அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
உரைக் காரிகை
(திருவானைக்கா)
முருகா!
தமிழால் மனிதரைப் பாடித்
துன்பத்தில் துவளாமல்,
உன்னையே பாடி உய்ய அருள்.
தனத்தா
தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான ...... தந்ததான
உரைக்கா
ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை ...... யொன்றுபாட
உழப்பா
திபக்கோ டெழுத்தா ணியைத்தே
டுனைப்பா ரிலொப்பார்கள் ......
கண்டிலேன்யான்
குரைக்கா
னவித்யா கவிப்பூ பருக்கே
குடிக்காண் முடிப்போடு ...... கொண்டுவாபொன்
குலப்பூ
ணிரத்நா திபொற்றூ செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின் ...... மங்குவேனோ
அரைக்கா
டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்
அனற்கே புனற்கேவ ...... ரைந்தஏடிட்
டறத்தா
யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ ...... மர்ந்தவேளே
திரைக்கா
விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யா னமுற்றோர்சி ...... லந்திநூல்செய்
திருக்கா
வணத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
உரைக்
காரிகைப் பால் எனக்கே முதல்பேர்,
உனக்கோ மடல்கோவை ...... ஒன்று பாட,
உழப்பாது
இபக் கோடு எழுத்தாணியைத் தேடு,
உனைப் பாரில் ஒப்பார்கள் ......
கண்டிலேன்யான்,
குரைக்கு
ஆன வித்யா கவிப் பூபருக்கே
குடிக்காண், முடிப்போடு ...... கொண்டு வா பொன்,
குலப்
பூண் இரத்ந ஆதி பொன் தூசு எடுப்பாய்
எனக் கூறு இடர்ப்பாடின் ...... மங்குவேனோ?
அரைக்கு
ஆடை சுற்றார் தமிழ்க் கூடலில் போய்
அனற்கே புனற்கே ...... வரைந்த ஏடு இட்டு,
அறத்தாய்
எனப்பேர் படைத்தாய்! புனல் சேல்
அறப்பாய் வயல் கீழ் ...... அமர்ந்தவேளே!
திரைக்
காவிரிக்கே கரைக் கானகத்தே
சிவ த்யானமுற்ற ஓர் ...... சிலந்தி நூல் செய்
திருக்காவணத்தே
இருப்பால் அருள் கூர்
திருச் சாலகச் சோதி ...... தம்பிரானே.
பதவுரை
அரைக்கு ஆடை சுற்றார் --- இடுப்பில்
துணி கட்டாதவர்களாகிய சமணர்கள் மிகுதியாக வாழ்ந்திருந்த,
தமிழ்க் கூடலில் போய் --- தமிழ் வளர்ந்த
மதுரையம்பதிக்குச் சென்று,
அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு --- அங்கே
அவர்களை வாதில் வெல்ல நெருப்பிலும்,
நீரிலும்
தேவாரத் திருப்பதிகங்கள் எழுதப்பட்ட ஏட்டினை இட்டு,
அறத்தாய் எனப் பேர் படைத்தாய் --- அறப்பெரும் தலைவன் என்ற புகழைப்
பெற்றவரே!
புனல் சேல் அறப் பாய் வயல் கீழ் அமர்ந்த
வேளே --- தண்ணீரில் சேல்
மீன்கள் நிரம்பவும் பாய்கின்ற வயல்களின் கீழ்ப்புறத்தில் வீற்றிருக்கும் செவ்வேளே!
திரைக் காவிரிக்கே கரைக் கானகத்தே --- அலைகள்
வீசும் காவிரியின் நதிக்கரையில் இருந்த காட்டில்
சிவ த்யானம் உற்ற ஓர் சிலந்தி நூல் செய் --- சிவத் தியானம் நிறைந்திருந்த ஒப்பற்ற
சிலந்தி பூச்சி தனது வாயின் நூலால் அமைக்கப் பெற்ற
திருக் காவணத்தே இருப்பார் --- அழகிய பந்தலின் கீழ் இருப்பவரும்,
அருள் கூர் திருச் சாலகச் சோதி
தம்பிரானே --- அருள் மிக்க அழகிய பலகணி வழியாய் ஜோதி சொரூபமாகக் காட்சி
தருபவரும் ஆகிய சிவபிரானுக்குத் தலைவராய் விளங்குபவரே!
