பயன் அற்றது
தெருள் இலாக் கலையினர் செருக்கும் ஆண்மையும்,
பொருள் இலா வறியர்தம் பொறி அடக்கமும்,
அருள் இலா அறிஞர் தம் மௌன நாசமும்,
கருஇலா மங்கையர் கற்பும் ஒக்குமால்.

இதன் பொருள் ---

     தெருள் இலாக் கலையினர் செருக்கும் ஆண்மையும் --- தெளிந்த அறிவு இல்லாத கல்வியாளரின் தன்முனைப்பும், ஆளுமைத் தன்மையும்,

     பொருள் இலா வறியர்தம் பொறி அடக்கமும் --- தன்னிடம் பணம் இல்லாத வறுமை நிலையில் உள்ளவர்களின் ஐம்புலன் அடக்கமும்,

     அருள் இலா அறிஞர் தம் மௌன நாசமும் --- பிற உயிர்களிடத்தில் தயவு என்பது இல்லாத ஞானியரின் மவுன நீக்கமும்,

     கருஇலா மங்கையர் கற்பும் --- சந்ததி இல்லாத பெண்களின் கற்புத் தன்மையும்

     ஒக்குமால் --- பயனற்ற தன்மையில் ஒன்றுக்கு ஒன்று பொருந்தி விளங்கும்.

     விளக்கம் --- ஐயம் திரிபு அறக் கற்றால் அறிவிலே தெளிவு உண்டாகும். மன அடக்கம் இருக்கும். அடக்கம் அமரருள் உய்க்கும். நூலறிவு மட்டும் உள்ளது என்றால், அதனால் உண்டாகும் செருக்கினால் ஒருவருக்கு அழிவே உண்டாகும். அதனால், கற்ற கல்வியால் பயனில்லை.

     பொருள் உடையவர்க்கே ஐம்புல நுகர்ச்சி உண்டாகும். பொறிகளின் வழியே புலன்கள் தடையில்லாமல் செல்லும்.  அப்போது அவர்கள் ஐம்புலன் அடக்கத்தைப் பயிலலாம். பொருள் இல்லாதவனுக்கு ஐம்புல நுகர்ச்சி இல்லை என்பதால், அவன் ஐம்புலனை அடக்க வேண்டி அவசியம் இல்லாமல் போகும். அவன் அடக்கினாலும் அடக்காவிட்டாலும் பயனில்லை.

     ஞானிக்கு உயிர்களிடத்திலே அருள் இருக்கும். ஞானிகள் வாய் திறந்து பேசாமலே உணர்வினாலேயே பிறர்க்குப் பயன்படுவர். ஞானி அல்லாதவன் வாய் திறந்து பேசினாலும் உலகத்தவர்க்குப் பயன் இல்லை. அவனுடைய வெற்று வேடத்தால் பயன் இல்லை.

     நல்ல சந்ததிகளைப் பெற்று உயர்ந்த வாழ்வு அடைதலே கற்புடைய வாழ்வின் பயன். அது இல்லாத பெண்ணின் கற்பு பயன்றறது.

No comments:

Post a Comment

ஆத்திசூடி --- 08. ஏற்பது இகழ்ச்சி

    ஆத்திசூடி 8. ஏற்பது இகழ்ச்சி.   இதன் பொருள் ---        ஏற்பது --- (நீ பொருள் இல்லாதவனாகி , அது உள்ள ஒருவரிட...