திரு ஆனைக்கா - 0505. ஆரம்அணி வாரை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆரம்அணி வாரை (திருவானைக்கா)

முருகா!
மரணகாலத்தில், உனது சரணத்தைத் துதிக்க அருள்.


தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தனதான


ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
     டாடவர்கள் வாடத் ...... துறவோரை

ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
     பாளித படீரத் ...... தனமானார்

காரளக நீழற் காதளவு மோடிக்
     காதுமபி ராமக் ...... கயல்போலக்

காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
     காலைமற வாமற் ...... புகல்வேனோ

பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
     சாமளக லாபப் ...... பரியேறிப்

பாய்மதக போலத் தானொடிக லாமுற்
     பாடிவரு மேழைச் ...... சிறியோனே

சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
     காரஇள வேனற் ...... புனமேவுந்

தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
     சோதிவளர் காவைப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஆரம் அணி வாரைப் பீறி, அற மேல்இட்டு
     ஆடவர்கள் வாட, ...... துறவோரை

ஆசைமடல் ஊர்வித்து ஆளும், தி பாரப்
     பாளித படீரத் ...... தன மானார்,

கார் அளக நீழல் காது அளவும் ஓடிக்
     காதும் அபிராமக் ...... கயல்போல,

காலன் உடல் போடத் தேடிவரும் நாளில்
     காலை மறவாமல் ...... புகல்வேனோ?

பார் அடைய வாழ்வித்த ஆரபதி, பாசச்
     சாமள கலாபப் ...... பரி ஏறிப்

பாய்மத கபோலத் தானொடு இகலா, முன்
     பாடி வரும் ஏழைச் ...... சிறியோனே!

சூரர் புர சூறைக் கார! சுரர் காவல்
     கார! இள ஏனல் ...... புனம் மேவும்

தோகை திருவேளைக்கார! தமிழ் வேதச்
     சோதி வளர் காவைப் ...... பெருமாளே.


பதவுரை

         பார் அடைய வாழ்வித்த ஆர பதி --- உலகம் முழுவதும் தாங்கி வாழ்விக்கும் நாகராஜன் ஆன ஆதிசேடனை

         பாசச் சாமள கலாபப் பரி ஏறி --- தனது கால்களில் கட்டவல்ல பச்சை நிறத் தோகை உடைய வாகனமான மயிலாகிய குதிரை மேல் ஏறி,

         பாய் மத கபோலத்தானொடு இகலா --- மதம் பாய்கின்ற மத்தகத்தை உடைய விநாயகரோடு மாறுபட்டு,

         முன் பாடி வரும் ஏழைச் சிறியோனே --- முன்னொரு காலத்தில் உலகத்தை வளைந்தோடி வருகின்ற இளம் குழந்தையே!

         சூரர் புர சூறைக்கார --- சூராதி அவுணர்களுடைய ஊர்களைச் சூறையாடி அழித்தவரே!

         சுரர் காவற்கார --- தேவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவரே!

         இள ஏனல் புன மேவும் தோகை திரு வேளைக்கார --- பசுமையான தினைப் புனத்தில் இருந்த மயில் போன்ற அழகிய வள்ளிநாயகியுடன் இனிது பொழுது போக்குபவரே!

         தமிழ் வேதச் சோதி வளர் காவைப் பெருமாளே --- தமிழ் மறையாகிய தேவாரங்களால் பாடப் பெற்ற சிவபெருமான் உறைகின்ற திருவானைக்காவில் வாழ்கின்ற பெருமையில் சிறந்தவரே!

