எங்கள் முத்து , புகலூரில் விளங்கும் பொன் , உறையூரில் ஓங்கிக் காணப்படும் சிராப்பள்ளிக் குன்றிலுள்ள உலகுக்கு ஒளிதரும் சூரியன் , அருவிகள் ஒலிக்கும் கழுக்குன்றத்தில் தரிசிக்க வருபவர்களுக்குப் பற்றுக்கோடு , அறச்செயல்கள் யாண்டும் செய்யப்படுகின்ற அதிகை வீரட்டத்தில் உள்ள ஆண் சிங்கம் ஆகிய பெருமானை அடியேன் அடைந்தேன் .


பாடல் எண் : 5
கோலக் காவில் குருமணியை,
         குடமூக்கு உறையும் விடம்உணியை,
ஆலங் காட்டில் அம்தேனை,
         அமரர் சென்னி ஆய்மலரை,
பாலில் திகழும் பைங்கனியை,
         பராய்த் துறைஎம் பசும்பொன்னை,
சூலத் தானை, துணைஇலியை,
         தோளைக் குளிரத் தொழுதேனே.

         பொழிப்புரை : கோலக்காவில் உள்ள நல்ல நிறமுடைய மாணிக்கம் , குடமூக்கில் உறையும் விடமுண்டபெருமான் , ஆலங்காட்டில் உறையும் அழகிய தேன் , தேவர்கள் தலைகளுக்குச் சூட்டப்படும் அழகிய மலர் , பால்போல் இனிக்கும் புதுமை மாறாத பழம் , பராய்த்துறையில் உள்ள பசிய பொன் , சூலம் ஏந்தியவன் , ஒப்பற்றவன் ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பி வணங்கினேன் .


பாடல் எண் : 6
மருகல் உறைமா ணிக்கத்தை,
         வலஞ்சு ழி(ய்)யின் மாலையை,
கருகா வூரில் கற்பகத்தை,
         காண்டற்கு அரிய கதிர்ஒளியை,
பெருவே ளூர்எம் பிறப்புஇலியை,
         பேணு வார்கள் பிரிவுஅரிய
திருவாஞ் சியத்து எம்செல்வனை,
         சிந்தை உள்ளே வைத்தேனே.

         பொழிப்புரை : மருகலில் தங்கும் மாணிக்கம் , வலஞ்சுழியில் உள்ள தமிழ்ப்பாமாலை , கருகாவூரில் உள்ள கற்பகம் , காண்பதற்கு எளிதில் இயலாத கதிரவன் ஒளி , பெருவேளூரில் உள்ள பிறவாயாக்கைப் பெரியோன் , விரும்பித் தொழுபவர்கள் பின் பிரிந்து செல்ல மனம் கொள்ளாதவகையில் உள்ள திருவாஞ்சியத்தில் உறையும் எம் செல்வன் ஆகிய பெருமானை அடியேன் மனத்தில் நிலையாக இருத்தினேன் .


பாடல் எண் : 7
எழில்ஆர் இராச சிங்கத்தை,
         இராமேச் சுரத்து எம்எழில்ஏற்றை,
குழலார் கோதை வரைமார்பில்
         குற்றா லத்துஎம் கூத்தனை,
நிழல்ஆர் சோலை நெடுங்களத்து
         நிலாய நித்த மணாளனை,
அழல்ஆர் வண்ணத்து அம்மானை,
         அன்பில் அணைத்து வைத்தேனே.

         பொழிப்புரை : அழகுமிக்க அரச சிங்கம் , இராமேச்சுரத்தில் உறையும் அழகிய காளை , குழல்வாய் மொழியம்மையைத் தன் மலை போன்ற மார்பில் கொண்ட குற்றாலத்தில் உறையும் எங்கள் கூத்தன் . நிழல் மிகுந்த சோலைகளையுடைய நெடுங்களத்தில் உறையும் நித்தியகலியாணன் , தீ நிறத்தலைவன் ஆகிய பெருமானை அடியேன் அன்பினால் அடியேனோடு இணைத்து வைத்துக்கொண்டேன் .


பாடல் எண் : 8
மாலைத் தோன்றும் வளர்மதியை,
         மறைக்காட் டுஉறையும் மணாளனை,
ஆலைக் கரும்பின் இன்சாற்றை
         அண்ணா மலைஎம் அண்ணலை,
சோலைத் துருத்தி நகர்மேய
         சுடரில் திகழுந் துளக்குஇலியை,
மேலை வானோர் பெருமானை,
         விருப்பால் விழுங்கி இட்டேனே.

         பொழிப்புரை : மாலையில் தோன்றும் ஒளி வளரும் சந்திரன் , மறைக்காட்டுள் உறையும் தலைவன் , ஆலையில் பிழியப்படும் கரும்பின் இனிய சாறு , அண்ணாமலையிலுள்ள எம் தலைவன் , சோலைகளை உடைய துருத்திநகர்க் கோயிலில் விரும்பி உறையும் சூரியனைப் போல ஒளிவீசும் அசைவற நின்ற பேராற்றலன் , மேலே உள்ள தேவர்கள் தலைவன் ஆகிய பெருமானை அடியேன் விருப்பத்தோடு விழுங்கி விட்டேன் .

 
பாடல் எண் : 9
சோற்றுத் துறைஎம் சோதியை,
         துருத்தி மேய தூமணியை,
ஆற்றில் பழனத்து அம்மானை,
         ஆல வாய்எம் அருமணியை,
நீற்றில் பொலிந்த நிமிர்திண்தோள்
         நெய்த்தா னத்துஎம் நிலாச்சுடரை,
தோற்றக் கடலைஅடல் ஏற்றை,
         தோளைக் குளிரத் தொழுதேனே.

         பொழிப்புரை : சோற்றுத்துறையில் உறையும் ஞானஒளி , துருத்தியில் விரும்பி உறையும் தூயமணி , ஆற்றின்வளம் மிக்க திருப்பழனத் தலைவன் . ஆலவாயிலுள்ள சிந்தாமணி , திருநீற்றால் விளங்கும் திண்ணிய தோள்களை உடைய , நெய்த்தானத்தில் உறையும் எம் நிலவொளி , பிறவிக்கடலை அழிக்கும் ஆற்றல் மிக்க காளை ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பித் தொழுதேன் .


பாடல் எண் : 10
புத்தூரு உறையும் புனிதனை,
         பூவ ணத்துஎம் போர்ஏற்றை,
வித்துஆய் மிழலை முளைத்தானை,
         வேள்விக் குடிஎம் வேதியனை,
பொய்த்தார் புரம்மூன்று எரித்தானை,
         பொதியில் மேய புராணனை,
வைத்தேன் என்தன் மனத்துஉள்ளே,
         மாத்தூர் மேய மருந்தையே.

         பொழிப்புரை : புத்தூரில் உறையும் தூயோன் , பூவணத்தில் உள்ள எம் போரிடும் காளை , மிழலையில் விதையாகி முளைத்தவன் , வேள்விக்குடியில் உறையும் எம் வேதியன் , நெறிதவறிய அசுரர்களின் மும்மதில்களையும் எரித்தவன் , பொதிய மலையில் விரும்பி உறையும் பழையோன் , மாத்தூரில் விரும்பி உறையும் அமுதம் ஆகிய பெருமானை அடியேன் மனத்துள்ளே நிலையாக இருத்தினேன் .


பாடல் எண் : 11
முந்தித் தானே முளைத்தானை,
         மூரி வெள்ளேறு ஊர்ந்தானை,
அந்திச் செவ்வான் படியானை,
         அரக்கன் ஆற்றல் அழித்தானை,
சிந்தை வெள்ளப் புனலாட்டிச்
         செஞ்சொன் மாலை அடிச்சேர்த்தி
எந்தை பெம்மான் என்எம்மான்
         என்பார் பாவம் நாசமே.

         பொழிப்புரை : ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டுத் தோன்றியவன் , மூத்த வெண்ணிறக் காளையை இவர்ந்தவன் . மாலைநேரச் செவ்வானின் நிறத்தினன் . இராவணன் ஆற்றலை அழித்தவன் ஆகிய பெருமானை உள்ளத்தில் தோன்றும் அன்பு என்னும் தீர்த்தத்தால் அபிடேகித்து , இனிய சொற்களாலாகிய பாமாலைகளை அவன் திருவடிகளில் சேர்ப்பித்து எந்தையே , இறைவனே , என் தலைவனே என்று பலகாலும் அவனை அழைத்து மகிழ்பவருடைய தீவினைகள் அழிந்துவிடும் .
                                             திருச்சிற்றம்பலம்



4. 008 பொது - சிவனெனும்ஓசை    பண் - பியந்தைக் காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சிவன்எனும் ஓசை அல்லது அறையோ
         உலகில் திருநின்ற செம்மை உளதே
அவனும்ஓர் ஐயம் உண்ணி அதள்ஆடை
         ஆவது அதன்மேல் ஓர் ஆடல்அரவம்
கவண்அளவு உள்ள உண்கு கரிகாடு
         கோயில் கலன்ஆவது ஓடு கருதில்
அவனது பெற்றி கண்டும் அவன்நீர்மை
         கண்டும் மகநேர்வர் தேவ ரவரே.

         பொழிப்புரை : உலகிலே சிவன் என்னும் ஓசையன்றித் திருவானது நிலைபெறக் காரணமான செஞ்சொல் வேறு இல்லை என்று ஆணையிட்டுக் கூறுவேன் . எம்பெருமான் பிச்சை எடுத்து உண்பவன். தோலையே ஆடையாக உடையவன். அத்தோல்மேல் ஆடும்பாம்பை இறுகக்கட்டியவன். கவண் கல் அளவு சிறிதே உண்பவன். சுடுகாடே இருப்பிடம். அவனுடைய உண்கலன் மண்டையோடு. ஆராய்ந்து பார்த்தால் அவன் உடைமைகளைக் கண்டும் அவன் தன்மையைக் கண்டும் தேவர்கள் தம் உள்ளத்தை அப்பெருமானுக்கு அர்ப்பணம் செய்வர்.


பாடல் எண் : 2
விரிகதிர் ஞாயிறு அல்லர், மதிஅல்லர், வேத
         விதிஅல்லர், விண்ணும் நிலனும்
திரிதரு வாயு அல்லர், செறுதீயும் அல்லர்,
         தெளிநீரும் அல்லர், தெரியில்
அரிதரு கண்ணி யாளை ஒருபாகம் ஆக
         அருள்கார ணத்தில் வருவார்,
எரிஅரவு ஆரமார்பர், இமையாரும் அல்லர்,
         இமைப்பாரும் அல்லர் இவரே.

         பொழிப்புரை :இப்பெருமானார் ஒளிக்கதிர்கள் விரியும் சூரியனும் அல்லர் . சந்திரனும் அல்லர் . பிரமனும் அல்லர் . வேதத்தில் விதித்தனவும் விலக்கியனவும் அல்லர் . விண்ணும் நிலனும் அலையும் காற்றும் துன்புறுத்தும் தீயும் தெளிந்த நீரும் அல்லர் . செவ்வரி கருவரி பரந்த கண்களை உடைய பார்வதி பாகராக அருள் காரணத்தால் காட்சி வழங்கும் இவர் கோபிக்கின்ற பாம்பினை மார்பில் மாலையாக உடையவர் . இவர் கண் இமைக்காத தேவரும் கண் இமைக்கும் மக்களும் அல்லர் . இவரே எல்லாமாகி அல்லராய் உடனும் ஆவர் .


பாடல் எண் : 3
தேய்பொடி வெள்ளை பூசி அதன்மேல்ஓர் திங்கள்
         திலகம் பதித்த நுதலர்,
காய்கதிர் வேலை நீல ஒளிமா மிடற்றர்,
         கரிகாடர், கால்ஓர் கழலர்,
வேயுடன் ஆடுதோளி அவள்விம்ம, வெய்ய
         மழுவீசி, வேழ உரிபோர்த்து,
, இவர் ஆடுமாறும், இவள்காணு மாறும்,
         இதுதான் இவர்க்குஒர் இயல்பே.

         பொழிப்புரை : நுண்ணிய வெண்ணீறு பூசித் திங்கள் போன்ற வடிவுடைய திலகத்தை இட்ட நெற்றியை உடையவர் . சூரியன் தோன்றும் கீழ்க்கடலின் நீல ஒளி பொருந்திய கழுத்தினர் . சுடுகாட்டில் உறைபவர் . காலில் ஒற்றைக் கழல் அணிபவர் . மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி நடுங்குமாறு கொடிய மழுப்படையை வீசி யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து இவர் கூத்தினை நிகழ்த்துவதும் , அதனைப் பார்வதி காணுமாறு செய்வதும் இவருக்கு இயல்பு போலும் .


