அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஓல மறைகள்
(திருவானைக்கா)
முருகா!
பொறி புலன்களால் துன்புற்று வாடாமல்,
ஒப்பற்ற உனது திருவடியை
அடைந்து இன்புற அருள்
தான
தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன ...... தனதான
ஓல
மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ......
ரெவராலும்
ஓத
வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது ......
சிவஞானம்
சால
வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ......
னவியோமஞ்
சாரு
மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் ......
பெறுவேனோ
வால
குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ......களைவோனே
வாச
களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ ......
வயலூரா
ஞால
முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை ......
த்ரிபுராயி
நாத
வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
ஓல
மறைகள் அறைகின்ற ஒன்று அது,
மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்,
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர்
...... எவராலும்
ஓத
அரிய துரியம் கடந்தது,
போத அருவ சுருபம், ப்ரபஞ்சமும்
ஊனும் உயிரும் முழுதும் கலந்தது, ...... சிவஞானம்
சால
உடைய தவர் கண்டு கொண்டது,
மூல நிறைவு குறைவு இன்றி நின்றது,
சாதி குலமும் இலது, அன்றி அன்பர்சொன ...... வியோமம்
சாரும்
அநுபவர் அமைந்து அமைந்த மெய்
வீடு, பரம சுக சிந்து, இந்த்ரிய
தாப சபலம் அற வந்து, நின்கழல் ...... பெறுவேனோ?
வால!
குமர! குக! கந்த! குன்று எறி
வேல! மயில! எனவந்து கும்பிடு
வான விபுதர் பதி இந்த்ரன்
வெந்துயர்.....களைவோனே!
வாச
களப வர துங்க மங்கல
வீர! கடக புய! சிங்க! சுந்தர!
வாகை புனையும் ரண ரங்க புங்கவ! ......
வயலூரா!
ஞால
முதல்வி, இமயம் பயந்தமின்,
நீலி, கவுரி, பரை, மங்கை, குண்டலி,
நாளும் இனிய கனி, எங்கள் அம்பிகை, ...... த்ரிபுரஆயி,
நாத
வடிவி, அகிலம் பரந்தவள்,
ஆலின் உதரம் உள பைங் கரும்பு, வெண்
நாவல் அரசு மனை வஞ்சி தந்தருள் ......
பெருமாளே.
பதவுரை
வால --- இளமைப் பருவம் உடையவரே!
குமர --- அஞ்ஞானத்தை அகற்றுபவரே!
குக --- அடியார்களின் இதயமாகிய குகையில்
இருப்பவரே!
கந்த --- கந்தக் கடவுளே!
குன்று எறி வேல --- கிரெவுஞ்ச மலையைப்
பிளந்த வேலாயுதரே!
மயில --- மயிலை வாகனமாக உடையவரே!
என வந்து கும்பிடு --- என்று சொல்லித்
துதித்துக் கொண்டு வந்து தொழுத,
வான விபுதர் பதி இந்த்ரன் வெந்துயர் களைவோனே
--- விண்ணுலகின் அமரர்களின் தலைவன் ஆகிய தேவேந்திரனினுடைய கொடும் துயரத்தைப் போக்கியவரே!
வாச களப வரதுங்க மங்கல --- வாசம்
மிகுந்த சந்தனத்தையும், சிறந்த தூய்மையான
மங்கலத்தையும்,
வீர கடக புய --- வீரத்திற்கு அறிகுறியான
கடகத்தையும் அணிந்த புயங்களை உடையவரே!
சிங்க --- சிங்க ஏறு போன்றவரே!
சுந்தர --- அழகியவரே!
வாகை புனையும் --- வெற்றி மாலையைச்
சூடிக்கொண்டுள்ள,
ரணரங்க புங்கவ வயலூரா --- போர்க்களத்தில்
சிறந்த வீர சிகாமணியே! வயலூரில் வாழ்பவரே!