         ஆரம் அணி வாரைப் பீறி --- மணி வடம் அணிந்துள்ள மார்க்கச்சைக் கிழித்துக் கொண்டு,

         அற மேலிட்டு --- மிகவும் வெளிப்பட்டுத் தோன்றி

         ஆடவர்கள் வாட --- ஆண்களை வாட்டியும்,

         துறவோரை ஆசை மடல் ஊர்வித்து --- துறவிகளைக் காமத்தில் ஆழ்த்தி, ஆசை மயக்கத்தால் மடல் ஏறும்படிச் செய்து

         ஆளும் அதி பார --- ஆள வல்லதாய், அதிக பாரம் கொண்டதாய்,

          பாளித படீரத் தன மானார் --- பச்சைக் கற்பூரமும் சந்தனமும் அணிந்ததான மார்பகங்களை உடைய விலைமாதர்களின்

         கார் அளக நீழல் --- கருமேகம் போன்ற கூந்தலின் நிழலிலே,

         காது அளவும் ஓடிக் காதும் --- காது வரைக்கும் நீண்டு, கொல்லும் தொழிலை உடைய

         அபிராமக் கயல் போல --- அழகிய கயல் மீன் போன்ற கண்கள் போல,

         காலன் உடல் போடத் தேடி வரு நாளில் --- கொலைத் தொழிலைக் கொண்ட காலனானவன் உடலை விட்டு என் உயிரைப் பிரிப்பதற்காகத் தேடி வருகின்ற தினத்தில்,

         காலை மறவாமல் புகல்வேனோ --- உமது திருவடிகளை மறக்காமல் துதிக்கப் பெறுவேனோ?


பொழிப்புரை


         உலகம் முழுவதும் தாங்கி வாழ்விக்கும் நாகராஜன் ஆன ஆதிசேடனை தனது கால்களில் கட்டவல்ல பச்சை நிறத் தோகை உடைய வாகனமான மயிலாகிய குதிரை மேல் ஏறி, மதம் பாய்கின்ற மத்தகத்தை உடைய விநாயகரோடு மாறுபட்டு, முன்னொரு காலத்தில் உலகத்தை வளைந்தோடி வருகின்ற இளம் குழந்தையே!

         சூராதி அவுணர்களுடைய ஊர்களைச் சூறையாடி அழித்தவரே!

         தேவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவரே!

         பசுமையான தினைப் புனத்தில் இருந்த மயில் போன்ற அழகிய வள்ளிநாயகியுடன் இனிது பொழுது போக்குபவரே!

         தமிழ் மறையாகிய தேவாரங்களால் பாடப் பெற்ற சிவபெருமான் உறைகின்ற திருவானைக்காவில் வாழ்கின்ற பெருமையில் சிறந்தவரே!

         மணி வடம் அணிந்துள்ள மார்க்கச்சைக் கிழித்துக் கொண்டு, மிகவும் வெளிப்பட்டுத் தோன்றி ஆண்களை வாட்டியும், துறவிகளையும் காமத்தில் ஆழ்த்தி, ஆசை மயக்கத்தால் மடல் ஏறும்படிச் செய்து ஆள வல்லதாய், அதிக பாரம் கொண்டதாய், பச்சைக் கற்பூரமும் சந்தனமும் அணிந்ததான மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கருமேகம் போன்ற கூந்தலின் நிழலிலே, காது வரைக்கும் நீண்டு, கொல்லும் தொழிலை உடைய அழகிய கயல் மீன் போன்ற கண்கள் போல, கொலைத் தொழிலைக் கொண்ட காலனானவன் உடலை விட்டு என் உயிரைப் பிரிப்பதற்காகத் தேடி வருகின்ற தினத்தில், உமது திருவடிகளை மறக்காமல் துதிக்கப் பெறுவேனோ?
  

விரிவுரை


ஆரம் அணி ---

ஆரம் - முத்துமணி மாலைகளைப் பெண்கள் தங்கள் மார்பில் ஒளுயம் அழுகும் செய்ய அணிந்து அலங்கரித்துக் கொள்வார்கள்.

வாரைப் பீறி அற மேலிட்டு ---

வார் - இரவிக்கை. விலைமகளிரது தனங்கள் மலைபோல் பணைத்து இரவிக்கையைக் கிழித்துக்கொண்டு மிகவும் தோன்றி மயல் விளைக்கும்.  அற – நன்றாக.

ஆடவர்கள் வாட ---

அத் தனங்களைக் கண்டு ஆண்கல் அறிவு இழந்து ஆசைக் கனல் மூண்டு வாடி வருந்துவார்கள்.

