திருவண்ணாமலை - 0546. கனைகடல் வயிறு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கனைகடல் வயிறு (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் மோகம் அற அருள்


தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தநததான


கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
     வடதம னியகிரி கம்ப மாய்நட
          கணபண விபரித கந்த காளபு ......        யங்கராஜன்

கயிறென அமரர நந்த கோடியு
     முறைமுறை யமுதுக டைந்த நாளொரு
          கதியற வுலகைவி ழுங்கு மேகஒ ......    ழுங்குபோல

வினைமத கரிகளு மெண்டி சாமுக
     கிரிகளு முறுகிட அண்ட கோளகை
          வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு ...... நஞ்சுபோல

விடுகுழை யளவும ளந்து காமுக
     ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக
          விழிவலை மகளிரொ டன்பு கூர்வதுஒ ......ழிந்திடாதோ

முனைபெற வளையஅ ணைந்த மோகர
     நிசிசரர் கடகமு றிந்து தூளெழ
          முகிலென வுருவமி ருண்ட தாருகன் ...... அஞ்சமீன

முழுகிய திமிரத ரங்க சாகர
     முறையிட இமையவர் தங்க ளூர்புக
          முதுகிரி யுருவமு னிந்த சேவக ...... செம்பொன்மேரு

அனையன கனவித சண்ட கோபுர
     அருணையி லுறையும ருந்து ணாமுலை
          அபிநவ வனிதைத ருங்கு மாரநெ .....ருங்குமால்கொண்

டடவியில் வடிவுக ரந்து போயொரு
     குறமகள் பிறகுதி ரிந்த காமுக
          அரியர பிரமபு ரந்த ராதியர் ......          தம்பிரானே.


பதம் பிரித்தல்


கனைகடல் வயிறு குழம்பி வாய் விட,
     வட தமனிய கிரி கம்பமாய் நட,
          கண பண விபரித கந்த காள ......    புயங்கராஜன்

கயிறு என, அமரர் அநந்த கோடியும்,
     முறைமுறை அமுது கடைந்த நாள், ரு
          கதி அற உலகை விழுங்கு மேக ...... ஒழுங்குபோல,

வினை மதகரிகளும் எண் திசா முக
     கிரிகளும் முறுகிட, அண்ட கோளகை
          வெடிபட, எவரையும் விஞ்சி வேல்இடு ......நஞ்சுபோல,

விடுகுழை அளவும் அளந்து, காமுகர்
     உயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக,
          விழிவலை மகளிரொடு அன்பு கூர்வது .......ஒழிந்திடாதோ?

முனைபெற வளைய அணைந்த மோகர
     நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ,
          முகில் என உருவம் இருண்ட தாருகன் ...... அஞ்ச,மீன

முழுகிய திமிர தரங்க சாகரம்
     முறையிட, இமையவர் தங்கள் ஊர் புக,
          முதுகிரி உருவ முனிந்த சேவக! ...... செம்பொன்மேரு

அனையன கனவித சண்ட கோபுர
     அருணையில் உறையும் மருந்து, உணாமுலை,
          அபிநவ வனிதை தரும் குமார! நெ .....ருங்கு மால் கொண்டு,
 
அடவியில் வடிவு கரந்து போய், ரு
     குறமகள் பிறகு திரிந்த காமுக!
          அரி அர பிரம புரந்தல ஆதியர் ......       தம்பிரானே.


பதவுரை


      முனை பெற வளைய அணைந்த மோகர --– போர்க்களத்தே இடம் பெற்று வளைத்து வந்த போர் ஆரவாரம் செய்த,

     நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ --– அசுரர்களின் சேனை முறிபட்டுப் பொடியாகவும்,

     முகில் என உருவம் இருண்ட தாருகன் அஞ்ச --– மேகம் போல் உருவம் கருத்த தாருகாசுரன் அஞ்சுமாறும்,

     மீனம் முழுகிய திமிர தரங்க சாகரம் முறையிட --– மீன்கள் முழுகி உலாவுவதும், இருண்டதும், அலைகள் வீசுவதும் ஆகிய கடல் கலங்கி முறையிடவும்,

     இமையவர் தங்கள் ஊர் புக --– தேவர்கள் தங்கள் நகரம் போய்ச் சேரவும்,

     முது கிரி உருவ முனிந்த சேவக –-- பழைய கிரவுஞ்சகிரியில் வேல் ஊடுருவிச் செல்லவும் கோபித்த வீரரே!

