திருவண்ணாமலை - 0552. குரவநறும் அளக





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குரவநறும் அளக (திருவருணை)

திருவருணை முருகா!
அடியேன் மீது திருக்கடைக்கண் நோக்கம் வைத்து அருள்


தனதனன தனதனன தானத் தாத்தன
     தனதனன தனதனன தானத் தாத்தன
     தனதனன தனதனன தானத் தாத்தன ...... தனதான


குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ
     குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ
     குமுதமல பொளிபவள வாயைக் காட்டியெ ...... குழையாத

குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ
     குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ
     குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ ......கொடியேன்யான்

பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய
     புலையனிவ னெனவுலக மேசப் போக்கென
     பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் ...... பெருகாதே

புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ
     பொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாத்தென
     புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட ......நினையாதோ

அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு
     மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ
     அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய .....அறிவோனே

அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்
     தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ
     அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய....... இளையோனே

சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட
     துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம
     சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட ...... முனிவோனே

துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்
     துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை
     சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை .....பெருமாளே.


பதம் பிரித்தல்


குரவ நறும் அளக குழல் கோதிக் காட்டியெ,
     குலவும் இரு கயல்கள் விழி மோதித் தாக்கியெ,
     குமுதமலர் ஒளிபவள வாயைக் காட்டியெ, ...... குழையாத

குணம் முறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ,
     குலைய இரு கலைநெகிழ வீசிக் காட்டியெ,
     குடவி இடும் அரிவையர்கள் ஆசைப் பாட்டிலெ, ......கொடியேன்யான்

பொருள் இளமை கலை மனமும் ஏகப் போக்கிய,
     புலையன் இவன் என உலகம் ஏச, போக்கு என,
     பொறி வழியில் அறிவு அழிய,  பூதச் சேட்டைகள் ......  பெருகாதே,

புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ,
     பொதுவகையில் அருணை நிலை நீள் கர்த்தா அத்த என
     புகழ், அடிமை தனை உனது பார்வைக் காத்திட ......நினையாதோ?

அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்த அக்கமும்
     அணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ,
     அறிவு அரிய ஒருபொருளை போதத்து ஏற்றிய .....அறிவோனே!

அழகுசெறி குழலியர்கள், வானத்து ஆட்டியர்
     தரும் அமுது சரவணையில் வாவித் தேக்கியெ,
     அறுசிறுவர் ஒரு உடலம் ஆகித் தோற்றிய......இளையோனே!

சுரர் உலவ, அசுரர்கள் மாளத் தூள்பட,
     துயவும் உடல் அயிலை விடு மாவுக்ர! க்ரம!
     சுவறி எழு கடலும் முறையாகக் கூப்பிட ......முனிவோனே!

துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில்
     துணை மலரின் அணுகி, தினை காவல் காத்த அனை,
     சுரிய குழல் குறமகளை, வேளைக் காத்து அணை .....பெருமாளே.


பதவுரை

       அரவமுடன் --- பாம்புடன்,

     அறுகு --- அறுகம் புல்லும்,

     மதி --- பிறைச் சந்திரனும்,

     ஆர் --- ஆத்திமலரும்,

     மத்த அக்கமும் அணியும் --- ஊமத்தம்பூவும், உருத்திராட்ச மாலையும் தரித்துள்ள

     ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ --- ஒப்பற்ற சடைமுடியை உடைய சிவபெருமான் ஏற்றுக்கொள்ளும் வண்ணம்,

     அறிவு அரிய ஒரு பொருளை --- அறிவதற்கு அரியதான ஒப்பற்ற பிரணவப் பொருளை

     போதத்து ஏற்றிய அறிவோனே --- உபதேசித்து அருளிய அறிஞர் பெருமானே!

      அழகு செறி குழலியர்கள் --- அழகு நிறைந்த கூந்தலை உடையவர்களாய்

     வானத்து ஆட்டியர் தரும் அமுது --- வானுலகத்தில் வாழும் கார்த்திகை மாதர்கள் தந்த பாலமுதத்தை

     சரவணையில் வாவித் தேக்கியெ ---  சரவண மடுவில் நிரம்ப உண்டு

     அறு சிறுவர் ஒரு உடலம் ஆகித் தோற்றிய இளையோனே  --- ஆறு குழந்தைகளாய் இருந்தவர்கள் ஒர் உடலாகி விளங்கித் தோன்றிய இளம்பூரணரே!

