திரு ஆனைக்கா - 0514. பரிமளம் மிகஉள





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பரிமளம் மிகஉள (திருவானைக்கா)

முருகா!
இறந்தபின் சேரும் நரகத்தில் இப்பொதே விழுந்துள்ள மூடனை,
தேடி ஆண்டு அருள்.


தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான


பரிமள மிகவுள சாந்து மாமத
     முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
          பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே

பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
     பரிபுர மலரடி வேண்டி யேவிய
          பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா

விரகனை யசடனை வீம்பு பேசிய
     விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
          வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா

வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
     விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
          வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது.....மொருநாளே

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
     மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
          கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
     கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
          கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா

முரணிய சமரினில் மூண்ட ராவண
     னிடியென அலறிமு னேங்கி வாய்விட
          முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே

முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
     யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
          முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...பெருமாளே.


பதம் பிரித்தல்


பரிமள மிக உள சாந்து, மாமத
     முருகு அவிழ் வகைமலர் சேர்ந்து, கூடிய
          பலவரி அளி துயில் கூர்ந்து, வான்உறு ...... முகில் போலே

பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்,
     பரிபுர மலர்அடி வேண்டி, ஏவிய
          பணிவிடைகளில் இறுமாந்த கூளனை,...... நெறிபேணா

விரகனை, அசடனை, வீம்பு பேசிய
     விழலனை, உறுகலை ஆய்ந்திடா முழு
          வெகுளியை, அறிவு அது போம் கபாடனை, ...... மலம் மாறா
  
வினையனை, உரைமொழி சோர்ந்த பாவியை,
     விளிவு உறு நரகு இடை வீழ்ந்த மோடனை,
          வினவி முன் அருள்செய்து பாங்கின் ஆள்வதும்.....ருநாளே?

கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ,
     மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி,
          கழல்அணி மலைமகள், காஞ்சி மாநகர் ....உறைபேதை,

களிமயில், சிவனுடன் வாழ்ந்த மோகினி,
     கடல் உடை உலகினை ஈன்ற தாய், மை,
          கரிவனம் உறை அகிலாண்ட நாயகி ......அருள்பாலா!

முரணிய சமரினில் மூண்ட ராவணன்,
     இடி என அலறி முன் ஏங்கி வாய்விட,
          முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே!

முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை,
     இருதன கிரிமிசை தோய்ந்த காமுக!
          முதுபழ மறைமொழி ஆய்ந்த தேவர்கள் ...பெருமாளே.


பதவுரை

         கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ --- பகைவர்களுடைய முப்புரங்களை அழிந்து தூளாகுமாறு,

         மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி --- மேரு மலையை ஒரு கையில் வில்லாக வளைத்த குளிர்ச்சி உடைய தேவியும்,

      கழல் அணி மலைமகள் --- சிலம்பணிந்த மலைமகளும்,

     காஞ்சி மாநகர் உறை பேதை --- பெருமை பொருந்திய காஞ்சி நகரில் வீற்றிருக்கும் காமாட்சியும்,  

      களிமயில் --- இன்பமாய் ஆடும் மயில் போன்றவளும்,

     சிவனுடன் வாழ்ந்த மோகினி --- சிவபெருமானுடன் வாழும் அழகியும்,

      கடல்உடை உலகினை ஈன்ற தாய் --- கடலை ஆடையாகக் கொண்ட உலகத்தை ஈன்ற அன்னையும்,

     உமை --- உமாதேவியும்,

         கரிவனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா --- திருவானைக்காவில் வீற்றிருக்கும் அகிலாண்ட நாயகியாகிய எம்பெருமாட்டி பெற்ற பாலகரே!

         முரணிய சமரினில் மூண்ட ராவணன் --- மாறுபட்ட போரில் முற்பட்டு வந்த இராவணன்

         இடி என அலறி முன் ஏங்கி வாய்விட --- இடியைப் போன்ற ஓசையுடன் அலறியும், அதற்கு முன் கலங்கி வாய்விட்டு அழவும்,

         முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே --- அவனுடைய பல தலைகளை அறுத்துத் தள்ளிய நீண்ட திருமேனி உடைய திருமாலின் திருமருகரே!

         முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை --- முன்பு, ஒப்பற்ற குறமகளாகிய வள்ளியம்மையின் நுண்ணிய நூல் போன்ற இடை மீதும்,

         இரு தன கிரிமிசை தோய்ந்த காமுக --- இரண்டு கொங்கைகளாகிய மலைகள் மீதும் முழுகிய விருப்பம் உடையவரே!

         முது பழமறை மொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே --- மிகப் பழையதான வேதவாக்கியங்களை ஆய்ந்துள்ள தேவர்கள் போற்றும் பெருமையில் சிறந்தவரே!

         பரிமளம் மிக உள சாந்து மா(ன்) மத(ம்) ... நறுமணம் மிக்க கலவைச் சாந்து, கஸ்தூரி,

         முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய --- வாசனை வீசும் நல்ல பூக்கள் இவைகளில் பொருந்திக் கூடியதும்,

         பல வரி அளி துயில் கூர்ந்து வான் உறு முகில் போல --- பல ரேகைகளைக் கொண்ட வண்டுகள் துயில் கொண்டதும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்றதும்,

      பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள் --- பரந்துள்ள இருளைப் போல் கரியதுமான கூந்தலை உடைய மாதர்களின்

      பரிபுர மலர் அடி வேண்டி --- சிலம்பு அணிந்த மலர் போன்ற பாதங்களை விரும்பி,

      ஏவிய பணிவிடைகளில் இறுமாந்த கூளனை --- அவர்கள் இட்ட வேலைகளை பணியாளாகச் செய்வதில் பெருமை கொள்ளும் பயனற்ற என்னை,

      நெறி பேணா விரகனை, அசடனை --- ஒழுக்க முறையை அனுஷ்டிக்காத தந்திரசாலியை, மூடனை,

      வீம்பு பேசிய விழலனை --- வீண் புகழ்ச்சிப் பேசும் உதவாக் கரையை,

      உறு கலை ஆய்ந்திடா முழு வெகுளியை --- உள்ள கலை நூல்களை ஆய்ந்து அறியாத முழு கோபக்காரனை,

      அறிவது போம் கபாடனை --- அறிவை ஓடிப்போகுமாறு தப்பவிட்ட காவலாளனை,

      மலம் மாறா வினையனை --- மும்மலங்கள் நீங்காத தீவினை நிரம்பியவனை,

     உரை மொழி சோர்ந்த பாவியை --- சொல்லும் சொல் தவறிய பாவியை,

       விளிவு உறு நரகு இடை வீழ்ந்த மோடனை --- இறந்தபின் சேரும் நரகத்தில் இப்பொதே விழுந்துள்ள மூடனை,

      வினவிமுன் --- இப்படிப்பட்ட என்னை எங்கு உளான் என்று வினாவி,

     அருள்செய்து --- திருவருள் பாலித்து,

     பாங்கின் ஆள்வதும் ஒருநாளே ---  நன்கு ஆண்டருளுவதாகிய காலமும் ஒன்று உண்டாகுமோ?

பொழிப்புரை


         பகைவர்களுடைய முப்புரங்களை அழிந்து தூளாகுமாறு, மேரு மலையை ஒரு கையில் வில்லாக வளைத்த குளிர்ச்சி உடைய தேவியும், சிலம்பணிந்த மலைமகளும், பெருமை பொருந்திய காஞ்சி நகரில் வீற்றிருக்கும் காமாட்சியும், இன்பமாய் ஆடும் மயில் போன்றவளும், சிவபெருமானுடன் வாழும் அழகியும், கடலை ஆடையாகக் கொண்ட உலகத்தை ஈன்ற அன்னையும், உமாதேவியும்,  திருவானைக்காவில் வீற்றிருக்கும் அகிலாண்ட நாயகியாகிய எம்பெருமாட்டி பெற்ற பாலகரே!

         மாறுபட்ட போரில் முற்பட்டு வந்த இராவணன், இடியைப் போன்ற ஓசையுடன் அலறியும், அதற்கு முன் கலங்கி வாய்விட்டு அழவும்,  அவனுடைய பல தலைகளை அறுத்துத் தள்ளிய நீண்ட திருமேனி உடைய திருமாலின் திருமருகரே!

