அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
காவிப் பூவை
(திருவானைக்கா)
முருகா!
பொதுமாதர் மயலை விட்டு,
ஞானநெறியில் நின்று உனது
திருவடியை அடையத்
திருவுள்ளம் பற்றுவாயாக
தானத்
தான தான தனதன
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன ...... தனதான
காவிப்
பூவை யேவை யிகல்வன
நீலத் தால கால நிகர்வன
காதிப் போக மோக மருள்வன ......
இருதோடார்
காதிற்
காதி மோதி யுழல்கண
மாயத் தார்கள் தேக பரிசன
காமக் ரோத லோப மதமிவை ...... சிதையாத
பாவிக்
காயு வாயு வலம்வர
லாலிப் பார்கள் போத கருமவு
பாயத் தான ஞான நெறிதனை ......
யினிமேலன்
பாலெக்
காக யோக ஜெபதப
நேசித் தார வார பரிபுர
பாதத் தாளு மாறு திருவுள ......
நினையாதோ
கூவிக் கோழி வாழி யெனமயி
லாலித் தால கால மெனவுயர்
கூளிச் சேனை வான மிசைதனில் ......
விளையாடக்
கோரத்
தீர சூர னுடைவினை
பாறச் சீற லேன பதிதனை
கோலக் கால மாக அமர்செய்த ......
வடிவேலா
ஆவிச்
சேல்கள் பூக மடலிள
பாளைத் தாறு கூறு படவுய
ராலைச் சோலை மேலை வயலியி ......
லுறைவோனே
ஆசைத் தோகை மார்க ளிசையுட
னாடிப் பாடி நாடி வருதிரு
ஆனைக் காவில் மேவி யருளிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
காவிப்
பூவை ஏவை இகல்வன,
நீலத்து ஆல காலம் நிகர்வன,
காதிப் போக மோகம் அருள்வன, ...... இருதோடுஆர்
காதில்
காதி மோதி உழல்கண
மாயத் தார்கள், தேக பரிசன,
காமக் ரோத லோப மதம் இவை ......
சிதையாத
பாவிக்கு
ஆயு வாயு வலம்வர,
லாலிப்பார்கள் போத கரும
உபாயத்து ஆன ஞான நெறிதனை ...... இனிமேல் அன்-
பால்
லெக்கு ஆக, யோக ஜெப தப
நேசித்து, ஆர வார பரிபுர
பாதத்து ஆளுமாறு திருவுளம் ......
நினையாதோ?
கூவிக் கோழி வாழி என, மயில்
ஆலித்து, ஆல காலம் என உயர்
கூளிச் சேனை வான மிசைதனில் ......
விளையாட,
கோரத்
தீர சூரன் உடை வினை
பாற, சீறல் ஏன பதி தனை
கோலக் காலமாக அமர்செய்த ......
வடிவேலா!
ஆவிச்
சேல்கள், பூகம் மடல், இள
பாளைத் தாறு கூறு பட, உயர்
ஆலைச் சோலை மேலை வயலியில்....உறைவோனே!
ஆசைத் தோகைமார்கள் இசையுடன்
ஆடிப் பாடி நாடி வரு, திரு
ஆனைக்காவில் மேவி அருளிய ......
பெருமாளே.
பதவுரை
கூவிக் கோழி வாழி என
--- கோழியானது கூவி 'வாழி' என்று வாழ்த்தவும்,
மயில் ஆலித்து ஆலகாலம் என உயர் --- மயில்
ஆரவாரம் புரிந்து ஆலகால விஷம் போல் உயர்ந்து விளங்கவும்,
கூளிச் சேனை --- சிவ கணங்களாகிய
பூதகணச் சேனைகள்
வான மிசை தனில் விளையாட --- வானில்
மகிழ்ச்சியுடன் விளையாட,
கோரத் தீர சூரனுடை
வினை பாற ---
அச்சம் தருபவனும் தீரனுமான சூரபன்மனுடைய கொடுமைகள் சிந்தி ஒழியவும்,
சீறல் ஏனபதி தனை --- பெருங் கோபத்துடன் சீறி வந்த ஆதிவராகம்
கோலக் காலமாக --- கோலாகலமாகக்
கூச்சலிட்டு அடங்கவும்
அமர் செய்த வடிவேலா --- போர் புரிந்த
கூரிய வேலாயுதத்தை உடையவரே!