      சுரர் உலவ --- தேவர்கள் மகிழ்ச்சியுற்று உலாவவும்,

     அசுரர்கள் மாளத் தூள் பட --- அசுரர்கள் மாண்டு பொடிபடவும்,

     துயவும் உடல் அயிலை விடும் மா உக்ரா --- அறிவு கலங்கும்படி கோபித்த வேலாயுதத்தைச் செலுத்திய பெரிய உக்கிரமூர்த்தியே!

     க்ரம --- நீதிமானே!

     சுவறி எழு கடலும் முறையாகக் கூப்பிட முனிவோனே --- ஏழு கடல்களும் வற்றிப் போய் முறையிட்டு ஒலி செய்யக் கோபித்தவரே!

      துடி முழவு மறவரிடம் சேவல் காட்டினில் --- உடுக்கையையும் முரசையும் உடைய வேடர்களின் காவல் பூண்ட கானகத்தில்,

     துணை மலரின் அணுகி --- இரண்டு திருவடிகளும் தோய நடந்து சென்று,

     தினை காவல் காத்த அனை ---  தினைப்புனத்தைக் காவல் செய்த அன்னையும்,

     சுரிய குழல் குறமகளை --- சுருண்ட கூந்தலை உடைய குறவர் மகளும் ஆகிய வள்ளி பிராட்டியை

     வேளைக் காத்து அணை பெருமாளே --- தக்க சமயம் பார்த்து அணைந்த பெருமையில் சிறந்தவரே!

      குரவ நறும் அளக குழல் கோதிக் காட்டியெ --- குரா மலரின் நறுமணம் பொருந்திய அளகபாரமாகிய கூந்தலைக் கோதிக் காட்டியும்,

      குலவும் இரு கயல்கள் விழி மோதித் தாக்கியெ --- விளங்குகின்ற இரு கயல் மீன்கள் போன்ற கண்களால் ஆடவரது இதயத்தை மோதித் தாக்கியும்,

      குமுதமலர் ஒளி பவள வாயைக் காட்டியெ --- குமுத மலர் போன்றதும், ஒளி பொருந்திய பவளம் போன்றதும் ஆகிய வாயைக் காட்டியும்,

      குழையாத குணம் முறுக --- இளகாத காமக் குணம் முதிர்ச்சி அடையும்படி,

     இனிது பயில் கூறிக் காட்டியெ --- இனிமையாக முன் பழகிய உறவைக் காட்டும் பேச்சுக்களைப் பேசிக் காட்டியும்,
    
      குலைய இரு கலை நெகிழ வீசிக் காட்டியெ --- பெரிய புடவையும் அவிழ்ந்து போகுமாறு முன் தானையைப் பக்கம் வீசிக் காட்டியும்,

     குடவி இடும் அரிவையர்கள் ஆசைப் பாட்டிலெ --- ஆடவர்களை வளைத்து இழுக்கும் பொதுமாதர்களின் காம லீலைகளிலே,

      கொடியேன் யான் --- கொடியவனாகிய அடியேன்,

     பொருள் இளமை கலை மனமும் ஏகப் போக்கிய –--என்னுடைய பொருள், இளமை, கல்வி, மனம் ஆகிய இவைகள் யாவும் போகும்படி தொலைத்த
    
      புலையன் இவன் என உலகம் ஏச, போக்கு என --– கீழ்மகன் இவன் என்று உலகத்தவர் இகழ்ந்து உரைக்க போனதே போக்காக,
         
      பொறி வழியில் அறிவு அழிய பூதச் சேட்டைகள்  பெருகாதே --- ஐம்பொறிகளின் வழியிலே சென்று, ஐம்பூதங்களால் ஆன உடம்பின் குறும்புச் சேட்டைகள் என்னிடம் வளராதவாறு,

      புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ --- புதிய மலர்கள் பொருந்தியுள்ள தேவரீருடைய இரு திருவடிகளால் அமைதி பெற்று,

      பொதுவகையில் அருணை நிலை நீள் கர்த்தா அத்த என --– எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த வகையில், திருவண்ணாமலையில் நிலைத்துள்ள தலைவரே, அப்பனே என்று கூறி,

    புகழ் அடிமை தனை உனது பார்வைக் காத்திட  நினையாதோ --- புகழ்கின்ற அடிமையாகிய என்னை உமது திருக்கண் பார்வை காத்தளிக்க நினையாதோ?