      செம்பொன் மேரு அனையன கனவித சண்ட கோபுர --– செம்பொன் மேரு மலைக்குச் சமானமான பருத்துள்ள வலிமையான கோபுரங்களை உடைய, 

     அருணையில் உறையும் மருந்து --- திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அமுதம் போன்றவளும்,

     உணாமுலை --- வாய் வைத்து அருந்தாத தனங்களை உடையவளும்,

     அபிநவ வனிதை தரும் குமார --– என்றும் புதியவளும் ஆகிய பார்வதியம்மை பெற்ற திருக்குமாரரே!

      நெருங்கு மால் கொண்டு --- மிகுந்த விருப்பம் கொண்டு,

     அடவியில் வடிவு கரந்து போய் --- காட்டில் தனது உண்மை உருவை மறைத்துச் சென்று,

     ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக --– ஒரு குறப் பெண்ணின் முன்னே திரிந்த காமுகரே!

      அரி அர பிரம புரந்தர ஆதியர் தம்பிரானே --- திருமால், உருத்திரன், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கட்கும் தனிப்பெரும் தலைவரே!

      கனைகடல் வயிறு குழம்பி வாய்விட --– ஒலிக்கின்ற கடலின் உட்புறம் குழம்பி ஓ என்று ஓசை செய்ய,

     வட தமனிய கிரி கம்பமாய் நட --– வடக்கில் உள்ள பொன்மேரு மலையை மத்தாக நட்டு,

     கண பண விபரித கந்த காள புயங்கராஜன் கயிறு என --– கூட்டாமான படங்களை உடையதும், அதிசயிக்கத்தக்க நாற்றம் உடைய நஞ்சை உடையதும் ஆன, பாம்பரசன் ஆகிய ஆதிசேடனை கயிறாகக் கொண்டு,

     அமரர் அநந்த கோடியும் --- தேவர்கள் பல கோடி பேர் கூடி,

     முறைமுறை அமுது கடைந்த நாள் --- வரிசை வரிசையாக அமுதம் கடைந்த நாளில்,

     ஒரு கதி அற --– பிழைக்கும் வழி ஒன்றும் இல்லாத வகையில், 

     உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல –-- உலகையே விழுங்கும்படி வந்த மேகத்தின் வரிசை போல் எழுந்து,

     வினை மத கரிகளும் --- செயலாற்றும் எட்டுத் திசை யானைகளும்,

     எண் திசாமுக கிரிகளும் --- எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும்,

     முறுகிட --– சூடேறிக் கருநிறம் கொள்ளும்படி,

     அண்ட கோளகை வெடிபட --– அண்ட உருண்டை வெடிபட,

     எவரையும் விஞ்சி --- யாரையும் மேலிட்டு,

     வேல் இடு நஞ்சு போல --– வேல் போலப் பரந்து வந்த ஆலாலவிடம் போல,

     விடுகுழை அளவும் அளந்து --- தொங்கும் குழை வரையிலும் நீண்டு, 

     காமுகர் உயிர் பலி கவர்வுறு --- காமம் கொண்டவர்களின் உயிரை உண்ணக் கவர்வதும்,

     பஞ்ச பாதக --– ஐந்து பெரும் பாவங்கட்கு இடம் தருவதும் ஆன,

     விழிவலை மகளிரொடு --- கண்கள் என்னும் வலையை உடைய பொது மாதர்கள் மீது,

     அன்பு கூர்வது ஒழிந்திடாதோ --- காதல் மிகுதியாகக் கொள்ளும் தன்மை அடியேனை விட்டு விலகாதோ?


