திரு ஆனைக்கா - 0502. அஞ்சன வேல்விழி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அஞ்சன வேல்விழி (திருவானைக்கா)

முருகா!
மாதர் மயல் அ,
உனது திருவடி சேவையைத் தந்து அருள்.


தந்தன தானன தத்ததத்தன
     தந்தன தானன தத்ததத்தன
          தந்தன தானன தத்ததத்தன ...... தனதான


அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
     மிங்கித மாகந கைத்துருக்கவு
          மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் ...... நகரேகை

அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
     மந்தர மாமுலை சற்றசைக்கவு
          மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு ...... மிளைஞோர்கள்

நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
     வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
          மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு ...... மெவரேனும்

நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
     மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
          நின்பத சேவைய நுக்ரகிப்பது ...... மொருநாளே

குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
     அங்குச பாசக ரப்ரசித்தனொர்
          கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம ...... கணராஜன்

கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
     எங்கள்வி நாயக னக்கர்பெற்றருள்
          குன்றைய ரூபக கற்பகப்பிளை ...... யிளையோனே

துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
     பந்தச டானன துஷ்டநிக்ரக
          தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய ...... பரிபாலா

துங்கக ஜாரணி யத்திலுத்தம
     சம்புத டாகம டுத்ததக்ஷிண
          சுந்தர மாறன்ம திட்புறத்துறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அஞ்சன வேல்விழி இட்டு அழைக்கவும்,
     இங்கிதம் ஆக நகைத்து உருக்கவும்,
          அம்புயல் நேர் குழலைக் குலைக்கவும், ...... நகரேகை

அம் கையின் மூலம் வெளிப்படுத்தவும்,
     மந்தர மாமுலை சற்று அசைக்கவும்,
          அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் ...... இளைஞோர்கள்

நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும்,
     வம்பு உரை கூறி வளைத்து இணக்கவும்,
          மன்றிடை ஆடி மருள் கொடுக்கவும், ...... எவரேனும்

நிந்தை செயாது பொருள் பறிக்கவும்,
     இங்கு வலார்கள் கையில் பிணிப்பு அற,
          நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ...... ஒருநாளே?

குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு,
     அங்குச பாச கரப்ரசித்தன், ர்
          கொம்பன், மகோதரன், முக்கண் விக்ரம ......கணராஜன்,

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன்,
     எங்கள் விநாயகன், நக்கர் பெற்று அருள்
          குன்றைய ரூபக, கற்பகப் பிளை ...... இளையோனே!

துஞ்சல் இலாத சடக்ஷரப் பிர-
     பந்த, சடானன, துஷ்ட நிக்ரக,
          தும்பிகள் சூழ் அவையில் தமிழ்த்ரய ...... பரிபாலா!

துங்க கஜ ஆரணியத்தில் உத்தம
     சம்பு தடாகம் அடுத்த தட்சிண
          சுந்தர மாறன் மதிள் புறத்து உறை ...... பெருமாளே.


பதவுரை

         குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு --- யானையின் அழகிய முகத்தை உடைய விக்கின விநாயகர் என்னும் பெரியவரும்,

         அங்குச பாச கர ப்ரசித்தன் --- அங்குசத்தையும் பாசத்தையும் திருக்கைகளில் ஏந்திய புகழ்பெற்றவரும்,

         ஒர் கொம்பன் --- ஒற்றைக் கொம்பரும்,

         மகோதரன் --- பெரிய வயிற்றை உடையவரும்,

         முக்கண் --- மூன்று திருக்கண்களை உடையவரும்,

         விக்ரம --- பேராற்றல் படைத்தவரும்,

         கணராஜன் --- கணங்களுக்குத் தலைவரும்,

         கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் --- தன்னைக் கும்பிடுபவர்களின் வினைகளையும் பற்றுக்களையும் அறுப்பவரும்,

         எங்கள் விநாயகன் --- எங்கள் விநாயக மூர்த்தியும்,

         நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக --– சிவபெருமான் பெற்றருளிய மலைபோன்ற வடிவினை உடையவரும்,

         கற்பக –-- கற்பகம் போன்றவரும் ஆகிய

         பிள்ளை இளையோனே --- மூத்த பிள்ளையாருக்கு இளையவரே!

         துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த --– அழிவு இல்லாத ஆறெழுத்தாகிய அறுகோண யந்திரத்தின் மூலப் பொருளே!

         சடானன --– ஆறு திருமுகங்களை உடையவரே!

         துஷ்ட நிக்ரக --– தீயவர்களை ஒடுக்குபவரே!

         தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா --- யானைகள் சூழ்ந்துள்ள சங்கச் சபா மண்டபத்தில் முத்தமிழையும் காத்து அருளியவரே!

         துங்க கஜ ஆரணியத்தில் உத்தம --– பரிசுத்தமான திருவானைக்காவில் உத்தமமான

         சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண --- சம்பு தீர்த்தத்துக்கு அருகில் தெற்கே உள்ள

     சுந்தர மாறன் மதில் புறத்து உறை பெருமாளே --- சுந்தரமாற பாண்டியன் புதுக்கிய தென் மதிலின் அருகில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

         அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் --- மை தீட்டிய வேல் போன்ற கண்ணைக் கொண்டு அழைக்கவும்,

         இங்கிதமாக நகைத்து உருக்கவும் --- இன்பகரமாக சிரித்து மனதை உருகச் செய்யவும்,

         அம் புயல் நேர் குழலைக் குலைக்கவும் --- அழகிய மேகம் போன்ற கூந்தலை வேண்டுமென்றே கலைத்து அவிழ்க்கவும்,

         நக ரேகை அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும் --- நகக் குறி இட்டு, அழகிய கைகளின் அடிப்பகுதியாகிய அக்குளைத் தெரியும்படி காட்டவும்,

         மந்தர மாமுலை சற்று அசைக்கவும் --- மந்தர மலையைப் போன்ற முலைகளைச் சிறிது அசைக்கவும்,

         அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் --- சேலையை அனாவசியமாக நெகிழ்த்தி, பின்பு உடுக்கவும்,

         இளைஞோர்கள் நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் --- இளைஞர்கள் மனதில் ஆசைத் தீயை எழுப்பவும்,

         வம்பு உரை கூறி வளைத்து இணக்கவும் --- வீண் வார்த்தைகளைப் பேசி அவர்கள் மனத்தைக் கவர்ந்து வசப்படுத்தவும்,

         மன்று இடை ஆடி மருள் கொடுக்கவும் --- சபையில் நடனம் ஆடி காம மயக்கத்தைக் கொடுக்கவும்,

         எவரேனும் நிந்தை செய்யாது பொருள் பறிக்கவும் --- யாராயிருந்த போதிலும் இகழ்ச்சி செய்யாமல் அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கவும்,

         இங்கு வல்லார்கள் கையில் பிணிப்பு அற --- இங்கு வல்லவர்களாய் உள்ள பொது மகளிரின் கையில் அகப்பட்டுக் கொள்ளும் கட்டு நீங்குமாறு,

         நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே --- தேவரீருடைய திருவடி சேவையை தந்து அருள் புரியும் ஒரு நாள் அடியேனுக்குக் கிடைக்குமா?