உரைக் காரிகைப் பால் எனக்கே முதல் பேர் --- சொல்லப்படுகின்ற காரிகை என்னும்
யாப்பிலக்கண நூலில் சமர்த்தன் என்ற முதன்மையான பேர் எனக்கே உண்டு.
உனக்கோ மடல், கோவை ஒன்று பாட --- உன் பேரில் மடல், கோவை என்ற பிரபந்த வகைகளில் ஒன்றைப் பாடுவதற்கு,
உழப்பாது இபக் கோடு எழுத்தாணியைத் தேடு
--- காலம் தாமதிக்காமல், யானையின் தந்தப் பிடி அமைந்த
எழுத்தாணியைத் தேடி எடு.
உனைப் பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான் --- உலகத்தில் உனக்கு ஒப்பானவர்கள்
யாரையும் நான் கண்டதில்லை,
குரைக்கு ஆன வித்யா கவிப் பூபருக்கே
குடிக்காண் ---பெருமைக்கு உரிய
வித்தையில் வல்ல கவியரசர்களுக்கே நீ ஒரு புகலிடமாக விளங்குகிறாய்.
முடிப்போடு கொண்டு வா --- பொற்காசுகளை முடித்த முடிப்புடன் கொண்டு வா,
பொன் குலப் பூண் இரத்நாதி பொன் தூசு
எடுப்பாய் --- சிறந்த
அணிகலன்களையும், இரத்தினம்
முதலியவற்றையும், பொன் இழையுடன் கூடிய
ஆடைகளையும் எடுத்துக் கொண்டு வா,
எனக் கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ --- என்றெல்லாம் சொல்லிப் புகழும்
துன்பத்தில் நான் அகப்பட்டு, வாட்டம் அடையலாமோ?
பொழிப்புரை
இடுப்பில் துணி கட்டாதவர்களாகிய
சமணர்கள் மிகுதியாக வாழ்ந்திருந்த,
தமிழ்
வளர்ந்த மதுரையம்பதிக்குச் சென்று, அங்கே
அவர்களை வாதில் வெல்ல நெருப்பிலும்,
நீரிலும்
தேவாரத் திருப்பதிகங்கள் எழுதப்பட்ட ஏட்டினை இட்டு, அறப்பெரும் தலைவன் என்ற புகழைப்
பெற்றவரே!
தண்ணீரில் சேல் மீன்கள் நிரம்பவும்
பாய்கின்ற வயல்களின் கீழ்ப்புறத்தில் வீற்றிருக்கும் செவ்வேளே!
அலைகள் வீசும் காவிரியின் நதிக்கரையில்
இருந்த காட்டில் சிவத் தியானம் நிறைந்திருந்த ஒப்பற்ற சிலந்தி பூச்சி தனது வாயின்
நூலால் அமைக்கப் பெற்ற அழகிய பந்தலின் கீழ் இருப்பவரும், அருள் மிக்க அழகிய பலகணி வழியாய் ஜோதி சொரூபமாகக் காட்சி தருபவரும் ஆகிய சிவபிரானுக்குத் தலைவராய் விளங்குபவரே!
சொல்லப்படுகின்ற காரிகை என்னும்
யாப்பிலக்கண நூலில் சமர்த்தன் என்ற முதன்மையான பேர் எனக்கே உண்டு. உன் பேரில் மடல், கோவை என்னும் பிரபந்த வகைகளில்
ஒன்றைப் பாடுவதற்கு, காலம் தாமதிக்காமல், யானையின் தந்தப் பிடி அமைந்த
எழுத்தாணியைத் தேடி எடு. உலகத்தில் உனக்கு ஒப்பானவர்கள் யாரையும் நான் கண்டதில்லை.
பெருமைக்கு உரிய வித்தையில் வல்ல கவியரசர்களுக்கே நீ ஒரு புகலிடமாக விளங்குகிறாய். பொற்காசுகளை முடித்த முடிப்புடன் கொண்டு வா. சிறந்த அணிகலன்களையும், இரத்தினம் முதலியவற்றையும், பொன் இழையுடன் கூடிய ஆடைகளையும்
எடுத்துக் கொண்டு வா, என்றெல்லாம் சொல்லிப் புகழும் துன்பத்தில் நான் அகப்பட்டு, வாட்டம் அடையலாமோ?
