திருவண்ணாமலை - 0522. ஆனைவரிக் கோடு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆனைவரிக் கோடு (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் மயலில் விழுந்து அழியாமல்,
திருவடியைத் தந்து ஆட்கொண்டு அருள்


தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
     தானதனத் தானதனத் ...... தனதானா


ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
     டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள்

ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்
     டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர்

சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்
     தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர்

தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
     சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே

தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்
     சாயகடற் சூரைவதைத் ...... திடுவோனே

தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்
     தாபரம்வைத் தாடுபவர்க் ...... கொருசேயே

தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்
     தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா

சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்
     தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஆனைவரிக் கோடு, ளநிர்ப் பாரமுலைச் சார் அசை, பட்டு
     ஆடை மறைத்து ஆடும் மலர்க் ...... குழலார்கள்,

ஆர வடத் தோடு அலையப் பேசி, நகைத்து, சை பொருட்டு
     ஆரையும் மெத்தாக மயக் ...... கிடு மோகர்,

சோனைமழைப் பார விழி, தோகைமயில் சாதியர், கைத்
     தூது விடுத்தே பொருளைப் ...... பறிமாதர்,

தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழல் காயனை, உள்
     ஞோதி ஒளிப் பாதம் அளித்து ...... அருள்வாயே.

தான தனத் தீ திமிலைப் பேரிகை கொட்டா, ச மலைச்
     சாய, கடல் சூரை வதைத் ...... திடுவோனே!

தாளஇயல் ஞோதி நிறக் காலின் எழக் கோலி எடுத்து,
     தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ...... ஒருசேயே!

தேன் இரசக் கோவை இதழ்ப் பூவை, குறப்பாவை தனத்தே
     உருகிச் சேரும் மணிக் ...... கதிர்வேலா!

சீர் அருணைக் கோபுரம் உற்று, ன புனத் தோகையும், மெய்த்
     தேவமகட்கு ஓர் கருணைப் ...... பெருமாளே.

பதவுரை


      தானதனத் தீ  திமிலைப் பேரிகை கொட்டா --- தானதனத்தீ என்ற ஒலியுடன் திமிலை என்ற பறையும் முரசு வாத்தியமும் ஒலி செய்ய,

     சம் மலை சாய --- நன்றாகக் கிரவுஞ்சகிரி சாய்ந்து அழியவும்

     கடல் சூரை வதைத்திடுவோனே --- கடலில் நின்ற சூரபதுமனை வதை செய்தவரே!

      தாள இயல் --- தாளத்தில் இலக்கண விளக்கமானது

     சோதி நிறக் காலின் எழ --- ஒளி பொருந்திய தனது திருவடியில் ஒலித்து உண்டாகுமாறு

     கோலி எடுத்து தாபரம் வைத்து ---  வளைத்து ஒரு திருவடியை நிலத்தில் வைத்து

     ஆடுபவர்க்கு ஒரு சேயே --- திருநடனம் புரிகின்ற சிவபெருமானுக்கு ஒப்பற்ற புதல்வரே!

         தேன் இரசக் கோவை இதழ்ப் பூவை --- தேனின் இரசம் போல இனிக்கும் கொவ்வைப் பழம் போன்ற வாயிதழை உடைய, நாகணவாய்ப் பறவை போன்ற

     குறப்பாவை தனத்தே --- வள்ளி நாயகியின் தனங்களை நாடி

     உருகிச் சேரும் மணிக் கதிர்வேலா --- உள்ளம் உருகித் தழுவிய அழகும் ஒளியும் பொருந்திய வேலாயுதக் கடவுளே!

      சீர் அருணைக் கோபுரம் உற்று --- சிறந்த திருவண்ணாமலைக் கோபுரத்தில் அமர்ந்து,

     ஆன புனத் தோகையும் --- வளமான தினைப்புனத்தின் மயிலாகிய வள்ளியம்மைக்கும்,

     மெய்த் தேவமகட்கு --- மெய்ம்மையான தெய்வமகளாம் தேவசேனைக்கும்

     ஓர் கருணைப் பெருமாளே --- ஒப்பற்ற கருணை காட்டிய பெருமையில் சிறந்தவரே!