பொழிப்புரை


         பாம்பும், அறுகம் புல்லும், சந்திரனும், ஆத்திமலரும், ஊமத்தம்பூவும், உருத்திராட்ச மாலையும் தரித்துள்ள ஒப்பற்ற சடைமுடியை உடைய சிவபெருமான் ஏற்றுக்கொள்ளும் வண்ணம், அறிவதற்கு அரியதான ஒப்பற்ற பிரணவப் பொருளை உபதேசித்து அருளிய அறிஞர் பெருமானே!

         அழகு நிறைந்த கூந்தலை உடையவர்களாய் வானுலகத்தில் வாழும் கார்த்திகை மாதர்கள் தந்த பாலமுதத்தை சரவண மடுவில் நிரம்ப உண்டு ஆறு குழந்தைகளாய் இருந்தவர்கள் ஒர் உடலாகி விளங்கித் தோன்றிய இளம்பூரணரே!

         தேவர்கள் மகிழ்ச்சியுற்று உலாவவும், அசுரர்கள் மாண்டு பொடிபடவும், அறிவு கலங்கும்படி கோபித்த வேலாயுதத்தைச் செலுத்திய பெரிய உக்கிரமூர்த்தியே! நீதிமானே! ஏழு கடல்களும் வற்றிப் போய் முறையிட்டு ஒலி செய்யக் கோபித்தவரே!

         உடுக்கையையும் முரசையும் உடைய வேடர்களின் காவல் பூண்ட கானகத்தில், இரண்டு திருவடிகளும் தோய நடந்து சென்று, தினைப்புனத்தைக் காவல் செய்த அன்னையும், கரிய கூந்தலை உடைய குறவர் மகளும் ஆகிய வள்ளி பிராட்டியை தக்க சமயம் பார்த்து அணைந்த பெருமையில் சிறந்தவரே!

         குரா மலரின் நறுமணம் பொருந்திய அளகபாரமாகிய கூந்தலைக் கோதிக் காட்டியும், விளங்குகின்ற இரு கயல் மீன்கள் போன்ற கண்களால் ஆடவரது இதயத்தை மோதித் தாக்கியும், குமுத மலர் போன்றதும், ஒளி பொருந்திய பவளம் போன்றதும் ஆகிய வாயைக் காட்டியும், இளகாத காமக் குணம் முதிர்ச்சி அடையும்படி, இனிமையாக முன் பழகிய உறவைக் காட்டும் பேச்சுக்களைப் பேசிக் காட்டியும், பெரிய புடவையும் அவிழ்ந்து போகுமாறு முன் தானையைப் பக்கம் வீசிக் காட்டியும், ஆடவர்களை வளைத்து இழுக்கும் பொதுமாதர்களின் காம லீலைகளிலே, கொடியவனாகிய அடியேன், என்னுடைய பொருள், இளமை, கல்வி, மனம் ஆகிய இவைகள் யாவும் போகும்படி தொலைத்த கீழ்மகன் இவன் என்று உலகத்தவர் இகழ்ந்து உரைக்க போனதே போக்காக, ஐம்பொறிகளின் வழியிலே சென்று, ஐம்பூதங்களால் ஆன உடம்பின் குறும்புச் சேட்டைகள் என்னிடம் வளராதவாறு, புதிய மலர்கள் பொருந்தியுள்ள தேவரீருடைய இரு திருவடிகளால் அமைதி பெற்று, எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த வகையில், திருவண்ணாமலையில் நிலைத்துள்ள தலைவரே, அப்பனே என்று கூறி, புகழ்கின்ற அடிமையாகிய என்னை உமது திருக்கண் பார்வை காத்தளிக்க நினையாதோ?


விரிவுரை


குரவநறும் அளக குழல் கோதிக் காட்டியெ ---

குரா மலரினால் மணம் வீசும் கூந்தலை நடுவீதியில் நின்று சிக்கெடுப்பார் போல் பாவனை புரிந்து, வீதிவழியே செல்லும் ஆடவர்களைத் தம் மையல் வலையில் சிக்க வைப்பார்கள் விலைமகளிர்.

அங்கை மென்குழல் ஆய்வார் போலே
சந்தி நின்றுஅய லோடே போவார்
அன்பு கொண்டிட நீரோ போறீர்     அறியீரோ.     --- திருப்புகழ்.

