திருவண்ணாமலை - 0520. அழுதும் ஆவா

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அழுதும் ஆவா (திருவருணை)

திருவருணை முருகா!
அடியேன் பிறவியில் உழலாமல்,
உண்மை ஞானத்தைப் பெற்று உய்ய உபதேசித்து அருள்


தனதனா தானனத் தனதனா தானனத்
     தனதனா தானனத் ...... தனதான


அழுதுமா வாவெனத் தொழுதுமூ டூடுநெக்
     கவசமா யாதரக் ...... கடலூடுற்

றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
     கறியொணா மோனமுத் ...... திரைநாடிப்

பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்
     பெரியஆ தேசபுற் ...... புதமாய

பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
     பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே

பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
     படியுமா றாயினத் ...... தனசாரம்

பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
     பரமமா யூரவித் ...... தகவேளே

பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
     பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப்

புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
     பொருதவே லாயுதப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அழுதும் ஆவா எனத் தொழுதும், டூடு நெக்கு,
     அவசமாய் ஆதரக் ...... கடல் ஊடு உற்று,

அமைவு இல் கோலாகலச் சமய மா பாதகர்க்கு
     அறிய ஒணா மோன முத் ...... திரை நாடி,

பிழைபடா ஞானமெய்ப் பொருள் பெறாதே, வினைப்
     பெரிய ஆதேச புற்- ...... புதம் ஆய,

பிறவி வாராகரச் சுழியிலே போய் விழப்
     பெறுவதோ நான் இனி? ...... புகல்வாயே.

பழைய பாகீரதிப் படுகைமேல் வாழ்வு எனப்
     படியும் ஆறு ஆயின் அத் ...... தனசாரம்

பருகும், ஆறு ஆனனச் சிறுவ! சோண அசலப்
     பரம மாயூர! வித் ...... தக! வேளே!

பொழுதுசூழ் போதுவெற்பு இடிபடா, பார்முதல்
     பொடிபடா, ஓட முத்து ...... எறி மீனப்

புணரி கோகோ என, சுருதி கோகோ என,
     பொருத வேலாயுதப் ...... பெருமாளே.


பதவுரை


         பழைய பாகீரதிப் படுகைமேல் வாழ்வு எனப் படியும் --- பழமையான கங்கை நதியின் நடுவில் செல்வக் குழந்தையாய்த் தோன்றி,

     ஆறு ஆயின் --- பணிந்து வந்த ஆறு தாய்மார்களின்

     அத் தனசாரம் பருகும் --- அத் தனத்தின் சாரமான பாலைக் குடித்த

     ஆறு ஆனனச் சிறுவ --– ஆறு திருமுகங்கள் கொண்ட குழந்தையே!

       சோணாசலப் பரம மாயூர --- சிவந்த மலையாகிய திருவண்ணாமலையில் மயில் வாகனத்தின் மீது எழுந்தருளி உள்ளவரே!

     வித்தக வேளே --- எல்லோராலும் விரும்பப்படும் பெரியவரே!

         பொழுது சூழ் போது வெற்பு இடிபடா --- பொழுது போகின்ற அந்தி வேளையிலே கிரவுஞ்ச மலை இடிபடவும்,

     பார் முதல் பொடி படா ஓட  பூமி முதலியவை தூள் எழுந்து ஓடவும்,

     முத்து எறிமீனப் புணரி கோகோ என --- முத்துக்கள் வீசுவதும், மீன்களை உடையதும் ஆன கடல் கோ கோ என்று முறையிடவும்,

     சுருதி கோகோ எனப் பொருத --- வேதங்கள் கோ கோ என முறையிடவும் போர் செய்த

     வேலாயுதப் பெருமாளே --- வேலாயுதத்தை உடைய பெருமையில் சிறந்தவரே!

      அழுதும் --- அன்பு மேலீட்டால் அழுதும்,

     ஆவா எனத் தொழுதும் --- ஆஆ என இரங்கித் தொழுதும்,

     ஊடூடு நெக்கு அவசமாய் --- இடையிடையே உள்ளம் நெகிழ்ந்து, தன்வசம் அற்று

     ஆதரக் கடல் ஊடு உற்று --- அன்பு என்னும் கடல் நடுவில் திளைத்து,

      அமைவு இல் --- பொருந்துதல் இல்லாத

     கோலாகலச் சமய மாபாதகர்க்கு --- ஆடம்பரம் உடைய சமயவாதம் புரியும் பெரிய பாவிகட்கு

     அறிய ஒணா மோன முத்திரை நாடி --- அறிய முடியாத மௌன குறியைத் தேடி, 

     பிழைபடா ஞான மெய்ப்பொருள் பெறாதே --- தவறுதல் இல்லாத ஞானத்தின் உண்மைப் பொருளை அடியேன் அடையாமலே,

     வினைப் பெரிய ஆதேச --- வினைக்கு ஈடாக பெரிய வேறுபாட்டையும்,

     புற்புதம் ஆய --– நீர்க்குமிழிக்கு நிகரானதும் ஆகிய,

     பிறவி வாராகரச் சுழியிலே போய் விழப் பெறுவதோ நான்  --- பிறவி என்னும் கடலின் நீர்ச்சுழியிலே நான் போய் விழக் கடவேனோ​? 

     இனிப் புகல்வாயே --- இனி எனக்கு நல்லுரை கூறி அருளுவீராக.

பொழிப்புரை


         பழமையான கங்கை நதியின் நடுவில் செல்வக் குழந்தையாய்த் தோன்றி, பணிந்து வந்த ஆறு தாய்மார்களின் தனங்களின் சாரமான பாலைக் குடித்த ஆறு திருமுகங்கள் கொண்ட குழந்தையே!