விரிவுரை
உரைக்
காரிகை
---
காரிகை
என்பது ஒரு யாப்பிலக்கண நூல். இது பதினோராம் நூற்றாண்டில் இருந்த அமிர்தசாகரர்
இயற்றியது. இது அருணகிரியார் காலத்திற்கு முற்பட்ட நூல். புலவர்கள் காரிகை கற்றுக்
கவி பாடுவார்கள்.
பொருளாளரிடம்
கவி பாடிப் புகழ்ந்து கூறி, பொருளும் பெறாமல்
துன்பமும் அடைவார்கள்.
"காரிகை கற்றுக்
கவிபாடுவதிலும், பேரிகை கொட்டிப்
பிழைப்பது நன்றே" என்று ஒரு புலவன் மனம் நொந்து கூறினான்.
எனக்கே
முதற்பேர் ---
காரிகை
நூலில் வல்லவன் என்று என்னையே புகழ்ந்து கூறுகின்றார்கள் என்று தன்னைத் தானே
வியந்து கொள்வது.
உனக்கே
மடல் கோவை ஒன்று பாட ---
மடல், கோவை என்பவை தமிழ்ப் பிரபந்த வகைகள்.
மடல்
என்பது விரும்பிய காதலியை நான் அடைவேன் என்று மடல் ஏறுவது. கலிவெண்பாவில் பாடும்
ஒருவகை நூல் மடல்.
கோவை
- அகப்பொருள் நூல்.
வழிபடு
கடவுளையேனும், ஆதரித்தவர்களையேனும்
பாட்டுடைத் தலைவனாக அமைத்துப் பாடுவது. பல துறைகள் இதில் அமையப் பெறும்.
மணிவாசகப்
பெருமான் அருளிய திருச்சிற்றம்பலக் கோவை என்னும்
திருக்கோவையார் சிறந்த அருள் நூல். முதலில் தோன்றியதும் இதுவே.
தஞ்சைவாணன்
கோவை, பாண்டிக் கோவை, குளத்தூர்க்
கோவை,
குலோத்துங்கசோழன்
கோவை,
சந்திரவாணன்
கோவை, அம்பிகாபதிக் கோவை, முதலியன பிற கோவை
நூல்கள்.
உழப்பாது
---
உழத்தல்
- காலம் தாழ்த்தல்.
காலம்
கடத்துபவனைப் பார்த்து ஏன் உழப்புகின்றாய் என்கின்ற உலக வழக்காலும் அறிக.
இபக்கோடு
எழுத்தாணியைத் தேடு ---
விலை
உயர்ந்த யானைக் கொம்பினால், விசித்திர
வேலைப்பாடுகளுடன் கூடிய எழுத்தாணியைச் செய்வர்.
புலவன்
பொருளாளனைப் பார்த்து, "உயர்ந்த
எழுத்தாணி கொண்டு வா" என்று கேட்கின்றான்.
உனைப்
பாரில் ஒப்பார்கள் கண்டிலேன் யான் ---
தனவந்தனைப்
பார்த்துப் புலவன், "உனக்கு நிகராக
இப் பூதலத்தில் ஒருவரையும் நான் கண்டேனில்லை" என்று கூறிப் புகழ்கின்றான்.
குரைக்கு
ஆன வித்யா கவிப் பூபருக்கே குடிக்காண் ---
குரைக்கு
- பெருமைக்கு. பெருமைக்கு உரிய கல்வியில்
சிறந்த கவியரசர்கட்கு நீ தான் புகலிடம்.
புலவர்களைக் காக்கும் கருணாநிதி நீ என்று புகழ்வர்.
முடிப்போடு
கொண்டு வா பொன் ---
தனவந்தனைப்
பார்த்து, "பொற்காசுகள்
முடிந்த பொற்கிழியைக் கொண்டு வா" என்று உரிமையுடனும் அதிகாரத்துடனும்
மிடுக்குடனும் கேட்கின்றதாக இந்த வரி கூறுகின்றது.