பொழிப்புரை


         யானையின் அழகிய முகத்தை உடைய விக்கின விநாயகர் என்னும் பெரியவரும், அங்குசத்தையும் பாசத்தையும் திருக்கைகளில் ஏந்திய புகழ்பெற்றவரும், ஒற்றைக் கொம்பரும், பெரிய வயிற்றை உடையவரும், மூன்று திருக்கண்களை உடையவரும், பேராற்றல் படைத்தவரும், கணங்களுக்குத் தலைவரும், தன்னைக் கும்பிடுபவர்களின் வினைகளையும் பற்றுக்களையும் அறுப்பவரும், எங்கள் விநாயக மூர்த்தியும்,
சிவபெருமான் பெற்றருளிய மலைபோன்ற வடிவினை உடையவரும், கற்பகம் போன்றவரும் ஆகிய மூத்த பிள்ளையாருக்கு இளையவரே!

         அழிவு இல்லாத ஆறெழுத்தாகிய அறுகோண யந்திரத்தின் மூலப் பொருளே!

         ஆறு திருமுகங்களை உடையவரே!

         தீயவர்களை ஒடுக்குபவரே!

         யானைகள் சூழ்ந்துள்ள சங்கச் சபா மண்டபத்தில் முத்தமிழையும் காத்து அருளியவரே!

         பரிசுத்தமான திருவானைக்காவில் உத்தமமான சம்பு தீர்த்தத்துக்கு அருகில் உள்ள சுந்தரமாற பாண்டியன் புதுக்கிய தென்மதிலின் அருகில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

         மை தீட்டிய வேல் போன்ற கண்ணைக் கொண்டு அழைக்கவும், இன்பகரமாக சிரித்து மனதை உருகச் செய்யவும், அழகிய மேகம் போன்ற கூந்தலை வேண்டுமென்றே கலைத்து அவிழ்க்கவும், நகக் குறி இட்டு, அழகிய கைகளின் அடிப்பகுதியாகிய அக்குளைத் தெரியும்படி காட்டவும்,  மந்தர மலையைப் போன்ற மார்பகங்களைச் சிறிது அசைக்கவும், சேலையை அனாவசியமாக நெகிழ்த்தி, பின்பு உடுக்கவும், இளைஞர்கள் மனதில் ஆசைத் தீயை எழுப்பவும், வீண் வார்த்தைகளைப் பேசி அவர்கள் மனத்தைக் கவர்ந்து வசப்படுத்தவும், சபையில் நடனம் ஆடி காம மயக்கத்தைக் கொடுக்கவும், யாராயிருந்த போதிலும் இகழ்ச்சி செய்யாமல் அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கவும்,  இங்கு வல்லவர்களாயுள்ள பொது மகளிரின் கையில் அகப்பட்டுக் கொள்ளும் கட்டு நீங்குமாறு, தேவரீருடைய திருவடி சேவையை தந்து அருள் புரியும் ஒரு நாள் அடியேனுக்குக் கிடைக்குமா?

விரிவுரை


இந்தத் திருப்புகழ் விநாயகப் பெருமானுடைய அரிய பெருமைகளைக் கூறும் அருமையான பாடல்.

விநாயக வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த திருப்புகழ்.

தேன்போல் தித்திக்கின்ற செழுந்தமிழ்ச் சொற்கள் நிறைந்த அதிமதுரச் சித்திரப் பாடல்.

அஞ்சன வேல்விழி இட்டு அழைக்கவும் ---

அஞ்சனம் - மை. பொதுமகளிர் கண்களுக்குக் கரிய மை பூசி அழகு செய்வார்கள். வேல் போன்ற கூரிய கண்களால் ஆடவரை அழைப்பார்கள்.

இங்கிதமாக நகைத்து உருக்கவும் ---

ஆடவரைக் கண்டவுடன் இன்பகரமாகப் புன்னகை புரிந்து, அவர்கள் மனத்தை உருகச் செய்வார்கள்.

அம்புயல் நேர் குழலைக் குலைக்கவும் ---

நடு வீதியில் நின்று, தமது மேகம் போன்ற நீண்ட கரிய கூந்தலை அவிழ்த்து, அதனைக் கோதிவிட்டு ஆடவரை மயக்குவர்.