ஆவிச் சேல்கள் --- குளத்தில் உள்ள
சேல் மீன்கள்
பூகம் மடல் --- பாக்கு மரத்தின் ஏடுகளாகிய,
இள பாளைத் தாறு கூறுபட --- இளம்
பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி,
உயர் ஆலை --- உயர்ந்த ஆலைக்
கரும்புகளும்,
சோலை --- சோலைகளும் நிறைந்த,
மேலை வயலியில் உறைவோனே --- மேலை
வயலூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவரே !
ஆசைத் தோகைமார்கள் --- அன்புடைய
பெண்கள்
இசை உடன் ஆடிப் பாடி நாடி வரும் --- ஆடியும், பாடியும் நாடியும் வந்து வணங்குகின்ற
திரு ஆனைக்காவில் --- திருவானைக்கா
என்னும் திருத்தலத்தில்
மேவி அருளிய பெருமாளே --- விருப்புடன்
எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!
காவிப் பூவை ஏவை
இகல்வன
--- கருங்குவளை மலருடனும், அம்புடனும்
மாறுபடுவனவும்,
நீலத்து ஆலகாலம்
நிகர்வன
--- கரிய ஆலகால நஞ்சினை ஒத்தனவும்,
காதிப் போக மோகம்
அருள்வன
--- கொல்லும் தன்மையதாய் இன்பத்தையும் ஆசை மயக்கத்தையும் கொடுப்பனவும்,
இரு தோடு ஆர் காதில்
காதி மோதி உழல் கண்ண --- இரண்டு தோடுகளை அணிந்துள்ள காதுகளை
வெட்டுவன போல நீண்டு மோதுகின்றனவும் ஆகிய கண்களைக் கொண்டு,
மாயத்தார்கள் தேக
பரிசன
--- மாயம் செய்பவர்கள் ஆகி வேசையர்களின் தேகத்தைத் தொடுவதற்குள்ள
காம க்ரோத லோப மதம் இவை சிதையாத
பாவிக்கு --- ஆசை, கோபம், ஈயாமை, செருக்கு என்ற இவைகள் அழிவுபடாத
பாவியாகிய அடியேனுக்கு,
ஆயு வாயு வலம் வர --- ஆயுளும், பிராணவாயுவும் வலிமை வரும்படி
லாலிப்பார்கள் போத கரும --- அன்பு
வைத்துக் காப்பாற்றுபவருடைய அறிவோடு கூடிய தொழில்களின்
உபாயத்து ஆன ஞான நெறி தனை --- உபாயத்தைக்
காட்டும் ஞான வழியை,
இனி மேல் அன்பா
(இ)லக்கு ஆ(க்)க --- இனி மேல் அடியேன் மீது அன்பு கூர்ந்து, அந்த வழியே குறியாக வைத்துக் கொண்டு,
யோக ஜெபதப நேசித்து --- யோகம், ஜெபம் தவம் இவைகளில் அன்பு வரும்படிச் செய்து,
ஆரவார பரிபுரம்
பாதத்து ஆளுமாறு --- பேரொலி செய்யும் சிலம்பு அணிந்த உமது திருவடியில் அடியேனை
ஆளுமாறு
திரு உள(ம்) நினையாதோ --- உமது
திருவுள்ளும் நினைந்து அருளாதோ?
பொழிப்புரை
கோழியானது கூவி 'வாழி' என்று வாழ்த்தவும், மயில் ஆரவாரம் புரிந்து ஆலகால விஷம் போல் உயர்ந்து விளங்கவும், சிவகணங்களாகிய
பூதகணச் சேனைகள் வானில் மகிழ்ச்சியுடன் விளையாடவும், அச்சம் தருபவனும்
தீரனுமான சூரரன்மனுடைய கொடுமைகள் சிந்தி ஒழியவும், பெருங் கோபத்துடன் சீறி வந்த ஆதிவராகம்
கோலாகலமாகக் கூச்சலிட்டு அடங்கவும் போர் புரிந்த கூரிய வேலாயுதத்தை உடையவரே !
குளத்தில் உள்ள சேல் மீன்கள் பாக்கு
மரத்தின் ஏடுகளாகிய இளம் பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி, உயர்ந்த ஆலைக் கரும்புகளும், சோலைகளும் நிறைந்த, மேலை வயலூர் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருப்பவரே !