பாடல் எண் : 4
வளர்பொறி ஆமைபுல்கி, வளர்கோதை வைகி,
         வடிதோலும் நூலும் வளர,
கிளர்பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர்,
         கிளர்காடு நாடு மகிழ்வர்,
நளிர்பொறி மஞ்ஞை அன்ன தளிர்போன்று சாயல்
         அவள்தோன்று வாய்மை பெருகிக்
குளிர்பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி
         உளள்போல் குலாவி உடனே.

         பொழிப்புரை : பெருமானார் வளர்ந்த , பொறிகளை உடைய ஆமை ஓட்டை அணிந்து , நீண்ட கூந்தலை உடைய பார்வதி தங்கியதும் , மான்தோலும் பூணூலும் ஓளிவீசுவதும் , மிக்க பொறிகளை உடைய நாகம் விளங்குவதுமான மார்பினராய் , காட்டிலும் நாட்டிலும் மகிழ்ந்து ஆடுபவராய் உள்ளார் . செறிந்த பொறிகளை உடைய மயில் போன்று கட்புலனாகும் மென்மையும் தளிர் போன்று ஊற்றுக்கினிய மென்மையும் உடையவள் என்று சொல்லப்படும் உண்மை தன்னிடம் நிலைபெறப் புள்ளிகளை உடைய குளிர்ந்த வண்டுகள் பாடும் கூந்தலை உடைய கங்கையாளும் அப்பெருமானோடு கூடி அவருடன் உள்ளாள் போலும் .

  
பாடல் எண் : 5
உறைவது காடு போலும், உரிதோல் உடுப்பர்,
         விடைஊர்வது, ஓடு கலனா
இறைஇவர் வாழும் வண்ணம் இதுவேலும், ஈசர்
         ஒருபால், இசைந்தது ஒருபால்
பிறைநுதல் பேதை மாதர் உமைஎன்னும் நங்கை,
         பிறழ்பாட நின்று பிணைவான்
அறைகழல் வண்டு பாடும் அடிநீழல் ஆணை
         கடவாது அமரர் உலகே.

         பொழிப்புரை : இவர் தங்குமிடம் காடு , உரித்தெடுக்கப்பட்ட புலி முதலியவற்றின் தோலை உடுப்பர் . இவர் காளையை ஊர்வர் . மண்டையோடு உண்கலம் . தலைவராகிய இவர் வாழும் வகை இது . இவர் எல்லோரையும் அடக்கி ஆள்பவர் . இவருக்கு உரியது இவர் உடம்பின் வலப்பகுதியே . மற்றொரு பகுதியாகப் பிறைபோன்ற நெற்றியளாய் மடம் என்ற பண்புள்ளவளாய்த் திகழும் விரும்பத்தக்க உமை என்னும் நங்கை உள்ளாள் . இடம் பெயர்ந்து ஆடுவதற்காகப் பார்வதியோடும் கூடியிருப்பார் . வீரக்கழல் ஒலிக்க வண்டுகள் பாடும் திருவடியின் நிழலாகிய அப்பெருமானாருடைய ஆணையைத் தேவர் உலகம் மீறிச் செயற்படமாட்டாது .


பாடல் எண் : 6
கணிவளர் வேங்கை யோடு கடிதிங்கள் கண்ணி
         கழல்கால் சிலம்ப அழகுஆர்
அணிகிளர் ஆரவெள்ளை தவழ்சுண்ண வண்ணம்
         இயலார் ஒருவர் இருவர்,
மணிகிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை
         மலையான் மகட்கும் இறைவர்,
அணிகிளர் அன்ன வண்ணம் அவள்வண்ண வண்ணம்
         உவர்வண்ண வண்ணம் அழலே.

         பொழிப்புரை : சோதிடனின் இயல்பை உடையதாய் வளருகின்ற வேங்கைப் பூக்களையும் புதிய பிறையையும் முடிமாலையாகச் சூடி , காலில் கழல் ஒலிப்ப இவற்றால் ஏற்படும் அழகினை உடையவர் . அழகு விளங்குகின்ற மாலையையும் , வெண்ணீற்றையும் அணிந்து செந்நிறமுடைய இயல்பினர் ஆகிய பெருமான் அம்மையப்பராய் இருவராய் உள்ளார் . அழகு விளங்குகின்ற மயில்கள் ஆட மேகங்கள் உலாவும் சோலைகளை உடைய இமயத்து மன்னன் மகளாகிய பார்வதிக்குத் தலைவர் . பார்வதியினுடைய நிறத்தின் வண்ணம் அழகு வெளிப்படுகின்ற அன்ன நிறத்தின் வண்ணமாகும் . ( காரன்னம் ) அவருடைய நிறம் நெருப்பின் நிறமாகும் .


பாடல் எண் : 7
நகைவளர் கொன்றை துன்று நகுவெண் தலையர்,       
          நளிர்கங்கை தங்கு முடியர்,
மிகைவளர் வேதகீதம் முறையோடும் வல்ல
         கறைகொள் மணிசெய் மிடறர்,
முகைவளர் கோதை மாதர் முனிபாடு மாறும்,
         எரியாடும் ஆறும், இவர்கைப்
பகைவளர் நாகம் வீசி மதிஇயங்கு மாறும்,
         இதுபோலும் ஈசர் இயல்பே.

         பொழிப்புரை : விளக்கம் மிகுகின்ற கொன்றை மலர் நெருங்கிய தலைமாலையும் குளிர்ந்த கங்கையும் தங்கிய சடைமுடியை உடையவர் . உலகில் மேம்பட்டு விளங்குகின்ற வேதப் பாடல்களை ஒலிக்கும் முறையோடு பாடுதலில் வல்ல , விடக்கறை பொருந்திய நீலகண்டர் . மொட்டுக்களால் ஆகிய மாலையை அணிந்த பார்வதி , பெருமானுடைய கூத்தாடலுக்கு ஏற்பப்பாடும் முறையும் பெருமான் தீயிடை ஆடும் முறையும் , இவர் கையில் ஏந்திய பகைத்தன்மை வளர்கின்ற நாகத்தை அகற்றிப் பிறை அசையுமாறு இவர் இவ்வாறு செய்வதும் போலும் இவர் தன்மையாகும் .


பாடல் எண் : 8
ஒளிவளர் கங்கை தங்கும் ஒளிமால் அயன்தன்
         உடல்வெந்து வீய, சுடர்நீறு
அணிகிளர் ஆர வெள்ளை தவழ்சுண்ண வண்ணர்
         தமியார் ஒருவர் இருவர்,
களிகிளர் வேடம் உண்டொர் கடமா உரித்த
         உடைதோல் தொடுத்த கலனார்,
அணிகிளர் அன்ன தொல்லை அவள்பாகம் ஆக
         எழில்வேதம் ஓதும் அவரே.

         பொழிப்புரை : எம்பெருமான் ஒளிவளர்கின்ற கங்கை தங்கும் சடையின் செந்நிற ஒளியை உடையர் . திருமால் பிரமன் இவர்கள் உடைய உடல்கள் சாம்பலாக அவர்களுடைய ஒளி வீசுகின்ற வெள்ளை நீற்றினை , ஒளி வீசும் மாலையின் வெண்ணிறத்தோடு பூசிய வெண்பொடி நிறத்தவர் . தனியராயிருந்த ஒருவர் . அழகு விளங்குகின்ற அன்னம் போன்ற அநாதி சக்தி ஒருபாகமாக , அதனால் மகிழ்ச்சி மிகும் இருவர் வேடமும் அவருக்கு உண்டு . ஒரு மத யானையை உரித்த தோலை மேலுடையாகப் போர்த்த , மண்டையோட்டை உடைய அப்பெருமானார் அழகிய வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர் ஆவர் .

பாடல் எண் : 9
மலைமட மங்கை யோடும் வடகங்கை நங்கை
         மணவாளர் ஆகி மகிழ்வர்,
தலைகலன் ஆக உண்டு தனியே திரிந்து
         தவவாணர் ஆகி முயல்வர்,
விலைஇலி சாந்தம் என்று வெறிநீறு பூசி
         விளையாடும் வேட விகிர்தர்,
அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த
         அழல்நஞ்சம் உண்ட அவரே.

         பொழிப்புரை : பார்வதியோடு , வடக்கில் உற்பத்தியாகும் கங்கை என்ற பெண்ணுக்கும் கணவராகி மகிழ்பவர் . மண்டையோட்டையே பிச்சை எடுத்து உண்ணும் பாத்திரமாகக் கொண்டு தனியே திரிந்து , அடியார் செய்யும் தவத்தில் வாழ்பவராகி அவர்களுக்கு அருளும் முயற்சியை உடையார் . விலையில்லாது கிட்டும் சந்தனமாக மணங் கமழும் திருநீற்றைப் பூசி விளையாடும் வேடத்தை உடையர் , உலகியலிலிருந்து வேறுபட்ட இயல்பை உடைய பெருமான் , அலைகளை உடைய கடலின் வெள்ளம் முழுவதும் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட கொடிய விடத்தை உண்ட அப்பெருமான் ஆவார் .


பாடல் எண் : 10
புதுவிரி பொன்செய் ஓலை ஒருகாது, ஒர்காது
         சுரிசங்கம் நின்று புரள,
விதிவிதி வேதகீதம் ஒருபாடும் ஓதம்,
         ஒருபாடு மெல்ல நகுமால்,
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர்
         குழல்பாகமாக வருவர்,
இதுஇவர் வண்ண வண்ணம் இவள்வண்ண வண்ணம்      
       எழில்வண்ண வண்ணம் இயல்பே.

         பொழிப்புரை : புதிதாகச் சுருள் பொன்னால் செய்யப்பட்ட ஓலை ஒருகாதிலும் வளைந்த சங்கு ஒரு காதிலும் காதணிகளாக அமைந்து தோள்கள் மீது புரள , முறைப்படி வேதப்பாடலை ஒருபக்கம் ஓத , இடப்பக்கமாகிய பார்வதி பாகம் மெதுவாக முறுவல் செய்யும் . சடைப்பகுதியில் தேன் விரியும் கொன்றைப் பூப்பொருந்த , பெண் பகுதி , கூந்தலைப் பின்னியிருக்கும் பாகமாக வருகின்ற பெருமானுடைய நிறமும் , இயல்பும் இவை , தேவியினுடைய நிறமும் இயல்பும் இவை . அழகு வண்ணங்கள் இரண்டன் இயல்புகள் இவையே .

                                             திருச்சிற்றம்பலம்


4. 110       பொது                      பசுபதி திருவிருத்தம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டுநின் தாள்பரவி
ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய். இரும் கங்கைஎன்னும்
காம்புஅலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேல்
பாம்புஅலைக்கும் சடையாய், எம்மை ஆளும் பசுபதியே.

         பொழிப்புரை : பெரிய கங்கை என்னும் மூங்கில் போன்ற பருத்த தோள்களை உடைய பெண்ணின் ஒளி வீசுகின்ற அணிகலன்களை அணிந்த அழகிய முலைமீது பாம்புகள் தவழும் சடையை உடையவனே! எம்மை அடிமை கொள்ளும் ஆன்ம நாயகனே! சாம்பலைப் பூசிக் கொண்டு, உறங்கும்போது வெறும் தரையிலேயே கிடந்து உறங்கி உன் திருவடிகளை முன் நின்று துதித்து அங்கலாய்க்கும் அடியவர்கள்திறத்து அருள் செய்வாயாக.


பாடல் எண் : 2
உடம்பைத் தொலைவித்து, உன்பாதம் தலைவைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்டாய், இருள் ஓடச் செந்தீ
அடும்பொத்து அனைய அழன்மழுவா, அழலே உமிழும்
படம்பொத்து அரவுஅரையாய், எம்மை ஆளும் பசுபதியே.

         பொழிப்புரை : இருள் ஓடுமாறு, அடுப்பம்பூவை ஒத்த நிறத்தினதாய்ச் செந்தீயை வெளிப்படுத்திக் கோபிக்கும் மழுப் படையை ஏந்தியவனே! நெருப்பைக் கக்கும் படமெடுத்தாடும் பாம்பை இடுப்பில் இறுகக் கட்டியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! பிறவிப் பிணியைப் போக்கி உன் திருவடிகளையே தம் தலைக்கண்வைத்த மேம்பட்டவர்களாகிய அடியவர்கள் துன்புறாத வகையில் அவர்களுக்கு இரங்கி அருளுவாயாக.


