அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அனித்தமான ஊன்
(திருவானைக்கா)
முருகா!
அடியேன் அடயோகி ஆகாமல்,
சிவயோகி ஆக அருள்.
தனத்த
தான தானான தனத்த தான தானான
தனத்த தான தானான ...... தனதான
அனித்த
மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித்
தவத்தி
லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை
செனித்த
காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு
செகத்தி
யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய்
தொனித்த
நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத ...... மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா
மனித்த
ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீய ...... மலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அனித்தம்
ஆன ஊன் நாளும் இருப்பது ஆகவே, நாசி
அடைத்து, வாயு ஓடாத ...... வகை சாதித்து,
அவத்திலே
குவால் மூலி புசித்து வாடும், ஆயாச
அசட்டு யோகி ஆகாமல், ...... மலமாயை
செனித்த
காரிய உபாதி ஒழித்து, ஞான ஆசார
சிரத்தை ஆகி, யான்வேறு,என் ...... உடல்வேறு,
செகத்து
யாவும் வேறு ஆக, நிகழ்ச்சியா மநோதீத,
சிவச் சொரூப மாயோகி ...... எனஆள்வாய்.
தொனித்த
நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேசம் மாறாத ...... மருகோனே!
சுவர்க்க லோக மீகாம! சமஸ்த லோக பூபால!
தொடுத்த நீப! வேல்வீர! ...... வயலுரா!
மனித்தர்
ஆதி சோணாடு தழைக்க மேவு, காவேரி
மக ப்ரவாக பானீயம் ...... அலை மோதும்
மணத்த சோலை சூழ்காவை, அனைத்து லோகம் ஆள்வாரும்
மதித்த சாமியே! தேவர் ...... பெருமாளே.
பதவுரை
தொனித்த நாத வேய் ஊது --- நன்றாக
ஒலிக்கின்ற இனிய நாதத்துடன் கூடிய புல்லாங்குழலை ஊதுகின்றவரும்,
சகஸ்ர நாம கோபால சுதற்கு --- ஆயிரம்
நாமங்களை உடையவரும், நந்தகோபாலனுடைய
புதல்வருமாகிய திருமாலுக்கு,
நேச மாறாத மருகோனே --- அன்பு மாறுபடாத
மருகரே!
சுவர்க்க லோக மீகாம --- பிறவிப்
பெருங்கடலினின்றும் ஆன்மாக்களை முத்திக்கரை சேர்க்கும் கப்பல் ஓட்டியே!
சமஸ்த லோக பூபால --- எல்லா
உலகங்களையும் காத்து அருளும் தனிப்பெரும் தலைவரே!
தொடுத்த நீப –-- அழகாகத் தொடுத்த கடப்ப
மாலையை அணிபவரே!
வேல்வீர –-- வேலாயுதத்தை ஏந்திய வீரரே!
வயலுரா --- வயலூர் என்னும்
திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரே!
மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு
காவேரி --- மனிதர்கள் முதல் சகல ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட வருகின்ற
காவேரி நதியானது
மகப்ரவாக பானீயம் அலை மோதும் ---
மிகவும் அலைகளை மோதும் தண்ணீர்ப் பெருக்கினால் வளமுறுவதும்
மணத்த சோலை சூழ் காவை --- நறுமணம்
கமழும் சோலைகள் சூழும் திருவானைக்காவில் எழுந்தருளிய
அனைத்து லோகம் ஆள்வாரும் மதித்த சாமியே
--- சகல உலகங்களுக்கும் அருள் புரிபவராகிய சிவபெருமானும் மதித்துப் போற்றுதற்குரிய
தெய்வமே
தேவர் பெருமாளே --- எல்லாத்
தேவர்களுக்கும் தலைவராகிய பெருமையில் சிறந்தவரே!
அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே ---
நிலையற்றதாகிய இந்த உடம்பு நெடுநாளைக்கு இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன்,
நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து ---
மூக்கை அடைத்து பிராணவாயு வெளியே செல்லாத வண்ணம் அடக்கு அடயோக முறையை மேற்கொண்டு, அதனைச் சாதித்து,
அவத்திலே குவால் மூலி புசித்து ---
ஞானமாகிய பயனைப் பெறாமல், நிரம்பவும் குவித்த
மூலிகைகளை ஓயாது புசித்து,
வாடும் ஆயாச அசட்டு யோகி யாகாமல் ---
வாடி இளைத்துப் போகின்ற, அசட்டுத் தனமான
அடயோகியாக அடியேன் ஆகாமல் படிக்கு,
மலமாயை செனித்த காரிய உபாதி ஒழித்து ---
மூலமாகிய ஆணவ மலம் மாயாமலம் அதினின்று தோன்றிய கன்ம மலம் ஆகிய மூன்று தடைகளையும்
நீக்கி,
ஞான ஆசார சிரத்தை ஆகி --- உண்மை அறிவுடன்
கூடி அகத் தூய்மை ஆவதில் ஊக்கம் உடையவன் ஆகி,
யான்வேறு என் உடல் வேறு செகத்தி யாவும்
வேறாக --- ஆன்மாவாகிய
நான் வேறு, எனது உடல் வேறு, இந்த உலகில் உள்ள ஆன்மாக்கள் எல்லாம்
வேறு பிரித்து உணர்ந்து,
நிகழ்ச்சியா மநோ தீத --- அவ் அறிவு
மயமாகவே திகழ்கின்றதும் மனத்திற்கு எட்டாததும்,
சிவச்சொரூப மாயோகி என ஆள்வாய் ---
சீவத் தன்மை போய், சிவத் தன்மையை
அடைந்து நிற்கும் பெருமை உடையதும் ஆகிய சிவயோகியாக விளங்குமாறு அடியேனை
ஆட்கொள்வீர்.
பொழிப்புரை
நன்றாக ஒலிக்கின்ற இனிய நாதத்துடன் கூடிய
புல்லாங்குழலை ஊதுகின்றவரும், ஆயிரம் நாமங்களை உடையவரும், நந்தகோபாலனுடைய புதல்வருமாகிய
திருமாலுக்கு, அன்பு மாறுபடாத மருகரே!
பிறவிப் பெருங்கடலினின்றும் ஆன்மாக்களை
முத்திக்கரை சேர்க்கும் கப்பல் ஓட்டியே!
எல்லா உலகங்களையும் காத்து அருளும்
தனிப்பெரும் தலைவரே!
அழகாகத் தொடுத்த கடப்ப மாலையை அணிபவரே!
வேலாயுதத்தை ஏந்திய வீரரே!
வயலூர் என்னும் திருத்தலத்தில் கோயில்
கொண்டு எழுந்தருளி இருப்பவரே!
மனிதர்கள் முதல் சகல ஜீவராசிகளும் உள்ள சோழநாடு
தழைத்திட வருகின்ற காவேரி நதியானது மிகவும் அலைகளை மோதும் தண்ணீர்ப் பெருக்கினால்
வளமுறுவதும், நறுமணம் கமழும் சோலைகள் சூழும் திருவானைக்காவில் எழுந்தருளிய, சகல உலகங்களுக்கும் அருள் புரிபவராகிய
சிவபெருமானும் மதித்துப் போற்றுதற்குரிய தெய்வமே!
எல்லாத் தேவர்களுக்கும் தலைவராகிய
பெருமையில் சிறந்தவரே
நிலையற்றதாகிய இந்த உடம்பு நெடுநாளைக்கு
இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன்,
மூக்கை
அடைத்து பிராணவாயு வெளியே செல்லாத வண்ணம் அடக்கும் அடயோக முறையை மேற்கொண்டு, அதனைச் சாதித்து, ஞானமாகிய
பயனைப் பெறாமல், நிரம்பவும் குவித்த
மூலிகைகளை ஓயாது புசித்து, வாடி இளைத்துப்
போகின்ற, அசட்டுத் தனமான அடயோகியாக
அடியேன் ஆகாமல் படிக்கு, மூலமாகிய ஆணவ மலம் மாயாமலம் அதினின்று
தோன்றிய கன்ம மலம் ஆகிய மூன்று தடைகளையும் நீக்கி, உண்மை அறிவுடன் கூடி அகத் தூய்மை ஆவதில்
ஊக்கம் உடையவன் ஆகி, ஆன்மாவாகிய நான் வேறு, எனது உடல் வேறு, இந்த உலகில் உள்ள ஆன்மாக்கள் எல்லாம் வேறு
பிரித்து உணர்ந்து, அவ் அறிவு மயமாகவே திகழ்கின்றதும்
மனத்திற்கு எட்டாததும், சீவத் தன்மை போய், சிவத் தன்மையை அடைந்து நிற்கும் பெருமை
உடையதும் ஆகிய சிவயோகியாக விளங்குமாறு அடியேனை ஆட்கொள்வீர்.
