அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அம்புலி நீரை (திருவானைக்கா)
முருகா!
அடியேன் உன்னைப் பாடி வழிபட்டு
ஈடேறாமல்,
பொதுமாதர் மயலில் அழியலாமா?
தந்தன
தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன ...... தனதான
அம்புலி
நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண ...... ரருள்பாலா
அன்புட
னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு ...... மணியாமல்
வம்பணி
பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி ...... லிருகாதில்
மண்டிய
நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில்
மங்கியெ யேழைப் பாவியெ ...... னழிவேனோ
கொம்பனை
நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி யாலப் போசனி ...... யபிராமி
கொஞ்சிய
வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்றது வார்போற் காரிகை ...... யருள்பாலா
செம்பவ
ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புய மாரப் பூரண ...... மருள்வோனே
செந்தமிழ்
பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அம்புலி
நீரைச் சூடிய செஞ்சடை மீதில் தாவிய
ஐந்தலை நாகப் பூஷணர் ...... அருள்பாலா!
அன்புடன்
நாவில் பா அது சந்ததம் ஓதி, பாதமும்
அங்கையினால் நின்பூசையும் ...... அணியாமல்,
வம்பு
அணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்,
வண்டு உழல் ஓதித் தாழலில், ...... இருகாதில்
மண்டிய
நீலப் பார்வையில், வெண்துகில் ஆடைச்
சேர்வையில்,
மங்கியெ ஏழைப் பாவியென் ...... அழிவேனோ?
கொம்பு
அனை நீலக் கோமளை, அம்புய மாலைப் பூஷணி,
குண்டலி, ஆலப் போசனி, ...... அபிராமி,
கொஞ்சிய
வானச் சானவி, சங்கரி, வேதப் பார்வதி,
குன்று அது வார் பொன் காரிகை ...... அருள்பாலா!
செம்பவள
ஆயக் கூர்இதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புயம் ஆரப் பூரணம் ...... அருள்வோனே!
செந்தமிழ்
பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென் திரு ஆனைக்கா உறை ...... பெருமாளே.
பதவுரை
அம்புலி நீரைச் சூடிய --- சந்திரனையும்
கங்கையையும் தரித்துள்ள
செம் சடை மீதில் தாவிய --- சிவந்த சடைமுடி
மீது தாவி நிற்கும்
ஐந்தலை நாகப் பூஷணர் அருள்பாலா --- ஐந்து தலை
நாகத்தை ஆபரணமாக தரித்த சிவபெருமான் அருளிய புதல்வரே!
கொம்பு அனை --- பூங் கொம்பு போன்ற
நீலக் கோமளை --- நீல நிறத்து அழகியும்
அம்புய மாலைப் பூஷணி --- தாமரை மலர் மாலை
அணிந்தவளும்,
குண்டலி --- சுத்த மாயையாம் சக்தியும்,
ஆலப் போசனி அபிராமி --- ஆலகால விடத்தை
உண்டவளும், பேரழகு உடையவரும்
கொஞ்சிய வானச் சானவி --- கொஞ்சிக்
குலாவுகின்ற ஆகாச கங்கை போன்ற தூயவளும்,
சங்கரி --- சுகத்தைச் செய்பவளும்,
வேதப் பார்வதி --- வேதங்கள் போற்றிப்
புகழும் பார்வதியும்,
குன்று அது வார் --- இமயமலையின் நெடிய
தவத்தின் பயனாக வந்த
பொன் காரிகை அருள்பாலா --- அழகிய
பெண்மணியும் ஆகிய உமாதேவி அருளிய பாலகரே!
செம் பவளம் ஆய --- சிவந்த பவள நிறம்
பொருந்திய,
கூர் இதழ் --- மெல்லிய வாயிதழ்களை உடைய,
மின் குற மானை --- ஒளி பொருந்திய குறப்
பெண்ணான வள்ளியம்மையின்
பூண் முலை --- ஆபரணம் அணிந்த
மார்பகங்கள்
திண் புயம் ஆரப் பூரணம் அருள்வோனே --- உனது
திண்ணிய புயங்களில் நன்கு அழுந்த,
நிறைந்த
திருவருளை அவளுக்குப் பாலித்தருளியவரே!
செந்தமிழ் பாணப் பாவலர் --- செந்தமிழ்
அறிவு நிறைந்த பாணர் மரபில் உதித்த புலவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
சங்கித யாழைப் பாடிய --- திருஞான சம்பந்தர்
பாடலுக்கு ஏற்ப இனிய இசையுடன் கூடிய யாழை மீட்டிப் பாடிப் பரவிய
தென் திரு ஆனைக்கா உறை பெருமாளே ---
அழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே!
