திருவண்ணாமலை - 0540. கயல் விழித்தேன்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கயல் விழித்தேன் (திருவருணை)

திருவருணை முருகா!
காலன் எனை அணுகாமல் காத்து அருள்


தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான


கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
     கணவகெட் டேனெனப் ...... பெறுமாது

கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்
     கதறிடப் பாடையிற் ......         றலைமீதே

பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்
     பறைகள்கொட் டாவரச் ......      சமனாரும்

பரியகைப் பாசம்விட் டெறியுமப் பொதெனைப்
     பரிகரித் தாவியைத் ......         தரவேணும்

அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்
     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே

அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்
     தரியசொற் பாவலர்க் ......       கெளியோனே

புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்
     புனமறப் பாவையைப் ...... புணர்வோனே

பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்
     பொருமுழுச் சேவகப் ......       பெருமாளே.


பதம் பிரித்தல்


கயல் விழித்தேன் எனைச் செயல் அழித்தாய் என,
     கணவ கெட்டேன் எனப் ......     பெறுமாது,

கருது புத்ரா என, புதல்வர் அப்பா எனக்
     கதறிட, பாடையில் ......         தலைமீதே

பயில் குலத்தார் அழ, பழைய நட்பார் அழ,
     பறைகள் கொட்டா வர, ......     சமனாரும்

பரிய கைப் பாசம் விட்டு எறியும் அப்போது, னைப்
     பரிகரித்து ஆவியைத் ......       தரவேணும்.

அயில், அறச் சேவல், கைக்கு இனிதர, தோகை உற்று,
     அருணையில் கோபுரத்து ......    உறைவோனே.

அமரர் அத்தா! சிறுக் குமரி முத்தா! சிவத்து
     அரிய சொல் பாவலர்க்கு ......    எளியோனே!

புயல் இளைப்பாறு பொன் சயில மொய்ச் சாரலில்
     புன மறப் பாவையைப் ...... புணர்வோனே!

பொடி படப் பூதரத்தொடு கடல் சூரனைப்
     பொரு முழுச் சேவகப் ......      பெருமாளே.


பதவுரை
 

      அயில் --- வேலாயுதமும்,

     அறச் சேவல் --- தரும நெறியைக் காட்டும் சேவலும்

     கைக்கு இனிதர --- திருக்கரத்தில் இனிது விளங்க,

     தோகை உற்று --- மயிலின் மீது விளங்கிட,

     அருணையில் கோபுரத்து உறைவோனே --- திருவண்ணாமலையில் கோபுர வாயிலில் எழுந்தருளி இருப்பவரே!

      அமரர் அத்தா --- தேவர்களுக்குத் தலைவரே!

      சிறுக் குமரி முத்தா --- இளங் குமரியாகிய வள்ளியம்மைக்கு முத்துப் போன்றவரே!

      சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே --- சிவபெருமானை அருமையான சொற்களால் பாடுகின்ற பாவலர்களுக்கு எளிதாக நின்று அருள் புரிபவரே!

      புயல் இளைப்பாறு பொன் சயில மொய்ச் சாரலில் --- மேகங்கள் இளைப்பாறுகின்ற அழகிய வள்ளிமலையின் நெருங்கிய சாரலிலே

     புன மறப் பாவையைப் புணர்வோனே --- தினைப்புனம் காத்த வேடப் பெண்மணியை மருவுகின்றவரே!

      பொடிபடப் பூதரத்தொடு --- மலைகள் பொடியாகுமாறு

     கடல் சூரனைப் பொரு முழுச் சேவகப் பெருமாளே --- கடலில் ஒளிந்த சூரபன்மனைப் போர் செய்து அடக்கிய பரிபூரண ஆற்றல் உடைய பெருமையில் சிறந்தவரே!

      கயல் விழித்தேன் --- "மீன் போன்ற கண்களை விழித்துப் பணிவிடைகளைச் செய்தேன்,

     எனைச் செயல் அழித்தாய் என --- என்னைச் செயலற்றுப் போகும்படி செய்தவிட்டீர்களே" என்றும்,

     கணவ கெட்டேன் என --- "என் கணவரே! நான் இனி அழிந்து போனேன்" என்றும் கூறி மனைவி அழவும்,

     பெறுமாது கருது புத்ரா என --– பெற்ற தாயானவள் "என் நினைவிலேயே உள்ள மகனே" என்று புலம்பவும்,

      புதல்வர் அப்பா எனக் கதறிட --- பிள்ளைகள் அப்பா என்று கதறவும்,

     பாடையில் தலைமீதே --- பாடையின் தலைமாட்டுப் பக்கத்தில் நின்று

     பயில் குலத்தார் அழ --- அன்புடன் பழகிய சுற்றத்தார் அழவும்,

     பழைய நட்பார் அழ --- பழைய நண்பர்கள் அழவும்,

     பறைகள் கொட்டா வர --–  பறை வாத்தியங்கள் கொட்டி வரவும்,

      சமனாரும் பரிய கைப் பாசம் விட்டு எறியும் அப்போது --- இயமனும் கருத்த தனது கையில் உள்ள பாசக் கயிற்றை என் மீது விட்டு எறியும் அவ்வேளையில்,

     எனைப் பரிகரித்து ஆவியைத் தரவேணும் --- அடியேனை இயமனிடமிருந்து நீக்கி, உயிரைத் தந்தருள வேண்டும்.