அங்கை மென்குழ லாய்வார் போலே
     சந்தி நின்றய லோடே போவார்
          அன்பு கொண்டிட நீரோ போறீர் ...... அறியீரோ

அன்று வந்துஒரு நாள்நீர் போனீர்
     பின்பு கண்டுஅறி யோநாம் ஈதே
          அன்றும் இன்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா

எங்கள் அந்தரம் வேறுஆல் ஓர்வார்
     பண்டு தந்தது போதா தோமேல்
          இன்று தந்துஉற வோதான் ஈதுஏன் ...... இதுபோதாது,

இங்கு நின்றதுஎன் வீடே வாரீர்
     என்று இணங்கிகள் மாயா லீலா
          இன்ப சிங்கியில் வீணே வீழாது ...... அருள்வாயே
                                                                                          ---  திருப்புகழ்.

கூந்தலாகிய இருண்ட காட்டில் கண்வலை வீசி இளைஞர்களாகிய பறவைகளைப் பிடிப்பர்.

திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழல் காட்டில்
கண்ணி வைப்போர் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ?       ---தாயுமானார்.

நகரேகை ---

நகங்களால் கீறி குறியிடுபவர்.  ஆடவர்க்கு இன்ப உணர்ச்சி உண்டாகும்படி அவர்கள் புரியும் ஆடல்.

அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும் ---

ஏதோ ஒரு காரியமாகத் தூக்குபவர் போல் கைகளை உயர்த்தி, கைகளின் மூலமாகிய அக்குள் தெரியும்படி காட்டி மயக்குவார்கள்.

மந்தர மாமுலை சற்று அசைக்கவும் ---

மந்தரம் என்ற பெரிய மலை போன்ற தங்கள் முலைகள் சிறிது அசையும்படி ஒய்யாரமாக நடந்து சாகசம் புரிவர்.

அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் ---

அவசியமே இல்லாமல் புடவையை அவிழ்த்து நீளவும் உடுப்பார்கள்.  அம்பரம் - ஆடை.

இளைஞோர்கள் நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் ---

இளைஞர்களுடைய மனத்தில் ஆசைக் கணலை மூட்டி, தங்கள் இனிய உரைகளாகிய நெய்யை விட்டு, விரக லீலைகளாகிய விறகை இட்டு வளர்ப்பார்கள்.

வம்புரை கூறி வளைத்து இணக்கவும் ---

வம்புத்தனமான வீண் வார்த்தைகளைப் பேசி, அவர்களது உள்ளத்தைக் கவர்ந்து கொள்வார்கள்.

மன்றிடை ஆடி மருள் கொடுக்கவும் ---

சபையில் பரத நாட்டியம் ஆடி மயக்கத்தைத் தருபவர்கள்.

ஏவரேனும் நிந்தை செயாது பொருள் பறிக்கவும் ---

யாராயிருப்பினும் அவரை நிந்தனை புரியாமல் அவர்களுடன் இணங்கி, அவர்களுடைய பொருள்களைக் கவர்வார்கள்.

இங்கு வலார்கள் கையில் பிணிப்பு அற ---

இத்தகைய சாகசங்களில் வல்லவர்களாகிய விலைமாதர்களுடைய கையில் கட்டுண்டு கிடக்கும் தளை நீங்குமாறு அருள் புரியும்.


நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே ---

இறைவனுடைய பற்று முதிருமானால் பொருட்பற்று, மகளிர் பற்று முதலிய ஏனைய எல்லாப் பற்றுக்களும் தாமே விலகி ஒழியும்.

ஒருவன் பல கயிறுகளால் விறகுகளைக் கட்டி வைத்தான்.  அத்தனைக் கட்டுக்களையும் அவிழ்த்துத் துன்புறாமல் ஒரு மணிக் கயிற்றைக் கொணர்ந்து, அவ் விறகுக்கட்டை ஒரு அறிஞன் நன்கு இறுக்கிக் கட்டினான். இந்தக் கட்டு இறுகியவுடன் ஏனைய கட்டுக்கள் தளர்ந்து அவிழ்ந்து ஒழிந்தன. இதுபோல், இறைவனுடைய திருவடிப் பற்று முறுக முறுக, ஏனைய பற்றுக்கள் தாமே அகலும் என உணர்க.