         முன்பு, ஒப்பற்ற குறமகளாகிய வள்ளியம்மையின் நுண்ணிய நூல் போன்ற இடை மீதும், இரண்டு கொங்கைகளாகிய மலைகள் மீதும் முழுகிய விருப்பம் உடையவரே!

         மிகப் பழையதான வேதவாக்கியங்களை ஆய்ந்துள்ள தேவர்கள் போற்றும் பெருமையில் சிறந்தவரே!

         நறுமணம் மிக்க கலவைச் சாந்து, கஸ்தூரி, வாசனை வீசும் நல்ல பூக்கள் இவைகளில் பொருந்திக் கூடியதும், பல ரேகைகளைக் கொண்ட வண்டுகள் துயில் கொண்டதும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்றதும், பரந்துள்ள இருளைப் போல் கரியதுமான கூந்தலை உடைய மாதர்களின் சிலம்பு அணிந்த மலர் போன்ற பாதங்களை விரும்பி, அவர்கள் இட்ட வேலைகளை பணியாளாகச் செய்வதில் பெருமை கொள்ளும் பயனற்ற என்னை, ஒழுக்க முறையை அனுஷ்டிக்காத தந்திரசாலியை, மூடனை, வீண் புகழ்ச்சிப் பேசும் உதவாக் கரையை, உள்ள கலை நூல்களை ஆய்ந்து அறியாத முழு கோபக்காரனை, அறிவை ஓடிப்போகுமாறு தப்பவிட்ட காவலாளனை, மும்மலங்கள் நீங்காத தீவினை நிரம்பியவனை, சொல்லும் சொல் தவறிய பாவியை, இறந்தபின் சேரும் நரகத்தில் இப்போதே விழுந்துள்ள மூடனை,  இப்படிப்பட்ட என்னை எங்கு உளான் என்று வினாவி, திருவருள் பாலித்து, நன்கு ஆண்டருளுவதாகிய காலமும் ஒன்று உண்டாகுமோ?


விரிவுரை

பரிமள மிகவுள சாந்து ---

சாந்து - சந்தனம்.  புனுகு ஜவ்வாது அரகஜா பன்னீர் முதலிய வாசனைப் பண்டங்களுடன் கூடிய சந்தனம்.


மாமதம் ---

மா - மிருகம்.  இங்கு மானைக் குறித்தது.  மான் மதம் ஆகிய கஸ்தூரி.  இது சிறந்த வாசனைப் பண்டம்.


பல வரி அளி துயில் கூர்ந்து ---

வரிகள் பலவுடைய வண்டுகள் கூந்தலில் உள்ள மலர்களின் தேனில் மொய்த்து, தேனை உண்டு, உண்ட மயக்கத்தால் அக் கூந்தலிலேயே உறங்கி விடுகின்றன.

அந்த வண்டு போல் மண்டுவாகிய காமுகன் மாதர்களின் கூந்தலில் மயங்கி, அறிவு இழந்து, அறியாமையில் உறங்கி விடுகின்றான் என்பது குறிப்பு.


ஏவிய பணிவிடைகளில் இறுமாந்த கூளன் ---

விலைமாதர்கள் இட்ட ஏவலைச் செய்து, அதனை ஒரு பெருமையாக எண்ணி மகிழ்ந்திருப்பர் காமுகர்.

குயில்மொழிநன் மடவியர்கள் விழியால் உருக்குபவர்,
தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர், நகை
கொளும்அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் ...... அனைவோரும்

தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள்,
முலையில் உறு துகில் சரிய நடுவீதி நிற்பவர்கள்,
தனம் இலியர் மனமுறிய நழுவா உழப்பியர்,கண் ......  வலையாலே

சதிசெய்து அவரவர் மகிழ அணைமீது உருக்கியர்கள்,
வசம் ஒழுகி, அவர்அடிமை என, மாதர் இட்டதொழில்
தனில் உழலும் அசடனை,உன் அடியே வழுத்தஅருள் .....தருவாயே.
                                                      ---  (குமரகுருபரமுருக) திருப்புகழ்.

 
நெறி பேணா விரகனை ---

ஆன்ம ஈடேற்றத்துக்கு உரிய ஞானநெறி இது என்று தெரிந்து, அதனை விரும்பாத தந்திரக்காரன்.  விரகன் - உபாயக்காரன்.


