திருவண்ணாமலை - 0556. கோடுஆன மடவார்கள்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கோடுஆன மடவார்கள் (திருவருணை)

திருவருணை முருகா!
உனது திருவடியைத் தந்து அருள்.


தானான தனதான ...... தனதான


கோடான மடவார்கள் ......        முலைமீதே

கூர்வேலை யிணையான ......    விழியூடே

ஊடாடி யவரோடு ......           முழலாதே

ஊராகத் திகழ்பாத ......           மருள்வாயே

நீடாழி சுழல்தேசம் ......          வலமாக

நீடோடி மயில்மீது ......          வருவோனே

சூடான தொருசோதி ......         மலைமேவு

சோணாடு புகழ்தேவர் ......       பெருமாளே.


பதம் பிரித்தல்


கோடு ஆன மடவார்கள் ......     முலைமீதே,

கூர்வேலை இணை ஆன ......    விழி ஊடே,

ஊடுஆடி அவரோடும் ......        உழலாதே,

ஊர் ஆகத் திகழ்பாதம் ......       அருள்வாயே.

நீடு ஆழி சுழல் தேசம் ......      வலமாக

நீடு ஓடி மயில்மீது ......          வருவோனே!

சூடானது ஒரு சோதி ......         மலைமேவு

சோழநாடு புகழ்தேவர் ......       பெருமாளே.


பதவுரை

         நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது வருவோனே --- பரந்த கடல் சூழ்ந்த உலகத்தை வலமாக முழுதும் ஓடி மயில் மீது வந்தவரே!

         சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே --- நெருப்பான ஒப்பற்ற சோதி மலையாகிய திருவண்ணாமலையில் சோழ நாட்டார் புகழ வீற்றிருக்கின்ற பெருமையில் சிறந்தவரே!

         மடவார்கள் கோடு ஆன முலை மீதே --- பெண்களின் மலை போன்ற முலைகளிலும்,

         கூர்வேலை இணை ஆன விழி ஊடே --- கூரிய வேலுக்கு நிகரான கண்களிலும்,

         ஊடு ஆடி அவரோடு உழலாதே --- கலந்து பழகினவனாய் அவர்களுடன் திரியாமல்,

         ஊர் ஆக திகழ் பாதம் அருள்வாயே --- அடியேனுடைய சொந்த ஊர் போல விளங்குகின்ற திருவடிகளை அருள வேண்டும்.


பொழிப்புரை


         பரந்த கடல் சூழ்ந்த உலகத்தை வலமாக முழுதும் ஓடி மயில் மீது வந்தவரே!

         நெருப்பான ஒப்பற்ற சோதி மலையாகிய திருவண்ணாமலையில் சோழ நாட்டார் புகழ வீற்றிருக்கின்ற பெருமையில் சிறந்தவரே!

         பெண்களின் மலை போன்ற முலைகளிலும், கூரிய வேலுக்கு நிகரான கண்களிலும், கலந்து பழகினவனாய் அவர்களுடன் திரியாமல், அடியேனுடைய சொந்த ஊர் போல விளங்குகின்ற திருவடிகளை அருள வேண்டும்.

விரிவுரை
  
ஊர் ஆக திகழ்பாதம் ---

மனிதனுக்கு அயலூர் வாழ்க்கை அல்லல் தரும். அறக் கடவுள் யட்ச வடிவில் வந்து தருமபுத்திரரைப் பல வினாக்கள் வினாவினார். 

அதில் ஒரு கேள்வி.. ---எவன் மகிழ்ச்சி அடைகின்றான்....

விடை --- எந்த மனிதன் கடன் இல்லாதவனாகவும், அயலூர் போகாதவனாகவும், பகலில் ஐந்தாவது காலத்திலோ ஆறாவது காலத்திலோ கீரையானாலும் தன் வீட்டில் சமைத்து உண்பவனாகவும் இருப்பானோ அவன் மகிழ்ச்சி அடைகின்றான்.

ஆதலால், மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது சொந்த ஊர்.  இறைவனுடைய திருவடி சொந்த ஊர் போல் மகிழ்ச்சியைத் தர வல்லது.

சீர்ஆர் பவளம் கால், முத்தம் கயிறுஆக,
ஏர்ஆரும் பொற்பலகை ஏறி இனிது அமர்ந்து,
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊர் ஆகத் தந்து அருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்
போர்ஆர்வேல் கண்மடவீர் பொன்ஊசல் ஆடாமோ.      --- திருவாசகம்.

திருவள்ளுவ நாயனார் கூறுவதைக் காண்போம்....

இன்னாது இனன்இல் ஊர் வாழ்தல், அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

ஆதரவான இனத்தவர் இல்லாத ஊரில் வாழ்தல் என்பது துன்பமானது. இனிய காதலரைப் பிரிதல் என்பது, அவ்வாறு வாழ்தலைக் காட்டிலும் மிகத் துன்பமானது.

நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது வருவோனே ---

கனி காரணமாக உலகம் முழுவதும் ஓரே நொடியில் முருகன் மயில் மீது வலம் வந்து அருளினார்.

ஆகமம் விளைத்த அகில லோகமும் நொடிப்பொழுதில்
ஆசையொடு சுற்றும்அதி வேகக்காரனும்...    ---  திருவேளைக்காரன் வகுப்பு.


சூடானது ஒரு சோதி மலைமேவு சோணாடு புகழ்தேவர் பெருமாளே ---

மாலும் அயனும் இகலி, நான் பரம் நான் பரம் என்று கூறிவிட்டு மலைந்தபோது, சிவபெருமான் அவர்கள் முன் சோதித் தூணாக நின்று அருளினார். அது அண்ணாமலை என வழங்கல் உற்றது.

சோழநாட்டு அன்பர்களிடம் அருணகிரியாருக்கு நல்ல மதிப்பு உண்டு. சோழநாட்டைப் பற்றி அவர் கூறும் அரிய பாடல் இது...

ஈதலும்பல கோலால பூசையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும்    மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழமண்டல மீதே மனோகர …      --- (நாதவிந்து) திருப்புகழ்.


கருத்துரை


அருணாசலம் மேவிய அண்ணலே, உன் பாதமலரைத் தந்து அருள்.

No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...