ஞால முதல்வி --- உலகங்களுக்குத்
தலைவியும்,
இமயம் பயந்த மின் --- இமவான் பெற்ற மின் ஒளி போன்றவளும்,
நீலி --- நீல நிறமுடையவளும்,
கவுரி --- பொன்னிறமுடைய கெளரி எனப்படுபவளும்,
பரை --- பராசக்தியும்,
மங்கை --- மங்கைப் பருவத்தாளும்,
குண்டலி --- குண்டலினி சக்தியாக
விளங்குபவளும்,
நாளும் இனிய கனி --- என்றும் இனிய கனி போன்றவளும்,
எங்கள் அம்பிகை --- எங்களுக்கு அருள்
புரியும் அன்னையும்,
த்ரிபுர ஆயி --- மூன்று உலகங்களையும்
பெற்றெடுத்தவளும்,
நாத வடிவி --- நாத வடிவாக
விளங்குபவளும்,
அகிலம் பரந்தவள் --- உலகெங்கும் நிறைந்தவளும்,
ஆலின் உதரம் உள பைங் கரும்பு --- ஆலிலை போன்ற வயிற்றை உடையவளும், பசுமை தங்கிய
கரும்பினும் இனியவளும்,
வெண் நாவல் அரசு மனை வஞ்சி ---
திருவானைக்காவில் வெள்ளை நாவல் மரத்தின் கீழ் எழுந்தருளி உள்ள ஜம்புநாதனின்
மனைவியும் ஆன, வஞ்சிக்கொடி போன்றவளும் ஆகிய உமாதேவியார்
தந்து அருள் பெருமாளே --- பெற்றருளிய
பெருமையின் மிக்கவரே!
ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது ---
தேவரீருடைய திருவடியானது, ஒலிடுகின்ற
வேதங்களால் பேசப்படுகின்ற ஒப்பற்றது.
மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர் ---
பிரம்ரந்தரத்திற்கும் அப்பால் உள்ள மேலைப் பெருவெளியில் ஒளிர்கின்ற அருட்பெருஞ்சோதி அது.
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர்
எவராலும் --- நூல்களில் சொல்லப்படுகின்ற சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று வழிகளையும் அநுசரித்தவர்களாகிய எவர்களாலும்
ஓத அரிய துரியம் கடந்தது --- சொல்லுதற்கு அரியதாகிய துரிய நிலையைக் கடந்து விளங்குவது.
போத அருவ சுருபம் --- உணர்வு மயமாகிய
அருவம், உருவம் என்ற இரண்டு
நிலையிலும்,
ப்ரபஞ்சமும் ஊனும் உயிரும் முழுதும் கலந்தது
--- உலகத்திலும், உயிரிலும், உடம்பிலும் ஆக எங்கும் எள்ளுக்குள்
எண்ணெய் போல் முழுவதாகக் கலந்தது அது.
சிவஞானம் சால உடைய தவர் கண்டு கொண்டது ---
பதிஞானம் மிகவும் வாய்க்கப்பெற்ற தவசீலர்கள் கண்டு கொண்டது.
மூல நிறைவு குறைவு இன்றி நின்றது ---
அநாதியே மூலப்பொருளாக நிறைந்துள்ளதாய், குறைவேயின்றி
நிற்பது அது.
சாதி குலமும் இலது --- சாதி, குலம் ஆகிய வேறுபாடு இல்லாதது அது.
அன்றி --- அதுவும் அல்லாமல்,
அன்பர் சொன வியோமம் சாரும் அநுபவர் அமைந்து
அமைந்த --- அன்புள்ள அடியார்கள் அநுபவ பூர்வமாகக் கூறிய ஞான ஆகாயத்தைச்
சார்ந்துள்ள அநுபவ சீலர்கள் பொறிபுலன்கள் அவியப் பெற்று அடங்கிய அநுபவத்தில்
காண்கின்ற உண்மைப் பொருளும்
மெய் வீடு பரம சுகசிந்து நின் கழல் ---
உண்மையான வீட்டின்பமும் பெரிய ஆனந்தக் கடலும் போன்றது அது. இத்தனை பெருமை
வாய்ந்தது தேவரீருடைய திருவடிக் கமலங்களை,
இந்த்ரிய தாப சபலம் அற வந்து பெறுவேனோ
--- கன்மேந்திரிய, ஞானேந்திரியங்களினால்
வரும் தாபங்களும், சலனங்களும் அற நின்
அருகில் வந்து பெறமாட்டேனோ?
பொழிப்புரை
இளமைப் பருவம் உடையவரே!
அஞ்ஞானத்தை அகற்றுபவரே!
குகையில் இருப்பவரே!