வீம்பு பேசிய விழலனை ---

வீம்பு - தற்புகழ்ச்சி.  கர்வத்தினால் தன்னைத் தானே புகழ்ந்து பேசித் திரிவர் பலர்.  அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.


உறுகலை ஆய்ந்திடா முழு வெகுளியை ---

நீதிநெறிகளுடன் கூடிய அறிவு நூல்களை ஆராய்ந்து அறியாத பெரும் கோபக்காரன்.

மனிதர்கள் புரியும் பிழைகள் பல. கொலை, புலை, களவு, சூது, பிறன்மனை நயத்தல், கள் குடித்தல் போன்ற பிழைகளைக் காட்டிலும், தலையாய பிழை ஒன்று உளது. அது, கற்க வேண்டிய நூல்களைக் கல்லாமையே ஆகும். ஆதலால், பட்டினத்தடிகளார், "கல்லாப் பிழையும்" என்று முதலில் வைத்துக் கூறுவாராயினார்.


அறிவது போம் கபாடனை ---

ஆன்மாவுக்கு உறுதுணையாக நின்று என்றும் உதவும் அறிவைப் போகுமாறு விட்ட காவலாளி.  கபாடம் - தாள்.

கபாடனை என்ற சொல்லை கபடன் என்றும் கொண்டு, வஞ்சனைக்காரன் என்று கூறினும் பொருந்தும்.


விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை ---

பாவம் செய்தோர் இறந்தபின் ரௌரவம் முதலிய நரகில் வீழ்ந்து பெரும் துன்பத்தை அடைவார்கள்.

எமதூதர்கள் பாவிகளை வறுத்த மணலில் சொருகியும், கொதிக்கின்ற எண்ணெயில் இட்டும், நச்சுக் கிருமிகள் நிரம்பிய குழியில் அழுத்தியும், செக்கில் இட்டு அரைத்தும், காய்ந்த செப்புப் பாவையைத் தழுவச் செய்தும், தசைகளை அறுத்துத் தின்னும்படி வருத்தியும், கண்ணிலும் வாயிலும் இரும்பை உருக்கி வார்த்தும் வேதனைப் படுத்துவர்..

புவனத்து ஒருபொன் தொடிசிற்று உதரக்
     கருவில் பவம் உற்று, விதிப் படியில்
          புணர் துக்க சுகப் பயில்வுற்று மரித் ...... திடில்,ஆவி

புரியட்டகம் இட்டு, அது கட்டி இறுக்கு,
     அடி, குத்து என அச்சம் விளைத்து அலறப்
          புரள்வித்து, வருத்தி, மணல் சொரிவித்து, ......அனலூடே

தவனப் படவிட்டு, உயிர் செக்கில் அரைத்து,
     அணி பற்கள் உதிர்த்து, எரிசெப்பு உருவைத்
          தழுவப் பணி,முட்களில் கட்டி இசித் ...... திட,வாய்கண்

சலனப் பட,எற்று இறைச் சிஅறுத்து
     அயில்வித்து,முரித்து,நெரித்து உளையத்
          தளை இட்டு வருத்தும் யம ப்ரகரத் ...... துயர்தீராய்.  ---  திருப்புகழ்.

 
வினவி முன் அருள் செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே ---

இத்தகைய தீயேனைத் தேவரீர், இவன் எங்கே என்று கேட்டு, அருள் செய்து, உமது திருவருளால் காத்தருளும் நாள் ஒன்று எனக்கு உண்டாகுமோ என்று அருணகிரிப் பெருமான் இறைவனிடம் கல்லும் கரைய, இரும்பும் உருக முறையிடுகின்றார்.

தேடி ஆட்கொள்வது இறைவனுடைய பெருங்கருணை ஆகும்.  "தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே" என்பார் மணிவாசகர்.

மாசுஇல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று
     தேடி, விளையாடியே, அங்ஙனே நின்று
     வாழுமயில் வீரனே! செந்தில் வாழ்கின்ற பெருமாளே.
                                                    (மூளும்வினை) திருப்புகழ்.
   
கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ, மலைசிலை ஒரு கையில் வாங்கு நாரணி ---

தேவர்கள் திரிபுரத்தை அழிக்குமாறு சிவபெருமானுக்கு மேருமலையை வில்லாகத் தந்தார்கள்.

