அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கருமுகில் திரளாக
(திருவானைக்கா)
முருகா!
பொதுமாதர் மயல் அற அருள்
தனதனதன
தானத் தானன
தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன ...... தனதான
கருமுகில்திர
ளாகக் கூடிய
இருளெனமரு ளேறித் தேறிய
கடிகமழள காயக் காரிகள் ...... புவிமீதே
கனவியவிலை யோலைக் காதிகள்
முழுமதிவத னேரப் பாவைகள்
களவியமுழு மோசக் காரிகள் ......
மயலாலே
பரநெறியுண
ராவக் காமுகர்
உயிர்பலிகொளு மோகக் காரிகள்
பகழியைவிழி யாகத் தேடிகள் ......
முகமாயப்
பகடிகள்பொரு
ளாசைப் பாடிக
ளுருவியதன பாரக் கோடுகள்
படவுளமழி வேனுக் மோரருள் ......
புரிவாயே
மரகதவித
நேர்முத் தார்நகை
குறமகளதி பாரப் பூண்முலை
மருவியமண வாளக் கோலமு ......
முடையோனே
வளைதருபெரு
ஞாலத் தாழ்கடல்
முறையிடநடு வாகப் போயிரு
வரைதொளைபட வேல்விட் டேவிய ......
அதிதீரா
அரவணைதனி
லேறிச் சீருடன்
விழிதுயில்திரு மால்சக் ராயுதன்
அடியிணைமுடி தேடிக் காணவும் ......
அரிதாய
அலைபுனல்சடை
யார்மெச் சாண்மையும்
உடையதொர்மயில் வாசிச் சேவக
அழகியதிரு வானைக் காவுறை ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கரு
முகில் திரளாகக் கூடிய
இருள் என, மருள் ஏறித் தேறிய
கடி கமழ் அளக ஆயக்காரிகள், ...... புவிமீதே
கனவிய
விலை ஓலைக் காதிகள்,
முழுமதி வதன நேர் அப் பாவைகள்,
களவிய முழு மோசக் காரிகள், ...... மயலாலே
பர
நெறி உணரா அக் காமுகர்
உயிர் பலிகொளும் மோகக் காரிகள்,
பகழியை விழியாகத் தேடிகள், ...... முகமாயப்
பகடிகள், பொருள் ஆசைப் பாடிகள்,
உருவிய தன பாரக் கோடுகள்
பட, உளம் அழிவேனுக்கு ஓர் அருள் ......
புரிவாயே.
மரகத
வித நேர் முத்து ஆர் நகை
குறமகள் அதி பாரப் பூண்முலை
மருவிய மணவாளக் கோலமும் ...... உடையோனே!
வளை
தரு பெரு ஞாலத்து ஆழ்கடல்
முறையிட, நடு ஆகப் போய், இரு
வரை தொளை பட வேல் விட்டு ஏவிய......அதிதீரா!
அரவு
அணை தனில் ஏறிச் சீருடன்
விழி துயில் திருமால், சக்ராயுதன்,
அடிஇணை முடி தேடிக் காணவும் ...... அரிதுஆய,
அலைபுனல்
சடையார் மெச்சு ஆண்மையும்
உடையதொர் மயில் வாசிச் சேவக!
அழகிய திரு ஆனைக்கா உறை ......
பெருமாளே.
பதவுரை
மரகத வித நேர் --- மரகதப் பச்சை நிறம் கொண்டவளும்,
முத்து ஆர் நகை குறமகள் --- முத்துக்கள் போன்ற பற்களை உடையவளுமான குறவர் குலமகளான வள்ளிபிராட்டியின்
அதிபாரப் பூண்முலை மருவிய மணவாளக் கோலமும் உடையோனே --- அதிக பாரமுள்ள ஆபரணம் அணிந்த மார்பினைப் பொருந்திய மணவாளக் கோலம் உடையவரே!