துறவோரை ஆசை மடல் ஊர்வித்து ---

ஆசாபாசங்களை முற்றத் துறந்த முனிவர்களையும் மயக்கி, மடல் பரி ஏறும்படி மயக்கம் புரியவல்லது மாதராசை.

விழையும் மனிதரையும் முநிவரையும் உயிர்துணிய
வெட்டிப் பிளந்துஉளம் பிட்டுப் பறிந்திடும் செங்கண்வேலும்.....   ---  திருப்புகழ்.

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல்கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப்பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே.
                                                                                 ---  கந்தர் அலங்காரம்.

காமுற்றார் பனைமரத்தில் வாள்போன்ற மடலால் செய்த குதிரை மீது ஏறுவர். பண்டைக்காலத்தில் ஆடவர் தாம் காதலித்த பெண்ணை அடையும் பொருட்டு, மடற்பரியின்மீது மடல் எழுதி ஊரார் அறிய வலம் வருதல் வழக்கில் இருந்தது.

காய்சின வேல் அன்ன மின்னியல் கண்ணின் விலைகலந்து
வீசின போது, உள்ள மீன் இழந்தார், வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து, ஓர் கிழிபிடித்துப்
பாய்சின மாஎன ஏறுவர் சீறூர்ப் பனைமடலே.      --- திருக்கோவையார்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி.             --- திருக்குறள்.


காதளவும் ஓடிக் காதும் ---

பெண்களின் கண்கள் காதுவரை நீண்டு அழகு செய்யும்.  சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று நீண்ட கண்கள்.  காதுதல் - கொல்லுதல்.

அபிராமக் கயல் போல ---

அபிராமம் - அழகு.  கயல் - மீன்.

கயல் என்பது இங்கு உவம ஆகுபெயராகக் கண்ணை உணர்த்துகின்றது.  கயல் போன்ற பெண்களின் கண்கள் எப்படி ஆடவரைக் கொல்லவல்லதோ, அதுபோல் உயிர்களை வதைப்பவன் காலன் என்று கூறுகின்றார்.

கண்கள் உவமானம்.  காலன் உவமேயம்.

எப்போதும் உவமேயத்தைக் காட்டிலும் உவமானம் உயர்ந்தது.

காலன் போன்ற கண்கள் என்று மற்றவர்கள் கூறுவார்கள்.  இங்கே அருணகிரிநாதர் ஒரு புரட்சி செய்து, பெண்களின் கண்கள் போன்றவன் காலன் என்கின்றார்.

இப்படி ஒரு புரட்சி இளங்கோவடிகள் செய்தார்.

உலகில் உள்ள கற்புடைய பெண்களுக்கு உவமானமாக அருந்ததியைக் கூறுவது மரபு.

வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை ---  புறநானூறு.

வடமீன் போல்தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்   --- கலித்தொகை.

இவ்வாறு புலவர்கள் கற்புக்கு உவமையாக அருந்ததியைக் கூறினார்கள்.

இளங்கோவடிகள் கண்ணகியைக் கூற வந்தபோது, இந்தக் கண்ணகியின் கற்பினைப் போன்றது அருந்ததியின் கற்பு என்கின்றார்.

தீதிலா வடமீன் திறம் இவள் திறம்....     ---  சிலப்பதிகாரம்.

இப்படி உயர்ந்த உவமானத்தை உவமேயமாகக் கூறுவது எதிர்நிலை அணி என்பர்.  வடமொழியில் பிரதீபாலங்காரம் என்பர்.

இவ்வாறு புரட்சியாகக் கூறும் திறம் பெரும் புலவர்கட்குத் தான் உண்டு.

காலன் உடல் போடத் தேடி வருநாளில் காலை மறவாமல் புகல்வேனோ ---

இயமனுடைய அமைச்சன் காலன்.  "காலன் வந்து என் உடம்பில் இருந்து உயிரைப் பிரிக்கின்ற மரண காலத்தில், முருகா, உன் சரணத்தைப் புகழ்ந்து துதிக்கும் ஒரு பெரிய பாக்கியம் எனக்கு உண்டாகுமோ?” என்று அருணகிரிப் பெருமான் முருகனை வேண்டுகின்றார்.