குலவும் இருகயல் விழிகள் மோதிக் காட்டியெ ---

அப் பொதுமகளிர் தமது கயல்மீன் போன்ற கடைக்கண் பார்வையால் ஆடவர் மனதைத் தாக்கி அல்லல் படுத்துவர்.

படைஎம படைஎன அந்திக்கும் கண்கடையாலே... --- (பரிமள) திருப்புகழ்.

குமுத மலர் ஒளிபவள வாயைக் காட்டியெ ---

குமுத மலர் போலவும் பவளம் போலவும் விளங்குகின்ற தங்களை வாயைப் புன்சிரிப்புடன் காட்டி மயக்குவர்.

குழையாத குணமுறுக இனிது பயில் கூறிக் காட்டியெ ---

ஆடவருடைய பரிதாபமான நிலைமையைக் கண்டு இளகாத குணத்தை உடையவர்கள்.  இத்தகு காம குணம் மிகுதியடையும்படி முன்னே பழகிய உறவைச் சுட்டிக்காட்டி இனிமையாகக் கனியமுதம் போல் பேசுவர்.

அன்று வந்துஒரு நாள்நீர் போனீர்,
பின்பு கண்டு அறியோம், நாம் ஈதே,
அன்றும் இன்றும்ஓர் போதோ போகா,    துயில்வாரா... --- (அங்கை) திருப்புகழ்.

அம்மாதர்கள் கூறும் இன்னுரையால் ஆடவர் மதிமயங்கி கள்ளுண்ட வண்டே போல் சொக்கித் திரிவர்.

குடவியிடும் அரிவையர்கள் ---

குடவியிடும் - ஆண்களைக் குடைந்து வளைத்துப் பிடித்து இளைக்க வைப்பார்கள்.

பொருள் இளமை கலை மனமும் ஏகப் போக்கியெ ---

விலைமகளிரின் வசமான ஆடவர்கள், செல்வம், இளமை, கல்வி, மனம் என்ற நான்கையும் ஒருங்கே தொலைத்து விடுவார்கள்.

போக்கெனப் பொறிவழியில் அறிவழிய ---

மனம்போன போக்கே போய், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளின் வழியே சென்று அழிவர்.
  
உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.

சென்ற இடத்தால் செலவிடா, தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.                 --- திருக்குறள்.

பூதச் சேட்டைகள் பெருகாதே ---

மண், நீர், அனல், காற்று, வெளி என்ற ஐம்பூதங்களால் ஆன உடம்பின் குறும்புச் செயல்கள் வளராதவாறு அடக்கி ஆளுதல் வேண்டும்.

இதற்கு வழி இறைவனுடைய திருவடித் தியானமே ஆகும்.

புதுமலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ ---

அடியவர்கள் அருச்சிக்கும் புதிய மலர்கள் பொருந்திய இறைவனுடைய திருவடியில் சாந்தி பெறுதல் வேண்டும்.

பொதுவகையில் அருணை நிலை நீள் கர்த்தா அத்த என ---

எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த பொது நிலையில் முருகன் திருவருணையில் எழுந்தருளி விளங்குகின்றான்.  அப் பரமபதியை தலைவனே, முதல்வனே என்று துதி செய்ய வேண்டும்.

புகழ் அடிமை தனை உனது பார்வைக் காத்திட நினையாதோ ---

"முருகா! உன்னையே புகழ்கின்ற அடியேனை உனது திருக்கண் பார்வை காத்தளிக்க நினையாதோ?” என்று அடிகளார் உளம் உருகி வேண்டுகின்றார்.

முருகனுடைய அருட்பார்வை ஆணவ மலத்தைக் கெடுத்து, சிவஞானத்தைக் கொடுத்துக் காக்கும் திறனுடையது.

ஆணவ அழுக்கு அடையும் ஆவியை விளக்கி, அநு
பூதி அடைவித்தது ஒரு பார்வைக்காரனும்      ---  திருவேளைக்காரன் வகுப்பு.

அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்த அக்கமும் அணியும் ---

சிவபெருமான் தமது சடையில் பாம்பு, பிறைமதி, ஆத்திமலர், ஊமத்தமலர், உருத்திராக்கமாலை ஆகியவற்றை அணிந்து அருள் புரிகின்றார்.

அறிவு அரிய ஒருபொருளை போதத்து ஏற்றிய அறிவோனே ---

அறிதற்கு அரிதான பிரணவப் பொருளைச் சிவபெருமான் ஏற்குமாறு முருகவேள் உபதேசித்தார். அதனால், அறிவோனே என்கின்றார்.