சிவபெருமான் மாதொரு கூறன். இடப்பாகம் உமையவளுடையது.  வில்லைத் தாங்கிய கை இடக்கை. அது உமையம்மையின் திருக்கரம். ஆதலால், மேருமலையை வில்லாக வளைத்தவர் பார்வதி தேவியார் என்று இங்கே கூறி அருளினார்.

வாங்குதல் - வளைத்தல்.

இதே கருத்தை சுவாமிகள், திருமுல்லைவாயில் திருப்புகழிலும் வைத்துப் பாடி உள்ளார்.

அப்பர் பெருமானும் இதே கருத்தில் பாடி உள்ளார். வில்லை வளைத்த திருக்கரம் உமையம்மையாருடையதே என்கிறார்..

கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்துஎம் கண்ணுதலே
வில் தாங்கிய கரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே,
நல் தாள் நெடும்சிலை நாண்வலித்த கரம் நின்கரமே,
செற்றார் புரம்செற்ற சேவகம் என்னைகொல்? செப்புமினே.

         இதன் பொழிப்புரை : கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும், நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே ! வில்லைத் தாங்கிய கை, வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே. நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ள கையே. இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள் .

நாரம் - நீர், அன்பு.  அன்பைப் பூண்டவள் நாரணி.


கழல் அணி மலைமகள் ---

கழல் - சிலம்பு.  இமவான் செய்த தவத்தின் காரணமாக உமாதேவியார் மானச வாவியில் தாமரைக் மலத்தில் இளம் குழவியாகத் தோன்றி அவனால் வளர்க்கப் பெற்றார்.


காஞ்சி மாநகர் உறை பேதை ---

முத்தித்தலம் எழனுள் முதன்மை பெற்ற காஞ்சி மாநகரில் அம்பிகை தவம் புரிந்து இறைவனுடைய இடப்பாகம் பெற்றாள்.

      அட்சி ---  காமாட்சி.

அயன் அரி அரன் என்ற மும்மூர்த்திகளையும் தமது திருக்கண்களில் தோற்றுவித்தவர்.  ஆதலால், காமாட்சி எனப் பேர் பெற்றனர்.  சத்தி பீடங்களில் சிறந்தது காமகோடிப் பீடம்.


கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை ---

இந்தப் பூதலம் கடலை ஆடையாக உடுத்து அணி செய்கின்றது.  உலகங்களை எல்லாம் தன் சங்கல்பத்தால் பெற்றெடுத்த தாய் பார்வதி. 

அகிலாண்ட கோடிஈன்ற அன்னையே, பின்னையும்
கன்னிஎன மறைபேசும் ஆனந்தரூப மயிலே...  ---  தாயுமானார்.


கரிவனம் உறை அகிலாண்டநாயகி ---

கரிவனம் - திரு ஆனைக்கா.  இத் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள தேவி அகிலாண்டநாயகி.  மிகவும் அருள் திறம் அமைந்த தேவி.  இப் பிராட்டி, மிகவும் கெம்பீரமான அருட்காட்சி தந்து அடியவர்களின் அல்லல் தீர்த்து நல்லருள் புரிபவள்.

காளமேகத்துக்குக் கருணை புரிந்தவள்.

இத் தேவிக்கு ஆதிசங்கரர் செய்து அமைத்த ஸ்ரீசக்கரம் பொறித்த தாடங்கம் மிகவும் சிறப்பாக அமைந்துளது.

நீண்ட மாயவன் ---
மாவலியின்பால் மூவடி யாசித்து, உலகத்தை ஓரடியாக அளக்கும் பொருட்டு மூதண்டகூட முகடு முட்டத் திருமாலம் விசுவரூபம் எடுத்து நின்றார்.

முதுபழ மறைமொழி ---

வேதம் அநாதி.  ஆதலால், காலத்தால் கட்டுப்படாதது.   மறை - அநேக நுண் பொருள்கள் இலைமறை காய்போல் மறைந்து இருப்பதனால், வேதம் மறை எனப்பட்டது.

கருத்துரை

தேவர் போற்றும் திருமுருகேசா, அடியைனை ஆட்கொண்டு அருள்வாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...