தூமென் மலர்க்கணை கோத்து, தீ வேள்வி தொழில் படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக் காரோண! நின்
நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்
சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய் எங்கள் சங்கரனே.     --- அப்பர்.

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து,
பங்கத்தை போக மாற்றிப் பாவித்தேன் பரமா! நின்னை,
சங்கு ஒத்த மேனிச் செல்வா! சாதல்நாள் நாயேன் உன்னை
எங்கு உற்றாய் என்ற போதா, இங்கு உற்றேன் என் கண்டாய்.   ---  அப்பர்.

உயிர் போகும்போது இறைவனுடைய நினைவு வருவது அரிது.  அது அடியார்கட்கு எளிது. அடியார்கள் இடையறாது இறைவனையே சிந்தித்தவண்ணம் இருப்பார்கள். அதனால் அது சித்திக்கின்றது.

பாரடைய வாழ்வித் தாரபதி ---

பார் அடைய வாழ்வித்த ஆரபதி.  அரபதி என்ற சொல் ஆரபதி என வந்தது.  அரபதி - அரா இனங்கட்குத் தலைவனான ஆதிசேடன்.

உலக முழுவதையும் ஆதிசேடன் தனது ஆயிரம் பணாமகுடங்களில் ஒரு முடியில் தாங்குவான்.  அத்துணை வலிமை உடையவன்.

உலகமோ அரவினுக்கு ஒரு தலைப்பாரம் ---  ஔவையார்.

பாச ---

பாசம் - கட்டும் கயிறு.  மயில் ஆதிசேடனைத் தன் காலில் கட்டி எடுத்து உதறும்.

உலகத்தை எல்லாம் ஒரு முடியில் தாங்கும் ஆதிசேடனைத் தன் காலால் எடுத்து உதறும் பேராற்றல் படைத்தது மயில்.

சேலில் திகழ்வயல் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித்து அநந்தன் பணாமுடி தாக்க, அதிர்ந்து அதிர்ந்து
காலில் கிடப்பன மாணிக்க ராசியும்,  காசினியைப்
பாலிக்கும் மாயனும், சக்ரா யுதமும், பணிலமுமே.  

இது, கந்தரலங்காரத்தில் மயிலின் பேராற்றலைக் கூறும் அரிய பாடல்.

மயில் பறந்து சென்று உலாவும்போது, திருப்பாற்கடலில் திருமால் ஆதிசேடன் மீது அறிதுயில் புரிந்து கொண்டு இருந்தார். மயில் ஆதிசேடனைத் தனது காலால் தூக்கி உதறியது.  அதனால் திருமாலும் அவருடைய சங்கு சக்கரங்களும், ஆதிசேடனுடைய ஆயிரம் பணாமகுடங்களில் இருந்த நாகரத்தினங்களும் மயிலின் காலில் சிதறிக் கிடந்தனவாம்.

மயில் ஆதிசேடனைத் திடும் என்று காலில் எடுத்து உதறியது.  அதனால் பாம்பணையில் படுத்திருந்த நாராயணர் உள்ளம் திடுக்கிட்டார்.  காரணம் சட்டென்று தெரியாது பதறினார்.  சங்கு சக்கரங்கள் திருக்கரங்களில் இருந்து நழுவின.  சிறிது அவசமுற்றார்.

அவருடைய திருமார்பில் குடியிருக்கும் இலட்சுமிதேவி திடீர் என்று கணவனாருக்கு உற்ற இந்த பெரிய அதிர்ச்சி தரும் இடர்ப்பாட்டைக் கண்டு, திருமார்பில் வழியும்படி கண்ணீர் விட்டு அழுதாள்.  நலம் தீது அறியாத இளம்பிள்ளையாக, திருமாலின் திருவுந்தித் தாமரையில் இருந்த பிரமன் என்ற குழந்தை, தன் தாய் தந்தையருக்கு நேர்ந்த பேராபத்தைக் கண்டு அழுதது.  இப்படியான ஒரு நிலைமை திடும் என உம்டாகுமாறு செய்து விட்டது ஏறுமயில்.