குலப்பூண்
இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் ---
சிறந்த
தங்க நகைகள், இரத்தின மாலைகள், பொன்னாடைகள் இவைகளைக் கொண்டு வந்து கொடு
என்று புலவன் கேட்கின்றான்.
இடர்ப்பாடின்
மங்குவேனோ ---
தமிழ்
படித்து, இறைவனைப் பாடாது, பொருளுக்காக மனிதர்களைப் பாடித்
திரியும் இத் துன்ப நிலையில் வாட்டம் அடைதல் கூடாது.
அரைக்கு
ஆடை சுற்றார்
---
திகம்பர
சமணம் என்று சமணத்தில் ஒரு பிரிவு உண்டு.
அவர்கள் இடுப்பில் ஆடை உடுக்க மாட்டார்கள். பாய் உடுத்துத் திரியும் சமணரும் உளர். அம்மணமாய்
இருப்பதனால், அம்மதம் அமணம்
எனப்பட்டது.
ஆடை
ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பர்.. --- திருஞானசம்பந்தர்.
பாய்
அன்றி உடாப் பேதைகள்.... --- (தவர்வாள்) திருப்புகழ்.
தமிழ்க்
கூடலில் போய், அனற்கே புனற்கே வரைந்த
ஏடு இட்டு ---
சங்கத்தின்
மூலம் தமிழை வளர்த்தபடியால் தமிழ்க் கூடல் என்றார்.
தொன்று
தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்துறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம்மாய வலைப்பட்டு சைவசமய
சீலங்கள் மாறின; உலகெலாம் செய்த
பெருந்தவத்தின் வடிவால், சோழமன்னனது
திருமகளாய், பாண்டிமா தேவியாய்
விளங்கும் மங்கையர்க்கரசியாரும்,
அவருக்கு
சீதனமாக சோழமன்னனால் தரப்பட்டு வந்து,
பாண்டிய அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற
குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாய்
அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ
ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள்.
அப்போது
திருஞான சம்பந்தரது அற்புத மகிமையையும், அவர்
திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் அறிந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த
ஏவலரை அனுப்பினார்கள்; அவர்கள் இப்போது வேதாரணியம்
என வழங்கப்படும் திருமறைக்காட்டிற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து சமண
நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து,
அதனை
ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று
தெரிவித்து நின்றார்கள். திருஞானசம்பந்தர் மறைக்காட்டு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்: திருநாவுக்கரசர்
சமணர்களது கொடுமையை மனத்துற் கொண்டு,
”பிள்ளாய்!
வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.
“வேயுறு
தோளிபங்கன்விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல வவைநல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே”
என்ற
திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று
கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு
எழுந்தருளி வருவாராயினார். எண்ணாயிரஞ் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த
பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனங்கள் ஏற்பட்டன. எல்லாரும் மதுரையில்
கூடி நின்றார்கள். புகலிவேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார், அவரை வரவேற்குமாறு
அமைச்சர் பெருமானை அனுப்பி, தாம் திருவாலவாய்த்
திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.
“சீகாழிச் செம்மல் பல
விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார்
ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கை கூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க்
கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்து, அவரை எடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும்
திருந்திய சிந்தையீர் உமக்கும் நம் பெருமான் தன் திருவருள் பெருகு நன்மைதான்
வாலிதே” என்னலும், குலச்சிறையார்
கைகூப்பி,
“சென்ற காலத்தின்
பழுதிலாத் திறமும்
இனி எதிர் காலத்தின் சிறப்பும்,
இன்று
எழுந்தருளப் பெற்ற பேறு இதனால்
எற்றைக்கும் திருவருள் உடையேம்;
நன்றியில்
நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றி
கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்
மேன்மையும் பெற்றனம்” என்றார்.
மதுரையும்
ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து திருஞானசம்பந்தர்
திருப்பதிகம் பாடி, கோயில் உள புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார்
ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க,
பிள்ளையார்
அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில்
தங்கியருளினார்.