மூன்று உலகங்களையும் பராக்கிரமத்தால் வற்றச்
செய்தவரே!
கிரெளஞ்சமலையைப் பிளந்த வேலாயுதரே!
மயில் வாகனத்தை உடையவரே!
என்று சொல்லித் துதித்துக் கொண்டு
வந்து தொழுத, விண்ணுலகின்
அமரர்களின் தலைவன் ஆகிய தேவேந்திரனினுடைய கொடும் துயரத்தைப் போக்கியவரே!
வாசம் மிகுந்த சந்தனத்தையும், சிறந்த தூய்மையான மங்கலத்தையும், வீரத்திற்கு அறிகுறியான கடகத்தையும்
அணிந்த புயங்களை உடையவரே!
சிங்க ஏறு போன்றவரே!
அழகியவரே!
வெற்றி மாலையைச் சூடிக்கொண்டுள்ள, போர்க்களத்தில் சிறந்த வீர சிகாமணியே!
வயலூரில் வாழ்பவரே!
உலகங்களுக்குத் தலைவியும், இமவான் பெற்ற மின் ஒளி போன்றவளும், நீல நிறமுடையவளும், பொன்னிறமுடைய கெளரி எனப்படுபவளும், பராசக்தியும், மங்கைப் பருவத்தாளும், குண்டலினி சக்தியாக விளங்குபவளும், என்றும் இனிய கனி போன்றவளும், எங்களுக்கு அருள் புரியும் அன்னையும், மூன்று உலகங்களையும்
பெற்றெடுத்தவளும், நாத வடிவாக விளங்குபவளும், உலகெங்கும் நிறைந்தவளும், ஆலிலை போன்ற வயிற்றை உடையவளும், பசுமை தங்கிய கரும்பினும் இனியவலும், திருவானைக்காவில்
வெள்ளை நாவல் மரத்தின் கீழ் எழுந்தருளி உள்ள ஜம்புநாதனின் மனைவியும் ஆன, வஞ்சிக் கொடி போன்றவளும் ஆகிய
உமாதேவியார்
பெற்றருளிய
பெருமையின் மிக்கவரே!
தேவரீருடைய திருவடியானது, ஒலிடுகின்ற வேதங்களால் பேசப்படுகின்ற
ஒப்பற்றது.
பிரம்ரந்தரத்திற்கும்
அப்பாலுள்ள மேலைப் பெருவெளியில் ஒளிர்கின்ற அருட்பெருஞ்சோதி அது.
நூல்களில் சொல்லப்படுகின்ற சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று வழிகளையும் அநுசரித்தவர்களாகிய
எவர்களாலும் சொல்லுதற்கு அரியதாகிய துரிய நிலையைக் கடந்து விளங்குவது.
உணர்வு
மயமாகிய அருவம், உருவம் என்ற இரண்டு
நிலையிலும், உலகத்திலும், உயிரிலும், உடம்பிலும் ஆக எங்கும் எள்ளுக்குள்
எண்ணெய் போல் முழுவதாகக் கலந்தது அது.
பதிஞானம்
மிகவும் வாய்க்கப் பெற்ற தவசீலர்கள் கண்டு கொண்டது.
அநாதியே
மூலப்பொருளாக நிறைந்துள்ளதாய்,
குறைவேயின்றி
நிற்பது அது.
சாதி, குலம் ஆகிய வேறுபாடு இல்லாதது அது.
அதுவும்
அல்லாமல், அன்புள்ள அடியார்கள்
அநுபவ பூர்வமாகக் கூறிய ஞான ஆகாயத்தைச் சார்ந்துள்ள அநுபவ சீலர்கள் பொறிபுலன்கள்
அவியப் பெற்று அடங்கிய அநுபவத்தில் காண்கின்ற உண்மைப் பொருளும் உண்மையான
வீட்டின்பமும் பெரிய ஆனந்தக்கடலும் போன்றது அது.
இத்தனை
பெருமை வாய்ந்தது தேவரீருடைய திருவடிக் கமலங்களை, கன்மேந்திரிய, ஞானேந்திரியங்களினால் வரும் தாபங்களும், சலனங்களும் அற நின் அருகில் வந்து, பெறமாட்டேனோ?