அன்புடைய பெண்கள் ஆடியும், பாடியும் நாடியும் வந்து வணங்குகின்ற
திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் விருப்புடன் எழுந்தருளி இருக்கும் பெருமையில்
சிறந்தவரே !
கருங்குவளை மலருடனும், அம்புடனும் மாறுபடுவனவும், கரிய
ஆலகால நஞ்சினை ஒத்தனவும், கொல்லும் தன்மையதாய் இன்பத்தையும் ஆசை
மயக்கத்தையும் கொடுப்பனவும், இரண்டு தோடுகளை
அணிந்துள்ள காதுகளை வெட்டுவன போல நீண்டு மோதுகின்றனவும் ஆகிய கண்களைக் கொண்டு, மாயம் செய்பவர்கள்
ஆகி வேசையர்களின் தேகத்தைத் தொடுவதற்குள்ள ஆசை, கோபம், ஈயாமை, செருக்கு என்ற இவைகள் அழிவுபடாத
பாவியாகிய அடியேனுக்கு, ஆயுளும், பிராணவாயுவும் வலிமை வரும்படி அன்பு
வைத்துக் காப்பாற்றுபவருடைய அறிவோடு கூடிய தொழில்களின் உபாயத்தைக் காட்டும் ஞான
வழியை, இனி மேல் அடியேன்
மீது அன்பு கூர்ந்து, அந்த வழியே குறியாக
வைத்துக் கொண்டு, யோகம், ஜெபம் தவம் இவைகளில் அன்பு வரும்படிச்
செய்து, பேரொலி
செய்யும் சிலம்பு அணிந்த உமது திருவடியில் அடியேனை ஆண்டு கொண்டு ஆளுமாறு உமது
திருவுள்ளம் நினைந்து அருளாதோ?
விரிவுரை
காவிப்
பூவை ஏவை இகல்வன ---
காவிப்பூ
- கருங்குவளை. கருங்குவளை மலர் போன்றன
பெண்களின் கண்கள்.
காவிமலர்
புரையும் கண்ணார்... --- திருஞானசம்பந்தர்.
ஏ
– அம்பு. பெண்களின் கண்கல் அம்பைப் போல்
கூர்மையானவை. இளைஞருடைய உள்ளத்தில் தைத்துத் துன்புறுத்துவன.
ஏவினை
நேர்விழி மாதரை மேவிய --- --- திருப்புகழ்.
இகல்வன
– மாறுபடுவன. கருங்குவளையும் அம்பும்
தனக்கு நிகர் ஆகாமையால் அவைகளுடன் மாறுபடும் கண்கள் என்றார்.
நீலத்து
ஆலகாலம் நிகர்வன
---
கரிய
மிறம் உடைய ஆலகாலவிடம் போன்றவை அக்கண்கள்.
நஞ்சு உண்டாரைக் கொல்லும் தகையது.
இக்கண்கள் கண்டாரையும் கொல்லும் தகையன.
காதி
---
காதுதல்
- கொல்லுதல். விலைமாதருடைய கண்கள் மையல்
வலைப்பட்டோரை வதைக்கும் தன்மை உடையவை.
போகம்
மோகம் அருள்வன
---
போகம்
- இன்பம், மோகம் - ஆசை மயக்கம்.
இந்த
இரண்டையும் தந்து இடர்ப்படுத்துவன அக் கண்கள்.
பொட்டாக
வெற்பைப் பொருத கந்தா, தப்பிப் போனது
ஒன்றற்கு
எட்டாத
ஞானக்கலை தருவாய், இருங் காமவிடாய்ப்
பட்டார்
உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும்
கட்டாரி
வேல்வழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே.
கிளைத்துப்
புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப்
புறப்பட்ட வேல்கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப்
பிடித்து, பதைக்கப்பதைக்க
வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே.
---
கந்தர்
அலங்காரம்.
இரு
தோடு ஆர் காதில் காதி மோதி உழல் கண ---
இரு
தோடுகளை அணிந்துள்ள காதுவரை நீண்டு,
அவைகளுடன்
காதி மோதி உழல்கின்ற கண்கள். கண்ண என்னும்
சொல் இங்கு கண என்று வந்தது.
மாயத்தார்கள் ---
விலைமகளிர்
தமது கண்களைக் கொண்டு ஆடவரை மயங்க வைத்து மாயம் புரிவார்கள்.