சமணர்கள்
அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு
முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவன் அநுமதி பெற்று திருமடத்தில்
தீப்பிடிக்க அபிசார மந்திரம் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு
தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவில் போய் திருமடத்தில் தீ
வைத்தனர். அதனை அடியார்கள் அவித்து,
ஆளுடைய
பிள்ளையாரிடம் தெரிவிக்க, திருஞானசம்பந்தர் இது அரசன்
ஆணையால் வந்தது என்று உணர்ந்து,
“செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல் என்று அருள் செய் எனை,
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று
பாண்டியற்கு ஆகவே”
என்று
பாடியருளினார். “பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது
சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள்
வந்து மந்திரஞ் சொல்லி, மயிற்பீலியால்
பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. நெருங்கி வந்த
அமணர்களுடைய உடலும் உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான்.
மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச்
செய்த தீங்கினால் தான் இச்சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராது என்றும் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்கத்தில் நான்
சேருவேன்; அவரை அழைமின்”
என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,
“ஞானத்தின் திருவுருவை
நான்மறையின் தனித்துணையை
வானத்தின்
மிசை இன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்
தேன்
நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின்
எழுபிறப்பைக் கண் களிக்கக் கண்டார்கள்.”
கண்டு
வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும்
உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பம் செய்தனர். திருஞானசம்பந்தப் பெருமான்
அவர்களுக்கு அபயம் தந்து, அடியார் குழத்துடன்
புறப்பட்டு திருக்கோயில் சென்று,
தென்னவனாய்
உலகு ஆண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம்
நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார்.
பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்
பக்கத்தில் பீடம் தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க
சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச, கவுணியர் வேந்து,
“மானின்நேர்
விழிமாதராய், வழுதிக்கு மாபெருந்
தேவி,கேள்
பானல்வாய்
ஒருபாலன் ஈங்கு இவன்என்று நீ பரிவு எய்திடேல்
ஆனை
மாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு
ஏளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”
என்று
பாடித் தேற்றினார்.
அரசன் சமணரையும் சம்பந்தரையும்
சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமென; அமணர் இடப்புற நோயை நீக்குவோம் என்று
மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி
வேந்தரை நோக்க, சுவாமிகள், "மந்திரமாவது நீறு" என்ற
திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில்
தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து
வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை
பணிந்து ஆனந்தமுற்றான்.
பின்னர், சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற
சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். அரசவையில் பெரு நெருப்பு மூட்டினர். சம்பந்தர்
தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை
எடுத்து, “தளரிள வளரொளி” என்ற
பதிகம் பாடி நெருப்பில் இட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை இட, அவை சாம்பலாயின.
புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர்
கழுவேறுவதென்று துணிந்தனர். வையை ஆற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விட, அது நீருடன் கீழ்நோக்கிச் சென்றது.
சுவாமிகள், வாழ்க அந்தணர்
என்று தொடங்கும் திருப்பாசுரத்தை எழுதி, வையை ஆற்றினில் இட்டனர். அந்த ஏடு
வேகமாகச் செல்லும் ஆற்று நீரை எதிர்த்து மேல் நோக்கிச் சென்றது. சுவாமிகள் அருள்
வாக்கில் “வேந்தனும் ஓங்குக”
என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்து, நின்ற
சீர் நெடுமாறனாயினார். அந்த ஏடு நிற்க,
“வன்னியும்” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் குதிரை மேல் ஏறி
விரைந்து சென்று அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையும் தோற்ற
சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.
அருமறையைச்
சிச்சிலிபண்டு அருந்தத் தேடும்
அதுபோல்அன்று இது,என்றும் உளதாம் உண்மைப்
பரபதமும்
தற்பரமும் பரனே அன்றிப்
பலர் இல்லை என்று எழுதும் பனுவல், பாரின்
எரியினிடை
வேவாது, ஆற்று எதிரே ஓடும்,
என்புக்கும் உயிர்கொடுக்கும், இடுநஞ்சு ஆற்றும்,
கரியை வளைவிக்கும், கல் மிதக்கப் பண்ணும்,
கரா மதலை கரையில் உறக் காற்றும்
காணே." ---
திருமுறைகண்டபுராணம் .