பாடல் எண் : 3
தாரித் திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும்
மூரித் திரைப்பௌவம் நீக்குகண் டாய்,முன்னை நாள்ஒருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்உடையாய், எம்மை ஆளும் பசுபதியே.

         பொழிப்புரை : முன்னொருகாலத்தில் தேனை உடைய குளிர்ந்த பூக்களாகிய ஒளிவீசும் ஐந்து அம்புகளை உடைய மன்மதனை வெந்து விழுமாறு நெருப்பினை வெளிப்படுத்திய கண்ணுடையவனாய் எம்மை ஆளும் பசுபதியே! வறுமைத் துன்பம் நீங்காத அடியவர்களுக்கு ஏற்படும் தடுமாற்றமாகிய பெரிய அலைகளை உடைய கடலிலிருந்து அவர்களைக் கரையேற்றுவாயாக.


பாடல் எண் : 4
ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன்பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண் டாய், அண்டமே அணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளி அஞ்சப்
பருவரைத் தோல் உரித்தாய், எம்மை ஆளும் பசுபதியே.

         பொழிப்புரை : வானளாவிய பெரிய மலைபோன்ற யானை பிளிறுமாறு அதன் உடலைப் பிளந்து மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த பசுபதியே! வேறு எவரையும் பற்றுக்கோடாகக் கருதாமல் உன் திருவடிகளையே வழிபடும் அடியவர்களுடைய நீங்குதல் அரிய வினைத் தொகுதிகளைப் போக்கி அருளுவாயாக.


பாடல் எண் : 5
இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு
அடர்க்கின்ற நோயை விலக்கு கண்டாய், அண்டம் எண்திசையும்
சுடர்த்திங்கள் சூடிச் சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடையாய், எம்மை ஆளும் பசுபதியே.

         பொழிப்புரை : அண்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் ஒளி வீசுகின்ற சந்திரனைச் சூடிச் சுழலுகின்ற கங்கையோடு வண்டுகள் நெருங்கிப் பூக்களில் பரவுதலைக் கொண்ட செஞ்சடைப் பசுபதியே! இடையூறு ஏதும் இல்லாமல் தொடர்ச்சியாக உன் திருவடிகளை வழிபடுகின்ற அடியவர்களை வருத்தும் பிறவிப் பிணியைப் போக்குவாயாக.


பாடல் எண் : 6
அடலைக் கடல்கழிவான் நின் அடிஇணையே அடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண்டாய், நறுங்கொன்றைதிங்கள்
சுடலைப் பொடிச்சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து
படரச் சுடர் மகுடா, எம்மை ஆளும் பசுபதியே.

         பொழிப்புரை : நறிய கொன்றை, பிறை, சாம்பல், பாம்பு, தலையில் சூடும் மணி இவை பரவி ஒளி வீசும் சடைமுடியை உடைய பசுபதியே! துயர்க்கடல் நீங்குவதற்காக நின் திருவடிகளையே பற்றுக்கோடாக அடைந்த அடியவர்கள் வருத்தமுறாத வகையில் அவர்கள் துயரங்களைப் போக்குவாயாக.


பாடல் எண் : 7
துறவித் தொழிலே புரிந்து,உன் சுரும்புஅடி யேதொழுவார்
மறவித் தொழில்அது மாற்றுகண்டாய், மதில் மூன்றுஉடைய
அறவைத் தொழில்புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப்
பறவைப் புரம்எரித் தாய், எம்மை ஆளும் பசுபதியே.

         பொழிப்புரை : மும்மதில்கள் உடையனவாய்த் தாம் தங்கும் இடங்களை அழித்தல் தொழிலைப் புரிந்து வானத்திலே உலவும், மந்திரத்தால் செல்லும் தேர்போலப் பறக்கும் ஆற்றலுடைய மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்த பசுபதியே! உலகில் பற்றறுத்து நிற்றலாகிய தொழிலையே விரும்பிச் செய்து உன்னுடைய வண்டுகள் சூழ்ந்த திருவடிகளையே தொழும் அடியவர்களுடைய மறத்தலாகிய செயலைப் போக்கி அருளுவாயாக.

பாடல் எண் : 8, 9
* * * * * *

பாடல் எண் : 10
சித்தத்துஉருகி, சிவன்எம்பி ரான்என்று, சிந்தைஉள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்துஅருளாய்,
மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம்
பத்து உற்று உறநெரித்தாய், எம்மை ஆளும் பசுபதியே.

         பொழிப்புரை : செருக்குற்ற இராவணனுடைய இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும், அவனுக்கு உன் திறத்துப் பக்தி ஏற்படுமாறு நசுக்கியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! மனம் உருகிச் சிவனே எம் தலைவன் என்று மனத்திலே உறுதியான எண்ணம் மிகவே அதனையே எப்பொழுதும் அடைவுகேடாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியவர்களுடைய பிறவிப் பிணியைப் போக்கி அருளுவாயாக.

                                             திருச்சிற்றம்பலம்


4.    111    பொது                      சரக்கறை திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
விடையும் விடைப்பெரும் பாகா, என்
         விண்ணப்பம், வெம்மழுவாள்
படையும் படையாய் நிரைத்தபல்
         பூதமும் பாய்புலித்தோல்
உடையும் முடைதலை மாலையும்
         மாலைப் பிறை ஒதுங்கும்
சடையும் இருக்குஞ் சரக்குஅறையோ,
         என்  தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : பகைவரோடு போரிடும் காளையை இவரும் பெரிய பாகனே ! அடியேன் வேண்டி உரைப்பது இது . கொடிய மழுவாள் ஆகிய படையும் , படைகளாய் வரிசைப் படுத்தப்பட்ட பெரிய பூதங்களும் , பாய்கின்ற புலியின் தோலாகிய ஆடையும் , உடைந்த தலைகளால் ஆகிய மாலையும் , மாலையில் தோன்றும் வளர்பிறை தங்கும் சடைமுடியும் தங்கியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிமையை விரும்பும் நெஞ்சம் ?


பாடல் எண் : 2
விஞ்சத் தடவரை வெற்பா, என் விண்ணப்பம், மேல்இலங்கு
சங்கக் கலனும் சரிகோவணமும் தமருகமும்
அந்திப் பிறையும் அனல்வாய் அரவும் விரவி எல்லாம்
சந்தித்து இருக்கும் சரக்குஅறையோ, என் தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : உயரத்தில் மேம்பட்ட பெரிய பக்க மலைகளை உடைய கயிலை மலையானே ! காதுகளில் விளங்கும் சங்கினாலாகிய காதணியும் , வளைவாக உடுக்கப்பட்ட கோவணமும் , உடுக்கையும் , அந்தியில் தோன்றும் வளர்பிறையும் , விடத்தை உடைய வாயதாகிய பாம்பும் ஆகிய எல்லாம் கலந்து கூடியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .


பாடல் எண் : 3
வீந்தார் தலைகலன் ஏந்தீ, என் விண்ணப்பம், மேல்இலங்கு
சாந்துஆய வெந்த தவளவெண் நீறும் தகுணிச்சமும்
பூந்தா மரைமேனிப் புள்ளி உழைமான் அதள்புலித்தோல்
தாம்தாம் இருக்குஞ் சரக்குஅறையோ, என் தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : இறந்தவர் தலையைப் பிச்சை எடுக்கும் பாத்திரமாக ஏந்தி இருப்பவனே ! திருமேனியில் விளங்கும் சந்தனம் போன்ற வெள்ளிய திருநீறும் , தகுணிச்சம் என்ற இசைக்கருவியும் , பூத்த தாமரை போன்ற திருமேனியில் அணிந்துள்ள புள்ளிகளை உடைய மான்தோலும் புலித்தோலும் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .


பாடல் எண் : 4
வெம்சமர் வேழத்து உரியாய், என் விண்ணப்பம், மேல்இலங்கு
வஞ்சமா வந்த வருபுனல் கங்கையும் வான்மதியும்
நஞ்சமா நாகம் நகுசிர மாலை நகுவெண்தலை
தஞ்சமா வாழும் சரக்குஅறையோ, என் தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : கொடிய போரிட வந்த யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தவனே ! தலையிலே விளங்குகின்ற வஞ்சனையாக வந்த நீரை உடைய கங்கையும் , வானில் உலவும் பிறையும் , விடத்தை உடைய பெரிய பாம்பும் , சிரிக்கின்ற தலைகளால் ஆகிய மாலையும் , பிச்சை எடுக்க உதவும் மண்டையோடும் வாழும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .



பாடல் எண் : 5
வேலைக் கடல்நஞ்சம் உண்டாய்,என் விண்ணப்பம்மேல்இலங்கு
காலன் கடந்தான் இடம்,கயி லாயமும், காமர்கொன்றை
மாலைப் பிறையும் மணிவாய் அரவும் விரவி எல்லாம்
சாலக் கிடக்கும் சரக்குஅறையோ, என் தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : கரையை உடைய பாற்கடலினின்றும் தோன்றிய விடத்தை அருந்தியவனே ! கூற்றுவனை அழித்த உன்னுடைய கயிலாய மலையும் , தலைமேலே விளங்கும் விருப்பம் மருவிய கொன்றை மாலையும் அதனோடு தோன்றும் பிறையும் , அழகிய வாயை உடைய பாம்பும் எல்லாம் பெரிதும் கலந்து கிடக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .


பாடல் எண் : 6
வீழிட்ட கொன்றைஅம் தாராய்,என் விண்ணப்பம்,மேல்இலங்கு
சூழிட்டு இருக்கும்நல் சூளா மணியும் சுடலைநீறும்
ஏழ்இட்டு இருக்கும்நல் அக்கும் அரவும்என்பு ஆமைஓடும்
தாழ்இட்டு இருக்கும் சரக்குஅறையோ, என் தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : விரும்பப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே ! தலையில் விளங்கும் ஒளி சூழ்ந்த சூளாமணி என்னும் தலைக்கு அணியும் மணி ஆபரணமும் , சுடுகாட்டுச் சாம்பலும் , எழு கோவையாக அமைக்கப்பட்ட சிறந்த அக்கு மணிமாலையும் , பாம்பும் , எலும்பும் , ஆமையோடும் சேர்த்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .



பாடல் எண் : 7
விண்டார் புரம்மூன்றும் எய்தாய், என் விண்ணப்பம்மேல்இலங்கு
தொண்டு ஆடியதொண்டு அடிப்பொடி நீறும், தொழுதுபாதம்
கண்டார்கள் கண்டு இருக்கும் கயிலாயமும், காமர்கொன்றைத்
தண்தார் இருக்கும் சரக்குஅறையோ, என் தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : பகைவருடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனே ! உன் மேல் விளங்கும் விருப்பம் மருவிய கொன்றையாகிய குளிர்ந்த மாலையும் , தொண்டு செய்யும் அடியவர்களுடைய பாத தூளியும், தொழுது உன் திருவடியைத் தியானிப்பவர்கள் தரிசித்துக் கொண்டிருக்கும் கயிலாய மலையும் பொருந்தியிருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .



பாடல் எண் : 8
விடுபட்டி ஏறுஉகந்து ஏறீ, என் விண்ணப்பம், மேல்இலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணைமொந்தை
வடுஇட்ட கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள்அரவும்
தடுகுட்டம் ஆடும் சரக்குஅறையோ, என் தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : அடக்கமின்றி வேண்டியவாறு திரியுமாறு விடப் பட்ட பட்டிக்காளையை விரும்பி வாகனமாகக் கொள்பவனே ! கொடு கொட்டி , கொக்கரை , தக்கை , குழல் , தாளம் , வீணை , மொந்தை என்ற இசைக்கருவிகளும் , உன் திருமேனியில் விளங்கும் கொன்றை வன்னி ஊமத்தம்பூ , பாம்பு என்பனவும் குணலைக் கூத்தாடும் கருவூலமோ அடியேன் தனி நெஞ்சம் என்று விண்ணப்பிக்கிறேன் .


