திருவண்ணாமலை - 0538. கமலமுகப் பிறை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கமலமுகப் பிறை (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் உறவு ஆகாது.


தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
     தனதனனத் தனதனனத் ...... தனதான


கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
     கயலெனபொற் சுழலும்விழிக் ...... குழல்கார்போல்

கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்
     கரகமலத் துகிர்விரலிற் ...... கிளிசேருங்

குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக்
     குவிமுலைசற் றசையமணிக் ...... கலனாடக்

கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்
     குனகிபொருட் பறிபவருக் ...... குறவாமோ

திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்
     டிமிடிமிடிட் டிகுர்திமிதித் ...... தொலிதாளம்

செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்
     டிகைசிலைபட் டுவரிபடச் ...... சிலைகோடித்

துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்
     தொகுதசைதொட் டலகையுணத் ...... தொடும்வேலா

துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்
     சுகமொடணைத் தருணகிரிப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கமலமுக, பிறை நுதல்,பொன் சிலை என வச்சிர கணை நல்
     கயல் என, பொன் சுழலும் விழி, ...... குழல் கார் போல்,

கதிர் தரள ஒப்பிய தசனம், கமுகு கள, புயகழை, பொன்
     கர கமலத்து உகிர் விரலில் ...... கிளிசேரும்,

குமரி தனத் திதலை மலைக்கு இசலி, இணைக் கலசம் எனக்
     குவி முலை சற்று அசைய, மணிக் ...... கலன் ஆட,

கொடி இடை, பட்டு உடை, நடை பொன் சரணமயில் கெமனம் எனக்
     குனகி, பொருள் பறிபவருக்கு ...... உறவு ஆமோ?

திமிலை உடுக்குடன் முரசுப் பறை, திமிதித் திமிதிமெனட்
     டிமிடிமிடிட் டிகுர்திமிதித்து ...... ஒலிதாளம்

செககணசெக் கணகதறத் திடுதிடு என, கொடுமுடி எண்
     திகை சிலை பட்டு வரிபட, ...... சிலை கோடித்

துமில உடற்று அசுரர் முடிப் பொடிபட, ரத்தம் உள் பெருக,
     தொகு  தசை தொட்டு அலகை உணத் ...... தொடும் வேலா!

துவனி தினைப் புனம் மருவிக் குறமகளைக் களவு மயல்
     சுகமொடு அணைத்த அருணகிரிப் ...... பெருமாளே.


பதவுரை


      திமிலை உடுக்குடன் முரசுப் பறை --- திமிலை, உடுக்கை, முரசு, பறை என்ற வாத்தியங்கள்

     திமிதித் திமிதிம் என, டிமிடிமி டிட்டிகுர் திமிதித்த ஒலிதாளம் --- திமிதித் திமிதிம் எனவும், டிமிடிட் டிகுர் திமிதித்த எனவும் ஒலி செய்கின்ற தாளம்,

      செககண செக்கண கதறத் திடுதிடு என --- செககண செக்கண என்று முழங்க,

     கொடுமுடி எண் திகை சிலை பட்டு --- எட்டுத் திசைகளில் உள்ள மலைகளின் சிகரங்கள்  திடுதிடு என்று அழிபடவும்,

     உவரி பட --- கடல் கலங்கவும்,

     சிலை கோடி --- வில்லை வளைத்து,

      துமில உடற்று அசுரர் முடிப் பொடி பட --- பேராரவாரத்துடன் போர் புரிந்த அசுரர்களின் முடிகள் தூளாகவும்,

     இரத்தம் உள் பெருக --- உதிரம் உள்ளே பெருகவும்,

     தொகு தசை தொட்டு அலகை உணத் தொடும்வேலா --- குவிந்துள்ள தசைகளைத் தொட்டுப் பேய்கள் உண்ணவும், செலுத்திய வேலாயுதரே!

      துவனி தினைப்புனம் மருவிக் குறமகளை --- பறவைகளின் ஒலி நிறைந்த தினைப்புனத்துக்குச் சென்று குறவர் குலக் குமரியாகிய வள்ளி நாயகியை

     களவு மயல் சுகமொடு அணைத்த --- களவியல் முறையில் மோக இன்பத்துடன் அணைத்த,

     அருணகிரிப் பெருமாளே --- திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

     கமலமுகம் --- தாமரை போன்ற முகம்,

     பிறைநுதல் --- பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி,

     பொன் சிலை என --- அழகிய வில்லைப் போன்ற புருவம்,

     வச்சிர கணை நல் கயல் என --- மிகவும் உறுதியான கணையும், நல்ல மீனும் போன்ற கண்கள்,

     பொன் சுழலும் விழி --- அழகாய் சுழல்கின்ற விழிகள்,

     குழல் கார் போல் --- கூந்தல் மேகத்தை ஒக்கும்,

      கதிர் தரள ஒப்பிய தசனம் --- ஒளி மிகுந்த முத்தை நிகர்க்கும் பல்,

     கமுகு களம் --- பாக்கு மரத்தினை ஒத்த கழுத்து,

     புயம் கழை --- மூங்கிலை ஒத்த தோள்கள்,

     பொன் கர கமலத்து உகிர் விரலில் கிளிசேரும் --- தாமரை போன்ற அழகிய கரத்தின் விரலின் நகம் கிளியின் மூக்கை ஒக்கும்,