         சிவந்த மலையாகிய திருவண்ணாமலையில் மயில் வாகனத்தின் மீது வாழும் பெரியவரே!

         பொழுது போகின்ற அந்தி வேளையிலே கிரவுஞ்ச மலை இடிபடவும்,  பூமி முதலியவை தூள் எழுந்து ஓடவும்,  முத்துக்கள் வீசுவதும், மீன்களை உடையதும் ஆன கடல் கோ கோ என்று முறையிடவும், வேதங்கள் கோ கோ என முறையிடவும் போர் செய்த வேலாயுதத்தை உடைய பெருமையில் சிறந்தவரே!

         அன்பு மேலீட்டால் அழுதும், ஆஆ என இரங்கித் தொழுதும், இடையிடையே உள்ளம் நெகிழ்ந்து, தன்வசம் அற்று அன்பு என்னும் கடல் நடுவில் திளைத்து, பொருந்துதல் இல்லாத ஆடம்பரம் உடைய சமயவாதம் புரியும் பெரிய பாவிகட்கு அறிய முடியாத மௌன குறியைத் தேடி,  தவறுதல் இல்லாத ஞானத்தின் உண்மைப் பொருளை அடியேன் அடையாமலே, வினைக்கு ஈடாக பெரிய வேறுபாட்டையும், நீர்க்குமிழிக்கு நிகரானதும் ஆகிய,  பிறவி என்னும் கடலின் நீர்ச்சுழியிலே நான் போய் விழக் கடவேனோ​?  இனி எனக்கு நல்லுரை கூறி அருளுவீராக.


விரிவுரை

இத் திருப்புகழ் மிகவும் அருமையானது. இதனை அன்பர்கள் மனனம் செய்து நித்திய பாராயணம் புரிவது அவசியமாகும்.  பிறவித் துன்பம் தொலைய இது உதவும்.

அழுதும் ---

அடியார்கள் அன்பின் மிகுதியால் இறைவனை நினைந்து கண்ணீர் மல்கி அழுதல் வேண்டும்.

யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்,
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே,
தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! தித்திக்கும்
மானே! அருளாய், அடியேன் உனைவந்து உறுமாறே.    --- திருவாசகம்.

ஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்றநெஞ்சே,
அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி, அநாதியனை,
மழுமான் கரத்தனை, மால்விடை யானை மனத்தில் உன்னி,
விழியால் புனல்சிந்தி, விம்மி அழு, நன்மை வேண்டும் என்றே.   --- பட்டினத்தார்.

"அழுது அழுது ஆட்பட முழுதும் அலாப் பொருள் தந்திடாயோ”.
                                                               --- (விரகற) திருப்புகழ்.

ஆஆ எனத் தொழுதும் ---

அன்பு மேலீட்டால் ஆற்றாமை அடைந்து ஆஆ எனக் கூறி இறைவனைத் தொழுவது.


நெக்கு நெக்கு, உள் உருகி உருகி,
     நின்றும், இருந்தும், கிடந்தும், எழுந்தும்,
நக்கும், அழுதும், தொழுதும், வாழ்த்தி;
     நானா விதத்தால் கூத்தும் நவிற்றி;
செக்கர் போலும் திருமேனி
     திகழ நோக்கி; சிலிர் சிலிர்த்து;
புக்கு நிற்பது என்று கொல்லோ என்
     பொல்லா மணியைப் புணர்ந்தே      ---  திருவாசகம்

ஊடு ஊடு நெக்கு அவசமாய் ---

அன்பு செய்யும்போது இடையிடையே உள்ளம் நெகிழ்ந்து தன்வசம் இழத்தல்.  இவைகள் அடியார்களிடம் அன்பு மிகுதியால் நிகழ்பவை.

ஆதரக் கடல் ஊடு உற்று ---

ஆதரம் - அன்பு.  அன்புக் கடலில் முழுகுதல்.

அமைவில் கோலாகலச் சமய மாபாதகர்க்கு அறிய ஒணா மோன முத்திரை நாடி ----

மோன முத்திரை - மோனத்தின் அடையாளம்.  மோனம்தான் ஞானத்தின் முடிவு. "மோனம் என்பது ஞானவரம்பு" என்பது கொன்றைவேந்தன். இந்த மோன நிலை மிக மிக அருமையானது. ஆறுதல் இன்றி ஆடம்பரம் புரிந்து தர்க்கம் செய்கின்ற சமயவாதிகளாம் பெரும் பாதகர்க்கு இது அறிய ஒண்ணாதது.

பிழைபடா ஞான மெய்ப்பொருள் பெறாதே ---

தவறுதல் இல்லாத ஞான உண்மைப் பொருளைப் பெறுதல் வேண்டும்.  இதனைப் பெறாது கைவிடுதல் கூடாது.

வினைப் பெரிய ஆதேசம் ---

வினையினால் பெரிய வேறுபாட்டை அடைந்து உயிர்கள் பிறக்கும். ஆதேசம் - திரிபு.

புற்புதமாய பிறவி வாராகரச் சுழியிலே போய்விழப் பெறுவதோ ---

புற்புதம் - நீர்க்குமிழி.  நீர்க்குமிழி போல் தோன்றி விரைந்து அழியக் கூடிய பிறவிகளாகிய கடலில் அடியேன் விழலாமோ?  விழுந்து துன்புறலாமோ?  கூடாது.


கருத்துரை


அருணாபுரி மேவும் அண்ணலே பிறவிச் சுழலில் அடியேன் விழாவண்ணம் ஆண்டருள்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...