பாடல் எண் : 9
வெண்திரைக் கங்கை விகிர்தா, என் விண்ணப்பம், மேல்இலங்கு
கண்டிகை பூண்டு, கடிசூத்திரம் மேல் கபாலவடம்,
குண்டிகை, கொக்கரை, கோணல் பிறை,குறள் பூதப்படை,
தண்டிவைத்து இட்ட சரக்குஅறையோ, என் தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : வெள்ளிய அலைகளை உடைய கங்கையைச் சடையில் ஏந்திய வேறுபட்டவனே ! மார்பின் மேல் விளங்கும் கண்டிகையைக் கழுத்தில் பூண்டு , அரை நாண் கயிற்றின்மீது தலைகளை இணைத்த தலைமாலையை அணிந்து, நீர்ப்பாத்திரம், கொக்கரை என்ற இசைக்கருவி , வளைந்த பிறை , குட்டையான வடிவத்தை உடைய பூதப்படை இவற்றைப் பெருமானாகிய நீ சேகரித்து வைத்துள்ள சரக்கறையோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன் .


பாடல் எண் : 10
வேதித்த வெம்மழு வாளீ, என் விண்ணப்பம், மேல்இலங்கு
சோதித்து இருக்கும்நல் சூளா மணியும், சுடலைநீறும்,
பாதிப் பிறையும், படுதலைத் துண்டமும், பாய்புலித்தோல்
சாதித்து இருக்கும் சரக்குஅறையோ, என் தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : பகைவர் உடலைப் பிளக்கும் வெள்ளிய மழுப் படையை ஆள்பவனே ! தலைமேல் விளங்கும் ஒளியுடைய சூளா மணியும் , சுடுகாட்டுச் சாம்பலும் , சிறுபிறையும் , துண்டமான மண்டை யோடும் , பாயும் புலித்தோலும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் சரக்கறை அன்றோ அடியேனுடைய தனி நெஞ்சம் என்று விண்ணப்பம் செய்கிறேன் .


பாடல் எண் : 11
விவந்து ஆடியகழல் எந்தாய்,என் விண்ணப்பம், மேல்இலங்கு
தவந்தான் எடுக்கத் தலைபத்து இறுத்தனை, தாழ்புலித்தோல்
சிவந்து ஆடியபொடி நீறும், சிரமாலை சூடிநின்று
தவம்தான் இருக்கும் சரக்குஅறையோ, என் தனிநெஞ்சமே.

         பொழிப்புரை : மற்றவர்களோடு மாறுபட்டு வந்து ஆடிய திருவடிகளை உடைய எம் தலைவனே ! முற்பிறவிகளில் செய்து விளங்கிய தவத்தானாகிய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட அவனுடைய பத்துத் தலைகளையும் சிதைத்தாய் . முழந்தாளவு தாழ்ந்த புலியின்தோலும் செம்மேனியில் பூசப்பட்ட வெண் திருநீறும் , தலைமாலையும் சூடிக் கொண்டு நீ தவ நிலையில் இருக்கும் கருவூலமோ அடியேனுடைய தனிநெஞ்சம் என்பதனை விண்ணப்பம் செய்கிறேன் .
                                             திருச்சிற்றம்பலம்


4.  113     பொது                             தனித் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பவளத் தடவரை போலும் திண் டோள்கள்,அத் தோள்மிசையே
பவளக் குழைதழைத் தால்ஒக்கும் பல்சடை, அச் சடைமேல்
பவளக் கொழுந்துஅன்ன பைம்முக நாகம், அந் நாகத்தொடும்
பவளக்கண் வால மதிஎந்தை சூடும் பனிமலரே.

         பொழிப்புரை : எம்பெருமானுக்குத் திண்ணிய தோள்கள் பெரிய பவளமலைகள் போலவும், தோள்களில் படியும் சடைக்கற்றைகள் பவளத்தின் தளிர்கள் போலவும், சடைமேல் உள்ள படமெடுக்கும் தலையை உடைய நாகம் பவளக் கொழுந்து போலவும், நாகத்தொடு சூடப்பட்ட இளம்பிறை பவளத்தின் குளிர்ந்த மலர் போலவும் காட்சி வழங்குகின்றன.


பாடல் எண் : 2
முருகுஆர் நறுமலர் இண்டை தழுவி வண்டே முரலும்
பெருகுஆறு அடைசடைக் கற்றையி னாய், பிணி மேய்ந்து இருந்த
இருகால் குரம்பை இதுநான் உடையது, இது பிரிந்தால்,
தருவாய் எனக்குஉன் திருவடிக் கீழ்ஒர் தலைமறைவே.

         பொழிப்புரை : நறுமணம் கமழும் பூக்களாலாகிய இண்டை மாலையைச் சூடி வண்டுகள் ஒலிக்க, பெருகுகின்ற கங்கை ஆறு வந்து பொருந்தியுள்ள சடைக் கற்றையை உடையவனே! பிணிகளால் உண்ணப் பட்டுக் கிடக்கும் இரு தூண்களாகிய இருகால்களை உடைய அடியேன் உடம்பாகிய குடிசை நீங்கினால் அடியேனுக்கு உன் திருவடிக் கீழ்த் தலைமறைவாய் இருக்க இருப்பிடம் அருளுவாயாக.


பாடல் எண் : 3
மூவா உருவத்து முக்கண் முதல்வ, மீக் கூர்இடும்பை
காவாய் என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர்
நாவாய் அசைத்த ஒலிஒலி மாறியது இல்லை, அப்பால்
தீவாய் எரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே.

         பொழிப்புரை : என்றும் மூத்தல் இல்லாத வடிவத்தை உடைய முக் கண்ணனாகிய காரணனே! மிகுந்த துயரிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று உன் இருப்பிடத்தின் வாசலில் தொங்கும் மணியைத் தேவர்கள் கையால் அதன் நாவில் அசைத்து எழுப்பிய ஒலி குறைந்து அழியுமுன் திரிபுரங்கள் நெருப்பில் எரிந்து சாம்பற் பொடியாய்ப் போய்விட்டன.


பாடல் எண் : 4
பந்தித்த பாவங்கள் அம்மையில் செய்தன இம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதுஎன்னே, வந்து அமரர்முன்னாள்
முந்திச் செழுமலர் இட்டு முடிதாழ்த்து அடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கி லாவிட்ட நல்நெஞ்சமே.

         பொழிப்புரை : வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான் பக்கல் அடிமை செய்யாது நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாய் நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில் அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது?


பாடல் எண் : 5
அந்திவட் டத்துஇளம் கண்ணி அன்று அமர் செஞ்சடையான்
புந்திவட் டத்துஇடைப் புக்குநின் றானையும் பொய்என்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய நம்பனையே.

         பொழிப்புரை :    ********       குறிப்புரை :
அந்திவட் டத்திளங் கண்ணிய னையா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றைவ ளாவிய நம்பனையே.
                                                                                                   (தி.4 ப.98 பா.1)
இது முன்னர்த் திருவையாற்றுத் திருவிருத்தம் இரண்டினுள் ஒன்றாய் முதலில் உளது. `ஐயாறமர்ந்து வந்தென்` `ஆறமர் செஞ்சடையான்` என்னும் வேறுபாடு மட்டும் கொண்டது. `சிந்தி` என்பது சந்தி எனப் பிழைபட்டது. அதுவே அன்றி, இது வேறுபாடல் ஆகாது. `இளங்கண்ணி` எனல் பொருந்தாது.


பாடல் எண் : 6
உன்மத் தகமலர் சூடி, உலகம் தொழ, சுடலைப்
பன்மத் தகம்கொண்டு, பல்கடை தோறும் பலிதிரிவான்,
என்மத் தகத்தே இரவும் பகலும் பிரிவுஅரியான்,
தன்மத் தகத்தொர் இளம்பிறை சூடிய சங்கரனே.

         பொழிப்புரை : தன் தலையிலே ஓர் இளம் பிறையைச் சூடிய சங்கரன், ஊமத்தம் பூவைச்சூடி, உலகத்தார் தொழச் சுடுகாட்டில் சுடப் பட்ட பல மண்டை ஓடுகளையும் மாலையாக அணிந்து, பல வீட்டு வாயில்கள் தோறும் பிச்சைக்குத் திரிபவனாய், அடியேனுடைய தலையை விடுத்து இரவும் பகலும் பிரியாதவனாக உள்ளான்.


பாடல் எண் : 7
அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள், ஐயம்உணல்,
வரைப் பாவையைக் கொண்டது எக்குடி வாழ்க்கைக்குவான்இரைக்கும்
இரைப்பா படுதலை ஏந்துகையா, மறை தேடும் எந்தாய்,
உரைப்பார் உரைப்பனவே செய்தி யால்எங்கள் உத்தமனே.

         பொழிப்புரை : விண்ணுலகமெல்லாம் ஒலிக்கும் ஒலிவடிவினனே! நீக்கப்பட்ட பிரமன் தலை ஓட்டினை ஏந்திய கையினனே! வேதங்கள் தேடுகின்ற எந்தையே! எங்கள் மேம்பட்டவனே! இடையிலே கோவண உடை உடுத்து, பிச்சை ஏற்று வாழும் நீ பார்வதியை மணந்து கொண்ட செயல் என்ன குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கு? உன்னைக் குறை கூறுகின்றவர்கள் குறை கூறுதற்கு ஏற்ற செயல்களையே நீ செய்கின்றாய்.


பாடல் எண் : 8
துறக்கப் படாத உடலைத் துறந்து, வெந் தூதுவரோடு
இறப்பன், இறந்தால் இருவிசும்பு ஏறுவன், ஏறிவந்து
பிறப்பன், பிறந்தால் பிறைஅணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொலோ, என்றுஎன் உள்ளம் கிடந்து மறுகிடுமே.

         பொழிப்புரை : பற்றற விட்டொழிப்பதற்கு எளியதல்லாத இவ் வுடம்பை விடுத்துக்கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் ஏறிவந்து நிலவுலகிற்கு இறங்கி மீண்டும் பிறப்பேன். பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகின்றது.


பாடல் எண் : 9
வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்து,அனகன்
சேரி வளாய என் சிந்தை புகுந்தான், திருமுடிமேல்
வாரி வளாய வருபுனல் கங்கை, சடைமறிவுஆய்,
ஏரி வளாவிக் கிடந்தது போலும் இளம்பிறையே.

         பொழிப்புரை : தேன் பெருக்கெடுத்தோடும் நறுமணம் கமழும் கொன்றைமலரைச் சூடிப் பாவமில்லாதவனாகிய இறைவன் உலகியல் செய்திகள் யாவும் கலந்து கிடக்கும் அடியேனுடைய உள்ளத்துப் புகுந்தான். அவன் திருமுடி அதன் மேல் வெள்ளமாய் வரும் நீரை உடைய கங்கை இவற்றால் தன் இயக்கம் தடைப்பட இளைய பிறை சடைப் புறமிருந்து திரும்பி ஏரி போன்ற நீர் நிறைந்த கங்கையில் தோய்ந்து கிடக்கிறது.


பாடல் எண் : 10
கல்நெடுங் காலம் வெதும்பி, கருங்கடல் நீர்சுருங்கி,
பல்நெடுங் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம்உண்டென்று
என்னொடுஞ் சூளறும், அஞ்சல் நெஞ்சே, இமை யாதமுக்கண்
பொன்நெடுங் குன்றம்ஒன்று உண்டுகண் டீர்இப் புகலிடத்தே.

         பொழிப்புரை : நெடுங்காலம் மலைகள் மழையின்றிச் சூடேறக் கரிய கடலின் நீர் சுருங்குமாறு பல ஆண்டுகள் மழை பெய்யாது போயினும் பஞ்சம் ஏற்படுமே என்று அஞ்சாதே. என்னிடம் வஞ்சினம் கூறும் மனமே! எல்லா உயிர்க்கும் புகலிடமாகிய இச்சிவ பூமியிலே இமையாத முக்கண்களை உடைய பொன் மயமான நெடிய குன்றம் ஒன்று உள்ளது ஆதலின் அடியவர்கள் வருந்த வேண்டிய தேவை இல்லை.


பாடல் எண் : 11
மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று, கீழ்இடந்து
மாலும் அறிந்திலன் மால்உற்றதே, வழிபாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக்
காலன் அறிந்தான், அறிதற்கு அரியான் கழல்அடியே.