விரிவுரை
அனித்தமான
ஊன் நாளும் இருப்பதாகவே.......அசட்டுயோகி ---
இப்பாடலின்
முதல் இரண்டடிகளில் அடயோகத்தைக் கண்டித்து, அடுத்த இரண்டடிகளில் சிவயோகத்தைச்
சிறப்பிக்கின்றார்.
அடயோகத்தால்
ஆயுள் நீடிக்கும். அது ஞானத்திற்குச் சாதனம் ஆகாது. மூச்சைப் பிடித்து மூலிகைகளைத்
தின்று காயகல்பம் புரிந்து கற்பகாலம் இருக்கினும் ஒருநாள் அழியவேண்டி வரும். ஞானமே முத்திக்குச் சாதனம்.
சுவாமிகள்
கந்தர் அலங்காரத்திலும் அடயோகத்தைக் கண்டித்திருப்பது அன்பர்கள் கவனிக்கற்பாலது.
துருத்தி
எனும்படி கும்பித்து, வாயுவைச் சுற்றி, முறித்து
அருத்தி
உடம்பை ஒறுக்கில் என்ஆம், சிவயோகம் என்னும்
குருத்தை
அறிந்து, முகம் ஆறுஉடைக்
குருநாதன் சொன்ன
கருத்தை, மனத்தில் இருந்தும் கண்டீர் முத்தி
கைகண்டதே.
தாயுமானாரும்
இக் கருத்தை மிக அழகாக எடுத்துக் கூறுமாறு காண்க.
அற்ப
உடல் கற்பங்கள் தோறும் நிலைநிற்க வீறு
சித்தி
செய்தும் ஞானமலது கதிகூடுமோ..
"புன்புலால் யாக்கை", "சினமெனும் கள் வைத்த
தோல்பை", "கள்ளப்புலக்
குரம்பை" என்ற அருமைத் திருவாக்குகளால் இவ் உடம்பின் அசுத்தம் தெளிவாக
விளங்குகின்றது. ஆதலினால், அறிஞர் விரைவில்
ஞானத்தைப் பெற்று இவ் ஊனுடம்பை உதறித் தள்ளுவர்.
இவ் ஊனுடம்புடன் என்றும் வாழ்வதற்கு ஒருப்படார். உடம்பினாலாய பயன்
பெற்றபின் உடம்பு வேண்டா அன்றோ?
வாழை
இலையின் பயன் உணவு உண்பது. உணவு உண்டபின் அது எச்சில் இலை தானே? அதை எவன் தான் விரும்புவான்? எச்சில் இலையை
எடுத்துப் புறங்கடையில் எறிய வேண்டியது தான். அதுபோல், ஆன்ம லாபமாகிய சிவபோகத்தை அனுபவித்தார்க்கு
இவ் உடம்பு மிகையே. நாலுபேர் சுமக்கும் மூட்டையாகிய இவ் உடம்பை ஒருவன் சுமந்து
அலைவது என்றால் அது துன்பம் தானே?
சுமையை
இறக்குவதற்குத்தான் யாரும் விரும்புவர். ஆதலினால், கேவலம் உடம்பு நிலைபெறும் பொருட்டு
வாயுவைக் கும்பித்து வருந்துவது பயனற்ற வேலையாம்.
மானார்
விழியைக் கடந்து ஏறி வந்தனன், வாழ்குருவும்
கோனாகி
என்னைக் குடிஏற்றிக் கொண்டனன், குற்றமில்லை,
போனாலும்
பேறு, இருந்தாலும் நற்பேறு, இது பொய் அன்றுகாண்,
ஆனாலும்
இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே! ---
பட்டினத்தார்.
மலமாயா
செனித்த காரியோபாதி ஒழித்து ---
ஆன்மா
என்றோ அன்றே மூலமலமாகிய ஆணவம் உண்டு.
