திருவண்ணாமலை - 0547. காணாத தூரம்

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

காணாத தூரம் (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னை விரும்பும் இந்தப் பெண்ணை  வாட விடாமல்,
மருவி அருள்


தானான தான தானான தான
     தானான தான ...... தந்ததான

காணாத தூர நீணாத வாரி
     காதார வாரம ...... தன்பினாலே

காலாளும் வேளும் ஆலால நாதர்
     காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல்

நாணான தோகை நூலாடை சோர
     நாடோர்க ளேசவ ...... ழிந்துதானே

நானாப வாத மேலாக ஆக
     நாடோறும் வாடிம ...... யங்கலாமோ

சோணாச லேச பூணார நீடு
     தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா

தோலாத வீர வேலால டாத
     சூராளன் மாளவெ ...... குண்டகோவே

சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
     தீராத காதல்சி ...... றந்தமார்பா

தேவாதி கூடு மூவாதி மூவர்
     தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


காணாத தூரம் நீள் நாத வாரி
     காது ஆரவாரம் ...... அதன் பினாலே,

கால் ஆளும் வேளும், ஆலால நாதர்
     காலால் நிலாவும் ...... முனிந்து, பூமேல்

நாண்ஆன ஆன தோகை, நூல் ஆடை சோர,
     நாசோர்கள் ஏச ...... அழிந்து, தானே

நானா அபவாத மேல் ஆக ஆக,
     நாளுதோறும் வாடி ...... மயங்கல் ஆமோ?

சோண அசல ஈச, பூண் ஆரம் நீடு
     தோள் ஆறும் ஆறும் ...... விளங்கு நாதா!

தோலாத வீர! வேலால் அடாத
     சூராளன் மாள ...... வெகுண்ட கோவே!

சேண் நாடர் லோகம் வாழ்மாது, யானை
     தீராத காதல்  ...... சிறந்த மார்பா!

தேவாதி கூடு மூவாதி மூவர்
     தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.


பதவுரை


       சோண அசல ஈச --- சிவந்த மலையாகிய திருவண்ணாமலையின் தலைவரே!

      பூண் ஆரம் நீடு தோள் ஆறும் ஆறும் விளங்கு நாதா ---  அணிந்துள்ள மாலைகள் நீண்ட பன்னிரு தோள்களிலும் விளங்குகின்ற நாதரே!

      தோலாத வீர –-- தோல்வி இல்லாத வீரமூர்த்தியே!

      வேலால் --- வேலாயுதத்தைக் கொண்டு,

     அடாத சூராளன் மாள --- தகாத செயல்களைச் செய்த சூரன் என்ற ஆண்மையாளன் இறந்து போகும்படி

     வெகுண்ட கோவே --- கோபித்த தலைவரே!

     சேண் நாடர் லோகம் வாழ் மாது --- விண்ணுலகத்தார் உடைய உலகத்தில் வாழ்ந்திருந்த

     யானை தீராத காதல் சிறந்த மார்பா --- தேவயானை என்ற மாதிடம் முடிவில்லாத அன்பு பூண்ட சிறப்புடைய திருமார்பினரே!

      தேவ ஆதி கூடும் மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் தம்பிரானே ---- தேவர்கள் முதலியோர் மூன்று எனக் கூடிய ஆதிமூர்த்திகளாம் மூவர்கள், தேவர்கட்குத் தலைவனாகிய இந்திரன் முதலியவர்கட்குத் தனிப்பெரும் தலைவரே!

      காணாத தூரம் நீள் --- கண்ணுக்கு எட்டாத தூரம் பரந்து உள்ள பெரிய

     நாத வாரி காது ஆரவாரம் --- ஒலி உள்ள கடலின் கொல்வது போன்ற ஆரவாரமும்,

     அதன் பினாலே --- அதன் பிறகு,

      கால் ஆளும் வேளும் --- தென்றல் காற்றைத் தேராகக் கொண்ட மன்மதனும்,

     ஆலால நாதர் காலால் நிலாவும் முனிந்து --- ஆலகால விடத்தை உண்ட சிவபெருமான் தனது காலினால் தேய்க்கப்பட்ட சந்திரனும் கோபிக்க,

     பூ மேல் --- இந்தப் பூமி மேல்,

      நாண் ஆன தோகை --- நாணம் கொண்ட மயில் போன்ற இப் பெண்,

     நூல் ஆடை சோர --- தனது நூலினால் ஆன ஆடை நெகிழவும்,

     நாடோர்கள் ஏச அழிந்து --- நாட்டில் உள்ளோர் பழித்துப் பேசுவதற்கு உள்ளம் அழிந்து

     தானே --- அதனால்,

      நானா அபவாதம் மேலாக ஆக --- பலவித அபவாதங்கள் மேலெழுந்து வெளிப்பட

     நாள் தோறும் வாடி மயங்கல் ஆமோ --- நாள்தோறும் உடல் மெலிந்து மயக்கம் அடையலாமோ?