         பொழிப்புரை : பிரமன் மேலே அன்ன வடிவிற் சென்று பெருமா னுடைய முடியை அறிந்தான் அல்லன். கீழே தோண்டிச் சென்று திரு மால் மனக்கலக்கம் உற்றானே அன்றிப் பெருமானுடைய திருவடி களைக் கண்டான் அல்லன். சிவபெருமானை வழிபட்டுக் கொண்டி ருந்த இளையவனான மார்க்கண்டேயன் பால் சென்று அவன் மீது பாசக்கயிற்றை வீசி எறிந்து செயற்படாமல் மடங்கிய மனத்தை உடைய கூற்றுவன் பிரமனாலும் திருமாலாலும் அறிய முடியாத சிவ பெருமானுடைய கழல்களை அணிந்த திருவடிகளை அறியும் வாய்ப்பினைப் பெற்றான். அத்திருவடிகள் வாழ்க.

                                             திருச்சிற்றம்பலம்


4. 112     பொது                             தனித் திருவிருத்தம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன், வீழ்ந்துஇலங்கு
வெள்ளிப் புரிஅன்ன வெண்புரி நூலன், விரிசடைமேல்
வெள்ளித் தகடுஅன்ன வெண்பிறை சூடி,வெள் என்புஅணிந்து,
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே.

         பொழிப்புரை : வெண்ணிறத்தினை உடைய சங்கின் துண்டு போன்ற வெண்ணிறமான மண்டையோட்டை ஏந்தியவனாய் , வெள்ளியை முறுக்கினாற் போன்ற வெள்ளிய பூணூலை அணிந்தவனாய் , விரிந்த சடையின்மேல் வெள்ளித்தகடு போன்ற வெண் பிறையைச் சூடியவனாய் , வெள்ளிய எலும்புகளை அணிந்து பவளம் போன்ற உடலில் வெண்ணிறநீற்றைப் பூசிய வேதியன் சிவபெருமான் ஆவான் .

 
பாடல் எண் : 2
உடலைத் துறந்து,உலகு ஏழும் கடந்து, உலவாத துன்பக்
கடலைக் கடந்துஉய்யப் போயிடல் ஆகும், கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக் கங்கைப் பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கடவுட்கு அடிமைக்கண் துணிநெஞ்சமே.

         பொழிப்புரை : நெஞ்சமே ! பொன் போல ஒளிவீசும் செந்நிற முடைய பரவிய சடையில் கடல் போன்ற அலைகளை உடைய கங்கையையும் குளிர்ந்த பிறையையும் வைத்த , சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய தெய்வத்தின் அடிமை செய்தற்கண் துணிவுடையை ஆவாய் . அவ்வாறு செய்தால் பிண்டமாகிய உடலைத் துறந்து , ஏழுலக மான அண்டத்தைக் கடந்து அழியாத பிறவித்துன்பக் கடலைக் கடந்து நாம் பிழைத்துப் பாசநீக்கம் பெற்று அப்பெருமானுடைய வீட்டுலகை அடையலாம் .


பாடல் எண் : 3
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும், இம் மூவுலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய், அழல்வணா, நீஅலையோ,
உன்னை நினைந்தே கழியும்என் ஆவி, கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாய்,எம்பிரான், உன்னை வேண்டியதே.

         பொழிப்புரை : தீவண்ணனே ! உன் முன்னிலையில் யான் ஏதாவது கூறினால் அது உபசாரவார்த்தை போலக் காணப்படும் . இம் மூவுலகுக்கும் தாயும் தந்தையும் ஆயவன் நீ அல்லையோ ? உன்னைத் தியானித்துக் கொண்டே என் உயிர் நீங்கும். என் உயிர் இவ்வுடலை நீங்கியபின் என்னை நீ மறக்கக் கூடாது என்பதனையே யான் உன்னை வேண்டுகிறேன்.


பாடல் எண் : 4
நின்னைஎப் போதும் நினையஒட் டாய், நீ, நினையப்புகில்
பின்னைஅப் போதே மறப்பித்து, பேர்த்துஒன்று நாடுவித்தி
உன்னைஎப் போதும் மறந்திட்டு, உனக்குஇனிதாஇருக்கும்
என்னை ஒப்பார் உளரோ, சொல்லு, வாழி இறையவனே.

         பொழிப்புரை : இறையவனே ! உன்னை எப்போதும் நினைத்திருக்குமாறு செய்ய நீ இசைகின்றாய் அல்லை . உன்னை உறுதியாகத் தியானிக்கப் புகுந்தால் அப்போதே அதனை மறக்கச் செய்து வேறொரு பொருளில் அடியேனுடைய மனம் ஈடுபடுமாறு செய்கின்றாய். உன்னை எப்போதும் மறந்தவனாயினும் உனக்கு இனியனாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியேனை ஒத்தவர் வேறு எவரேனும் இவ்வுலகில் உள்ளனரோ என்பதனைச் சொல்லுவாயாக .


பாடல் எண் : 5
முழுத்தழல் மேனித் தவளப் பொடியன், கனகக்குன்றத்து
எழில்பெருஞ் சோதியை, எங்கள் பிரானை, இகழ்திர் கண்டீர்,
தொழப்படும் தேவர் தொழப்படு வானைத் தொழுத பின்னை,
தொழப்படும் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே.

         பொழிப்புரை : முழுமையான அனல்போன்ற சிவந்த திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிந்தவனாய் , மேருமலை போன்ற அழகிய பெரிய ஒளிவடிவினனாகிய எங்கள் பெருமானை இகழ்கின்ற நீங்கள் இதனைத் தெரிந்து கொள்ளுங்கள். பொது மக்களால் தொழப்படும் சிறுதேவரால் தொழப்படும் எம்பெருமானைத் தொழுத பின்னர் அப் பெருமான் பிறரால் தொழப்படும் அச்சிறுதேவரைக் கொண்டும் அவர்களால் தன் அடியவர்களைத் தொழச் செய்வான் .


பாடல் எண் : 6
விண்அகத்தான், மிக்க வேதத்து உளான், விரி நீர்உடுத்த
மண்அகத்தான், திருமால்அகத் தான், மருவற்குஇனிய
பண்அகத்தான், பத்தர் சித்தத்து உளான், பழநாய் அடியேன்
கண்அகத்தான், மனத்தான், சென்னியான், எம் கறைக் கண்டனே.

         பொழிப்புரை : எம் நீலகண்டப் பெருமான் தேவருலகிலும் , மேம்பட்ட வேதத்திலும், கடலால் சூழப்பட்ட இம்மண்ணுலகத்திலும் , திருமாலுடைய உள்ளத்திலும் , பழகுதற்கு இனிய பண்களிலும் , அடியவர் உள்ளத்தும் , பழைய நாயைப் போன்ற இழிந்த அடியேனுடைய மனக் கண்களிலும் மனத்தும் , தலைமீதும் எங்கும் கரந்து பரந்துள்ளான்.


பாடல் எண் : 7
பெருங்கடல் மூடி, பிரளயம் கொண்டு, பிரமனும்போய்,
இருங்கடல் மூடி இறக்கும், இறந்தான் களேபரமும்,
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு, கங்காளராய்,
வரும்கடன் மீளநின்று, எம்இறை நல்வீணை வாசிக்குமே.

         பொழிப்புரை : பெரிய கடல் இவ்வுலகைமூட ஊழிவெள்ளம் ஏற்படப் பிரமனுடைய சத்திய உலகத்தும் பெரிய கடல்நீர் பொங்கி அதனை மூழ்க்கப் பிரமனும் இறப்பான் . அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும் கரிய கடல்போன்ற நிறத்தினனாகிய திரு மாலுடைய உடலையும் சுமந்து கொண்டு அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனாய் , ஒடுங்கிய உலகம் மீளத்தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து எம்பெருமான் சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான் .


பாடல் எண் : 8
வானம் துளங்கில்என், மண்கம்பம் ஆகில்என், மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறில்என், தண்கடலும்
மீனம் படில்என், விரிசுடர் வீழில்என், வேலைநஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே.

         பொழிப்புரை : கடலில் எழுந்தவிடத்தை உண்டும் எந்தக் குறைபாடும் இல்லாத ஒப்பற்ற சிவபெருமானுக்கு அடிமைகளாய்த் தொண்டு செய்யும் மேம்பட்டவர்களுக்கு , வானமும் மண்ணும் அசைந்து ஒடுங்கினாலும் , பெரிய மலைகள் இடம் பெயர்ந்து மேல் கீழாகத் தடுமாறினாலும் , கடல்களிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் அழிந்தாலும் , சூரிய சந்திரர்கள் இடம் பெயர்ந்து விழுந்தாலும் அவற்றைப் பற்றிய கவலை ஏதும் ஏற்படாது .


பாடல் எண் : 9
சிவன் எனும் நாமம் தனக்கே உடையசெம் மேனி எம்மான்,
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில், அவன் தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள்அழைத்தால்,
இவன் எனைப் பன்னாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே.

         பொழிப்புரை : சிவன் என்ற பெயரைத் தனக்கே உரிய பெயராகக் கொண்ட செம்மேனிப் பெருமான் அடியேனை அடிமையாகக் கொண்டு கருணை செய்திடுவானாகில் அவனை அடியேன் ` பவன் ` என்னும் திருப்பெயர் முதலியவற்றை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றி அவன் அடியேனை இயக்கும் இடம் தொறும் திரிந்து பலநாளும் அழைத்தால் , இவன் என்னைப் பலநாளாக அழைத்தலைத் தவறாது செய்கிறான் என்று திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான் .


பாடல் எண் : 10
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர், இகலிஉன்னை
நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்துஅன்று  நின்பெருமை,
பொன்னைஒப் பார்இத் தழலை வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னைஒப்பு ஆர மிளிரும் சடைக்கற்றை வேதியனே.

         பொழிப்புரை : பொன்னை ஒத்து ஒளியுடையதாய் , தீயை ஒத்துச் செந்நிறத்ததாய்ச் சிவந்த வானத்தைப் பிளந்து நெடுகப் பரவியதாய மின்னலை ஒத்து விட்டு விட்டு ஒளிவீசும் சடைக்கற்றையை உடைய வேதப்பரம்பொருளே ! அடியேனை ஒத்த சிற்றறிவினர் உன்னை யாங்ஙனம் காண இயலும் ? உன்னோடு மாறுபட்டு உன்னை ஒப்பவராகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தேவர்கள் உன்னுடைய அடியையோ முடியையோ காண இயலாதவாறு உன்பெருமை ஏனைய எல்லாத் தேவர்களையும் விட மேம்பட்டுள்ளது .

                                             திருச்சிற்றம்பலம்

                                             6. 097    பொது
                                        திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அண்டம் கடந்த சுவடும் உண்டோ,
         அனல்அங்கை ஏந்திய ஆடல் உண்டோ,
பண்டை எழுவர் படியும் உண்டோ,
         பாரிடங்கள் பலசூழப் போந்தது உண்டோ,
கண்டம் இறையே கறுத்தது உண்டோ,
         கண்ணின்மேற் கண்ஒன்று உடையது உண்டோ,
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி உண்டோ,
         சொல்லீர்எம் பிரானாரைக் கண்ட வாறே.

         பொழிப்புரை : அன்பர்களே ! நீங்கள் கண்ட எம்பிரானிடம் அண்டம் கடந்து நின்றதற்கான அடையாளம் உண்டோ ? அங்கையில் அனலேந்திய ஆடலுண்டோ ? பண்டை முனிவர் எழுவர் பணி செய்யும் படியும் உண்டோ ? பூதங்கள் பல சூழப் போதல் உண்டோ ? கண்டம் சிறிதே கறுத்தது உண்டோ ? கண்களுக்கு மேலாக நெற்றியில் கண் ஒன்று உண்டோ ? தொண்டர் சூழும் அத்தொடர்ச்சி உண்டோ ? நீங்கள் அவனைக் கண்டவண்ணம் எமக்குச் சொல்வீராக .


பாடல் எண் : 2
எரிகின்ற இளஞாயிறு அன்ன மேனி
         இலங்குஇழைஓர் பால்உண்டோ, வெள்ஏறு உண்டோ,
விரிகின்ற பொறிஅரவத்து அழலும் உண்டோ,
         வேழத்தின் உரிஉண்டோ, வெண்ணூல் உண்டோ,
வரிநின்ற பொறிஅரவச் சடையும் உண்டோ,
         அச்சடைமேல் இளமதியம் வைத்தது உண்டோ,
சொரிகின்ற புனல்உண்டோ, சூலம் உண்டோ,
         சொல்லீர்எம் பிரானாரைக் கண்ட வாறே.