செம்புக்குக் களிம்பு போலும், அரிசிக்குத்
தவிடு போலும். ஆவ் ஆணவ மலத்தை நீக்கும் பொருட்டு கன்ம மலமும், மாயா மலமும் ஆகந்துகமாக இடையில்
தோன்றின. வேட்டியில் உள்ள அழுக்கை உவர் மண்ணாலும், சாணத்தாலும் நீக்குவது போல என்று அறிக.
மும்மல
நீக்கமே முத்திக்குச் சாதனமாம். அரிசியின் சுபாவமான வெண்மை நிறத்தை மறைத்த தவிடு போல், ஆன்மாவின் ஞானத்தை ஆணவ அழுக்கு
மறைத்திருக்கின்றது.
அரிசி
- ஆன்மா. தவிடு - ஆணவம். முளை - கன்மம். உமி - மாயை.
எனவே, அரிசிக்கு தவிடு முளை உமி என்ற மூன்றின்
தொடக்கு உள்ளதுபோல், ஆன்மாவுக்கு ஆணவம்
கன்மம் மாயை என்ற மும்மலத் தொடக்கு உண்டு.
உலக்கையால், தவிடு முளை உமிகளை
நீக்குவது போல், குருநாதனுடைய
ஞானோபதேசம் என்னும் உலக்கையால் மும்மலத் தொடர்பை ஒழிக்கவேண்டும்.
களிம்பு
நீங்கிய உடனே, செம்பு பொன்னாவது
போல், மலபரிபாகம் நீங்கிய
உடனே, சீவன் சீவன்
ஆகின்றது.
ஆணவத்தோடு
அத்துவிதம் ஆனபடி, மெய்ஞ்ஞானத்
தாணுவினோடு
அத்துவிதம் சாரும்நாள் எந்நாளோ.. ---
தாயுமானார்.
ஞான
ஆசார சிரத்தையாகி ---
உண்மை
அறிவு பெற்று அகம் தூய்மையும் ஊக்கமும் உடையவன் ஆகி நிற்றல்.
யான்வேறு
என்உடல் வேறு
---
ஆன்மா
வேறு. உடம்பு வேறு என்று உணராது,
ஆன்மாவும்
உடம்பும் ஒன்று என்று உணர்வது அறியாமை.
தேகாத்மவாதி, இந்திரியாத்மவாதி, கரணாத்மவாதி, ஏகாத்மவாதி முதலியோரைக்
கண்டிக்கின்றனர்.
பாராதி
பூதம் நீ அல்லை - உன்னிப்
பார், இந்திரியம் கரணம் நீ அல்லை,
ஆராய்
உணர்வு நீ என்றான் - ஐயன்
அன்பாய்
உரைத்த சொல் ஆனந்தம் தோழி. ---
தாயுமானார்.
ஒரு
வீட்டிற்குள் ஒரு மனிதன் குடி இருப்பது போல், இவ் உடம்புக்குள் உயிர்
உறைகின்றது. குடியிருக்கும் மனிதன் வேறு, வீடு வேறுபோல், உயிர் வேறு, உடம்பு வேறு என்று உணர்க.
குடம்பை
தனித்துஒழிய புள்பறந்து அற்றே
உடம்பொடு
உயிரிடை நட்பு.
என்றார்
தெய்வப் புலவராம் திருவள்ளுவ நாயனாரும்.
செகத்து
யாவும் வேறு ---
செகம்
- உலகம். உலகம் என்பது இங்கு உயிர்களின்
தொகுதியைக் குறிக்கின்றது. "உலகெலாம்
உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்ற இடமும் இவ்வாறே பொருள் படுமாறு காண்க. பல
உடம்புக்குள்ளும் ஒரே பிரம்மமே உயிரென நிற்கின்றது என்றும், பல குடங்களுக்குள் ஒரே சூரியன்
பிரதிபலிப்பது போல் என, பிம்பப்பிரதிபிம்ப
நியாயமும், ஆன்மாக்கள் பல அல்ல
என்றும் கூறும் ஏகான்மவாதிகளைக் கண்டிக்கின்றார். உயிர்கள் பல என்பதை உற்று உணர்க.
அதுவேயும் அன்றி, ஆன்மாவும்
பரமான்மாவும் இவ்வுடம்பில் உறைகின்றன என்பதையும், ஆன்மா வினைகளுக்கு ஏற்றவாறு சுகதுக்கங்களைத்
துய்க்கின்றது. பரமான்மா சாட்சி மாத்திரமாகப் பார்த்துக் கொண்டு இருக்கின்றது
என்பதையும் உய்த்து உணர்க.