இதனைத் திருப்புகழ்ச் சுவாமி என்னும் வண்ணச்சரபம் முருகதாச சுவாமிகள், புதுவைப் பிள்ளைத்தமிழில் கூறுகின்றார்.

நீலக்கிரிபோல் கிடந்துஉறங்கும்
         நெடுமால் பதறி விழித்துஅலறி,
நெஞ்சம் திடுக்கிட்டு ஆழிசங்கம்
         நெகிழ்வுற்று அவசமுற, உரம்தோய்
சீலக் கமலத் திருமாது
         செழும்கோங்கு அரும்பாம் முலைநடுவில்
செவ்வேல் விழிநீர் விடுத்துஇரங்கத்
         தீதும் நலமும் தெரியாத
பாலப் பருவம் கொளும் உந்திப்
         பங்கேருகத்தான் அனைமுகத்தைப்
பார்த்துப் பார்த்துக் கதற, அலைப்
         பாலாழியில் பாம்பு எடுத்துஉதறும்
கோலச் சிகியில் பவனிவரும்
         குகனே தாலோ தாலேலோ
கொடிஆடு அணிமாடப் புதுவை
         குமரா தாலோ தாலேலோ...

நாகபந்த மயூரா நமோநம ….     --- நாதவிந்து திருப்புகழ்.


சாமள கலாபப் பரியேறி ---

சாமளம் - பச்சை.  பச்சை மரகதம் போன்ற தோகையுடைய மயலின் மீது முருகன் ஏறி உலகை வலம் வந்தார்.

பாய்மத கபாலத்தனோடு இகலா ---

இகல் - மாறுபாடு  கருணை மதம் பொழிகின்ற கபோலத்தை உடைய யானைமுகக் கடவுளாகிய விநாகருடன் கணி காரணமாக மாறுபட்டு முருகன் உலகை வலம் வந்த வரலாற்றை இது குறிக்கின்றது.

பாடிவரும் ஏழைச் சிறியோனே ---

பாடிவரல் - வளைந்து ஓடி வருதல்.

ஏழைச் சிறியோன் - இளம் குழந்தை.

ஆரமதுரித்த கனி காரண முதல்தமய
னாருடன் உணக்கை புரி தீமைக்காரனும்...      ---  திருவேளாக்காரன் வகுப்பு.

இனியகனி கடலைபயறு ஒடியல்பொரி அமுதுசெயும்
    இலகுவெகு கடவிகட  ......  தடபார மேருவுடன் 
இகலி, முது திகிரிகிரி நெரிய, வளை கடல் கதற,
    எழுபுவியை ஒருநொடியில்  ......  வலமாக ஓடுவதும்...     ---  சீர்பாத வகுப்பு.

சுரர் புர சூறைக்கார ---

சூராதி அவுணர்களுடைய நகரங்களை முருகவேள் சூறையிட்டு அழித்தருளினார்.

துரிதமிடு நிருதர்புர சூறைக்கார.. ---  (ஒருபொழுதும்) திருப்புகழ்.
  
சுரர் காவற்கார ---

முருகனைத் துதித்துத் தொழும்பு செய்யும் அடியவர்களாகிய அமரர்கட்கு எம்பெருமான் காவல்காரனாக இருந்து தண்ணருள் புரிகின்றான்.

தொழுது வழிபடும் அடியர் காவல்காரப் பெருமாளே...   ---  (ஒருபொழுதும்) திருப்புகழ்.

தோகை திருவேளைக்கார ---

வள்ளி பிராட்டியுடன் முருகன் பொழுது போக்குபவன்.

விறல்மறவர் சிறுமிதிரு வேளைக்காரப் பெருமாளே...    ---  (ஒருபொழுதும்) திருப்புகழ்.

தமிழ்வேதச் சோதி வளர் காவை ---

"தமிழ் வேதத்தை அருளிய சோதியே" என்றும் பொருள் படும்.

தமிழ் வேதம் பெற்ற சிவசோதியாகிய சம்புநாதர் வளர்கின்ற என்றும் பொருள்படும்.

கருத்துரை


திருவானைக்கா மேவும் திருவேல் இறைவா, மரண காலத்தில் உன் சரணத்தை ஓத அருள் செய்.
                                   




                                                                                

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...