பொழிப்புரை


         போர்க்களத்தே இடம் பெற்று வளைத்து வந்த போர் ஆரவாரம் செய்த அசுரர்களின் சேனை முறிபட்டுப் பொடியாகவும்,  மேகம் போல் உருவம் கருத்த தாருகாசுரன் அஞ்சுமாறும்,  மீன்கள் முழுகி உலாவுவதும், இருண்டதும், அலைகள் வீசுவதும் ஆகிய கடல் கலங்கி முறையிடவும், தேவர்கள் தங்கள் நகரம் போய்ச் சேரவும், பழைய கிரவுஞ்சகிரியில் வேல் ஊடுருவிச் செல்லவும் கோபித்த வீரரே!

         செம்பொன் மேரு மலைக்குச் சமானமான பருத்துள்ள வலிமையான கோபுரங்களை உடைய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அமுதம் போன்றவளும், வாய் வைத்து அருந்தாத தனங்களை உடையவளும்,  என்றும் புதியவளும் ஆகிய பார்வதியம்மை பெற்ற திருக்குமாரரே!

         மிகுந்த விருப்பம் கொண்டு, காட்டில் தனது உண்மை உருவை மறைத்துச் சென்று, ஒரு குறப் பெண்ணின் முன்னே திரிந்த காமுகரே!

         திருமால், உருத்திரன், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கட்கும் தனிப்பெரும் தலைவரே!

         ஒலிக்கின்ற கடலின் உட்புறம் குழம்பி ஓ என்று ஓசை செய்ய, வடக்கில் உள்ள பொன்மேரு மலையை மத்தாக நட்டு, கூட்டாமான படங்களை உடையதும், அதிசயிக்கத்தக்க நாற்றம் உடைய நஞ்சை உடையதும் ஆன, பாம்பரசன் ஆகிய ஆதிசேடனை கயிறாகக் கொண்டு,  தேவர்கள் பல கோடி பேர் கூடி வரிசை வரிசையாக அமுதம் கடைந்த நாளில், பிழைக்கும் வழி ஒன்றும் இல்லாத வகையில், உலகையே விழுங்கும்படி வந்த மேகத்தின் வரிசை போல் எழுந்து,  செயலாற்றும் எட்டுத் திசை யானைகளும், எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும், சூடேறிக் கருநிறம் கொள்ளும்படி அண்ட உருண்டை வெடிபட, யாரையும் மேலிட்டு, வேல் போலப் பரந்து வந்த ஆலாலவிடம் போல, தொங்கும் குழை வரையிலும் நீண்டு, காமம் கொண்டவர்களின் உயிரை உண்ணக் கவர்வதும்,  ஐந்து பெரும் பாவங்கட்கு இடம் தருவதும் ஆன கண்கள் என்னும் வலையை உடைய பொது மாதர்கள் மீது காதல் மிகுதியாகக் கொள்ளும் தன்மை அடியேனை விட்டு விலகாதோ?


விரிவுரை


இத் திருப்புகழில் பொது மாதர்களின் கண் ஆலகால நஞ்சைப் போன்றது என்று அருணகிரிப் பெருமான் கூற வந்தார்.  அவ்வாறு கூறவந்த பெருமான், ஆலகால நஞ்சு எப்படித் தோன்றியது, அது எத்துணை வேகமும், கொடுமையும் உடையது என்று விரிவாக வருணனை புரிகின்றார்.

கனைகடல் வயிறு குழம்பி வாய்விட ---

கனை - ஒலி. ஒலிக்கின்ற கடலின் (வயிறு) உட்புறமானது குழம்பிக் கலங்கி '' என்று வாய்விட்டு ஒலிக்குமாறு மேரு மலையைக் கடைந்தார்கள்.

வடதமனிய கிரி கம்பமாய் நட ---

தமனியம் - பொன். பாற்கடல் கடைய முயன்ற தேவர்கள், கடையும் மத்தாக வடக்கே உள்ள பொன் மெரு கிரியை நாட்டினார்கள்.

கணபண விபரித கந்தகாள புயங்கராஜன் கயிறென ---

கணம் - கூட்டம்.  காளம் - நஞ்சு.  புயங்கம் - பாம்பு.

கூட்டமாக உள்ள ஆயிரம் பணா மகுடங்களை உடைய ஆதிசேடன்.  அதிசயிக்கத்தக்க நாற்றமுடைய நஞ்சை உடையவன்.  அரவுகட்கு அரசனாகிய ஆதிசேடனைத் தாம்புக் கயிறாகக் கொண்டு கடல் கடைந்தார்கள்.