விரிவுரை
ஓலமறைகள்
அறைகின்ற ஒன்று அது ---
ஆயிரம்
வேதங்களும் இறைவனது தன்மையை அறுதியிட்டு அறையும் ஆற்றல் இன்றி "ஓ" என்று
ஓலமிடுகின்றன. அதனால், ஓலமறைகள் என்றனர். எனின், எவ்வாறு அறைகின்றது? என்பீரேல், "அல்லை", "அல்லை" என்னும் பொருளால் ஆரணங்கள்
அறைகின்றது. மறைகளுக்கும் எட்டாத வான்பொருள் என்பதனை அடியில் காணும்
அமுதவாக்குகளால் காண்க.
…. …. பரஞ்சுடர்
நெற்றியந்தலத்தே
தான்உதித்தனன்
மறைகளும் கடந்ததோர் தலைவன் --- கந்தபுராணம்.
வேதக்
காட்சிக்கும் உபநிடதத்துஉச்சியில் விரிந்த
போதக்
காட்சிக்கும் காணலன்... ---
கந்தபுராணம்.
பாங்கு
உள நாம் தெரிதும் எனத் துணிந்து கோடிப்
பழமறைகள் தனித்தனியே பாடிப்பாடி,
ஈங்கு
உளது என்று, ஆங்கு உளது என்று
ஓடி ஓடி,
இளைத்து இளைத்து, தொடர்ந்து தொடர்ந்து எட்டும்தோறும்
வாங்கு
பர வெளிமுழுதும் நீண்டு நீண்டு,
மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே! எங்கும்
தேங்கு
பரமானந்த வெள்ளமே! சச்
சிதாநந்த அருட்சிவமே! தேவதேவே.
பாயிரமா
மறை அனந்தம் அனந்தம் இன்னும்
பார்த்து அளந்து காண்டும் எனப் பல்கால் மேவி
ஆயிரம்
ஆயிர முகங்களாலும் பன்னாள்
அளந்துஅளந்து, ஓர்அணுத்துணையும் அளவுகாணா
தே,இரங்கி
அழுது சிவ சிவ என்று ஏங்கித்
திரும்ப அருட் பரவெளிவாழ் சிவமே,ஈன்ற
தாய்
இரங்கி வளர்ப்பதுபோல் எம் போல்வாரைத்
தண்அருளால் வளர்த்து என்றும் தாங்கும்
தேவே. --- திருவருட்பா.
"ஒன்று அது" என்றது, அதைத் தவிர வேறு பொருள் இல்லை என்னும்
"ஏகமேவ" என்ற சுருதி வாக்கியத்தை வற்புறுத்துகின்றது.
மேலை
வெளியில் ஒளிரும் பரம்சுடர் ---
மூலாதாரம்
முதல் ஆறு ஆதாரங்கட்கும் அப்பால் உள்ள பிரமரந்திரமும் கடந்த வெளியாகிய மேலைப்
பெருவெளியில் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி.
நாளும்அதிவேக
கால்கொண்டு தீமண்ட
வாசஅனல்ஊடு
போய்ஒன்றி வானின்கண்
நாமமதிமீதில்
ஊறும்கலா இன்ப அமுதூறல்
நாடிஅதன்மீது
போய்நின்ற ஆனந்த
மேலைவெளி
ஏறிநீ இன்றிநான்இன்றி
நாடிஇனும்
வேறு தான்இன்றி வாழ்கின்றது ஒருநாளே... --- மூளும்வினை திருப்புகழ்.
அந்த
மேலை வெளியில் விளங்கும் சிவசுடருடன் கலந்து இன்புறுதற்கு விழைதல் வேண்டும்.
ஓது
சரியை க்ரியையும் புணர்ந்தவர் …... துரியம் கடந்தது ---
சரியை, கிரியை, யோகம் என்ற மூன்றும் ஞானத்தை
அடைவதற்குரிய சாதனங்கள். ஆதலினால், சரியையாதிகளினால் நேரே இறைவனை அடைய
முடியாது. ஞானம் ஒன்றாலேயே அடையலாம்.
சரியை
யாளர்க்கும் அக் கிரியை யாளர்க்கு நற்
சகல
யோகர்க்கும் எட்ட அரிதாய.... --- திருப்புகழ்.
சரியை
--- புறத் தொழிலால் உருவத் திருமேனியை வழிபடுதல்.
கிரியை --- அகத்தொழில்
புறத்தொழில் இரண்டாலும் அருவத் திருமேனியை வழிபடுதல்.
