திரு ஆனைக்கா - 0506. ஆலம் வைத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆலம் வைத்த (திருவானைக்கா)

முருகா!
பொதுமாதர் மயலில் வீழ்ந்து அழியாமல்
ஆண்டு அருள்


தான தத்தன தத்தன தத்தன
     தான தத்தன தத்தன தத்தன
          தான தத்தன தத்தன தத்தன ...... தனதான


ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச
     னாக மக்கலை கற்றச மர்த்திக
          ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ...... தெருவூடே

ஆர வட்டமு லைக்குவி லைப்பண
     மாயி ரக்கல மொட்டிய ளப்பினு
          மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ...... ருடன்மாலாய்

மேலி ளைப்புமு சிப்பும வத்தையு
     மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு
          மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி ...... யதனாலே

மேதி னிக்குள பத்தனெ னப்பல
     பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை
          வீடு கட்டியி ருக்குமெ னக்குநி ...... னருள்தாராய்

பீலி மிக்கம யிற்றுர கத்தினி
     லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்
          பீற லுற்றவு யுத்தக ளத்திடை ...... மடியாத

பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
     பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்
          பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு ...... குடனாட

ஏலம் வைத்தபு யத்தில ணைத்தருள்
     வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்
          ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ...... யருள்வோனே

ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ
     ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம
          ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஆலம் வைத்த விழிச்சிகள், சித்தசன்
     ஆகமக் கலை கற்ற சமர்த்திகள்,
          ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர், ...... தெருவூடே,

ஆர வட்ட முலைக்கு விலைப் பணம்
     ஆயிரக் கலம் ஒட்டி அளப்பினும்,
          ஆசை அப்பொருள் ஒக்க நடிப்பவ ......ருடன் மாலாய்,

மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையும்,
     ஆய் எடுத்த குலைப்பொடு பித்தமும்
          மேல் கொள, தலை இட்ட விதிப்படி ...... அதனாலே,

மேதினிக்கு உள பத்தன் எனப்பல
     பாடு பட்டு, புழுக்கொள் மலக்குகை
          வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் ...... அருள்தாராய்.

பீலி மிக்க மயில் துரகத்தினில்
     ஏறி முட்ட வளைத்து வகுத்து, டல்
          பீறல் உற்ற உயுத்த களத்திடை ...... மடியாத

பேர் அரக்கர் எதிர்த்தவரு அத்தனை
     பேரை உக்ர களப்பலி இட்டு, யர்
          பேய் கை கொட்டி நடிப்ப மணிக்கழுகு ......உடன்ஆட,

ஏலம் வைத்த புயத்தில் அணைத்து, ருள்
     வேல் எடுத்த சமர்த்தை உரைப்பவர்
          ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை ......அருள்வோனே!

ஏழ் இசைத்தமிழில் பயன் உற்ற வெண்
     நாவல் உற்று அடியில் பயில் உத்தம
          ஈசன் முக்கண் நிருத்தன் அளித்து அருள்....பெருமாளே.


பதவுரை


      பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி --- தோகை நிரம்ப உள்ள மயிலாகிய குதிரையின் மீது ஆரோகணித்து,

     முட்ட வளைத்து வகுத்து --- அசுரர்கள் அனைவரையும் ஒரு சேர ஒன்றாக வளைத்து, அவர்களைக்  கூறுபடுத்தி,

     உடல் பீறல் உற்றவு யுத்த களத்திடை --- அவர்களது உடல்கள் கிழிவுபட்ட அந்தப் போர்க் களத்தில்

         மடியாத பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர களப் பலி இட்டு --- இறவாது எஞ்சி நின்ற பெரிய அரக்கர்கள் எதிர்த்து வந்தவர்கள் அத்தனை பேரையும் கடுமையான போரில் மடிவித்து,

         உயர் பேய் கை கொட்டி நடிப்ப --- பெரிய பேய்கள் கைகளைக் கொட்டி நடிக்கவும்,

     மணிக் கழுகுடன் ஆட --- கருமையான கழுகுகள் உடன் ஆடவும்,

     ஏலம் வைத்த புயத்தில் அணைத்து --- வாசனைப் பொருள்கள் மணக்கும் தோளில் அணைத்து வைத்துள்ள

     அருள் வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர் ஏவருக்கும் --- றப்பு வாய்ந்த வேலாயுதத்தைச் செலுத்திய திறமையைப் புகழ்வோர்கள் யாவருக்கும்

      மனத்தில் நினைப்பவை அருள்வோனே --- அவரவர் மனதில் நினைக்கும் விருப்பங்களைப் பூர்த்தி செய்து அருள்பவரே!