வளைதரு பெரு ஞாலத்து ஆழ்கடல் முறை இட
நடுவாகப் போய் --- பெரிய பூமியை வளைந்துள்ள ஆழமான கடல் முறையிட, அக்கடலின் நடுவில் சென்று
இருவரை தொளை பட வேல் விட்டு ஏவிய அதி
தீரா --- பெரிய மலையாகிய கிரவுஞ்சத்தை பிளவுபடும்படி வேலைச் செலுத்திய தீர
மூர்த்தியே!
அரவு அணை தனில் ஏறி --- ஆதிசேடனாம்
பாம்பணையின் மேல் ஏறி,
சீருடன் விழி துயில் திருமால் சக்ராயுதன் ---
சிறப்பாக அறி துயில் புரிகின்றவரும், திருமாலும், சக்ராயுதத்தை ஏந்தியவருமாகிய நாராயணர்
அடிஇணை முடி தேடிக் காணவும் அரிதாய
அலைபுனல் சடையார் மெச்சு --- சிவபெருமானுடைய இரண்டு திருவடியின் என்லையைத் தேடிப்
பார்ப்பதற்கு அருமையாய் இருந்த,
கிடையாது
இருந்தவரும், அலைகளைக் கொண்ட
கங்கையைச் சடையில் தரித்தவருமாகிய சிவபெருமான் மெச்சுகின்ற
ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசிச் சேவக
---வலிமையை உடைய ஒப்பற்ற மயில் என்னும் குதிரையை வாகனமாகக் கொண்ட ஆற்றல் உடையவரே!
அழகிய திருவானைக்கா உறை பெருமாளே --- அழகிய
திருவானைக்காவில் எழுந்தருளிய பெருமையில் சிறந்தவரே!
கருமுகில் திரளாகக் கூடிய இருள் என --- கரிய
மேகங்கள் திரண்டு கூடிய இருள் என்று சொல்லும்படியான
மருள் ஏறித் தேறிய கடிகமழ் அளக ஆயக்காரிகள் ---
மயக்கம் நிறைந்து விளக்கமுற்றதும்,
நறுமணம்
வீசுவதுமான கூந்தலையும் தோழிகளையும் உடையவர்கள்,
புவி மீதே கனவிய விலை ஓலைக் காதிகள் ---
இந்த உலகிலேயே மிகுந்த விலை கொண்ட தோட்டினை
அணிந்த காதை உடையவர்கள்,
முழுமதி வதனம் நேர் அப் பாவைகள் --- பூரண
சந்திரனை ஒத்த முகத்தை உடைய அந்தப் பொது மாதர்கள்,
களவிய முழு மோசக்காரிகள் --- கள்ளத்தனத்துடன்
கூடிய முழு மோசக்காரிகள்,
மயலாலே --- மீதுள்ள ஆசையால்
பரநெறி உணரா அக் காமுகர் உயிர் பலிகொளு மோகக் காரிகள் --- மேலான
மார்க்கத்தை அறியாத அந்தக் காமாந்தகர் உயிரையே பிச்சையாகக் கொள்ளுகின்ற
ஆசைக்காரிகள்,
பகழியை விழியாகத் தேடிகள் --- அம்பையே
கண்ணாகத் தேடி வைத்துள்ளவர்கள்,
முகம் மாயப் பகடிகள் --- முகம் காட்டிப்
பாசாங்கு செய்கின்ற வெளி வேஷக்காரிகள்,
பொருள் ஆசைப் பாடிகள் --- பொருள் மேலேயே
ஆசை கொண்டுள்ளவர்கள் ஆகிய விலைமாதர்களின்
உருவிய தனபாரக் கோடுகள் பட --- அழகிய மார்பகங்களான பாரமாகிய மலைகள் என் நெஞ்சில் தைக்க
உளம் அழிவேனுக்கு
--- உள்ளம் அழிகின்ற எனக்கு,
ஓர் அருள் புரிவாயே --- ஒப்பற்ற திருவருளைப்
புரிவீராக.
பொழிப்புரை
மரகதப் பச்சை நிறம் கொண்டவளும், முத்துக்கள் போன்ற பற்களை உடையவளுமான
குறவர் குலமகளான வள்ளிபிராட்டியின் அதிக பாரமுள்ள ஆபரணம் அணிந்த மார்பினைப் பொருந்திய மணவாளக் கோலம் உடையவரே!
