23. குறைந்தாலும் பயன்படும்
தறிபட்ட
சந்தனக் கட்டைபழுது ஆயினும்
சார்மணம் பழுது ஆகுமோ?
தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு
சாரமது ரங்கு றையுமோ?
நிறைபட்ட
கதிர்மணி அழுக்குஅடைந் தாலும் அதின்
நீள்குணம் மழுங்கி விடுமோ?
நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்
நிறையுமாற் றுக்கு றையுமோ?
கறைபட்ட
பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு
கதிர்மதி கனம்போ குமோ?
கற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும்
காசினி தனில்போ குமோ?
அறிவுற்ற
பேரைவிட் டகலாத மூர்த்தியே!
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அறிவுற்ற பேரைவிட்டு அகலாத மூர்த்தியே --- அறிவு உடையோரின் உள்ளத்தில் பிரியாது
விளங்கும் தலைவனே!
ஐயனே --- முதல்வனே!
அருமை மதவேள் --- அரிய மதவேள் என்பான், அனுதினமும்
மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர
கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
தறிபட்ட சந்தனக் கட்டை பழுதாயினும் சார் மணம்
பழுது ஆகுமோ --- வெட்டப்பட்ட சந்தனக் கட்டையானது தேய்ந்து குறைபட்டாலும் அதனிடம்
உள்ள நறுமணம் குறையுமோ? (குறையாது)
தக்க பால் சுவறிடக் காய்ச்சினும் அது கொண்டு
சார மதுரம் குறையுமோ --- நல்ல பால் வற்றிடக் காய்ச்சினாலும் அதனிடம் உள்ள சாரமான
இனிமையானது குறையுமோ? (அடினும் பால் தன்
சுவை குன்றாது)
நிறைபட்ட கதிர் மணி அழுக்கு அடைந்தாலும்
அதின் நீள்குணம் மழுங்கி விடுமோ --- நிறைந்த ஒளியினை உடைய மணியானது அழுக்குப்பட்டாலும்
அதனுடைய ஒளிரும் தன்மை குறைந்து விடுமோ? (ஒளி
குறையாது)
நெருப்பிடை உருக்கினும் அடிக்கினும்
தங்கத்தின் நிறையும் மாற்றுக் குறையுமோ --- தங்கத்தை நெருப்பிலே இட்டு உருக்கினாலும்
(தகடாகவோ கம்பியாகவோ) அடித்தாலும் அதனிடம் நிறைந்துள்ள மாற்றுக் குறைந்து விடுமோ? (மாற்றுக் குறையாது)
கறை பட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு
கதிர் மதி கனம் போகுமோ --- கருமை பொருந்திய மேகமானது சூரியனையும் சந்திரனையும்
மறைத்தாலும், அக்காரணத்தால்
அவற்றின் பெருமையில் குறைவு உண்டாகுமோ? (குறைவு
இல்லை)
(அது போலவே)
கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும்
காசினி தனில் போகுமோ --- அரிய நூல்களைக் கற்று அறிவு நிரம்பிய பெரியோரின் பெருமையை அறிவில்லாதவர்கள்
அறியவில்லை என்பதனாலேயே, அவர்களுடைய பெருமையானது
உலகில் நிலைபெறாமல் போகுமோ?
(கருத்து) கற்று அறிவு
உடையார் பெருமை உலகில் நிலைத்து இருக்கும். அற்பரால் அழிவுறாது.
No comments:
Post a Comment