"முருகா, உன்னுடைய திருவடிச் சேவையாகிய அருள் திறத்தை அடியேனுக்கு அருள் புரியும் ஒருநாள் சிறியேனுக்கு உண்டாகுமோ?" என்று அருணகிரிப் பெருமான் முருகனிடம் உள்ளம் உருகி வேண்டுதல் புரிகின்றார்.

முருகன் ---  திருவடி ஞானம்.

மாதர் ஆசை ---  அஞ்ஞானம்.

விளக்குக்கு முன் இருள் தானே விலகுவது போல, ஞானத் திருவடிக்கு முன் ஆசாபாசமாகிய இருள் நீங்கும்.

குஞ்சர மாமுக விக்கின ப்ரபு ---

திருக்கயிலையில் ஏழுகோடி மந்திரங்கல் எழுதிய மந்திர சித்திர மண்டபத்துள் உமாதேவியாருடன் சிவபெருமான் எழுந்தருளினார்.

அம் மந்திரங்கட்கு இடையில் சமஷ்டி, வியஷ்டி என்ற இரு பிரணவ மந்திரங்கள் விளங்கி இருந்தன. அவற்றை உமையம்மையும் சிவபெருமானும் பார்த்து அருளினார்கள். இரு பிரணவங்களும் யானை வடிவம் கொண்டு மருவின.  அப் பிரணவத்தில் இருந்து யானை வடிவுடன் விநாயகப் பெருமான் தோன்றி அருளினார்.

விநாயகர் விக்கின ராஜர். விக்கினங்களைக் கொடுப்பதில் அரசர் என்று பொருளன்று. விக்கினங்களைக் கெடுப்பதில் அரசர் என்று பொருள்.

இஞ்சி பித்தத்துக்கு அரசு என்றால், இஞ்சி பித்தத்தைக் கொடுக்கும் என்று பொருள் அல்ல. பித்தத்தைக் கெடுப்பதில் அரசு என்பது பொருள். இதுபோல், விநாயகர் தன்னை வழிபடும் அடியார்களுக்கு எய்தும் இடர்களைக் கடிதில் விலக்குவதில் வல்லவர்.

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு, தனதடி வழிபடும் அவர் இடர்
கடி கணபதி வர அருளினன், மிகுகொடை
விடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.          ---  திருஞானசம்பந்தர். 

அங்குச பாச கரப் ப்ரசித்தன் ---

விநாக மூர்த்தி தமது திருக்கரங்களில் பாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியுள்ளார்.  அடியார்களின் ஆணவமாகிய யானையை அங்குசத்தால் குத்தி, பாசத்தால் கட்டி அடக்கி அருள் புரிவர்.

விநாயகப் பெருமான் ஐந்து திருக்கரங்களை உடையவர்.  ஐந்து தொழில்களை ஐந்து திருக்கரங்களால் புரிகின்றனர்.

எழுத்தாணி ஏந்திய திருக்கரம் படைத்தல் தொழிலையும்,
மோதகம் ஏந்திய திருக்கரம் காத்தல் தொழிலையும்,
அங்கு்சம் ஏந்திய திருக்கரம் அழித்தல் தொழிலையும்,
பாசம் ஏந்திய திருக்கரம் மறைத்தல் தொழிலையும்,
தும்பிக்கை - அருளல் தொழிலையும்

புரிகின்றன.