அரியவுடு பதிகடவி ஆட கச்சி லம்பொடு
அழகுவட மணிமுடிவி யாள பிட்ட ழுந்த
அமரரொடு பலர்முடுகி ஆழியைக் கடைந்து அமுதாக...  ---  (இருளளக) திருப்புகழ்.

அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள்---

பலகோடி தேவர்கள் ஒன்றுபட்டு வரிசை வரிசையாக நின்று அமுதத்தை வேடண்டித் திருப்பாற்கசலைக் கடைந்தார்கள்.  அந்நாளில் அவர்கள் எதிர்பார்த்த அமுதம் தோன்றவில்லை.  அதற்கு நேர்மாறாக, ஆதிசேடன் மஞ்சினைக் கக்கினான்.

மேக ஒழுங்கு போல ---

அவ்வாறு பிறந்த நஞ்சு கரிய மேகத்தின் வரிசை போல இருந்தது.

அமுதம் - வெண்மை.  நஞ்சு - கருமை. உயர்ந்த பொருள் வெண்மையாகவும், தாழ்ந்த பொருள் கருமையாகவும் இருக்கும்.  கொடுமையின் நிறம் கருமை.  ராகு - கரிய நிறம்.  இயமன் - கரிய நிறம். சனி - கரிய நிறம்.

பஞ்சத்தையும் கருப்பு என்பார்கள்.  மரணத்தை அறிவிக்கும் கடிதத்தில் கருமைக் கோடு இடுவது உலக மரபு.

கருந்தேள், கருநாகம் இவைகள் கொடுமை மிக்கவை.  ஆதலால், உலகங்களை அழிக்க வந்த ஆலாலவிடம் மிகக் கருமையாக இருந்தது.

உலகத்தை உயிவ்க்க எம்பெருமான் கண்ணுதற்கடவுள் அவ் விடத்தைக் கழுத்தில் தரித்து அருளினார்.  அதனால், அப் பெருமானுடைய பவளம் போன்ற செம்பொன் மேனியில் கண்டம் மட்டும் கரியதாயிற்று.  நீலகண்டராக விளங்கினால்.

வினை மதகரிகளும், எண்டிசாமுக கிரிகளும் முறுகிட ---

ஆலால விடத்தின் கொடிய அனல் வேகத்தினால் செயலாற்றும் திறமுடைய எட்டுத்திசை யானைகளும், எட்டுக் குல மலைகளும் சூடு ஏறிக் கருகி விட்டது.

அஷ்ட கஜங்கள் ---  ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்ரதீபம்.

அஷ்ட கிரிகள் ---  கயிலை, நிடதம், இமயம், ஏமகூடம், மந்தரம், நீலகிரி, விந்தம், கந்தமாதனம்.

அண்ட கோளகை வெடிபட ---

கோளம் - உருண்டை. உருண்டை வடிவமான அண்டம் வெடித்தது. அண்டம் - முட்டை.  உலகம் உருண்டை வடிவு என்று அன்றே கண்ட ஆன்றோர்கள் அதற்கு அண்டம் என்றே பெயரிட்டார்கள்.  நஞ்சின் வேகத்தால் அண்ட கோளகை வெடித்து விட்டது.

வேல் இடு நஞ்சு போல ---

வேலைப் போன்ற உக்கிரம் உள்ளது ஆலகால விடம்.  அந்த ஆலகால விடம் போன்றது பொது மாதர்களின் கண்கள் என்று இத்தனை வித்தாரமாக அடிகளார் கூறுகின்றார்.  விலைமகளிரது கண்கள் அத்துணைக் கொடுமை உடையன.

விடுகுழை அளவும் அளந்து ---

காதில் தொங்குகின்ற குழையை எட்டிப் பிடிப்பதுபோல் நீண்ட கண்கள்.

காமுகர் உயிர் பலி கவர்வுறும் ---

காமிகளின் உயிரை உணவாகக் கவர்ந்து உண்ணும் வலிமை உள்ளவை அக் கண்கள். பலி - உணவு.

கருத்துரை
  
உண்ணாமுலை குமாரனே, விலைமகளிரது மோகம் விலக அருள் செய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...