அறத்தாய்
எனப் பேர் படைத்தாய் ---
திருஞானசம்பந்தர், பரசமயத்தை நிராகரித்து, சிவசமய தருமத்தை நிலைநாட்டினார். சிவதரும ஸ்தாபகர் என்று பேர் பெற்றார்.
புனல்
சேல் அறப் பாய் வயல்கீழ் அமர்ந்த வேளே ---
அற
– மிகுதியாக. நீரில் மிகுதியாக மீன்கள் பாய்கின்ற வயல்கள் சூழ்ந்த திருத்தலம் வயலூர். இத்திருத்தலம் முருகனுக்கு உகந்தது.
திரைக்
காவிரிக்கே ---
திரை
- அலை. காவிரி ஏழு நதிகளில் ஒன்று. மிகுதியான நீர் பெருக்கெடுத்து ஓடும். அலைகள் மிகவும் வேகமாக மோதும் நதி.
மனித்தர்
ஆதிசோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ரவாக
பானீயம் அலைமோதும்... --- (அனித்தமான)
திருப்புகழ்.
கரைக்
கானகத்தே ---
காவிரி
நதியின் வடகரையில் உள்ள அழகிய காடு. அக்
கானகத்தில் வெண்ணாவல் மரத்தடியில் சிவபெருமான் எழுந்தருளி இருக்கின்றார்.
சிவ
த்யானம் உற்று ஓர் சிலந்தி நூல் செய் திருக்காவணத்தே இருப்பார் ---
சோழ நாட்டிலே, காவிரிக் கரையிலே ஒரு தீர்த்தம் உண்டு.
அதன் பெயர் சந்திர தீர்த்தம். அதன் அருகே ஒர் அழகிய வனம் இருந்தது. அவ் வனத்தில் ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு
சிவலிங்கம் வெளிப்பட்டது. அது, ஒரு வெள்ளானைக்குப்
புலப்பட்டது.
அந்த யானை துதிக்கையால் நீரை
முகக்கும். சிவலிங்கத்தை அபிடேகம்
செய்யும். மலரைச் சாத்தும். இவ்வாறு
நாள்தோறும் அந்த யானை சிவபெருமானை வழிபட்டு வந்தது. அதனால், அத் திருப்பதிக்குத் திருவானைக்கா
என்னும் திருப்பெயர் உண்டாயிற்று.
அங்கே ஞான உணர்வு உடைய ஒரு சிலந்தியும்
இருந்தது. சிவலிங்கத்தின் மீது சருகு உதிர்வதை
அச் சிலந்தி கண்டது. அதைத் தடுக்கும்
பொருட்டு, அச் சிலந்தி, தனது வாய் நூலால் மேல்கட்டி அமைத்தது.
பூசைக்கு வரும் வெள்ளானை, அம் மேற்கட்டியைக்
கண்டது. அநுசிதம் என்று அதனை அழித்தது.
சிலந்தி அதைப் பார்த்து,
துதிக்கை
சுழன்றமையால் விதானம் அழிந்தது போலும் என்று கருதி, மீண்டு விதானம் அமைத்தது. அடுத்த நாளும் யானை விதானத்தை அழித்தது. சிலந்திக்குச் சினம் மூண்டது. யானையின் துதிக்கயுள் புகுந்து கடித்தது. யானை விழுந்தது. தும்பிக்கையை நிலத்தில் மோதி
மோதி இறந்தது. சிலந்தியும் மாண்டது.
சிவபெருமான் யானைக்குச் சிவகதி வழங்கினார்.
சோழர் குலத்தில் பிறக்குமாறு சிலந்திக்கு அருள் செய்தார்.
சுபதேவர் என்னும் ஒரு சோழ மன்னர்
இருந்தார். அவர் தம் மனைவியார்
கமலவதியார். இருவரும் தில்லை சேர்ந்து, ஆண்டவனை வழிபட்டுக் கொண்டு
இருந்தனர். கமலவதியார்க்குப் புத்திரப்
பேறு இல்லாமல் இருந்தது. அப் பேறு
குறித்து அம்மையார் தில்லைக் கூத்தனைப் போற்றுவது வழக்கம். தில்லைக் கூத்தன் திருவருளால் அம்மையார்
கருவுற்றார். அக் கருவில் திருவானைக்காச்
சிலந்தியின் ஆருயிர் சேர்ந்தது.