         பொழிப்புரை : அன்பர்களே ! நீங்கள் கண்ட எம்பிரானிடம் இள ஞாயிறு போன்று ஒளிவிடும் அவன் உடலின் ஓருபால் விளங்குகின்ற அணியினை உடைய உமாதேவி உண்டோ ? வெள்ளிய இடப முண்டோ ? பரவுகின்ற தீப்பொறியும் ஒலியுமுடைய தழலுமுண்டோ ? வேழத்தின் தோல் உண்டோ ? வெண்ணூல் உண்டோ ? வரியும் புள்ளி யும் பொருந்திய பாம்பைக் கொண்ட சடையுமுண்டோ ? அச்சடை மேல் வைக்கப்பட்ட இளமதியும் உண்டோ ? சடையிலிருந்து ஒழுகும் நீர் உண்டோ ? கையில் சூலும் உண்டோ ? நீங்கள் அவனைக் கண்ட வண்ணம் எமக்குச் சொல்வீராக .


பாடல் எண் : 3
நிலாமாலை செஞ்சடைமேல் வைத்தது உண்டோ,
         நெற்றிமேற் கண்உண்டோ, நீறு சாந்தோ,
புலால்நாறு வெள்எலும்பு பூண்டது உண்டோ,
         பூதம்தற் சூழ்ந்தனவோ, போர்ஏறு உண்டோ,
கலாமாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ,
         கார்க்கொன்றை மாலை கலந்தது உண்டோ,
சுலாமாலை ஆடுஅரவம் தோள்மேல் உண்டோ,
         சொல்லீர்எம் பிரானாரைக் கண்ட வாறே.

         பொழிப்புரை :அன்பர்களே ! நீவிர் கண்ட எம்பெருமான் பிறைக் கண்ணியைச் செஞ்சடைமேல் வைத்ததுண்டோ ? அவனுக்கு நெற்றியில் கண்ணுண்டோ ? பூசும் நீறுதான் அவனுக்குச் சந்தனமோ ? புலால் நாறும் வெள்ளெலும்பு மாலையை அவன் பூண்டதுண்டோ ? பூதங்கள் அவனைச் சூழ்ந்ததுண்டோ? போர்க்குணமுடைய இடபம் அருகில் உண்டோ? போர் செய்யும் தன்மை வாய்ந்தனவும், வேல் போன்றனவுமாகிய கண்களையுடைய உமையம்மை அவன் பாகமாகப் பொருந்திய துண்டோ ? கார்காலத்து மலரும் கொன்றை மாலை அவனுடலில் கலந்ததுண்டோ ? வளைந்தமாலை போல்வதும் படமெடுத்தாடுவதும் ஆகிய பாம்பு தோள்மேல் விளங்குதல் உண்டோ ? அவனை நீங்கள் கண்டவண்ணம் எமக்குக் கூறுவீராக .


பாடல் எண் : 4
பண்ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ,
         பாரிடங்கள் பலசூழப் போந்தது உண்டோ,
உண்ணா வருநஞ்சம் உண்டது உண்டோ,
         ஊழித்தீஅன்ன ஒளிதான் உண்டோ,
கண்ணார் கழல்காலற் செற்றது உண்டோ,
         காமனையும் கண்அழலால் காய்ந்தது உண்டோ,
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ,
         எவ்வகைஎம் பிரானாரைக் கண்ட வாறே.

         பொழிப்புரை : அன்பர்காள் ! நீவிர் கண்ட எம்பெருமான் பண் நிறைந்த வீணையை வாசித்துப் பழகியதுண்டோ ? பூதங்கள் பல சூழ்ந்து வர வெளியே போந்ததுண்டோ ? உண்ணற்காகாத கொடிய நஞ்சை உண்டதுண்டோ ? ஊழித் தீப் போன்ற ஒளி அவன்பால் உண்டோ ? கண் , மகிழ்வால் நிறைதற்குக் காரணமான திருவடியால் அவன் காலனை உதைத்ததுண்டோ ? மன்மதனையும் நெற்றிக்கண்ணிடத்துத் தோன்றிய நெருப்பால் அவன் அழித்ததுண்டோ ? பகைவருடைய திரிபுரங்கள் மேல் அவன் அம்பு எய்ததுண்டோ ? நீங்கள் அவனை எவ்வகையில் கண்டீர்கள் ?.


பாடல் எண் : 5
நீறுஉடைய திருமேனி பாகம் உண்டோ,
         நெற்றிமேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ,
கூறுஉடைய கொடுமழுவாள் கையில் உண்டோ,
         கொல்புலித்தோல் உடைஉண்டோ, கொண்டவேடம்
ஆறுஉடைய சடைஉண்டோ, அரவம் உண்டோ,
         அதன்அருகே பிறைஉண்டோ, அளவுஇ லாத
ஏறுஉடைய கொடிஉண்டோ, இலயம் உண்டோ,
         எவ்வகைஎம் பிரானாரைக் கண்ட வாறே.

         பொழிப்புரை : அன்பர்காள் ! நீவிர் கண்ட எம்பெருமானுக்குத் திருமேனியில் நீறு பூசிய பாகமுண்டோ ? நெற்றியில் நெருப்புமிகும் ஒரு கண்ணுமுண்டோ ? கூறுபடுத்துங்கொடிய மழுவாயுதம் கையிலுண்டோ ? கொல்லும் புலியது தோலாகிய உடையுண்டோ ? கங்கையைத் தாங்கும் சடையுண்டோ ? அச்சடையிடத்துப் பாம்பு உண்டோ ? அப் பாம்பின் அருகே பிறையுண்டோ ? பெருமை அளவிட முடியாத இடபக் கொடியுண்டோ ? கூத்துமுண்டோ ? நீங்கள் அவன் கொண்ட எவ்வகை வேடத்தில் அவனைக் கண்டீர்கள் ?.


பாடல் எண் : 6
பட்டமுந் தோடுமஓர் பாகம் கண்டேன்,
         பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்,
கொட்டிநின்று இலயங்கள் ஆடக் கண்டேன்,
         குழைகாதில் பிறைசென்னி இலங்கக் கண்டேன்,
கட்டங்கக் கொடிதிண்தோள் ஆடக் கண்டேன்,
         கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்,
சிட்டனைத் திருஆல வாயில் கண்டேன்,
         தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.

         பொழிப்புரை : அன்பர்காள் ! சிவபெருமானை நான் கனவில் கண்டவாறே நனவிலும் அவன் நெற்றிப்பட்டமும் செவித்தோடும் ஓரொருபாகத்தில் விளங்கக் கண்டேன் , நிலம் அழகுபெறுமாறு பிச்சை பெறப் பல இடங்களிலும் திரிந்தலையக் கண்டேன் . வாச்சியங்களைப் பூதகணங்கள் இயம்பப் பலவகைக் கூத்துக்களை ஆடக் கண்டேன் , காதிற்குழையும் சென்னியில் பிறையும் விளங்கக் கண்டேன் , உயர்த்திய மழுக்கொடி திண்டோளை ஒட்டி ஆடக்கண்டேன் ; வலிமை மிக்க மழுவாயுதம் வலக்கையில் திகழக் கண்டேன் ; மேலான அவனைத் திருவாலவாயிற் கண்டேன் . அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?.


பாடல் எண் : 7
அலைத்துஓடு புனல்கங்கை சடையில் கண்டேன்,
         அலர்கொன்றைத் தார்அணிந்த வாறு கண்டேன்,
பலிக்குஓடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்,
         பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்,
கலிக்கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்,
         கறைமிடறும் கண்டேன், கனலும் கண்டேன்,
வலித்துஉடுத்த மான்தோல் அரையில் கண்டேன்,
         மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.

         பொழிப்புரை : மறைவல்லவனும் , மாதவத்தவனும் ஆகிய சிவ பெருமானுடைய சடையில் அலைவீசி ஓடும் நீர்ப் பெருக்கையுடைய கங்கையைக் கண்டேன் . கொன்றை மலரால் ஆன மாலையை அவன் அணிந்த தன்மையைக் கண்டேன் . பிச்சைக்கு ஓடித்திரியும் அவன் கையில் பாம்பைக் கண்டேன் . பகற்பொழுதில் பழனத்திருப்பதியில் அவன் சென்று புகுதலைக் கண்டேன் . அவன் ஆரவாரம் மிக்க கச்சி மேற்றளியில் மேவி இருக்கக் கண்டேன் . அவனது கறைபொருந்திய மிடற்றைக் கண்டேன் ; கையில் கனலும் கண்டேன் . அரையில் இறுக்கி உடுத்த மான் தோலைக் கண்டேன் . அவனை நான் கண்டவாறு இது . அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?


பாடல் எண் : 8
நீறுஏறு திருமேனி நிகழக் கண்டேன்,
         நீள்சடைமேல் நிறைகங்கை ஏறக் கண்டேன்,
கூறுஏறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்,
         கொடுகொட்டி கைஅலகு கையில் கண்டேன்,
ஆறுஏறு சென்னிஅணி மதியும் கண்டேன்,
         அடியார்கட்கு ஆரமுதம் ஆகக் கண்டேன்,
ஏறுஏறி இந்நெறியே போதக் கண்டேன்,
         இவ்வகைஎம் பெருமானைக் கண்ட வாறே.

         பொழிப்புரை : அன்பர்காள் ! எம்பெருமான் திருநீறு திகழும் திருமேனியுடன் உலவக் கண்டேன் . அவன் நீண்ட சடைமேல் நீர்நிறை கங்கை பொருந்தக் கண்டேன் . கூறுபடுத்தலைப் பொருந்திய கொடிய மழுவாயுதத்தை அவன் கொள்ளக் கண்டேன் . கொடுகொட்டி என்னும் வாச்சியத்தையும் கையலகு என்னும் ஆயுதத்தையும் அவன் கையிற் கண்டேன் . ஆறு பொருந்திய அவன் தலையில் அழகிய மதியையும் கண்டேன் . அவன் அடியார்க்கு ஆரமுதம் போன்று இன்பஞ் செய்தலைக் கண்டேன் . அவன் இடபவாகனமேறி இவ்வழியே வரக் கண்டேன். அவனை இவ்வகையில் யான் கண்டேன் . அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?.


பாடல் எண் : 9
விரைஉண்ட வெண்ணீறு தானும் உண்டு,
         வெண்தலைகை உண்டு, ஒருகை வீணை உண்டு,
சுரைஉண்டு சூடும் பிறைஒன்று உண்டு,
         சூலமும் தண்டும் சுமந்தது உண்டு,
அரைஉண்ட கோவண ஆடை உண்டு,
         வலிக்கோலும் தோலும் அழகா உண்டு,
இரைஉண் டுஅறியாத பாம்பும் உண்டு,
         இமையோர் பெருமான் இலாதது என்னே.

         பொழிப்புரை : அன்பர்காள் ! இமையோர் பெருமானுடலில் மணமுடைய வெண்ணீறு உண்டு . அவன் கைகளில் ஒன்றில் வெண்டலையும் ஒன்றில் வீணையுமுண்டு . சுரைபோன்று தோன்றும் சடை முடியுண்டு அவனுக்கு , அதில் அவன் சூடும் பிறை ஒன்றுண்டு . அவன் சூலாயுதத்தையும் தண்டாயுதத்தையும் சுமந்ததுண்டு , அவனுக்கு இடுப்பில் கட்டிய கோவண ஆடையுண்டு , அவன்பால் ஊன்றுகோலும் போர்க்குந்தோலும் அழகாக உண்டு . அவனிடத்து இருக்கும் பாம்பு பசி இல்லாததாகலின் இரையுண்டறியாதது . அவனிடம் எல்லாம் உள . இவ்வாறு அவனை நான் கண்டேன் . நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம் ?


பாடல் எண் : 10
மைப்படிந்த கண்ணாளும் தானும், கச்சி
         மயானத்தான், வார்சடையான், என்னின் அல்லால்,
ஒப்புஉடையன் அல்லன், ஒருவன் அல்லன்,
         ஓர்ஊரன் அல்லன், ஓர்உவமன் இல்லி,
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
         அவன்அருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன், இந்நிறத்தன், இவ்வண் ணத்தன்,
         இவன்இறைவன் என்றுஎழுதிக் காட்ட ஒணாதே.

         பொழிப்புரை : இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான் ` என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன் . அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன் . உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன் ; ஓரூர்க்கே உரியனல்லன் . யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன் . அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன் , இன்ன நிறத்தையுடையவன் , இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது .


பாடல் எண் : 11
பொன்னொத்த மேனிமேல் பொடியும் கண்டேன்,
         புலித்தோல் உடைகண்டேன், புணரத் தன்மேல்
மின்ஒத்த நுண்இடையாள் பாகம் கண்டேன்,
         மிளிர்வதுஒரு பாம்பும் அரைமேல் கண்டேன்,
அன்னத்தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை
         அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்,
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்,
         சிவனைநான் சிந்தையுள் கண்ட வாறே.

         பொழிப்புரை : அன்பர்காள் ! நான் சிவபெருமானை என் சிந்தனையுட் கண்டவாறே என் கண்ணிலும் அவன் பொன்னார் மேனி மேல் திருநீற்றுப் பொடியும் கண்டேன் ; புலித்தோலாகிய உடை கண்டேன் . தன்னிடப்பாகத்தில் மின்னலைப் போன்ற நுண்ணிய இடையை உடைய உமையாள் பொருந்தக் கண்டேன் . ஒளியுடைப் பாம்பு ஒன்றையும் அரைமேற்கண்டேன் . அன்னம்போன்ற வெள்ளிய தேரினை ஊர்ந்த அரக்கன் அலற அவனை நசுக்கிய திருவடியையும் கண்டேன் . அடையாளப் பூவாகிய கொன்றை மலராலான தலை மாலையையும் கண்டேன் . நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம் ?

                                             திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 416
அந் நிலைமை தனில் ஆண்ட அரசுபணி செய்ய,அவர்
நல் நிலைமை காட்டுவார், நம்பர் திரு மணி முன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான்எங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள்செய்தார்.

         பொழிப்புரை : அந்நிலைமையில் திருநாவுக்கரசர் திருப் பணிசெய்ய, அவருடைய நன்னிலைமையை உலகறியக் காட்டுவார் ஆகச் சிவபெருமான் அழகிய திருமுற்றத்தில் திருப்பணிக்காக உழவாரம் நுழைந்த இடம் எல்லாம் பொன்னினோடு நவமணிகளும் வெளிப்பட்டு விளங்குமாறு அருள் செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 417
செம்பொன்னும் நவமணியும் சேண்விளங்க, ஆங்குஎவையும்
உம்பர்பிரான் திருமுன்றில் உருள்பருக்கை யுடன்ஒக்க,
எம்பெருமான் வாகீசர் உழவாரத் தினில்ஏந்தி,
வம்புஅலர்மென் பூங்கமல வாவியினில் புகஎறிந்தார்.

         பொழிப்புரை : செம்பொன்னும் நவமணிகளும் நெடுந் தொலைவிலும் ஒளி வீச, எம் தலைவரான திருநாவுக்கரசர், சிவ பெருமானின் திருமுன்றிலில் உருள்கின்ற மற்றப் பருக்கைக் கற்களுடன் ஒத்தலால், அவ்விடத்தில் விளங்கிய அவை எல்லாவற்றையும் உழவாரத்தில் ஏந்திச் சென்று, மணம் வீச மலர்கின்ற பூக்களான தாமரைகள் மலரும் பொய்கையில் புகும்படி வீசி ஏறிந்தார்.


பெ. பு. பாடல் எண் : 418
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறுபாடு இலாநிலைமை துணிந்துஇருந்த
நல்ஓலோர் முன், திருப்புகலூர் நாயகனார் திருவருளால்,
வில் ஆடு நுதல் மடவார் விசும்பு ஊடு வந்து இழிந்தார்.

         பொழிப்புரை : புல்லுடனும் கல்லுடனும் பொன்னுடனும் மணிகளுடனும் வேறுபாடு இல்லாமையைத் துணிந்து, மனம் சிறிதும் மாறுதல் இல்லாது இருந்த நல்லோரான நாயனாரின் முன்பு, திருப்புகலூர் இறைவரின் திருவருளால், வில்லைத் தோற்கடிக்கும் புருவங்கள் வளைந்து அசைவதற்கு இடமான நெற்றியையுடைய பெண்கள், வான் உலகத்தினின்றும் வந்து இறங்கினர்.


பெ. பு. பாடல் எண் : 419
வானகமின் னுக்கொடிகள் வந்து இழிந்தால் எனவந்து,
தானநிறை சுருதிகளில் தகும்அலங்கா ரத்தன்மை
கானஅமு தம்பரப்பும் கனிவாயில் ஒளிபரப்ப,
பானல்நெடுங் கண்கள்வெளி பரப்பிஇசை பாடுவார்.

         பொழிப்புரை : விண்ணிலிருந்து மின்னற் கொடிகள் கீழ் இறங்கியவை போல வந்து, உரிய இசை பிறக்கும் இடங்களினின்றும் நிறைந்து வரும் இசையால் உண்டாகும் தக்க இனிமை பொருந்திய இசையமுதத்தைப் பரவச் செய்கின்ற, கொவ்வைக் கனியைப் போன்ற வாயில் ஒளி விளங்க, நீல மலர் போன்ற நீண்ட கண்களை வெளியில் பரப்பி, இசையைப் பாடலானார்.


பெ. பு. பாடல் எண் : 420
கற்பகப்பூந் தளிரடிபோங் காமருசா ரிகைசெய்ய
உற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடும் கைபெயரப்
பொற்புறும்அக் கையின்வழி பொருகயல்கண் புடைபெயர
அற்புதப்பொன் கொடிநுடங்கி ஆடுவபோல் ஆடுவார்.

         பொழிப்புரை : கற்பக மரத்தின் இளந்தளிர்கள் போன்ற அடிகளைப் பெயர்த்து, வட்டமாய்ச் சுழன்று, செங்காந்தள் மலரின் அரும்பு போல் மென்மையான விரல்களின் செயல்களால் கைகள் பெயரவும், அழகு பொருந்தும் அக்கைகளின் வழியே பொரும் கயல் மீன் போன்ற கண்கள் புடை பெயர்ந்து செல்லவும், பொன்னால் ஆன கொடிகள் அசைந்து ஆடுவன போல ஆடுவாராகி.


பெ. பு. பாடல் எண் : 421
ஆடுவார், பாடுவார், அலர்மாரி மேல்பொழிவார்,
கூடுவார் போன்று அணைவார், குழல்அவிழ, இடைநுடங்க
ஓடுவார், மாரவேள் உடன்மீள்வர், ஒளிபெருக
நீடுவார் துகில்அசைய நிற்பாரும் ஆயினார்.

         பொழிப்புரை : ஆடுபவர்களும், பாடுபவர்களும், மலர்களை மழையென மேலே பொழிபவர்களும், தழுவுவார் போல் அருகில் வந்து சேர்பவர்களும், கூந்தல் அவிழவும் இடை துவளவும் ஓடுபவர்களும், மன்மதனுடன் மீள்பவர்களும், காமஒளி பெருகக் காணும்படி நீண்ட உடை நழுவ நிற்பவர்களும் இவ்வாறு பல திறப்பட்ட செயல்களைச் செய்பவர்கள் ஆயினர்.


பெ. பு. பாடல் எண் : 422
இத்தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய,
அத்தனார் திருவடிக்கீழ் நினைவு அகலா அன்பு உருகும்
மெய்த்தன்மை உணர்வு உடைய விழுத்தவத்து மேலோர்,தம்
சித்தநிலை திரியாது, செய்பணியின் தலைநின்றார்.

         பொழிப்புரை : இங்ஙனம் அரம்பையர்கள் எல்லா வகையாலும் காமச்செயல்களைச் செய்யவும், பெருமானின் திருவடிக் கீழ்ப்பதிய வைத்த நினைவு நீங்காத அன்பினால் உருகும் மெய்த்தன்மையுடைய தூயதவத்தில் நிற்கும் மேலோரான நாவுக்கரசர், தம் உள்ளத்தின் நிலைமையினின்று மாறுபடாமல், தாம் செய்துவரும் பணியில் உறைத்து நிற்பாராகி,


பெ. பு. பாடல் எண் : 423
இம்மாயப் பவத்தொடக்குஆம் இருவினைகள் தமைநோக்கி,
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான், திருவாரூர்
அம்மானுக்கு ஆளானேன், அலையேன்மின் நீர்என்று
"பொய்ம்மாயப் பெருங்கடலுள்" எனும் திருத்தாண்டகம் புகன்றார்.

         பொழிப்புரை : இம் மாயையின் விளைவாய பிறவிப் பிணைப்பில் வீழ்த்தும் இருவினைகளின் வடிவாய் வந்த அந்நங்கையரைப் பார்த்து, `உம்மால் இங்கு எனக்கு ஆக வேண்டிய குறை யாது உளது? நான் திருவாரூர்ப் பெருமானுக்கு ஆளானேன். நீங்கள் வலிதே அலைய வேண்டா!` என்ற கருத்துடைய `பொய்ம் மாயக் கடலுள்` எனத் தொடங்கும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடினார்.

         `பொய்ம் மாயப் பெருங்கடலில்` (தி.6 ப.27) எனத் தொடங்கும் இத்திருத்தாண்டகம், அப்பர் பெருமானின் அரிய பத்திமையையும் உரனுடைமையையும் ஒருங்கு விளக்குவதாகும்.

                                    6. 027    திருவாரூர்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொய்ம்மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற
         புண்ணியங்காள் தீவினைகாள், திருவே, நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு
         இல்லையே கிடந்ததுதான், யானேல், வானோர்
தம்மானை, தலைமகனை, தண்ணல் ஆரூர்த்
         தடங்கடலை, தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்
எம்மான்தன் அடித்தொடர்வான் உழிதர் கின்றேன்,
         இடையிலேன், கெடுவீர்காள், இடறேன் மின்னே.

         பொழிப்புரை :நிலையின்மையும் அழிதலுடைமையும் உடைய உலகப் பொருள்களாகிய பெரிய கடலிலே தடுமாறுகின்ற நல்வினை தீவினைகளாகிய இருவினைகளே ! நீங்கள் எனக்கு நலம் செய்வீர் அல்லீர் . இந்த நிலையின்மையை உடைய பெரிய உடலாகிய கடலைச் சிறிது , சிறிதாக அரித்துத் தின்னும் உங்களுக்குத் தின்றற்கு உரிய பொருள் எதுவும் என்னிடத்தில் இல்லை . ஏனெனில் யான் தேவர்கள் தலைவனாய் , எனக்கும் தலைவனாய்க் குளிர்ந்த பெரிய ஆரூரில் உள்ள பெரிய கடல் போல்வானாய்த் தன்னைத் தொடர்ந்த அடியார்களைத் தன் திருவடிப் பேரின்பத்தில் அடங்குமாறு செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளைத் தொடர்வதில் இடையீடு இல்லாமல் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன் . அழிந்து போகக் கூடியவர்களே! இடையில் நின்று என்னைத் தடுக்காதீர்கள் .


பாடல் எண் : 2
ஐம்பெருமா பூதங்காள், ஒருவீர் வேண்டிற்று
         ஒருவீர்வேண்டீர், ஈண்டுஇவ் அவனி யெல்லாம்
உம்பரமே, உம்வசமே யாக்க வல்லீர்க்கு
         இல்லையே நுகர்போகம், யானேல், வானோர்
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழாகி
         ஒள்ஆரூர் நள்அமிர்தாம் வள்ளல், வானோர்
தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன்,
         தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.

         பொழிப்புரை :ஐம்பெரும் பூதங்களே ! உங்களிலே ஒருவர் விரும்பியதை மற்றவர் விரும்பாது இவ்வுலகம் முழுதையும் உம்மால் தாங்கப்படுவதாக்கி உம் வசப்படுத்துவதில் நீங்கள் ஆற்றலுடையீர் . உங்களுக்கு என்பால் நுகரத்தக்க இன்பம் தரும் பொருள் ஒன்று மில்லை . ஏனெனில் யான் தேவர்களும் தேவருலகமும் ஊழிகளும் ஏழு உலகங்களுமாகி , வள்ளலாய்த் தேவர் தலைவனாய் , ஒளி பொருந்திய ஆரூரில் குளிர்ந்த அமுதமாக இருக்கும் அரனை இடையீடு இன்றித் தொடர்ந்து எப்பொழுதும் காண்பேன் ஆவேன் . உங்களுடைய இடையூறுகளில் என்னை அகப்படுவேனாய்க் கருதிச் செருக்குக் கொள்ளாதீர்கள் .