யோகம் --- அகத்தொழிலால்
மட்டும் அருவத் திருமேனியை வழிபடுதல்.
ஞானம் --- அறிவு மாத்திரத்தால் உரு, அரு, உருஅரு என்ற மூன்றையும் கடந்த அகண்டாகார ஜோதிமயமான திருமேனியை வழிபடுதல்.
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய அவத்தையும் கடந்து
நிற்பவர் இறைவர்.
ஊனும்
உயிரும் முழுதும் கலந்தது ---
இறைவன்
யாண்டும் நீக்கம் அற நிறைந்தவன்.
"பேதமில்
குழவிபோல்வான் பிரிவிலன் யாண்டும் நின்றான்" என்பது கந்தபுராணத் திருவாக்கு.
"இகபரம் இரண்டினிலும்
உயிரினுக்குஉயிராகி
எங்கும்
நிறைகின்ற பொருளே.....” --- தாயுமானார்.
"எங்கெங்கே
பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்குஅங்கு
இருப்பதுநீ அன்றோ பராபரமே” --- தாயுமானார்.
சாதி
குலமும் இலது ---
இறைவனுக்கு
சாதி, குலம், பேர், ஊர், குணம், குறி, செயல் ஆகிய யாவும் இல்லை.
ஊர்இலான்
குணம் குறியிலான் செயலிலான் உரைக்கும்
பேர்இலான்
ஒரு முன்இலான் பின்இலான் பிறிதுஓர்
சார்இலான்
வரல் போக்குஇலான் மேல்இலான் தனக்கு
நேர்இலான்
உயிர்க் கடவுளாய் என் உள்ளே நின்றான். --- கந்தபுராணம்.
மைப்படிந்த
கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்,
ஒப்புஉடையன்
அல்லன்; ஒருவன்அல்லன்;
ஓர்ஊரன் அல்லன்; ஓர்உவமன் இல்லி,
அப்படியும்
அந்நிற மும்அவ் வண்ணமும்
அவன்அருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன்
இந்நிறத்தின் இவ்வண் ணத்தன்
இவன்இறைவன் என்றுஎழுதிக் காட்ட ஒணாதே. --- அப்பர்.
வியோமம்
சாரும் அநுபவர் ---
ஞானாகாயத்தில்
கலந்து இன்புறுகின்ற அநுபவிகள். அவர்கள்
பந்தத்தினின்றும் விடுபட்டு அதனை அடைவர். விடு
என்ற முதனிலை நீண்டு வீடு என்று வந்தது. விடுபடுவது வீடு. அவ் வீட்டின் தலைவனாகிய பதியோடு கலந்த ஆன்மா
பரமசுகக் கடலில் முழுகி இடையறாத இன்புறுகின்றது.
ஞால
முதல்வி ….. மனை வஞ்சி ---
இந்த
ஆறு வரிகளினால் உமாதேவியாருடைய ஒப்பற்ற பெருமையை சுவாமிகள் உரைக்கின்றனர். திருவானைக்காவில் எழுந்தருளிய திருவேலிறைவனைப்
பாடுகின்றனர். அதனால், அங்கு சிறப்புடன் வீற்றிருக்கின்ற
அகிலாண்ட நாயகியைத் துதிப்பாராயினார்.
இந்தச் சொற்றொடர்கள் எத்துணை இனிமையாக இருக்கின்றது என்பதை அன்பர்கள்
படித்துப் பார்க்கவும். நினைப்பார் நெஞ்சமும், வசனிப்பார் வாக்கும், கேட்பார் செவியும் ஒருங்கே தித்திக்கும்
தெள்ளிய தீந்தமிழ்ச் சொற்களால் தொடுத்து இனிமையிலும் இனிமையாகப் பாடி வைத்து
அருளினார்.
கருத்துரை
இந்திரனுடைய
இடர்களைந்த எம்பிரானே, வயலூர் மேவும் வள்ளலே, அகிலாண்டேசுவரியின் அருமைப் புதல்வரே, திருவானைக்காவில் உறையும் தேவரே, அடியேன் பொறிபுலன்களால் வரும்
துன்பமற்று நின் கழல் அடைந்து, பேரின்பப்
பெருவாழ்வைப் பெறவேண்டும்.
No comments:
Post a Comment