      குமரி தனத் திதலை மலைக்கு இசலி --- பருவப் பெண்ணின் தேமல் படர்ந்த கொங்கையானது மலையுடன் மாறுபட்டு,

     இணைக் கலசம் எனக் குவிமுலை சற்று அசைய --- இரு குடங்கள் போல் விளங்க, குவிந்துள்ள முலைகள் சிறிது அசைய,
    
     மணிக் கலன் ஆட –-- இரத்தின் ஆபரணங்கள் அசைந்து ஆட,

      கொடி இடை --- கொடி போன்ற இடை,

     பட்டு உடை ---  அந்த இடையில் பட்டாடை,

     நடை பொன் சரண மயில் கெமனம் என --- அழகிய பாதங்களின் நடையானது அழகிய மயில் செல்வது போல் விளங்க,

     குனகி பொருள் பறிப்பவருக்கு உறவு ஆமோ --- கொஞ்சிப் பேசிப் பணத்தைப் பறிக்கும் பொதுமாதர்களின் கூட்டுறவு ஆகுமோ? (ஆகாது).

பொழிப்புரை


         திமிலை, உடுக்கை, முரசு, பறை என்ற வாத்தியங்கள் திமிதித் திமிதிம் எனவும், டிமிடிட் டிகுர் திமிதித்த எனவும் ஒலி செய்கின்ற தாளம், செககண செக்கண என்று முழங்க, எட்டுத் திசைகளில் உள்ள மலைகளின் சிகரங்கள்  திடுதிடு என்று அழிபடவும், கடல் கலங்கவும், வில்லை வளைத்து, பேராரவாரத்துடன் போர் புரிந்த அசுரர்களின் முடிகள் தூளாகவும், உதிரம் உள்ளே பெருகவும், குவிந்துள்ள தசைகளைத் தொட்டுப் பேய்கள் உண்ணவும், செலுத்திய வேலாயுதரே!

         பறவைகளின் ஒலி நிறைந்த தினைப்புனத்துக்குச் சென்று குறவர் குலக் கமரியாகிய வள்ளி நாயகியை களவியல் முறையில் மோக இன்பத்துடன் அணைத்த, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         தாமரை போன்ற முகம், பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி, அழகிய வில்லைப் போன்ற புருவம், மிகவும் உறுதியான கணையும், மல்ல மீனும் போன்ற வாய், அழகாய் சுழல்கின்ற கண்கள், கூந்தல் மேகத்தை ஒக்கும், ஒளி மிகுந்த முத்தை நிகர்க்கும் பல, பாக்கு மரத்தினை ஒத்த கழுத்து, மூங்கிலை ஒத்த தோள்கள், தாமரை போன்ற அழகிய கரத்தின் விரலின் நகம் கிளியின் மூக்கை ஒக்கும், பருவப் பெண்ணின் தேமல் படர்ந்த கொங்கையானது மலையுடன் மாறுபட்டு, இரு குடங்கள் போல் விளங்க, குவிந்துள்ள அக் கொங்கைகள் சிறிது அசைய, இரத்தின் ஆபரணங்கள் அசைந்து ஆட, கொடி போன்ற இடை, அந்த இடையில் பட்டாடை, அழகிய பாதங்களின் நடையானது அழகிய மயில் செல்வது போல் விளங்க, கொஞ்சிப் பேசிப் பணத்தைப் பறிக்கும் பொதுமாதர்களின் கூட்டுறவு ஆமோ? (ஆகாது).


விரிவுரை


இத் திருப்புகழின் முதல் நான்கு அடிகள் பொதுமாதருடைய உடலின் உறுப்புக்களின் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றன.
  
குனகி ---

குனகுதல் - கொஞ்சிப் பேசுதல்.  பொதுமாதர்கள் குழந்தையைப் போல் கொஞ்சிப் பேசிப் பொருள் பறிப்பார்கள்.

இனி, அடுத்துள்ள மூன்று அடிகள் போர்க்களத்தின் வர்ணனை.

துவனி ---

துவனி - பறவைக் கூட்டத்தின் ஒலி.

களவு மயல் சுகமொடு அணைத்த ---

மணம் கற்பு களவு என இருவகைப்படும். 
தெய்வயானை அம்மையின் திருமணம் கற்பு மணம்.  வள்ளியம்மையின் திருமணம் களவு மணம். 

இந்த இருமணங்களின் தன்மைகளை ஆன்மாக்களுக்கு உணர்த்தியதே முருகன் இருமணம் செய்துகொண்ட திருவிளையாடல் என உணர்க.


கருத்துரை


அருணை மேவும் அண்ணலே, பொது மாதர் உறவு கூடாது.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...