      ஆனை வரிக் கோடு --- யானையின் கோடுகள் உள்ள தந்தத்தையும்,

     இளநிர்ப் பாரமுலைச் சார் அசை --- இளநீரையும் நிகர்த்த பாரமுள்ள கொங்கைகளைச் சார்ந்து அசைகின்ற

     பட்டாடை மறைத்து ஆடும் மலர்க் குழலார்கள் --- பட்டாடையால் உடம்பை மறைத்து, நடனம் புரிகின்ற மலர் சூடிய கூந்தலை உடைய பொதுமாதர்கள்

       ஆர வடத் தோடு அலைய --- முத்து மாலையும் தோடும் அசைய,

     பேசி நகைத்து ஆசை பொருட்டு --- இனிது பேசி உரையாடியும், புன்னகை செய்தும் பொன்னை வேண்டி

     ஆரையும் மெத்தாக மயக்கிடும் மோகர் --- எவரையும் வஞ்சனையாக மயங்கவைக்கும் காமிகள்,

      சோனை மழைப் பார --- விடா மழை போன்ற அளகபாரக் கூந்தலும்,

     விழித் தோகை மயில் சாதியர் --- கண்களும் உடைய கலாப மயில் போன்ற குலத்தினர்,

     கைத் தூது விடுத்தே பொருளைப் பறி மாதர் --- தம் கை வசமாய் உள்ள ஆண்களைத் தூதராக அனுப்பி பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின்,

      தோதகம் உற்று --- வஞ்சகத்தில் அகப்பட்டு

     ஏழ் நரகில் சேரும் அழல் காயனை --- ஏழு நரகங்களில் சேருகின்ற நெருப்புக்கு இரையாகக் கூடிய உடல் எடுத்து அடியேனை,

     உள் சோதி ஒளிப் பாதம் அளித்து அருள்வாயே --- சோதியுட் சோதியாய் விளங்கும் உமது திருவடியைத் தந்து அருள் புரிவீராக.

பொழிப்புரை


         தானதனத்தீ என்ற ஒலியுடன் திமிலை என்ற பறையும் முரசு வாத்தியமும் ஒலி செய்ய, நன்றாகக் கிரவுஞ்சகிரி சாய்ந்து அழியவும் கடலில் நின்ற சூரபதுமனை வதை செய்தவரே!

         தாளத்தில் இலக்கண விளக்கமானது ஒளி பொருந்திய தனது திருவடியில் ஒலித்து உண்டாகுமாறு வளைத்து ஒரு திருவடியை நிலத்தில் வைத்து திருநடனம் புரிகின்ற சிவபெருமானுக்கு ஒப்பற்ற புதல்வரே!

         தேனின் இரசம் போல இனிக்கும் கொவ்வைப் பழம் போன்ற வாயிதழை உடைய, நாகணவாய்ப் பறவை போன்ற வள்ளி நாயகியின் தனங்களை நாடி உள்ளம் உருகித் தழுவிய, அழகும் ஒளியும் பொருந்திய வேலாயுதக் கடவுளே!

         சிறந்த திருவண்ணாமலைக் கோபுரத்தில் அமர்ந்து, வளமான தினைப்புனத்தின் மயிலாகிய வள்ளியம்மைக்கும், மெயம்மையான தெய்வமகளாம் தேவசேனைக்கும் ஒப்பற்ற கருணை காட்டிய பெருமையில் சிறந்தவரே!

         யானையின் கோடுகள் உள்ள தந்தத்தையும், இளநீரையும் நிகர்த்த பாரமுள்ள கொங்கைகளைச் சார்ந்து அசைகின்ற பட்டாடையால் உடம்பை மறைத்து, நடனம் புரிகின்ற மலர் சூடிய கூந்தலை உடைய பொதுமாதர்கள், முத்து மாலையும் தோடும் அசைய, இனிது பேசி உரையாடியும், புன்னகை செய்தும் பொன்னை வேண்டி எவரையும் வஞ்சனையாக மயங்கவைக்கும் காமிகள், விடா மழை போன்ற அளகபாரக் கூந்தலும், கண்களும் உடைய கலாப மயில் போன்ற குலத்தினர், தம் கை வசமாய் உள்ள ஆண்களைத் தூதராக அனுப்பி பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின், வஞ்சகத்தில் அகப்பட்டு ஏழு நரகங்களில் சேருகின்ற நெருப்புக்கு இரையாகக் கூடிய உடல் எடுத்து அடியேனை, சோதியுட் சோதியாய் விளங்கும் உமது திருவடியைத் தந்து அருள் புரிவீராக.