மோதகம் ஏந்திய திருக்கரம் தனக்காகவும்,
கும்பம் ஏந்திய துதிக்கை மாதாபிதாக்களை வழிபடுவதற்காகவும்,
யானைக் கொம்பினை ஏந்திய திருக்கை தேவர்கட்காகவும்,
பாசாங்குசங்களை ஏந்திய திருக்கரங்கள் அடியார்களின் ஆணவக் களிற்றை அடக்குவதற்காகவும் என ஐந்து திருக்கரங்களுடன் தோன்றினார்.

தனக்காக ஒரு கை; அம்மையப்பன் இருவர்கட்கும் ஒரு கை; முப்பத்து முக்கோடி தேவர்கட்கு ஒரு கை; அடியவர்களுக்காக இரு கைகள்.

இதனால் அடியார்பால் விநாயகர் கொண்டருளும் போரருள் திறம் புலனாகின்றது.

பண்ணியம் ஏந்தும் கரம்தனக்கு ஆக்கிப்
         பானிலா மருப்புஅமர் திருக்கை
விண்ணவர்க்கு ஆக்கி, அரதனக் கலச
         வியன்கரம் தந்தைதாய்க்கு ஆக்கிக்
கண்ணில் ஆணவவெங் கரிபிடித்து அடக்கிக்
         கரிசினேற்கு இருகையும் ஆக்கும்
அண்ணலை, தணிகை வரைவளர் ஆபச்
         சகாயனை அகந்தழீஇக் களிப்பாம்.    ---  தணிகைப் புராணம்.

ஓர் கொம்பன் ---

கஜமுகாசுரனை வதை செய்யும் பொருட்டு விநாயகர் தமது கொம்பை ஒடித்து ஏவி அருளினார்.  அத் திருமருப்பைத் தமது திருக்கரத்தில் ஏந்தி உள்ளார்.  அது ஞானமயமானது.

மகோதரன் ---

மகோதரம் - மகா உதரம்.  பெரிய வயிறு.

அண்ட கோடிகள் யாவும் அவருடைய திருவயிற்றில் அடங்கி உள்ளன என்ற குறிப்பினை அப் பெருவயிறு உணர்த்துகின்றது.  குழந்தையைக் கருவுற்ற அன்னையின் வயிறு பெருத்திருப்பது போல் என உணர்க.

முக்கண் விக்ரம ---

சோம சூரிய அக்கினி என்ற மூன்று சுடர்களும் விநாயக மூர்த்திக்கு மூன்று கண்களாகத் திகழ்கின்றன.  அதனால், திரியம்பக விநாயகர் என்று பேர் பெற்றார். 

விக்கிரமம் - ஆற்றல். பேராற்றல் படைத்தவர். வல்லபத்தைத் தனக்குச் சத்தியாக உடையவர்.

கும்பிடுவார் வினைப் பற்று அறுப்பவன் ---

அன்புடன் அஞ்சலித்து வழிபடும் அடியார்களின் வினைகளை வேருடன் களைந்து, பற்றுக்களையும் நீக்கித் திருவருள் புரிபவர்
விநாயகர். 

விநாயகனே வெவ்வினையை வேர்அறுக்க வல்லான்,
விநாயகனே வேட்கை தணிவிப்பான், விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனும்ஆம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து.         --- பதினோராம் திருமுறை.

எங்கள் விநாயகர் ---

அடியவர்களாகிய எமக்குச் சொந்தமாகிய விநாயகர்.

மம விநாயகன் நஞ்சுஉமிழ் கஞ்சுகி
அணிகஜானன விம்பன் ஓர் அம்புலி
மவுலியான்உறு சிந்தை உகந்து அருள்  இளையோனே... ---  (கமலமாதுடன்) திருப்புகழ்.

நக்கர் பெற்றருள் ---

நக்கர் - ஆடையில்லாத திகம்பரர்.  திசைகளையே ஆடையாக உடையவர் சிவபெருமான்.

குன்றை ரூபக ---

பவளக் குன்று போல் விளங்குபவர்.

பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று.....       --- (அலகிலவுணரை) திருப்புகழ்.