பொழிப்புரை


         வேலாயுதமும், தரும நெறியைக் காட்டும் சேவலும் திருக்கரத்தில் இனிது விளங்க, மயிலின் மீது விளங்கிட, திருவண்ணாமலையில் கோபுர வாயிலில் எழுந்தருளி இருப்பவரே!

         தேவர்களுக்குத் தலைவரே!

         இளங் குமரியாகிய வள்ளியம்மைக்கு முத்துப் போன்றவரே!

          சிவபெருமானை அருமையான சொற்களால் பாடுகின்ற பாவலர்களுக்கு எளிதாக நின்று அருள் புரிபவரே!

         மேகங்கள் இளைப்பாறுகின்ற அழகிய வள்ளிமலையின் நெருங்கிய சாரலிலே தினைப்புனம் காத்த வேடப் பெண்மணியை மருவுகின்றவரே!

         மலைகள் பொடியாகுமாறு கடலில் ஒளிந்த சூரபன்மனைப் போர் செய்து அடக்கிய பரிபூரண ஆற்றல் உடைய பெருமையில் சிறந்தவரே!

         "மீன் போன்ற கண்களை விழித்துப் பணிவிடைகளைச் செய்தேன், என்னைச் செயலற்றுப் போகும்படி செய்தவிட்டீர்களே" என்றும், "என் கணவரே! நான் இனி அழிந்து போனேன்" என்றும் கூறி மனைவி அழவும், பெற்ற தாயானவள் "என் நினைவிலேயே உள்ள மகனே" என்று புலம்பவும், பிள்ளைகள் அப்பா என்று கதறவும்,  பாடையின் தலைமாட்டுப் பக்கத்தில் நின்று அன்புடன் பழகிய சுற்றத்தார் அழவும், பழைய நண்பர்கள் அழவும், பறை வாத்தியங்கள் கொட்டி வரவும்,  இயமனும் கருத்த தனது கையில் உள்ள பாசக் கயிற்றை என் மீது விட்டு எறியும் அவ்வேளையில், அடியேனை இயமனிடமிருந்து நீக்கி, உயிரைத் தந்தருள வேண்டும்.

விரிவுரை


கயல் விழித்தேன் எனைச் செயல் அழித்தாய் என, கணவ கெட்டேன் என ---

ஒருவன் மாண்டபோது உறவினர் அழுவதை இத் திருப்புகழில் சுவாமிகள் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

இந்த முதல் அடியில் மனைவி அழுவதைக் கூறுகின்றார்.  மனைவி தோன்றா எழுவாயாகத் தொக்கி நிற்கின்றது.

கயல் விழித்தேன். கயல் - மீன். இது உவம ஆகுபெயராகக் கண்ணைக் குறிக்கின்றது.

மனைவி கணவன் மாண்டதைக் கண்டு, "என் கணவ! பல நாட்கள் கண் விழித்து உமக்குப் பணிவிடை செய்தேனே, தங்களைப் பிரிந்து இனி எனக்கு என்ன செயல் இருக்கின்றது. நான் நலங்களை இழந்து கெட்டேன்" என்று கூறி அழுவாள்.

இனி, கயல் விழித்தேன் என்ற சொல்லை, கயல் போன்ற கண்ணும், தேன் போன்ற மொழியும் உடைய மனைவி என்றும் பொருள் காணலாம்.

பெறு மாது கருது புத்ரா என ---

பெற்ற தாய் மாண்ட மகனைப் பார்த்து, "மகனே! என் எண்ணம் எல்லாம் நீ தானே, உன் உணவு உடை வளர்ச்சியாகிய அத்தனையும் நான் நினைத்து நினைத்துச் செய்தேனே, என்னை விட்டுப் பிரிந்தனையே" என்று கூறி அழுவாள்.

புதல்வர் அப்பா எனக் கதறிட ---

பெற்ற பிள்ளைகள் அதிக துன்பத்தினால் சொற்களே அதிகம் வராமல் விம்மி விம்மி, "அப்பா அப்பா" என்று கூறு அழுகின்றார்கள். ஓ என்று கதறி அழுகின்றார்கள்.

பாடையில் தலை மீதே பயில் குலத்தார் அழ ---

உடம்பைப் பாடையின் மீது வைத்துத் தலைப்புறத்தே நின்று பலகாலம் பழகிய உறவினர்கள் கண்ணீர் வடித்து, மாண்டவர் முகத்தைப் பார்த்து அழுவார்கள்.

பயிலுதல் - பழகுதல்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு.                ---  திருக்குறள்.

பழைய நட்பார் அழ ---

இளமை தொட்டே அன்புடன் பழகிய நண்பர்கள் நட்பின் தகைமையால் அழுவார்கள்.