விரிவுரை

ஆனை வரிக்கோடு ---

யானையில் இரு தந்தங்களும் மாதர்களின் தனங்கட்கு உவமையாகக் கூறப்படும்.

இளநிர்ப் பாரமுலை ---

பெண்களின் தனங்கட்கு இளநீரும் உவமையாகச் சொல்லப்படும்.

பட்டாடை மறைத்தாடும் ---

உடம்பைப் பட்டாடையால் மறைத்துப் பொதுமகளிர் தாள ஜதியுடன் வகைவகையாக நடனம் புரிவார்கள்.

சோனை மழைப் பாரம் ---

பாரம் - அளகக் கூந்தல்.  கூந்தல் சோனைமழை போல நீண்டு உள்ளது.

தோதகம் ---

தோதகம் - வஞ்சகம்.  மாதர்களின் வஞ்சனை வலையில் விழுபவர்.

உட்சோதி ஒளிப்பாதம் ---

சோதியுட் சோதியாய் ஒளி செய்வது உறைவனுடைய திருவடி.  அது நூறுகோடி சூரியப் பிரகாசமானது.

உததியிடை கடவும் மரகத, அருண குல துரக
உபலளித கனக ரத சதகோடி சூரியர்கள்
உதயம் என, அதிக வித கலபகக மயிலின் மிசை
உக முடிவின் இருள் அகல ஒரு சோதி வீசுவதும்..    --- சீர்பாத வகுப்பு.

சமலை சாய ---

சம் மலை என்ற சொல் சமலை என வந்தது.  சம் - நன்றாக.  மலை - கிரவுஞ்ச மலை. சாய – சாய்ந்து விழ முருகவேள் வேலை ஏவினார்.

தாள இயல் சோதி நிறக் காலின் எழ ---

நடராசப் பெருமானுடைய திருவடியில் இருந்து பலஜதிகளுடன் கூடிய தாள இலக்கணங்கள் தோன்றுகின்றன.

கூடிய இலயம் சதிபிழை யாமைக்
         கொடிஇடை உமையவள் காண
ஆடிய அழகா! அருமறைப் பொருளே!
         அங்கணா! எங்குஉற்றாய்! என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
         வாயிலாய்! திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்,
         பாசுப தா!பரம் சுடரே!                --- சுந்தரர் தேவராம்.

கோலி எடுத்து ---

அம்பலவாணர் தமது இடது திருவடியை வளைத்துத் தூக்கி நடனம் புரிகின்றார்.  அதனால் அத் திருவடி குஞ்சித பாதம் எனப்படும்.  அது சஞ்சித வினைகளை அகற்ற வல்லது.

தாபரம் வைத்து ஆடுபவர் ---

தாபரம் - பூமி.  வலது திருவடியை நிலத்தின் மீது ஊன்றி அழகிய ஆனந்த நடனம் புரிகின்றார்.  இறைவனுடைய அருட்கூத்து, ஆக்கல், காத்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களையும் புரியும் அற்புத சக்தி உடையது.

கற்பனை கடந்த சோதி, கருணையே உருவம் ஆகி,
அற்புதக் கோலம் நீடி, அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்து நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்ற போற்றி

என்று சேக்கிழார் பெருமான் இந்த நடனத்தைப் போற்றி செய்கின்றார்.

தேனிரசக் கோவை இதழ்ப் பூவை, குறப்பாவை ---

பூவை - நாகணவாய்ப் பறவை.  வள்ளி பிராட்டி நாகணவாய்ப் பறவை போன்றவர்.  அவருடைய மொழி தேனின் மதுரம் போன்றது.

தனத்தே உருகி ---

வள்ளி பிராட்டியின் தனங்கள் இரண்டும் பரஞானத்தையும், அபரஞானத்தையும் குறிக்கும். ஞானபண்டிதனாம் முருகவேள், வள்ளியின்பால் உள்ள பரஞான அபரஞானங்களைக் கண்டு உள்ளம் உருகுகின்றார் என உணர்க.  இதனைச் சேக்கிழார் பெருமான், "உவமை இலாக் கலைஞானம்" என்கின்றார்.

கருத்துரை

அண்ணாமலை அண்ணலே! அடியேன் நரகிடை விழாவண்ணம் உமது சோதிமயமாம் பாதமலரைத் தந்தருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...