பெரிய பூமியை வளைந்துள்ள ஆழமான கடல் முறையிட, அக்கடலின் நடுவில் சென்று, பெரிய மலையாகிய கிரவுஞ்சத்தை
பிளவுபடும்படி வேலைச் செலுத்திய தீர மூர்த்தியே!
ஆதிசேஷனாம் பாம்பணையின் மேல் ஏறி, சிறப்பாக அறி துயில் புரிகின்றவரும், திருமாலும், சக்ராயுதத்தை ஏந்தியவருமாகிய நாராயணர், சிவபெருமானுடைய இரண்டு திருவடியின்
என்லையைத் தேடிப் பார்ப்பதற்கு அருமையாய் இருந்த, கிடையாதிருந்தவரும், அலைகளைக் கொண்ட கங்கையைச் சடையில்
தரித்தவருமாகிய சிவபெருமான் மெச்சுகின்ற வலிமையை உடைய ஒப்பற்ற மயில் என்னும்
குதிரையை வாகனமாகக் கொண்ட ஆற்றல் உடையவரே!
திருவானைக்காவில் எழுந்தருளிய
பெருமையில் சிறந்தவரே!
கரிய மேகங்கள் திரண்டு கூடிய இருள்
என்று சொல்லும்படியான மயக்கம் நிறைந்து விளக்கமுற்றதும், நறுமணம் வீசுவதுமான கூந்தலையும்
தோழிகளையும் உடையவர்கள், இந்த உலகிலேயே
மிகுந்த விலை கொண்ட தோட்டினை அணிந்த காதை
உடையவர்கள், பூரண சந்திரனை ஒத்த முகத்தை உடைய அந்தப்
பொது மாதர்கள், கள்ளத்தனத்துடன் கூடிய முழு மோசக்காரிகள்
மீதுள்ள ஆசையால் மேலான மார்க்கத்தை அறியாத அந்தக் காமாந்தகர் உயிரையே பிச்சையாகக் கொள்ளுகின்ற ஆசைக்காரிகள், அம்பையே
கண்ணாகத் தேடி வைத்துள்ளவர்கள்,
முகம்
காட்டிப் பாசாங்கு செய்கின்ற வெளி வேஷக்காரிகள், பொருள் மேலேயே ஆசை கொண்டுள்ளவர்கள்
ஆகிய விலைமாதர்களின் அழகிய மார்பகங்களான பாரமாகிய மலைகள் என் நெஞ்சில் தைக்க
உள்ளம் அழிகின்ற எனக்கு, ஒப்பற்ற திருவருளைப்
புரிவீராக.
விரிவுரை
இத்
திருப்புகழின் முதல் நான்கு அடிகள் விலைமாதர்களின் செயல்களைக் கூறுகின்றன.
மணவாளக்
கோலம் உடையோனே ---
முருகவேள்
வள்ளியுடன் எப்போதும் கலியாணக் கோலத்துடன் காட்சி தருவார்.
கலியாண
சுபுத்திரனாகக் குறமாது தனக்கு விநோதக்
கவின்ஆரு
புயத்தில் உலாவிக் களிகூறும்.... --- (நிலையாத) திருப்புகழ்.
அரவு
அணை தனில் ஏறிச் சீருடன் விழிதுயில் திருமால் ---
வெப்பமான
இடத்தில் கண் துயில முடியாது. குளிர்ந்த
இடத்தில் சுகமாகத் தூக்கம் வரும்.
நாராயணர் பாற்கடலில் பாம்பணையில் படுத்திருக்கின்றார்.
பாற்கடல்
குளிர்ச்சியானது. பாம்பு சந்தனம் போல் குளிர்ந்திருக்கும். இந்த அரிய குளிர்ச்சியில் திருமால் யோக
நித்திரை புரிந்து உலகங்கட்கு அருள் புரிகின்றார்.
கருத்துரை
சிவபெருமான்
மெச்சிப் புகழ்கின்ற பேராற்றல் படைத்த, திருவானைக்கா
உறை தேவனே, மாதர் மயல் அற அருள்
செய்.
No comments:
Post a Comment