         ஏழிசைத் தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று --- ஏழிசைத் தமிழால் ஆன தேவாரப் பாடல்களின் பயனைக் கொண்ட, வெண் நாவல் மரத்தின்

     அடியில் பயில் உத்தம ஈசன் முக் கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே --- கீழ் விளங்குகின்ற உத்தமராகிய, மூன்று கண்களை உடைய ஊழிக் கூத்து நடனம் ஆடுபவராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமையில் சிறந்தவரே!

      ஆலம் வைத்த விழிச்சிகள் --- ஆலகால விஷத்தைக் கொண்ட கண்களை உடையவர்கள்,

     சித்தசன் ஆகமக் கலை கற்ற சமர்த்திகள் ---  மன்மதனுடைய காமசாத்திர நூல்களைப் படித்துள்ள சாமர்த்திய சாலிகள்,

      ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் --- எப்படிப்பட்டவருடைய மனத்தையும் வஞ்சனை செய்து தம் வசமாக இழுப்பவர்கள்,

      தெருவூடே ஆர வட்ட முலைக்கு விலைப் பணம் --- நடுத்தெருவில் நின்று, முத்து மாலை அணிந்த, வட்ட வடிவுள்ள முலைகளுக்கு விலையாகப் பணம்

     ஆயிரக்கலம் ஒட்டி அளப்பினும் --- ஆயிரக்கலம் கணக்கில் துணிந்து அளந்து கொடுத்தாலும்,

     ஆசை அப்பொருள் ஒக்க நடிப்பவர் --- தங்களுடைய ஆசையை அந்தப் பொருளின் அளவுக்குத் தகுந்தவாறே கொடுத்து நடித்துப் பழகுபவர்களாகிய பொதுமாதர்கள்,

      உடன் மாலாய் --- இத்தகையவருடன் நான் ஆசை பூண்டவனாய்,

     மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையுமாய் --- அதற்குப் பின்னர் இளைப்பும், மெலிவும், வேதனையும் அடைந்து,

      எடுத்த குலைப்பொடு பித்தமும் மேல் கொள --- உடலெங்கும் நடுக்கத்துடன் பித்தமும் அதிகமாக ஏற்பட்டு,

     தலை இட்ட விதிப்படி அதனாலே --- தலையில் எழுதியுள்ள விதியின் காரணமாக

      மேதினிக்குள் அபத்தன் என --- பூமியில் பொய்யன் என்று பெயர் பெற்று,

     பல பாடு பட்டு --- பல துன்பங்களுக்கு ஆளாகி,

     புழு கொள் மலக் குகை வீடு கட்டி இருக்கும் எனக்கு --- புழுக்கள் வாழும் மலப் பிண்டமாகிய, இந்த உடலை எடுத்திருக்கும் எனக்கு

     நின் அருள் தாராய் --- தேவரீரது திருவருளைத் தந்து அருளுவீராக.

பொழிப்புரை


         தோகை நிரம்ப உள்ள மயிலாகிய குதிரையின் மீது ஆரோகணித்து, அசுரர்கள் அனைவரையும் ஒரு சேர ஒன்றாக வளைத்து, அவர்களைக்  கூறுபடுத்தி, அவர்களது உடல்கள் கிழிவுபட்ட அந்தப் போர்க் களத்தில் இறவாது எஞ்சி நின்ற பெரிய அரக்கர்கள் எதிர்த்து வந்தவர்கள் அத்தனை பேரையும் கடுமையான போரில் மடிவித்து, பெரிய பேய்கள் கைகளைக் கொட்டி நடிக்கவும், கருமையான கழுகுகள் உடன் ஆடவும், வாசனைப் பொருள்கள் மணக்கும் தோளில் அணைத்து வைத்துள்ள சிறப்பு வாய்ந்த வேலாயுதத்தைச் செலுத்திய திறமையைப் புகழ்வோர்கள் யாவருக்கும் அவரவர் மனதில் நினைக்கும் விருப்பங்களைப் பூர்த்தி செய்து அருள்பவரே!