அம்
மயக்கத்தால் குபேரன் கோவண ஆண்டியானாவான்.
அறிஞன் மூடன் ஆவான். அம் மயக்கம்
உண்டார்க்கு இரவு பகலாகும். பகல்
இரவாகும்.
தேக
பரிசன காமக்ரோத லோபமதம் இவை சிதையாத
பாவி
---
விலைமகளிரது
உடம்பைத் தொடுவதற்கு ஆசைப்பட்டு,
அதனால் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்று உட்பகை அறுவர்களால்
வேதனைப்படுவர். இவைகள் சிதைவு படாத பாவி
என்கின்றார்.
ஆயு
வாயு வலம் வர லாலிப்பார் ---
லாலித்தல்
- அன்பு வைத்தல். ஆயுளும் பிராணவாயுவும்
வலிமை அடையுமாறு பேரியோர்கள் அன்பு வைத்துக் காத்தருள் புரிவார்கள்.
போத
கரும உபாயத்தான ஞானநெறி ---
பெரியோர்கள்
அறிவுடன் கூடிய நற்கருமங்களின் உபாயத்தைக் காட்டும் ஞான வழியைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
லெக்காக ---
இலக்கு
- குறி. "இலக்கு" என்ற சொல் "லெக்கு"
என மருவியது. ஞான நெறியைக் குறியாகக்
கொண்டு அதில் அசைவற நின்று நிலைக்க வேண்டும்.
யோக
ஜப தப நேசித்து ---
யோகம் - சித்தத்தைத்
தடுத்து ஒருமுகப்பட்டு நிற்றல்.
ஜெபம் - மூலமந்திரத்தை
எண்ணிக்கையுடன் உருவேற்றுதல்.
உருவேற
வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
யுடனாக ஆக மத்து ...... உகந்துபேணி... ---
திருப்புகழ்.
தவம் - மனம் அடங்கிய
நிலையில் அசைவற நிற்றல்.
நேசித்து
- நேசிப்பித்து.
யோகம்
ஜெபம் தவம் இவைகளில் அடியேனுக்கு அன்பு வரும்படிச் செய்து.
ஆரவார
பரிபுர பாதம்
---
இறைவனுடைய
திருவடியில் வேதங்களே சிலம்பாக இருந்து, மந்திர
ஒளி செய்து முழங்கும்.
எழுதரிய
மறைச் சிலம்பு கிடந்து புறத்தலம்ப... ---
திருவிளையாடல்
புராணம்.
பாதத்து
ஆளுமாறு திருவுள நினையாதோ ---
முருகா, அடியேனைக் காமக்ரோத முதலிய உட்பகைகள்
சாராது அவைகளை ஒழித்து சான்றோர்கள் காட்டும் அரிவு நெறியில் செலுத்தி, ஜெப தப தியானங்களில் விருப்புறச் செய்து
உன் பாதத் தாமரையில் ஆட்கொள்ளுமாறு உன் திருவுள்ளத்தில் சிறிது நினைவு வராதோ என்று
அருணகிரிப் பெருமான் முருகனிடம் முறையிடுகின்றார்.
கோழிக்
கூவி வாழி என
---
சூரபன்மனுடன்
போர் புரிகின்ற போது, அக்கினி பகவான் முருகவேளின்
தேர்மீது சேவல் கொடியாக நின்று,
வாழி
வாழி என்று கூவினான்.
மயில்
ஆலித்து ஆலகாலம் என உயர் ---
சூரபன்மன்
சக்ரவாகப்புள் வடிவம் தாங்கி போர் புரிந்த போது, இறைவன் கட்டளைப்படி இந்திரன் மயில்
வடிவம் கொண்டு முருகப் பெருமானைத் தாங்கி, ஆலகாலம் போல் சீறிப் போர் புரிந்தனன்.
கூளிச்
சேனை வானமிசைதனில் விளையாட ---
கூளிச்சேனை
- சிவபூத கணங்கள். முருகவேள் சூரபன்மனுடன்
போர் புரிந்தபோது, சிவபூத கணங்கள்
மகிழ்ச்சியினால் விண்ணில் விளையாடின.
கோரத்
தீர சூரன் உடை வினை பாற ---
கோரமும்
தீரமும் படைத்த சூரனுடைய கொடுமைகளாகிய தொழில்கள் சிந்தி அழியும்படி முருகவேள் போர்
புரிந்து அருளினார்.