கமலவதியார் கரு உயிர்க்கும் நேரம்
வந்தது. "பிள்ளை இப்பொழுது பிறத்தல் கூடாது.
இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாயின், அது மூன்று லோகத்தையும்
ஆள்வதாகும்" என்று காலக் கணக்கர்கள் சொன்னார்கள். அவ் உரை கேட்ட கமலவதியார், "அப்படியானால், என்னைத் தலை கீழாகக் கட்டுங்கள்"
என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது. ஒரு நாழிகை கழிந்தது. பிள்ளை பிறந்தது.
காலம் தாழ்த்துப் பிறந்தமையால்,
குழந்தை
சிவந்த கண்ணை உடையதாயிருந்தது. அதைக் கண்ட
அன்னையார், "என்னே, கோச்செங்கண்ணானோ?" என்று சொல்லிக்
கொண்டே இறந்தார்.
சுபதேவர் பிள்ளையை வளர்த்தார். தக்க வயதில் பிள்ளைக்கு முடி சூட்டினார். பின்னே, அவர் தவநெறி நின்று சிவனடி சேர்ந்தார்.
கோச்செங்கண் சோழருக்கு முன்னை உணர்வு
முகிழ்த்து இருந்தது. அவர் திருக்கோயில்கள் கட்டுவதில் கண்ணும் கருத்தும்
உடையவராய் இருந்தார். தாம் முன்னே திருவருள் பெற்ற திருவானைக்காவினை நாடிச் சென்று, அங்கே திருக்கோயில் அமைத்தார்.
அமைச்சர்களைக் கொண்டு சோழநாட்டிலேயே பல திருக்கோயில்களைக் கட்டுவித்தார். அவைகளுக்குக் கட்டளைகளும் முறைப்படி
அமைக்கப்பட்டன.
கோச்செங்கண் சோழ நாயனார் தில்லை
சேர்ந்தார். தில்லைக் கூத்தனை வழிபட்டார்.
தில்லைவாழ் அந்தணர்க்கு மாளிகைகள் கட்டிக் கொடுத்தார். இவ் வழியில்
திருத்தொண்டுகள் பல செய்து நாயனார்,
சிவபெருமான்
திருவடி சேர்ந்தார்.
எண்தோள்
ஈசற்கு எழில்மாடம்
எழுபது
செய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன் … --- பெரிய திருமொழி.
திருக்குலத்து வளச்சோழன் … --- பெரிய திருமொழி.
புத்தியினால்
சிலந்தியும் தன் வாயின் நூலால்
புதுப்பந்தர் அது இழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால்
அரசு ஆண்டு சிறப்புச் செய்யச்
சிவகணத்துப் புகப்பெய்தார், திறலால்
மிக்க
வித்தகத்தால்
வெள்ஆனை விள்ளா அன்பு
விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி,
பத்தர்களுக்கு
இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டுஅடியேன் உய்ந்த வாறே. ---
அப்பர்.
சிலந்தியும்
ஆனைக் காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்துஅவண்
இறந்த போதே கோச்செங்க ணானும் ஆகக்
கலந்தநீர்க்
காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில்
பிறப்பித்து இட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே. --- அப்பர்.
திருச்
சாலகச் சோதி ---
திருவானைக்கா
கோயிலில் சுவாமி சந்நிதிக்கு நேரே மேற்கில் உள்ள சுவற்றில் ஒன்பது துவாரங்களுடன்
அமைந்த சாளரம் ஒன்று உண்டு.
இதன்
வழியாக இறைவனைத் தரிசித்தோர் நவதீர்த்தங்களில் முழுகிய பயனைப் பெறுவார்கள்.
அந்தண்
மடவார் அனவரதம் சிந்தித்துச் சேவிக்கும்
எல்லைத்
திருச்சாலக நலமும்.....
பரமன்
சிறக்கும் திருச்சாலகத்து ஒளிர்
தேவேசன்
கறைகண்டன் என் ஆனைக்கன்று..... --- திருவானைக்கா உலா.
கருத்துரை
ஆனைக்கா
மேவிய அண்ணலே, தமிழால் உன்னைப் பாட
அருள் செய்.
No comments:
Post a Comment