கற்பகப் பிளை ---

கற்பகத் தருவைப் போல் அடியவர்கள் கருதிய அனைத்தும் தருவபர் பிள்ளையார். 

பிள்ளை என்னும் சொல், இடைக் குறைந்து பிளை என்று வந்தது.

கற்பகம் என வினை கடிது ஏகும் ….  ---  (கைத்தல) திருப்புகழ்

துஞ்சல் இலாத சடட்சரப் ப்ரபந்த ---

துஞ்சல் - அழிவு.  அழிவு இல்லாத சடக்கர மந்திரத்தைப் பொறித்த அறுகோண யந்திரத்தில் விளங்குபவர் ஆறுமுக நாதர்.

பிரபந்தம் - பந்திக்கப்படும் ஷட்கோண யந்திரம்.  அன்றியும், அழிவில்லாத ஆறெழுத்துக்களின் பெருமையைக் கூறும் பிரபந்தம் - நூல்களில் விளங்குபவர் எனினும் அமையும்.

துஷ்ட நிக்ரக ---

தூயவரை ஆளும் பொருட்டு, தீயவரை இறைவர் ஒடுக்கி மறக்கருணை புரிகின்றார்.

கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல், பைங்கூழ்
களை கட்டதனோடு நேர்.                     ---  திருக்குறள்.
   
தும்பிகள் சூழ் அவையில் தமிழ்த்ரய பரிபாலா ---

தும்பி - யானை. தும்பிகள் சூழ் அவை. மதுரையில் சொக்கநாதர் திருக்கோயிலில் எட்டு யானைகள் தாங்கும் விமானத்துக்கு அருகில் உள்ள சங்கமண்டபம்.

தேவர்கோன் இழிச்சிய மதமலை இருநான்கு பிடர்
சுமந்து ஓங்கி …...  குயிற்றிய சிகரக் கோயில் ….    --- கல்லாடம்.

இச் சங்கத்தில் முருகவேள் இருந்து தமிழை ஆய்ந்து பரிபாலனம் புரிந்து அருளினார்.

 
துங்க கஜாரணியத்தில் ---

துங்கம் - பரிசுத்தம்.  கஜ ஆரண்யம் - திரு ஆனைக்கா.
தண்ணீர் தூய்மை செய்வது.

புறத்தூய்மை நீரால் அமையும் என்ற திருக்குறளின்படி, எல்லாவற்றையும் தூய்மைப் படுத்துகின்ற தண்ணீர் என்றும் வற்றாது ஊறிக்கொண்டே இருக்கின்ற கோயில் திருவானைக்கா.  இங்கு எழுந்தருளிய சிவலிங்கம் அப்புலிங்கம்.

உத்தம சம்பு தடாகம் ---

திருவானைக்காவில் சம்பு முனிவர் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, இறைவரை வழிபட்டார். அது சம்புதீர்த்தம் என்ற மகா புனிதம் பொருந்தியது.  இது ஒன்பது தீர்த்தங்களில் ஒன்று.  இது திருவானைக்காவில் தென்கிழக்கில் உள்ளது.

தட்சிண சுந்தரமாறன் மதிள் புறத்துறை ---

மேற்கூறிய சம்பு தீர்த்தத்திற்குத் தெற்கே, நாலாம் பிரகாரமாக விளங்கும் தென்மதில் சுந்தரமாறன் புதுக்கிய அழகிய திருமதில்.  இன்றும் சுந்தரமாறன் திருமதில் என வழங்குகின்றது.  இதன் அருகில் முருகப் பெருமான் திருக்கோயில் கொண்டு அருள் புரிகின்றார்.

கருத்துரை


திருவானைக்காவில் சுந்தரமாறனுடைய தென் மதிலின் அருகில் உள்ள திருமுருகா, மாதர் மயல் அற நின் பாதசேவை தந்து அருள்.


                                            



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...