அன்புடன் நாவில் பாவது சந்ததம் பாதமும்
ஓதி --- அன்புடனே நாவார தமிழ்ப் பாடல்களால் எப்பொழுதும் உமது திருவடியை ஓதி,
அங்கயினால் நின் பூசையும் அணியாமல் ---
உள்ளங்கை கொண்டு உன்னைப் பூஜிக்கும் ஒழுக்கத்தை மேற் கொள்ளாமல்,
வம்பு அணி பாரம் பூண் முலை --- கச்சு
அணிந்ததும் ஆபரணம் பூண்டதும் ஆகிய முலைகளை உடைய
வஞ்சியர் மாயச் சாயலில் --- வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களின் மாயத்தைத் தரும் அழகிலும்,
வண்டு உழல் ஓதித் தாழலில் இரு காதில் ---
வண்டுகள் திரியும் கூந்தலின் சரிவிலும், இரண்டு
காதுகளிலும்,
மண்டிய நீலப் பார்வையில் --- நெருங்கிய
கருநிற மை பூசிய கண்களின் பார்வையிலும்,
வெண் துகில் ஆடைச் சேர்வையில் --- வெண்மையான
ஆடையின் சேர்க்கையிலும்,
மங்கியெ ஏழைப் பாவியேன் அழிவேனோ ---
அறிவு மயங்கிப் போய் ஏழைப் பாவியேனாகிய அடியேன் அழிந்து போவேனோ?
பொழிப்புரை
சந்திரனையும் கங்கையையும் தரித்துள்ள
சிவந்த சடைமுடி மீது தாவி நிற்கும் ஐந்து தலை நாகத்தை ஆபரணமாக தரித்த சிவ பெருமான்
அருளிய புதல்வரே!
பூங் கொம்பு போன்ற நீல நிறத்து அழகியும்
தாமரை மலர் மாலை அணிந்தவளும், சுத்த மாயையாம் சக்தியும், ஆலகால விடத்தை உண்டவளும், பேரழகு உடையவரும், கொஞ்சிக் குலாவுகின்ற ஆகாச கங்கை போன்ற
தூயவளும், சுகத்தைச் செய்பவளும், வேதங்கள் போற்றிப் புகழும் பார்வதியும், இமயமலையின்
நெடிய தவத்தின் பயனாக வந்த அழகிய பெண்மணியும் ஆகிய உமாதேவி அருளிய பாலகரே!
சிவந்த பவள நிறம் பொருந்திய, மெல்லிய வாயிதழ்களை உடைய, ஒளி பொருந்திய குறப் பெண்ணான
வள்ளியம்மையின் ஆபரணம்
அணிந்த மார்பகங்கள் உனது திண்ணிய புயங்களில் நன்கு அழுந்த, நிரைந்த திருவருளை அவளுக்குப்
பாலித்தருளியவரே !
செந்தமிழ் அறிவு நிறைந்த பாணர் மரபில் உதித்த
புலவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருஞான சம்பந்தர் பாடலுக்கு ஏற்ப இனிய
இசையுடன் கூடிய யாழை மீட்டிப் பாடிப் பரவியஅழகிய திருவானைக்காவில் வீற்றிருக்கும்
பெருமிதம் உடையவரே!
அன்புடனே நாவார தமிழ்ப் பாடல்களால்
எப்பொழுதும் உமது திருவடியை ஓதி,
உள்ளங்கை கொண்டு உன்னைப் பூஜிக்கும் ஒழுக்கத்தை மேற்கொள்ளாமல், கச்சு அணிந்ததும் ஆபரணம் பூண்டதும் ஆகிய
முலைகளை உடைய வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களின் மாயத்தைத் தரும் அழகிலும், வண்டுகள்
திரியும் கூந்தலின் சரிவிலும், இரண்டு காதுகளிலும், நெருங்கிய
கருநிற மை பூசிய கண்களின் பார்வையிலும், வெண்மையான
ஆடையின் சேர்க்கையிலும், அறிவு மயங்கிப் போய்
ஏழைப் பாவியேனாகிய அடியேன் அழிந்து போவேனோ?
விரிவுரை
அம்புலி
நீரைச் சூடிய செஞ்சடை ---
சிவபெருமான்
சடைமுடியில் சந்திரனையும் கங்கா நதியையும் சூடி இருக்கின்றார்.
குருத்
துரோகம் புரிந்த சந்திரனைச் சூடியது அவருடைய பெரும் கருணையையும், உலகங்களை அழிக்க வந்த கங்கா நதியைச்
சூடியது, அவருடைய
பேராற்றலையும் குறிக்கின்றது.
ஐந்தலை
நாகபு பூஷணர் ---
சடையில்
தாவி நிற்கும் ஐந்து தலை நாகத்தை அணிகலமாக இறைவர் அணிந்திருக்கின்றார். கொல்ல வந்த நாகத்துக்கும் அருள் புரிந்த
கருணாநிதி கண்ணுதல் கடவுள்.
ஒரு
தலையுடை பாம்பு – சர்ப்பம்.
பல
தலைகளை உடைய பாம்பு --- நாகம்.
அன்புடன்
நாவில் பா அது சந்ததம் ஓதி ---
இறைவன்
ஈரத்துடன் கூடிய நாவினைத் தந்து அருளினார்.