         ஏழிசைத் தமிழால் ஆன தேவாரப் பாடல்களின் பயனைக் கொண்ட, வெண் நாவல் மரத்தின் கீழ் விளங்குகின்ற உத்தமராகிய, மூன்று கண்களை உடைய ஊழிக் கூத்து நடனம் ஆடுபவராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமையில் சிறந்தவரே!

         ஆலகால விஷத்தைக் கொண்ட கண்களை உடையவர்கள், மன்மதனுடைய காமசாத்திர நூல்களைப் படித்துள்ள சாமர்த்தி சாலிகள், எப்படிப்பட்டவருடைய மனத்தையும் வஞ்சனை செய்து தம் வசமாக இழுப்பவர்கள், நடுத்தெருவில் நின்று, முத்து மாலை அணிந்த, வட்ட வடிவுள்ள மார்பகங்களுக்கு விலையாகப் பணம் ஆயிரக்கலம் கணக்கில் துணிந்து அளந்து கொடுத்தாலும், தங்களுடைய ஆசையை அந்த பொருளின் அளவுக்குத் தகுந்தவாறே கொடுத்து நடித்துப் பழகுபவர்களாகிய பொதுமாதர்கள், இத்தகையவருடன் நான் ஆசை பூண்டவனாய், அதற்குப் பின்னர் இளைப்பும், மெலிவும், வேதனையும் அடைந்து, உடலெங்கும் நடுக்கத்துடன் பித்தமும் அதிகமாக ஏற்பட்டு, தலையில் எழுதியுள்ள விதியின் காரணமாக, பூமியில் பொய்யன் என்று பெயர் பெற்று, பல துன்பங்களுக்கு ஆளாகி, புழுக்கள் வாழும் மலப் பிண்டமாகிய, இந்த உடலை எடுத்திருக்கும் எனக்கு தேவரீரது திருவருளைத் தந்து அருளுவீராக.


விரிவுரை


ஆலம் வைத்த விழிச்சியர் ---

பொதுமகளிரது கண்கள் நஞ்சினும் கொடியது.  நஞ்சு உண்டாரை மட்டுமே கொல்லும்.  இக் கண்கள் கண்டாரையும் கொல்லும் வலிமை உடையன.  நச்சுக் கண்கள்.

சித்தசன் ஆகமக்கலை கற்ற சமர்த்திகள் ---

சித்தசன் - மன்மதன்.

திருமாலின் சித்தத்தில் பிறந்தவன் மன்மதன்.  சித்தம் - உள்ளம்.  ஜன் - பிறந்தவன்.

அதனால் சித்தசன் எனப் பேர் பெற்றான்.  இந்த மன்மதனுடைய நூல்களாகிய காம சாத்திரங்களை நன்கு படித்த சாமர்த்திய சாலிகள்.

ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் ---

எத்தி - ஏமாற்றி.  எப்படிப்பட்ட உறுதியுடையவர்கள் மனத்தையும் தமது வஞ்சனைத் திறத்தால் இழுத்துத் தம் வசம் செய்பவர்கள்.

முலைக்கு விலைப்பணம் ஆயிரக்கலம் ஒட்டி அளப்பினும், ஆசை அப் பொருள் ஒக்க நடிப்பவர் ---

தம்பால் வந்த ஆடவர்கள், முலைக்கு விலையாகத் பணத்தை ஆயிரம் கலம் தந்தாலும், அப்பொருளுக்கு ஏற்ற அளவில் ஆசை வைத்து நடிப்பவர்கள்.

எண்ணித் தர மாட்டார்களாம். அளந்துதான் தருகின்றார்களாம்.  அப்படிப் படியால் அளந்து தந்தாலும், தந்த பணத்துக்கு ஏற்ப அளந்து அவர்களுடன் பழகுவார்களாம்.

உடன் மாலாய் ---

இத்தகைய விலைமாதர்களுடன் சேர்ந்து மயக்கமடைந்து.

மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையுமாய் ---

இவ்வாறு பொதுமாதர் வசமாய் ஆனவர்கள், பின்னர் இளைப்பு நோயும், மெலிவும் பல வேதனைகளையும் அடைந்து துன்புறுவார்கள்.