பாறுதல்
- சிந்தி அழிதல்.
நெதியானை
நெஞ்சுஇடங் கொள்ளநி னைவார்தம்
விதியானை
விண்ணவர் தாம்வியந்து ஏத்திய
கதியானைக்
கார்உல வும்பொழிற் காழியாம்
பதியானைப்
பாடுமின் நும்வினை பாறவே. --- திருஞானசம்பந்தர்.
பாலன்உயிர்
மேல்அணவு காலன்உயிர்
பாற உதை செய்த பரமன்
ஆலும்மயில்
போல்இயலி ஆயிழைத
னோடும்அமர்வு எய்தும் இடமாம்
ஏலமலி
சோலையின வண்டுமலர்
கிண்டிநறவு உண்டுஇசைசெயச்
சாலிவயல்
கோலமலி சேல்உகள
நீலம்வளர் சண்பைநகரே. --- திருஞானசம்பந்தர்.
விரைதரு
கருமென் கூந்தல்
விளங்குஇழை வேல்ஒண் கண்ணாள்
வெருவர
இலங்கைக் கோமான்
விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை
அனைய தோளும்
முடிகளும் பாறி வீழத்
திருவிரல்
ஊன்றி னானே
திருக்கொண்டீச் சரத்து உளானே. --- அப்பர்.
பழவினைகள்
பாறும் வண்ணம்.... --- திருவாசகம்.
சீறல்
ஏனபதி தனை கோலாகலமாக அமர் செய்த ---
ஏனம்
- பன்றி. ஏனபதி - ஆதிவராகம்.
இரணியாட்சன்
என்பவன் திதியின் மைந்தன். பேராற்றல்
படைத்தவன். அவன் திருமாலைப் பகைத்து, திருமாலின் மனைவியாகிய நிலமகளுக்கு இடர்
விளைவிக்கும் பொருட்டு, பூமியைப் பாயாகச்
சுருட்டி கடலில் முழுக வைத்தான். பூமிதேவி
முறையிட்டாள். திருமால் வெண்பன்றி உருவம்
தாங்கி, இரணியாட்சனை வதைத்து, கடலில் முழுகிய பூமியைப் பந்துபோல் தனது
கோட்டின் நுனியில் தாங்கி முன்போல் நிறுவினார்.
இரணியாட்சனுடைய உதிரத்தைக் குடித்த வெறியினால் வராகம் செருக்குற்று, நிலத்தை நிலை குலுங்கச் செய்தது. சிவபெருமான் அதன் மதத்தை அடக்கத் திருவுள்ளம்
கொண்டு, முருகவேளை
அனுப்பினார். ஆறுமுகக் கடவுள் அந்த
ஆதிவராகத்தை எடுத்துச் சுழற்றி,
அதன்
செருக்கை அடக்கி, அதன் கொம்பைப்
பிடுங்கித் தந்தையிடந் தந்தார். அரனார், அப் பன்றியின் தந்தத்தைத் திருமார்பில்
அணிந்தருளினார்.
பன்றியம்
கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள்
பண்டைஎன்பு
அங்கம்அணி பவர்சேயே.. ---
(மன்றலம்)
திருப்புகழ்.
திருமார்பில்
ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்,
பெருமான்
பிறைக்கொழுந்தை நோக்கும், - ஒருநாள்
இதுமதி ஒன்றொன்றாக இன்று அளவும் தேராது
அது
மதிஒன்று இல்லா அரா. --- பதினோராம்
திருமுறை.
ஆவிச்
சேல்கள்
---
ஆவி
- குளம். குளத்தில் வாழும் சேல் மீன்கள்
துள்ளிப் பாக்குக் குலைகள் சிதறும்படி விளையாடுகின்ற நீர்வளம் பொருந்தியது வயலூர்.
ஆசைத்
தோகைமார்கள் இசையுடன் ஆடிப்பாடி நாடிவரு திருவானைக்கா ---
அன்புடைய
பெண்மணிகள் சிவபெருமானை இசையுடன் ஆடியும் பாடியும் நாடியும் வணங்கும் இனிய
திருத்தலம் திருவானைக்கா.
கருத்துரை
திருவானைக்காவில்
வாழும் திருமுருகா, உன் திருவடியில்
என்னை ஆண்டுகொண்டு அருளுவாய்.
No comments:
Post a Comment