உடல் நலம் பேணுதல்





19. உடல் நலம் பேணுதல்

மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,
     மறுவறு விரோசனந்தான்
வருடத்து இரண்டுவிசை, தைலம் தலைக்கிடுதல்
     வாரத்து இரண்டுவிசையாம்,

மூதறிவி னொடுதனது வயதினுக்கு இளையஒரு
     மொய்குழ லுடன்சையோகம்,
முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
     முதிரா வழுக்கையிள நீர்,

சாதத்தில் எவளாவு ஆனாலும்பு சித்தபின்
     தாகந் தனக்குவாங்கல்,
தயையாக உண்டபின் உலாவல்,இவை மேலவர்
     சரீரசுகம் ஆம் என்பர்காண்,

மாதவகு மாரிசா ரங்கத்து உதித்தகுற
     வள்ளிக்கு உகந்த சரசா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மாதவ குமாரி சாரங்கத்து உதித்த குறவள்ளிக்கு உகந்த
சரசா --- (உன்னை மணம் புரிய வேண்டும் என்று) பெருந்தவம் புரிந்த மங்கையும், மான் வயிற்றிலே உதித்தவளும் ஆன வேடர் குலத்திலே வளர்ந்தவளும் ஆன வள்ளியம்மையின் மனத்திற்கு இனிமையானவனே!,

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     மாதத்து இரண்டு விசை மாதரைப் புல்குவது --- மாதத்திற்கு இரண்டு முறை பெண்களைக் கூடுவது,

     மறு அறு விரோசனம் தான் வருடத்து இரண்டு விசை --- குற்றமற்ற வயிற்றுக் கழிவுக்கு மருந்து இடுதல் ஆண்டுக்கு இருமுறை,

     தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசை ஆம் --- எண்ணெய் தலையில் தேய்த்து முழுகுவது வாரத்துக்கு இரண்டு முறை,

     மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்குழலுடன் சையோகம் --- பேரறிவு கொண்டு, தனக்கு வயதில் இளையவளும், அடர்ந்த கூந்தலையுடையவளும் ஆகிய ஒரு பெண்ணுடன் சேர்க்கை,

     முற்று தயிர் --- முதிர்ந்த தயிர்,

     காய்ச்சு பால் --- காய்ச்சிய பால்,

     நீர் மோர் --- நீர் மிகுந்த மோர்,

     உருக்கு நெய் --- உருக்கிய நெய்,

     முதிரா வழுக்கை இளநீர் --- முற்றாத வழுக்கையை உடைய இளநீர்,

     சாதத்தில் எவ்வளவு ஆனாலும் புசித்தபின் தாகம் தனக்கு வாங்கல் --- எவ்வளவு உணவானாலும் உண்ட பிறகே நீர் குடித்தல்,

     தயையாக உண்டபின் உலாவல் --- உடம்பின் மேல் இரக்கம் வைத்து உண்ட பிறகு சிறிதே உலாவுதல்,

     இவை --- இவற்றை,

     மேலவர் சரீரசுகம் ஆம் என்பர் --- பெரியோர் உடலுக்கு நலத்தைத் தருபவை ஆகும் என்று மேலோர் கூறுவர்.

        விளக்கம் --- திருமாலின் பெண்கள் இருவர் முருகனை அடையத் தவஞ்செய்தனர். வானவரிடம் தெய்வயானையாக இந்திரனின் வெள்ளானையால் வளர்க்கப்பட்ட ஒருவரும், மான் வயிற்றில் பிறந்து வேடர்குடியில் வள்ளியம்மை என்னும் ஒருவருமாக வளர்ந்தனர்.

சங்கரி தன் மருமகளை, சங்கு அரி தன் மகளை,
     சங்கரிக்கும் சங்கரனை மாமன் என்னும் தையலை,
வெங்கரி தந்திடு பிடியை, விண்ணவர் கோன் சுதையை,
     விண்ணவர்கள் பணிந்து ஏத்தும் விண்ணுலகத்து அணங்கை,
பைங்கழு நீர் விழியாளைப் பைங்கழுநீர் நிறமே
     படைத்தாளை, கைங்கழு நீர் செங்கரம் கொண்டவளை,
செங்கமலை தரும் அமுதை, கந்தர் இடத்து அமரும்
     தெய்வயானையைத் தொழுது திருவருள் பெற்றிடுவாம்.

என்னும் பாடலால், தெய்வயானை அம்மை பற்றி விளங்கும்.

மாதவனோர் மாதவனாய் மாதவம் செய்திடலும்
     வனமானாய் வந்தெதிர் மலர் மானை புணரப்
பூதல மங்கையர் உருவாய் அவதரித்து வள்ளிப்
     பொருப்புறையும் பொருப்பர் மணை விருப்பமுடன் வளர்ந்து
தீதகலும் திணை காத்து வேங்கை உருவெடுத்த
     செவ்வேளை அவ்வேளை சேர்ந்திருக்கை கோளும்
காதலுடன் புரிந்திறைவன் வளர் பாகத்தருளும்
     கன்னி எனும் வள்ளி கழல் உன்னி வழுத்திடுவாம்.

என்னும் பாடலால், வள்ளியம்மை மானின் வயிற்றில் உதித்தவர் என்பது தெளிவு.

     சாரங்கம் - மான். சரசன் - இனியவன். புல்குதல் - தழுவுதல். மறு - குற்றம். விரோசனம் - வயிற்றுப் போக்கு மருந்து. மொய்த்தல் - நெருங்குதல். குழல் - கூந்தல். சையோகம் - சேர்க்கை.

     உடம்பினிடம் உழைப்பு வாங்குவோர், அது நீடித்து இருக்கவும் நினைக்க வேண்டும். எனவே, உடம்பிடம் இரக்க்க்க காட்டவேண்டும் என்பதற்காகத் "தயையாக உலாவல்" என்று கூறினார்.

     ஒருவன் போற்றிக் காக்க வேண்டியவைகளுள் அவனது உடம்பும் ஒன்று.  அதனைக் காக்கா விட்டால் துன்பம் தரும் என்னும் பொருள்பட அமைந்த ஆசாரக் கோவைப் பாடல் பின்வருமாறு.....

தன் டம்பு, தாரம், அடைக்கலம், தன் யிர்க்கு என்று
ன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும்
பொன்னினைப் போல் போற்றிக் காத்து உய்க்க, உய்க்காக்கால்
மன்னிய ஏதம் தரும்.                      

         தன்னுடைய உடம்பும், மனைவியும், அடைக்கலமாக வைத்த பொருளும், தன் உயிர்க்கு உதவியாகும் என்று, நினைத்துச் சேர்த்து வைத்த பொருளும்,  ஆகிய இந்த நான்கையும் பொன்னைக் காப்பதுபோல, ஆதரித்துப் பாதுகாத்து ஒழுகுக. அவ்விதம் பாதுகாத்து ஒழுகாவிடில் மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும்.


பொது - 1112. கோலகாலத்தை

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கோல காலத்தை (பொது) முருகா!  பொருள் வேண்டிக் கவி பாடி வீணாகாமல்,  அருள் வேண்டிக் கவி பாடும் திறம் அருள்வ...