தந்தைக்கு உபதேசித்த தனயன். தம்மினும் தம் மக்கள் அறிவுடையராய் இருப்பது பெருமைக்கு உரியது.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்உயிர்க் கெல்லாம் இனிது.            ---  திருக்குறள்.


அழகு செறி குழலியர்கள், வானத்து ஆட்டியர் தரும் அமுது சரவணையில் வாவித் தேக்கியெ,  அறு சிறுவர் ஒரு உடலம் ஆகித் தோற்றிய இளையோனே ---

மால் அயன் ஆதி வானவர்களின் குறை முடிப்பான் மறைமுடிப் பொருளாகிய சிவபெருமான் தமது நெற்றிக் கண்களில் ஆறு அருட்பெரும் சுடர்களை அளித்து அருளினார்.

அந்த ஆறு அருட்சுடர்களையும் வாயு தேவனும், அக்கினி தேவனும், கொண்டுபோய் கங்கையில் விடுப்ப, கங்கையில் தவழ்ந்து சரவணப் பொய்கையில் சேர்ந்து, அழகிய சிறந்த தாமரை மலரில் ஆறு திருமுகங்களும், பதினெட்டுத் திருக்கண்களும், பன்னிரு புயங்களும் கொண்டு திருமுருகன் தோன்றியருளினார்.

அப் பெருமானுக்குப் பால் கொடுக்க ஆறு கார்த்திகைப் பெண்கள் அங்கு வந்தார்கள்.

வேண்டுவார் வேண்டுவதை உடனே வழங்கும் வள்ளலாகிய திருமுருகன். ஆறுமாதர்களும் அந்த ஒரு முருகனை எடுக்க, ஆறு குழந்தைகளாகப் பிரிந்து அறுவர் கரமலரிலும் காட்சி தந்து மாட்சி அளித்தார்.

உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர்
ஒருவர்ஒருவர்க்கு அவண் ஓர்ஓர் புத்ரன் ஆனவனும்....   --- திருவேடிச்சிகாவலன் வகுப்பு.

மறுவறு மாரலாகு மாதர்மூ விருவர்தாமும்
நிறைதரு சரவணத்தின் நிமலனை அடைந்துபோற்ற
உறுநர்கள் தமக்கு வேண்டிற்று உதவுவோன் ஆதலாலே
அறுமுக ஒருவன் வேறாய் ஆறுசிறார் உருவம்கொண்டான். --- கந்தபுராணம்.

இவ்வாரு ஒருவனே அறுவராய் நின்று கார்த்திகைப் பெண்களின் திருமுலைப்பால் உண்டு விளையாடினார்.

சிவபெருமானுடன் அங்கு உமாதேவியார் எழுந்தருளி, அந்த ஆறு குழந்தைகளையும் ஒருங்கே எடுத்து அணைக்க, முருகன் பண்டுபோல் ஒரு வடிவத்துடன் காட்சி அளித்தான்.

                              எடுத்தனள் புல்லித்
திருமுகங்கள்ஓர் ஆறுபன்னிரு புயம்சேர்ந்த
உருவம் ஒன்றுஎனச் செய்தனள் உலகம் ஈன்றுஉடையாள்..
                                                                                 ---  கந்த புராணம்.

அன்னவள் கண்டு அவ்வுருவம் ஆறினையும் – தன் இரண்டு
கையால் எடுத்து அணைத்துக் கந்தன் எனப் பேர் புனைந்து
மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்து.....                  ---  கந்தர் கலிவெண்பா.

காத்தனை ---

காத்த அனை.  தினைக் காவல் புரிந்த அன்னை.

வேளைக் காத்து அணை ---

சமயம் பார்த்து வள்ளியை மருவி அருளினான். ஆன்மாக்களின் இருவினையொப்பு, மலபரிபாகம், சத்தினிபாதம் என்ற பக்குவத்தைக் கண்டு இறைவன் திருவருள் புரிவான் என்பது குறிப்பு.

விறல்மறவர் சிறுமிதிரு வேளைக்காரப் பெருமாளே....  --- (ஒருபொழுது) திருப்புகழ்.

கருத்துரை 

அருணை அண்ணலே, உனது அடிமையைக் கடைக்கண் பார்வை செய்து காத்தருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...