இவர் இன்ன முறையர்




28. இவர் இன்ன முறையர்

தன்னால் முடிக்கஒண் ணாதகா ரியம்வந்து
     தான்முடிப் போன்த மையன்ஆம்;
  தன்தலைக்கு இடர்வந்த போதுமீட்டு உதவுவோன்
     தாய்தந்தை என்னல் ஆகும்;

ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோது
     உதவுவோன் இட்ட தெய்வம்;
  உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்
     உரைப்பவன் குருஎன் னல்ஆம்;

எந்நாளும் வரும்நன்மை தீமைதனது என்னவே
     எண்ணிவரு வோன்பந் துஆம்;
  இருதயம் அறிந்துதன் சொல்படி நடக்கும்அவன்
     எவன் எனினும் அவனே சுதன்;

அந்நார மும்பணியும் எந்நாளு மேபுனையும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருகள் ---

     அம் நாரமும் பணியும் எந்நாளுமே புனையும் அண்ணலே --- அழகிய கங்கை என்னும் நதியையும், பாம்பையும் எப்போதும் திருச்சடையில் அணிந்துள்ள பெரியோனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     தன்னால் முடிக்க ஒண்ணாத காரியம் வந்து முடிப்போன் தான் தமையன் ஆம் --- தன்னாலே முடிக்க இயலாத செயல் ஒன்றினை வந்து முடித்துக் கொடுப்பவனை, ஒருவன் தனக்கு முன் பிறந்தவன் எனுற் கொள்ளலாம்,

     தன் தலைக்கு இடர் வந்தபோது மீட்டு உதவுவோன் தாய் தந்தை என்னல் ஆகும் --- தனக்குத் தலைபோகும் அளவுக்கு ஒரு துன்பம் உண்டானபோது அதிலிருந்து மீண்டு வர உதவுபவனை தந்நையும் தாயும் எனக் கொள்ளலாம்,

     ஒன்னார் செயும் கொடுமையால் மெலிவு வந்த போது உதவுவோன் இட்ட தெய்வம் --- பகைவர் செய்கின்ற தீமையால் நலிவு வந்த காலத்தில் துணையாக வந்து உதவுவோனை வழிபடும் தெய்வம் ஆகக் கொள்ளலாம்,  

     உத்தி புத்திகள் சொல்லி மேல்வரும் காரியம் உரைப்பவன் குரு என்னலாம் --- எந்த ஒரு செயலையும், அதைச் செய்ய வேண்டிய முறையையும், அதனை முடிக்கத்தக்க அறிவுரையையும் சொல்லி, எதிர் காலத்தில் அதனால் வரக் கூடிய பயனையும் எடுத்துச் சொல்பவனை குரு என்று கொள்ளலாம்,

     வரும் நன்மை தீமை எந்நாளும் தனது என்ன எண்ணி வருவோன் பந்து ஆம் --- ஒருவனுக்கு வரக்கூடிய நன்மை தீமைகளை எப்போதும் தனக்கு வந்தவைகளாகக் கருதி, நட்புப்பூண்டு வருவோன் ஒருவனை உறவினன் என்று கொள்ளலாம்,

     இருதயம் அறிந்து தன் சொற்படி நடக்கும் அவன் எவன் எனினும் அவனே சுதன் - மனத்தில் உள்ள கருத்தினை அறிந்து தன்மொழி தவறாது நடக்கின்றவன் எவனாயினும் அவனையே மகன் என்று ஒருவன் கொள்ளலாம்.

     விளக்கம் --- நாரம் - நீர்; இங்குக் கங்கையை உணர்த்துகிறது. பணி - பாம்பு.
உத்தி - யுக்தி என்று வடமொழியில் வரும். ஒன்னார் - பகைவர்.  இயற்கையாக ஒருவனுக்கு உறவினர்கள் இருந்தும் உற்ற காலத்தில் பயன்படாதவர்கள் ஆயின், அவர் உறவின் முறையினரே அன்றி உற்றவர்கள் அல்லர். அவர்களை உறவினர் என்று கொள்ளுதல் தகாது. உறவினர் அல்லாதவராக இருந்தும், தக்க சமயத்தில் உதவுபவரை, உறவினர் ஆகவே கொள்ளலாம்.  ஆபத்துக் காலத்தில் ஒருவர் வந்து உதவினால்,தெய்வம் போல் வந்து உதவியதாகச் சொல்லுவது உலக வழக்கு. தெய்வமே அவ்வாறு உருக் கொண்டு வந்து உதவியதாக எண்ணலாம். "நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து" என்று கீழ்வரும் பாடலில் ஆசிரியர் காட்டுவதால், உறவினர் நன்மை தீமைகளில் உதவியாக இருக்கவேண்டும் என்பது கருத்து ஆகின்றது. "உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா, உடன் பிறந்தே கொல்லும் வியாதி, உடன் பிறவா மாமலை மேல் உள்ள மருந்தே பிணி தீர்க்கும். அம் மருந்து போல்வாரும் உளர்" என்னும் பாடலின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.
 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...