15. மழைவிட்டும், தூவானம் விட்டது இல்லை
உழைஇட்ட
விழிமடவார் உறவுவிட்டும்,
வெகுளிவிட்டும், உலக வாழ்வில்
பிழைவிட்டும், இன்னம்இன்னம்
ஆசைவிடாது
அலக்கழியப் பெற்றேன்! அந்தோ!
தழைஇட்ட
கொன்றைபுனை தண்டலைநீள்
நெறியே! என் தன்மை எல்லாம்
மழைவிட்டும்
தூவானம் விட்டது இல்லை
யாய் இருந்த வண்மை தானே.
இதன் பொருள் ---
தழை இட்ட கொன்றை புனை தண்டலை நீள் நெறியே --- செழிப்பு உடைய கொன்றை மலர் மாலையை அணிந்த,
திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய நீள்நெறி நாதரே!,
உழை இட்ட விழி மடவார் உறவு விட்டும் ---
மான் போலும் கண்களை உடைய பெண்களின் உறவை நான்
விட்டு விட்ட போதிலும்,
வெகுளி விட்டும் --- எனது சீற்றத்தை நான்
மாற்றிக்கொண்ட போதிலும்,
உலக வாழ்வில் பிழைவிட்டும் --- உலக வாழ்க்கையில்
நேர்ந்த பிழைகளை நான் திருத்திக் கொண்ட போதிலும்,
இன்னம் இன்னம் ஆசை விடாது --- மேலும்
மேலும் பற்றுக்களை விட முடியாமல்,
அலக்கழியப் பெற்றேன் --- அலைக்கழிக்கப்பட்டு, துன்பப் படுகிறேன்,
அந்தோ --- ஐயோ!,
என் தன்மை யெல்லாம் --- என்னுடைய இந்தத் தன்மை ஆனது,
மழைவிட்டும் தூவானம் விட்டது இல்லையாய்
--- மழை விட்டுவிட்டபோதும், தூவானம் விடாமல்,
இருந்த வண்மை தான் --- இருந்த
அழகுதான்.
விளக்கம் --- ஆசையே பிறவிக்கு வித்து என்பதால், "அவா என்ப எல்லா உயிர்க்கும்
எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து" என்றும், "அவா இல்லார்க்கு
இல் ஆகும் துன்பம், அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும்" என்றும் காட்டினார்
திருவள்ளுவ நாயனார்.
"ஆசைக்கு ஓர் அளவு இல்லை" என்று பாடினார்
தாயுமானார். "ஆசையை அளவு அறுத்தார் இங்கு ஆரே" என்றது திருவிசைப்பா.
"ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விட விட ஆனந்தம்
ஆமே" என்றது திருமந்திரம்.
ஆசை அற வேண்டுமானால், இறைவன் திருவருள் துணை புரியவேண்டும்.
ஆசையை அறுப்பது உயிரின் முயற்சியால் மட்டுமே ஆகாது. எனவே, "முருகா! நினது அன்பு
அருளால் ஆசா நிகளம் துகள் ஆயின பின், பேசா அனுபூதி பிறந்ததுவே" என்றார் கந்தர்
அநுபூதியில்.
எனவே தான், இந் நூல் ஆசிரியர், தனது ஆசை முற்றும்
அறப்பெறவில்லை என்று தண்டலை நாள்நெறி நாதரிடம் முறையிடுகின்றார்.
No comments:
Post a Comment