நல்லதை நாயகனுக்கு அளிப்பர் நல்லோர்.

8. நல்லதை நாயகனுக்கு அளிப்பர் நல்லோர்.

அல்அமரும் குழலாளை வரகுணபாண்
     டியராசர் அன்பால் ஈந்தார்!
கல்லைதனில் மென்று உமிழ்ந்த ஊன்அமுதைக்
     கண்ணப்பர் கனிவால் ஈந்தார்!
சொல்லியதண் டலையார்க்குக் கீரையும்மா
     வடுவும்ஒரு தொண்டர் ஈந்தார்!
நல்லதுகண் டால்பெரியோர் நாயகனுக்கு
     என்று அதனை நல்கு வாரே.

     இதன் பொருள் ---

     அல்அமரும்  குழலாளை  வரகுண  பாண்டிய  ராசர் அன்பால்  ஈந்தார் --- இருள்போலும்  கரிய  நிறம்  பொருந்திய  கூந்தலை உடைய தனது மனைவியை வரகுண பாண்டிய மன்னர் அன்புடன் இறைவனுக்கு அளித்தார்,

     கல்லைதனில் மென்று  உமிழ்ந்த  ஊன்  அமுதைக்  கண்ணப்பர்  கனிவால்  ஈந்தார் --- தேக்கிலைக் கலத்திலே  மென்று உமிழ்ந்த இறைச்சி உணவைக் கண்ணப்ப நாயனார் அன்புடன் காளத்தி அப்பருக்குக் கொடுத்தார்,

     சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும் மாவடுவும் ஒரு தொண்டர் ஈந்தார் --- புகழ்ந்து போற்றப்பெறுகின்ற தண்டலை இறைவருக்குச் செங்கீரையும் மாவடுவும் அரிவாள் தாய நாயனார் என்னும் ஓர் அடியார் படைத்தார்,

     பெரியோர் நல்லது கண்டால் அதனை நாயகனுக்கு என்று நல்குவார் --- சான்றோர்கள் நல்ல பொருள் ஒன்று தமக்குக் கிடைக்குமானால், அது நமது இறைவனுக்கு ஆகட்டும் என்று  கொடுப்பார்கள்.

           விளக்கம் --- வரகுணபாண்டியர் என்னும் அரசர் பட்டினத்து அடிகளால் தமது திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் சிறப்பித்துப் பாடப் பெற்ற சிவனடியார் ஆவார். அவர் திருவிடைமருதூரில் தாம் மணந்துகொண்ட பெண்ணை அவள் அழகு மிகுந்து இருத்தலை நோக்கி, "இவள் மருதவாணருக்கு ஆகட்டும்" என்று சொல்லி இரவிலே திருவிடைமருதூர்க் கோயிலிலே கொண்டு போய் விட்டார். பெருமான் அவளைச் சிவலிங்கத்தில் மறையும்படிச் செய்து, வரகுண பாண்டியன் செயலை ஊரார் அறியும் பொருட்டு, அவளது வலக்கையை மட்டும் சிவலிங்கத்தின் வெளியில் காண வைத்தான். இச்செய்தி ஊரெங்கும் பரவ, இவன் கோயிலில் சென்று, "இந்தக் கை நான் பற்றிய கை என்பதால் ஏற்கவில்லையோ" என்று இறைவனிடம் முறையிட்டான். அவன் முறையீட்டுக்கு இரங்கி, பெருமான் அந்தக் கையையும் மறைத்துவிட்டான்.

     வேடரான திண்ணனார் காளத்தியப்பரைக் கண்டவுடன் தம்மை மறந்து தாயினும் அன்புடையராய்க், காட்டிலை உள்ள விலங்குகளின் ஊனை நெருப்பில் வதக்கி, வாயில் இட்டுச் சுவை பார்த்து, தேனையும் கூட்டிக் கல்லையில் வைத்துக் கொண்டு வந்து திருக்காளத்தி அப்பருக்கு அமுதாக வைத்து, "பெருமானே! நீர் பசித்து இருக்கின்றீர், இதனை அமுது செய்து அருள்க" என்று வேண்டினார்.

     கணமங்கை என்னும் தலத்தில் வாழ்ந்த அரிவாள்தாய நாயனார் திருத்தண்டலை இறைவருக்கு நான்தோறும் செங்கீரையும் மாவடுவும் அளிப்பதையே திருத்தொண்டாகச் செய்து வந்தார். ஒறுமை காரணமாகத் தாம் உணவு இல்லாமல் வாடியபோதும், இத் திருத்தொண்டினை விடாமல் செய்து இறை அருள் பெற்றார்.

     உயர்ந்த உள்ளம் படைத்தோர், நல்ல பொருளை இறைவனுக்கு அளிப்பர் என்பது கருத்து.

No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...