பாடல் எண் : 3
சில்உருவில் குறிஇருத்தி நித்தல் பற்றிச்
         செழுங்கண்ணால் நோக்கும்இது ஊக்கம் அன்று,
பல்உருவில் தொழில்பூண்ட பஞ்ச பூதப்
         பளகீரும் வசம்அன்றே, பாரேல் எல்லாம்
சொல்உருவிற் சுடர்மூன்றாய், உருவம் மூன்றாய்,
         தூநயனம் மூன்றாகி, ஆண்ட ஆரூர்
நல்உருவிற் சிவனடியே அடைவேன், நும்மால்
         நமைப்புண்ணேன், கமைத்துநீர் நடமின் களே.

         பொழிப்புரை :பல வடிவங்களில் திரிந்து வேறுபடுகின்ற ஐம்பூதங்களாகிய பொய்ம்மையுடையீர் ! அழிகின்ற சில உருவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு நாடோறும் அவற்றை விரும்பிப் புறத்தில் அழகாக உள்ள கண்களால் பார்க்கும் இச்செயல் நல்லொழுக்கம் ஆகாது . இவ்வுலகம் முழுதும் உம் வசப்பட்டிருப்பது போதாதா ? யானோ ஐம்புலங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய ஞாயிறு திங்கள் தீ என்ற முச்சுடர்களாய் , அயன் அரி அரன் என்ற உருவம் மூன்றாய் , அச்சுடர்களாகிய கண்கள் மூன்றாய்க் கொண்டு , இவ்வுலகத்தை ஆளும் ஆரூரில் உள்ள நல்ல செந்நிறத்தவனாகிய சிவனடிகளையே அடைவேனாக உள்ளேன் . உம்மால் தேய்க்கப்படுவேன் அல்லேன் . உமக்கு நான் இணங்காததைப் பொறுத்துக்கொண்டு நுமக்கு வயப்படும் வேற்றுப் பொருள்களை நோக்கிச் செல்லுங்கள்.


பாடல் எண் : 4
உன்உருவில் சுவைஒளி  ஊறுஓசை நாற்றத்து
         உறுப்பினது குறிப்பாகும் ஐவீர், நுங்கள்
மன்உருவத்து இயற்கைகளால் வைப்பீர்க்கு, ஐயோ,
         வையகமே போதாதே, யானேல், வானோர்
பொன்உருவை, தென்ஆரூர் மன்னு குன்றை,
         புவிக்கு எழிலாம் சிவக்கொழுந்தை, புகுந்துஎன் சிந்தை
தன்உருவைத் தந்தவனை, எந்தை தன்னைத்
         தலைப்படுவேன், துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.

         பொழிப்புரை :விரும்பி நினைக்கப்படும் உடலிலே , வாய் கண் உடல் செவி மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாகநின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐவீர்களே ! உங்களுடைய மயக்கம் பொருந்திய உருவங்களின் இயற்கைகளால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா ? யானோ தேவர்களுக்கு அழகிய உரு வினைத் தந்தவனாய் , அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வானாய் , இவ்வுலகுக்கு எல்லாம் அழகாகும் சிவக்கொழுந்தாய் , என் சிந்தையுள்ளே புகுந்து அதன்கண் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன் . ஆதலால் என்னை உம் அளவில் படுத்தற்குச் செருக்கிக்கொண்டு என்பக்கல் வாராதீர்கள் .


பாடல் எண் : 5
துப்பினைமுன் பற்றுஅறா விறலே, மிக்க
         சோர்வுபடு சூட்சியமே, சுகமே, நீங்கள்
ஒப்பனையைப் பாவித்து,இவ் வுலக மெல்லாம்
         உழறும்இது குறைமுடிப்பீர்க்கு, அரிதே, என்தன்
வைப்பினை, பொன் மதில்ஆரூர் மணியை, வைகல்
         மணாளனை, எம் பெருமானை, வானோர் தங்கள்
அப்பனை, செப்பிடஅடைவேன், நும்மால் நானும்
         ஆட்டுணேன், ஓட்டந்துஈங்கு அலையேன் மின்னே.

         பொழிப்புரை :நுகர்பொருள்களிடத்துப் பண்டுதொட்டுப் பற்றுக்கொள்ளுதல் நீங்காமைக்கு ஏதுவாகிய வெற்றி மிக்க பிறர் மயங்குதற்குக் காரணமான வஞ்சனைகளே ! நீங்கள் செயற்கை அழகைப் பரப்பி நீங்கள் கருதிய செயலைச் சுகமாக முடிப்பதற்கு இவ்வுலகம் முழுதும் உழலும் செயல் உங்களுக்கு அரிதன்று . ஆனால் அடியேன் என்சேமநிதியாய் அழகிய மதில்களை உடைய ஆரூரில் மாணிக்கமாய் , வைகல் என்ற தலத்தில் மணவாளனாய் , எனக்கும் தேவர்களுக்கும் பெருமானாய் உள்ளவனை முறைப்படி அடைபவன் . ஆதலின் உங்களால் நான் மற்றவர்போல ஆட்டுவிக்கப்பட மாட்டேன் . ஓடிவந்து என்னை வருத்த முயலாதீர்கள் .


பாடல் எண் : 6
பொங்குமத மானமே, ஆர்வ, செற்ற,
         குரோதமே, உலோபமே, பொறையே, நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை எல்லாம்
         உழறும்இது குறைமுடிப்பீர்க்கு அரிதே, யானேல்,
அங்கமலத்து அயனொடுமால் ஆகி மற்றும்
         அதற்கப்பால் ஒன்றாகி அறிய ஒண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றை, சிவனை, ஆரூர்ச்
         செல்வனைச்சேர்வேன், நும்மால் செலுத்து ணேனே.

         பொழிப்புரை :பெருமிதம் கொண்ட செருக்கே ! மாண்பு இழந்த மானமே ! காமமே ! பகையே ! கோபமே ! கஞ்சத்தனமே ! துன்பச் சுமைகளே ! நீங்கள் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட இப்பேருலகத்தின் எல்லைகாறும் நீங்கள் கருதிய செயலை நிறைவேற்றுவதற்குச் சுற்றித் திரிவது உங்களுக்கு அரிது அன்று . ஆனால் யானோ செந்தாமரையில் தங்கிய பிரமனும் திருமாலும் ஆகி அவர்களையும் கடந்த ஒன்றே ஆகிய பரம்பொருளாகி , எவராலும் தம் முயற்சியால் அறிய முடியாத ஒப்பற்ற செம்பொற் குன்று போன்ற சிவபெருமானாகிய ஆரூர்ச் செல்வனைச் சேர்கின்றவன் . உம்மால் செலுத்தப்படுவேன் அல்லேன் .


பாடல் எண் : 7
இடர்பாவம் எனமிக்க துக்க வேட்கை
         வெறுப்பேஎன்று அனைவீரும் உலகை ஓடிக்
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள்
         குறிநின்றது அமையாதே, யானேல், வானோர்
அடையார்தம் புரமூன்றும் எரிசெய் தானை,
         அமரர்கள்தம் பெருமானை, அரனை, ஆரூர்
உடையானைக் கடுகச்சென்று அடைவேன், நும்மால்
         ஆட்டுணேன், ஓட்டந்து ஈங்கு அலையேன் மின்னே.

         பொழிப்புரை :துன்பங்களே ! பாவங்களே ! மிக்க துயரம் தரும் வேட்கையே ! வெறுப்பே ! எல்லீரும் உலகுகளைச் சுற்றிச் சுழன்று அவற்றை வசப்படுத்த அவை தடுமாறி உங்கள் இட்ட வழக்காக இருத்தல் போதாதா ? யானோ தேவர்களின் பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துத் தேவர்கள் பெருமானாய்த் தீங்குகளைப் போக்குபவனாயுள்ள ஆரூர்ப் பெருமானை விரையச் சென்று அடையப் போகிறேன் . உம்மால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன் . என்பக்கல் ஓடி வந்து என்னைத் துன்புறுத்தி நும் வசப்படுத்த முயலாதீர்கள் .


பாடல் எண் : 8
விரைந்தாளும் நல்குரவே, செல்வே, பொல்லா
         வெகுட்சியே, மகிழ்ச்சியே, வெறுப்பே, நீங்கள்
நிரைந்துஓடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்கு
         இல்லையே நுகர்போகம், யானேல், வானோர்
கரைந்துஓட வருநஞ்சை அமுது செய்த
         கற்பகத்தை, தற்பரத்தை, திருவா ரூரில்
பரஞ்சோதி தனைக்காண்பேன், படேன்நும் பண்பில்,
         பரிந்துஓடி ஓட்டந்து பகட்டன் மின்னே.

         பொழிப்புரை :விரைந்து வந்து ஏவல் கொள்ளும் வறுமையே ! செல்வமே ! கொடிய கோபமே ! மகிழ்ச்சியே ! வெறுப்பே ! நீங்கள் வரிசையாகச் சென்று இவ்வுலகத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து உண்ணுவீர்கள் . உங்களுக்கு நுகரத்தக்க இன்பம் கிட்டவில்லையா ? யானோ தேவர்கள் ஓலமிட்டு ஓடுமாறு வெளிப்பட்ட விடத்தை உண்ட கற்பகமாய் , உயிருக்கு மேற்பட்ட பொருளாய்த் திருவாரூரில் உள்ள மேம்பட்ட சோதி வடிவினனைக் காண்கின்றவன் . உங்களுடைய பண்புகளில் அகப்படமாட்டேன் . விரைந்து ஓடிவந்து என்னை அச்சுறுத்த முயலாதீர்கள் .


பாடல் எண் : 9
மூள்வாய தொழில்பஞ்சேந் திரிய வஞ்ச
         முகரிகாண், முழுதுமிவ் வுலகை ஓடி
நாள்வாயு நும்முடைய மம்மர் ஆணை
         நடாத்துகின்றீர்க்கு அமையாதே, யானேல், வானோர்
நீள்வான முகடுஅதனைத் தாங்கி நின்ற
         நெடுந்தூணை, பாதாளக் கருவை, ஆரூர்
ஆள்வானைக் கடுகச்சென்று அடைவேன், நும்மால்
         ஆட்டுணேன், ஓட்டந்துஈங்கு அலையேன் மின்னே.

         பொழிப்புரை :தத்தம் தொழில்களிலேயே ஈடுபட்ட ஐம்பொறிகளாகிய காக்கைகளே ! இவ்வுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஒவ்வொரு நாளும் மயக்கமாகிய ஆட்சியை நடத்துகின்ற உமக்கு இன்னும் மனநிறைவு ஏற்படவில்லையா ? யானோ தேவருலகின் உச்சியைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாய்ப் பாதாளத்துக்கும் அடிநிலையாய் ஆரூரை ஆளும் பெருமானை விரைந்து சென்று அடைவேன். உங்களால் செயற்படுத்தப் படுவேன் அல்லேன். ஓடி வந்து என்னை வருத்த முயலாதீர்கள் .


பாடல் எண் : 10
சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்
         துப்பறைஎன்று அனைவீர், இவ் வுலகை ஓடிச்
செருக்கிமிகை செலுத்திஉம செய்கை வைகல்
         செய்கின்றீர்க்கு அமையாதே, யானேல், மிக்க
தருக்கிமிக வரைஎடுத்த அரக்கன் ஆகம்
         தளரஅடி எடுத்துஅவன்தன் பாடல் கேட்டு
இரக்கம்எழுந் தருளியஎம் பெருமான் பாதத்து
         இடையிலேன், கெடுவீர்காள் இடறேன் மின்னே.

         பொழிப்புரை :சுருக்கமே ! பெருக்கமே ! காலநிலையே ! செல்வமே ! வறுமையே ! இவ்வுலகைச் சுற்றிப் பெருமிதம் கொண்டு உங்கள் ஆட்சியைச் செலுத்தி நாடோறும் உங்கள் செயலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் செயல் போதாதோ ? யானோ மிகவும் செருக்குற்றுக் கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் தளருமாறு அவனை அழுத்திப்பின் அவன் பாடலைக் கேட்டு இரங்கி அவனுக்கு அருளிய எம்பெருமானுடைய திருவடிகளிலே இடையீடு இன்றிச் சேர்ந்துள்ளேன் . அழிந்து போகக் கூடிய நீங்கள் என்னைத் துன்புறுத்த முயலாதீர்கள் .
                                    திருச்சிற்றம்பலம்

                                                                      ----- தொடரும் -----




No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...