எடுத்த குலைப்புடன் பித்தமும் மேல் கொள ---

நடுங்குவாதம், பித்தகாசம் முதலிய நோய்களுக்கு ஆளாகித் துயரம் அடைவார்கள்.

தலையிட்ட விதிப்படியினாலே ---

தலையில் பிரமன் எழுதிய விதிப்படி இவர்கள் அலைவார்கள்.

அபத்தன் எனப் பல பாடுபட்டு ---

அபத்தன் - பொய்யன்.  பொய்யன் என்று உலகத்தார்கள் இகழும்படி அநேக துன்பங்களை உற்று வருந்துவார்கள்.

புழுக்கொள் மலக்குகை வீடு கட்டி இருக்கும் ---

புழுக்கள் நிறைந்த மலக் குகையாகிய இந்த உடம்பாகிய வீட்டை விடாமல் கட்டிக் கொண்டு இருப்பது கீழோர்களின் தன்மை.


ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள்வேல் எடுத்த சமர்த்தை உரைப்பவர் ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே ---

இந்த ஏழாவது அடிக மிகவும் இனிமையானது.  இதனை மனனம் செய்துகொண்டு ஓதுதல் வேண்டும்.

முருகன் திருவுருவப் படங்களில் வேலைக் கையில் ஏந்துவதாகத் தீட்டுவது கூடாது. வேல் அவருடைய திருமார்பில் சாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும். இதனை, புயத்தில் அணைத்து அருள் வேல் என்று வருவதனால் அறிக.

முருகன் வேல்விட்ட பெருமையைச் சதா துதி செய்வோர்களின் மன விருப்பங்கள் அனைத்தையும் பெருமான் பூர்த்தி செய்து அருள் புரிவான்.

அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன
அவை தருவித்து அருள்     பெருமாளே...     ---  கலகலென திருப்புகழ்.

வேலும் மயிலும் நினைந்தவர் தம்துயர்
தீர அருள் தரு கந்த, நிரந்தர
மேலை வயலி உகந்து நின்றருள்   பெருமாளே...  ---  வாளின் திருப்புகழ்.

நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல்....    ---  திருக்கையில் வழக்க வகுப்பு.


ஏழிசைத் தமிழில் பயன்உற்ற வெணாவல் உற்ற அடியில் பயில் உத்தம ஈசன் முக்கண் நிருத்தன் ---

திருவானைக்கா என்ற திருத்தலத்தில் சிவபெருமான் வெண்ணாவல் மரத்தின் கீழ் எழுந்தருளி இருக்கின்றார்.  நமது தேசம் நாவலந்தீவு.  நாவலந்தீவில் நாவலின்கீழ் இருக்கின்றார் என்பது மிகவும் சிறந்தது.

வெண்நாவலின் மேவிய எம் அழகா   ---  திருஞானசம்பந்தர்.

உருளும்போது அறிவு ஒண்ணா; உலகத்தீர்!
தெருளும், சிக்கெனத் தீவினை சேராதே!
இருள் அறுத்து நின்று, ழுஈசன்ழு என்பார்க்கு எலாம்
அருள் கொடுத்திடும்-ஆனைக்கா அண்ணலே.       ---  அப்பர்.

மறைகள் ஆயின நான்கும்
         மற்றுஉள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத்து இறையும்
         தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
         காஉடை ஆதியை நாளும்
இறைவன் என்றுஅடி சேர்வார்
         எம்மையும் ஆள்உடை யாரே.                 ---  சுந்தரர்.

இவ்வாறு மூவரும் இசைத் தமிழால் பாட, அத்தமிழ் மணக்கும் திருத்தலம் திருவானைக்கா.

விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில்
         வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி யிறைஞ்சிமுன் வீழ்ந்தெழுந்து
         நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல்கோச் செங்க ணரசன்செய்த
         அடிமையும் அஞ்சொல் தொடையில்வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலைபாடிப்
         பரவிநின் றேத்தினர் பான்மையினால். ---  பெரியபுராணம்.


பாலுக்குப் பாலகன் அழப் பாற்கடல் வழங்கும் தயாபரன். ஆதலின், "உத்தமன்" என்றார்.

கருத்துரை

திருவானைக்கா உறை தேவதேவனே, மாதர் மயக்குற்ற அடியேனை ஆண்டு அருள்.









No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...