அன்னம்
இரண்டுஉள ஆற்றங்க கரையினில்
துன்னி
இரண்டும் துணைபிரியாது, அன்னம்
தன்நிலை
அன்னம் தனியொன்றது என்றக்கால்
பின்னமட
அன்னம் பேறுஅணு காதே. --- திருமந்திரம்.
இங்ஙனம்
ஆராய்ந்து தெளிந்து சீவத்தன்மையை நீக்கி, சிவத்தன்மையைப்
பெறுதலே சிவயோகமாகும்.
தொனித்த
நாத வேயூது ….... கோபால சுதன் ---
கண்ணபிரான்
வேய்ங்குழலை இனிது ஊதி சராசரங்களை மகிழச் செய்தனர். அவருடைய குழல் ஒலியைக் கேட்டு பசுக்கள் வாலைக்
குழைத்து அசைவற்று நின்றன. புலியின்
மடியில் பசுவின் கன்றுகள் பாலருந்தின.
கற்கள் குழைந்தன. மரங்கள் அசைவின்றி நின்றன. பறவைகள் வானத்தில் அப்படியே சித்திரத்தில்
எழுதியது போல் விளங்கின. மதயானைகள்
மயங்கின. அரவினங்கள் ஆடின. பட்டமரங்கள் தளிர்த்தன. உலகம் முழுவதும் உவகை உற்று உருகின.
அளையில்
உறைபுலி பெறுமகவு அயில்தரு
பசுவின் நிரைமுலை அமுதுஉண நிரைமகள்
வசவ னொடுபுலி முலைஉண மலையுடன் உருகாநீள்
அடவி தனில்உள உலவைகள் தளிர்விட
மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளிஉயர் பறவைகள் நிலம்வர விரல்சேரேழ்
துளைகள்
விடுகழை விரல்முறை தடவிய
இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
சுருதி உடையவன் நெடியவன் மனமகிழ் மருகோனே.
--- (களபம் ஒழுகிய) திருப்புகழ்.
சுவர்க்க
லோக மீகாம
---
பிறவியாகிய
பெருங்கடலில் வீழ்ந்து தடுமாறும் ஆன்மாக்கள் முருகப் பெருமானுடைய திருவடியாகிய
ஓடத்தைப் பற்றினால் முருகனாகிய ஓடக்காரன் முத்தி என்ற கரை சேர்ப்பான். அவருடைய திருவடி புணை என்பதனை அடியில் காணும்
அருமை வாக்கால் அறிக.
உறவுமுறை
மனைவிமகவு
எனும்அலையில்
எனதுஇதய
உருவுஉடைய மலினபவ ......
சலராசி ஏறவிடும்
உறுபுணையும்
அறிமுகமும்
உயர்அமரர்
மணிமுடியில்
உறைவதுவும் உலைவுஇலதும் ......அடியேன் மனோரதமும், ---
சீர்பாத
வகுப்பு.
யாதுநிலை அற்றுஅலையும் ஏழுபிற விக்கடலை
ஏறவிடு நல்கருணை ஓடக் காரனும்; ---
திருவேளைக்காரன்
வகுப்பு.
ஓடக்காரன்
கடற்கரையில் இருப்பான்.
ஆதலினால்
சுவர்க்கலோக மீகாமன் ஆகிய முருகவேள் கடற்கரையில் - திருச்செந்தூரில் - எழுந்தருளி
இருக்கின்றனர்.
மனித்தராதி
…....... அலைமோதும் ---
காவிரி
நதி சைய மலையில் தோன்றி இடையில் எங்கும் பாசனம் இன்றி வந்து சோழநாட்டை வளம்
செய்கின்றது.
ஏழ்தலம்
புகழ் காவேரியால் விளை
சேழமண்டலம்...
என்றார்
பிறிதோரிடத்திலும்.
கருத்துரை
திருமால்
மருகரே, வயலூர் வாழ் வள்ளலே, திருவானைக்காவில் மேவும் தேவரே, அடியேனை அசட்டு யோகியாக ஆக்காமல், சிவயோகியாக ஆட்கொள்வீர்.
No comments:
Post a Comment