திரு ஆனைக்கா - 0512. நாடித் தேடி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நாடித் தேடி (திருவானைக்கா)

முருகா!
அடியார்களோடு கூடி இருந்த ஞானவாழ்வினை அடைய அருள்


தானத் தானத் ...... தனதான
     தானத் தானத் ...... தனதான


நாடித் தேடித் ...... தொழுவார்பால்
     நானத் தாகத் ...... திரிவேனோ

மாடக் கூடற் ...... பதிஞான
     வாழ்வைச் சேரத் ...... தருவாயே

பாடற் காதற் ...... புரிவோனே
     பாலைத் தேனோத் ...... தருள்வோனே

ஆடற் றோகைக் ...... கினியோனே
     ஆனைக் காவிற் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நாடித் தேடித் ...... தொழுவார்பால்,
     நான் நத்து ஆகத் ...... திரிவேனோ?

மாடக் கூடல் ...... பதிஞான
     வாழ்வைச் சேரத் ...... தருவாயே.

பாடல் காதல் ...... புரிவோனே!
     பாலைத் தேன்ஒத்து ...... அருள்வோனே!

ஆடல் தோகைக்கு ...... இனியோனே!
     ஆனைக் காவில் ...... பெருமாளே.


பதவுரை

         பாடல் காதல் புரிவோனே --- அருட்பாடலில் அன்பு செய்பவரே!

         பாலைத் தேன் ஒத்து அருள்வோனே --- பால் போன்றதும் தேன் போன்றதுமான இனிய அருளைப் புரிபவரே!

         ஆடல் தோகைக்கு இனியோனே --- நடனமாடுகின்ற மயிலுக்கு இனியவரே!

         ஆனைக்காவில் பெருமாளே --- திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!
        
         நாடித் தேடித் தொழுவார்பால் --- தேவரீரை விரும்பித் தேடித் தொழுகின்ற அடியார்களிடத்தே

         நான் நத்து ஆகத் திரிவேனோ --- அடியேன் விருப்பம் உள்ளவனாகத் திரியமாட்டேனோ?

         மாடக் கூடல் பதி --- மாடங்கள் நிறைந்த கூடல் பதியான துவாதசாந்த நிலையில் விளைகின்ற

         ஞான வாழ்வைச் சேரத் தருவாயே --- ஞானவாழ்வினை அடியேன் அடையும்படி தந்து அருளுவீராக.
  
பொழிப்புரை


         அருட்பாடலில் அன்பு செய்பவரே!

       பால் போன்றதும் தேன் போன்றதுமான இனிய அருளைப் புரிபவரே!

         நடனமாடுகின்ற மயிலுக்கு இனியவரே!

         திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!
        
         தேவரீரை விரும்பித் தேடித் தொழுகின்ற அடியார்களிடத்தே அடியேன் விருப்பம் உள்ளவனாகத் திரியமாட்டேனோ?

         மாடங்கள் நிறைந்த கூடல் பதியான துவாதசாந்த நிலையில் விளைகின்ற ஞானவாழ்வினை அடியேன் அடையும்படி தந்து அருளுவீராக.


விரிவுரை


நாடித் தேடித் தொழுவார்பால் ---

அடியார்கள் உலக நாட்டத்தைத் துறந்து இறைவனை நாடி, அப் பெருமானுடைய திருவருளைத் தேடித் தொழுவார்கள்.

நான் நத்து ஆகத் திரிவேனோ ---

நத்துதல் - விரும்புதல்.

அடியவர்களை விரும்பி அவர்கள் பின் திரிதல் வேண்டும்.  அடியார்கள் திருக்கூட்டம் பரகதியைச் சேர்விக்கும்.  கண்ணில்லாத பசு மந்தையுடன் கூடினால் உராய்ந்து கொண்டே வந்து தொழுவத்தைச் சேரும். அது போல், ஞான விழியற்ற மாந்தர் அடியார் குழாத்துடன் சேர்ந்தால் எளிதாக முத்தி நலம் பெறுவர்.

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்சூழாம்
சாரில், கதிஅன்றி வேறுஇலை காண், தண்டு தாவடிபோய்த்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே.       ---  கந்தர் அலங்காரம்.

மாடக் கூடல் பதி ஞானவாழ்வு ---

கூடல் பதி - மதுரை.

இது துவாதசாந்தத் தலம். உச்சிக்கு மேல் 12 அங்குலத்தில் உள்ளதாகக் கருதப்படும் யோகஸ்தானம். மேலைப் பெருவெளி.  அங்கு விளையும் ஞான வாழ்வை வேண்டுகின்றார் அருணகிரியார்.

துவாதசாந்தப் பெருவெளியில்
துரியம் கடந்த பரநாத மூலத்தலம்.... --- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.

துவாதசாந்தத்து ஒரு பெருவெளிக்கே
விழித்து உறங்கும் தொண்டர்....                 --- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.
  
பாடல் காதல் புரிவோனே ---

முருகப் பெருமான் தமிழ்ப் பாடலில் காதல் புரிபவர்.  செந்தமிழ்ப் புலவர்கள் அன்பினால் பாடும் அரிய தமிழ்ப் பாடலுக்கு அருள் புரிவர்.

நக்கீரர்,  அருணகிரியார், பொய்யாமொழி முதலிய அடியார்களின் பாடல் கேட்டு அருள் புரிந்த அருள் திறத்தை அவர்களது வரலாறுகளால் அறிக.

சிவபெருமானும் தமிழ்ப் பாடலில் காதல் உடையவர்.  சுந்தர்மூர்த்தி சுவாமிகள் பாடலை மிகவும் விரும்பியவர்.

மற்று,நீ வன்மை பேசி, வன்தொண்டன் என்னும் நாமம்  
பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே ஆகும்;  தலால் மண்மேல் நம்மைச்
சொல்தமிழ் பாடுக' என்றார் தூமறை பாடும் வாயார்.

சொல்ஆர் தமிழ் இசைபாடிய தொண்டன் தனை  இன்னும்    
பல்லாறு உலகினில் நம்புகழ் பாடு' ன்று உறு பரிவின்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்
எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.

என்ற பொழுதில் இறைவர்தாம்
எதிர்நின்று அருளாது எழும் ஒலியால்
மன்றின் இடை நம் கூத்து ஆடல்
வந்து வணங்கி வன்தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி
உரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார்.

என வரும் பெரியபுராணப் பாடல்களையும், அவை சார்ந்த அருள் வரலாறுகளையும் எண்ணி இன்பம் உறுக. 

பாலைத் தேன் ஒத்து அருள்வோனே ---

பால் போலவும், தேன் போலவும் இனிய திருவருளை அடியார்கட்குப் பாலிக்கும் பரம கருணாநிதி முருகன்.

ஆடல் தோகைக்கு இனியோனே ---

இயல்பாக நடனமாடும் தன்மை உடையது மயில்.  மயிலை ஊர்தியாகக் கொண்டு மகிழ்பவர்.

இது பிரணவம்.  ஒங்காரத்துள் ஒளிர்பவர்.  அந்த ஒரு மொழிக்கு இனியவர் முருகர்.

மயில் போன்ற வள்ளிபிராட்டிக்கு இனியவர் எனினும் அமையும்.  உவமையாகு பெயராகக் கொண்டால், வள்ளி எனப் பொருள்படும்.


கருத்துரை


திருவானைக்கா உறை முருகா, துவாதசாந்தத்தில் விளையும் ஞானவாழ்வைத் தந்தருள்.
                 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...