ஒன்று இருந்தால் ஒன்று இருக்கும்




7. ஒன்று இருக்கும் இடத்திலே ஒன்றி இயிருப்பவை


சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில்
     சார்ந்துதிரு மாதுஇருக்கும்;
சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்
     தனதுபாக் கியம்இருக்கும்;

மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
     விண்டுவின் களைஇருக்கும்;
விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடம்தனில்
     மிக்கான தயைஇருக்கும்;

பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடம்தனில்
     பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடம்தனில் சத்துரு
     பலாயனத் திறல்இருக்கும்;

வைத்துஇசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
     மன்னுயில் சிறக்கும் அன்றோ?
மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

          இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


     சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில் திருமாது சார்ந்து இருக்கும் --- உண்மை நெறியில் வழுவாமல் வாழ்பவர் இடத்தில் திருமகள் சேர்ந்து இருப்பாள்,

     திருமாது இருக்கும் இடம் தனில் சந்ததம் தனது பாக்கியம் இருக்கும் --- திருமகள் வாழுகின்ற அந்த இடத்திலே எப்போதும் அவள் அருளால் பெறப்படும் செல்வம் இருக்கும்,

     மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம் தனில் விண்டுவின் களை இருக்கும் --- உண்மையாக அவ்வாறு வருகின்ற செல்வம் இருக்கும் இடத்திலே திருமாலின் அருள் இருக்கும்,

     விண்டுவின் களை பூண்டு இருக்கும் இடம் தனில் மிக்கான தயை இருக்கும் --- திருமாலின் அருளைப் பெற்றோர் இடத்திலே பெருமைக்குரிய இரக்கம் மிகுந்து இருக்கும்,

     பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம் தனில் பகர் தருமம் மிக இருக்கும் --- திருமாலிடத்து வைத்துள் அன்பும், இனிய இரக்க குணமும் உள்ளவர் இடத்திலே சிறப்பித்துச் சொல்லப்படும் ஈகை என்னும் அறம் இருக்கும்,

     பகர் தருமம் உள்ளவர் இடம் தனில் சத்துரு பலாயனத் திறல் இருக்கும் --- சொல்லப்படும் அறம் உள்ளவர் இடத்திலே பகைவரை வெல்லும் வலிமை இருக்கும்,

     இசை வைத்து மிகுந்த திறல் உள்ளவர் இடத்தில் வெகு மன் உயிர் சிறக்கும் அன்றோ --- புகழ் பெற்று உயர்ந்த வலிமை பெற்றவர் வாழும் இடத்திலே மிகுதியான நிலைபெற்ற உயிர்கள் சிறப்புற்று வாழும் அல்லவா?

          கருத்து ---

     சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்திலே செல்வ வளமும், இறைவன் அருளும், தானமும், தருமமும் சிறக்கும். அந்த இடத்திலே பகைவருக்கும் அருளும் பண்பும் இருக்கும். அதனால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்.

     விண்டு - திருமால். திருமாது - இலக்குமி. பகர்தல் - சொல்லுதல்; தருமம் - அறம்;  பலாயனம் - வலிமை. திறல் - வலிமை, மன்னுதல் - எப்போதும் நிலைத்து இருத்தல்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...