பொழிப்புரை


         சிவந்த மலையாகிய திருவண்ணாமலையின் தலைவரே!

         அணிந்துள்ள மாலைகள் நீண்ட பன்னிரு தோள்களிலும் விளங்குகின்ற நாதரே!

         தோல்வி இல்லாத வீரமூர்த்தியே!

         வேலாயுதத்தைக் கொண்டு, தகாத செயல்களைச் செய்த சூரன் என்ற ஆண்மையாளன் இரந்து போகும்படி கோபித்த தலைவரே!

         விண்ணுலகத்தாருடைய உலகத்தில் வாழ்ந்திருந்த தேவயானை என்ற மாதிடம் முடிவில்லாத அன்பு பூண்ட சிறப்புடைய திருமார்பினரே!

         தேவர்கள் முதலியோர், மூன்று எனக் கூடிய ஆதிமூர்த்திகளாம் மூவர்கள், தேவர்கட்குத் தலைவனாகிய இந்திரன் முதலியவர்கட்குத் தனிப்பெரும் தலைவரே!

         கண்ணுக்கு எட்டாத தூரம் பரந்து உள்ள பெரிய ஒலி உள்ள கடலின் கொல்வது போல் ஆரவாரம் புரியவும், அதன் பின், தென்றல் காற்றைத் தேராகக் கொண்ட மன்மதனும், ஆலகால விடத்தை உண்ட சிவபெருமான் தனது காலினால் தேய்க்கப்பட்ட சந்திரனும் கோபிக்க, இந்தப் பூமி மேல்,  நாணம் கொண்ட மயில் போன்ற இப் பெண், தனது நூலினால் ஆன ஆடை நெகிழவும், நாட்டில் உள்ளோர் பழித்துப் பேசுவதற்கு உள்ளம் அழிந்து அதனால், பலவித அபவாதங்கள் மேலெழுந்து வெளிப்பட நாள்தோறும் உடல் மெலிந்து மயக்கம் அடையலாமோ?


விரிவுரை


இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.

காணாத தூர நீணாத வாரி ---

காணமுடியாத தூரம் பரந்து உள்ளதும், நீண்ட ஒலியினையும் உடைய கடல்.

"நீள் நாதம்" என்ற சொல் "நீணாதம்" என வந்தது.  காணாத நீணாத என்ற சொல்லமைப்பு சுவையுடையது.

காது ஆரவாரம் ---

காதுதல் - கொல்லுதல்.  கொல்வது போன்ற கொடுமையைச் செய்வது கடல் ஓசை.

கால் ஆளும் வேளும் ---

கால் - காற்று.  ஆளும் வேளும் - காற்றைத் தேராக ஆளுகின்ற மன்மதன்.  காலாளும் வேளும் என்று அடிகளார் தமிழ்ச் சொல்லை எத்தனை அழகாக அமைக்கின்றார் பாருங்கள்.

ஆலால நாதர் காலால் நிலாவும் ---

தட்ச யாகத்தில் வீரபத்திரர் சந்திரனைக் காலால் தேய்த்து அருளினார்.

சந்திரனைத் தேய்த்து அருளி தக்கன்தன் வேள்வியினில் ---    ---  திருவாசகம்.

முனிந்து ---

மன்மதனும், சந்திரனும் காமுகரைச் சினந்து வேதனைப் படுத்துவர்.

காதல் நோய் உடையோருக்குக் கடலோசை, மன்மதன், சந்திரன், ஊரவர் பேசும் உரை உவைகள் பெரும் துயரைத் தரும்.

நானா அபவாத மேலாக ---

நானா அபவாதம் மேல் ஆக.  ஊரார்கள் நாலாவகையான பழியுரை பகர்வர்.

வாடி மயங்கலாமோ ---

முருகப் பெருமானே, உன்னை விரும்புகின்ற இப் பெண், இவ்வாறு உடல் மேலிந்து உள்ளம் நலிந்து அழிவது முறையோ முறையன்று.  நீ இவளை மருவி ஆண்டருள்.

பூணாரம் ---

பூண் ஆரம். பூணுகின்ற மாலைகள்.  அல்லது முத்து மாலைகள்.

தோலாத வீர ---

தோல்வி இல்லாத வீரமூர்த்தி முருகவேள்.  வெற்றிக்குமரன்.

தேவாதி கூடு மூவாதிதேவர் தேவாதி தேவர்கள் தம்பிரானே ---

தேவர்கள், மூவர்கள் முதலிய யாவர்க்கும் தனிப்பெரும் தலைவன் முருகப் பெருமான் என்று அவருடைய முழுமுதல் தன்மையை அடிகளார் கூறுகின்றார்.


கருத்துரை  


அருணை அண்ணலே, இப் பெண்ணை மருவி ஆண்டருள்.   

No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...