அவன் தந்த நாவினால், அவனையே இல்லையென்று
கூறும் நாத்திகனாக ஆகாமல், அப் பெருமானை அந்நாவினால் ஏத்திப்
புகழ்ந்து துதி செய்ய வேண்டும்.
அங்கையினால்
நிற் பூசையும் அணியாமல் ---
அப்பரமன்
தந்த கரங்களால் அத் திருவாளனுடைய அடி மலரில் மலர் இட்டு வழிபாடு செய்ய வேண்டும்.
அவ்வாறு
இறைவனைப் பூசியாத மாந்தர் பிணியும் வறுமையும் கொண்டு அவமே மாண்டு அழிவார்கள்.
திருநாமம்
அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்,
தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில்,
ஒருகாலும்
திருக்கோயில் சூழார் ஆகில்,
உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள்
கெட வெண்ணீறு அணியார் ஆகில்,
அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்,
பெருநோய்கள்
மிக நலிய, பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழில்ஆகி இறக்கின்றாரே. --- அப்பர்.
மங்கியெ
ஏழைப் பாவியென் அழிவேனோ ---
மாதர்களின்
அழகிலும் பார்வையிலும் அவர்களது சேர்வையிலும் அடியேன் அறிவு மயங்கி அழிதல்
கூடாது. "முருகா, சிறியேனை அழியாவண்ணம் ஆண்டருள்"
என்று அடிகளார் முறையிடுகின்றார்.
கொம்பனை
நீலக் கோமளை ---
உமாதேவியார்
பூங்கொம்பு போன்ற நீலநிறம் பொருந்திய இளம்பூரணி.
அம்புய
மாலைப் பூஷணி ---
பூக்களில்
சிறந்தது தாமரை. ஆதலால், அம்பிகை தாமரை மலர் மாலையைச்
சூடிக்கொண்டு இருக்கின்றாள்.
குண்டலி ---
சுத்த
மாயை. சுத்த மாயைச் சத்தியாக விளங்குகின்றவள்.
ஆலப்
போசனி ---
உமாதேவியார்
சிவபெருமானுடைய பாதி வடிவாக விளங்குபவர். அதனால், சிவன் உண்ட ஆலகால விடத்தை அம்பிகை
உண்டதாகக் கூறினார்.
அபிராமி ---
அபிராமி
- பேரழகு உடையவள். திருக்கடவூரில்
எழுந்தருளிய அம்பிகை அபிராமி என்ற திருப்பெயர் உடையவர். அபிராமியந்தாதி கனியமுதம் போன்ற இனிய தமிழால் ஆனது.
கொஞ்சிய
வானச் சானவி
---
குலாவுகின்ற
ஆகாய கங்கை போன்ற தூய்மை உடையவள் அம்பிகை.
சங்கரி ---
சம்
- சுகம். கரம் - செய்வது. சுகத்தைச் செய்கின்றவள் சங்கரி.
வேதப்
பார்வதி ---
ஆயிரம்
வேதங்களாலும் போற்றிப் புகழப்படுகின்ற தெய்வநாயகி பார்வதி.
குன்றது
வார் பொன் காரிகை ---
வார்
- நீளம். இமயமலை அரையன் செய்த நெடிய
தவத்தினால் அவனுக்கு மகளாக வந்து அவன்பால் வளர்ந்த தேவி.
செம்பவளாயக்
கூரிதழ் ---
செம்
பவளம் ஆய கூர் இதழ். சிவந்த பவளம் போன்ற
மெல்லிய இதழ்களை உடையவள் வள்ளிநாயகி.
மின்
குறமானை ---
மின்
- ஒளி. ஞானவொளி வீசுகின்ற குறமகளாம் வள்ளி
பிராட்டி.
பூண்முலை
திண்புயம் ஆர ---
வள்ளிபிராட்டியின்
பரஞானம் அபரஞானம் ஆகிய இரு தனங்களும் தமது திருப்புயத்தில் அழுந்த முருகர்
தழுவியருளினார்.
பூரணம்
அருள்வோனே ---
வள்ளியெம்பிராட்டிக்கு
நிறைந்த திருவருளைத் தந்து அருளினார்.
செந்தமிழ்ப்
பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய ---
திருநீலகண்ட
யாழ்ப்பாணர், திருஞானசம்பந்தருடன்
திருவானைக்காவில் வந்து, முத்தமிழ் விரகராகிய
பாலறாவாயர் திருப்பதிகம் பாடியபோது,
யாழ்
வாசித்துப் பரவினார்.
இவர்
செந்தமிழ்ப் புலமையும், எல்லையில்லாத இசை
ஞானமும், அளவுபடுத்த முடியாத
அன்புத் திறமும் பூண்டவர்.
தென்
திரு ஆனைக்கா ---
தென்
- இளமை, அழகு.
இனிமையும்
அழகும் உடைய திருத்தலம் திருவானைக்கா.
கருத்துரை
திருவானைக்கா
மேவிய தேவதேவா, அடியேன் மாதர் மயலில்
அழியாது, உன் பாதமலரை பூசை
செய்ய அருள் புரிவாய்.
No comments:
Post a Comment