பறைகள் கொட்டா வர ---

பிணப் பறைகள் கொட்டி ஆர்த்து வரும்.

உறவின்முறை கதறிஅழ, ஊராரும் ஆசைஅற,
பறைதிமிலை முழவின்இசை ஆகாசம் மீதும்உற,
உலகில்உள பலர்அரிசி வாய்மீதிலே சொரியும் அந்தநாளில்...  ---  திருப்புகழ்.

இடுகுபறை சிறுபறைகள் தமிலையொடு தவில்அறைய
ஈமதேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனில் இடுவாழ்வே....    ---  (அறுகுநுனி)  திருப்புகழ்.

சமனாரும் பரிய கைப் பாசம் விட்டு எறியும் அப்போது ---

சமன் - இயமன். ஏழை பணக்காரன், கற்றவன் கல்லாதவன், இளையவன் முதியவன், அரசன் ஆண்டி என்ற எல்லோரையும் சமமாகப் பார்த்து, ஆயுள் முடிந்தவுடன் வருவதால் சமன் எனப் பேர் பெற்றான்.

பாசக் கயிற்றை எறிந்து உயிரைப் பிணித்து உடம்பிலிருந்து உயிரைப் பிரித்துக் கொண்டு போவான்...

காலனார் நெங்கொடும் தூதர்பாசம் கொடுஎன்
காலினார் தந்துஉடன்      கொடுபோகக்
காதலார் மைந்தரும் தாயராரும் சுடும்
கானமே பின்தொடர்ந்து    அலறாமுன்...      ---  திருப்புகழ்.

பரிகரித்து ஆவியைத் தரவேணும் ---

பரிகரித்தல் - விலக்குதல்.  "இயமன் என் உயிரைக் கவராது விலக்கி, முருகா! என்னைக் காத்து, அடியேன் உயிரைத் தந்தருள வேண்டும்" என்று சுவாமிகள் முருகனிடம் முறையிடுகின்றார்கள்.

நின்அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,
"என் அடியான் உயிரை வவ்வேல்" என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.    ---  திருஞானசம்பந்தர்.

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,
    அவனைக் காப்பது காரண மாக,
வந்த காலன் தன் ஆருயிர் அதனை
    வவ்வினாய்க்கு, ன்தன் வன்மை கண்டு, டியேன்,
எந்தை! நீ எனை நமன்தமர் நலியில்,
    "இவன் மற்று என் அடியான்" என விலக்கும்
சிந்தையால் வந்து, ன் திருவடி அடைந்தேன்
    செழும் பொழில் திருப்புன்கூர் உளானே        --- சுந்தரர்.


அந்தகனும் எனைஅடர்ந்து வருகையினில்
     அஞ்சல் எனவலிய         மயில்மேல் நீ
அந்த மறலியொடு "உகந்த மனிதன், நமது
     அன்பன்" எனமொழிய       வருவாயே....      ---  (தந்தபசி) திருப்புகழ்.

அயில் அறச்சேவல் கைக்கு இனிதரத் தோகையுற்று ---

அயில் - வேல். அறச்சேவல் - தரும வடிவாக விளங்கும் சேவல்.  இந்த இரண்டையும் தமது திருக்கரத்தில் முருகவேள் தாங்கிக் கொண்டிருக்கின்றார்.  மயிலின்மீது ஆரோகணித்து விளங்குகின்றார்.  இந்த அடியில், வேல், மயில், சேவல் என்ற மூன்றும் ஓதப் பெற்றுள்ளன.  இது சிறந்த அடி.

அருணையில் கோபுரத்து உறைவோனே ---

திருவண்ணாமலையில் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள வல்லாள மகாராசன் புதுக்கிய கோபுரத்தின் உச்சியிலேறி வாழ்ந்த அருணகிரிநாதரைக் காத்த முருகன் கோபுரத்தின் வடப்புறத்தில் எழுந்தருளி இருக்கின்றார்.

இந்த மூர்த்தி கோபுரத்திளையனார் என்ற பேருடன் வரதராக விளங்குகின்றார்.  இப் பெருமான் மீது ஆறு திருப்புகழ்ப் பாக்கள் காணப்படுகின்றன.

அடல் அருணைத் திருக்கோபுரத்தே, அந்த வாயிலுக்கு
வடஅருகில் சென்று கண்டுகொண்டேன்.  --- கந்தர் அலங்காரம்.

அமரர் அத்தா ---

அத்தன் - தலைவன்.  முருகவேள் தேவாதி தேவர்கட்குத் தனிப்பெரும் தலைவர். ஆதலின், அமரர் அத்தா என்றார்.

தேவர்களாகிய சேனைகட்குத் தலைவனாய் சேவசேனாபதியாக நின்றவர் முருகவேள்.

சிறுக்குமரி முத்தா ---

இளம் குமரியாகிய வள்ளி நாயகிக்கு முத்தப் போல் திகழ்பவர்.

சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே ---

அருமையான செஞ்சொற்களால், சிவபெருமானைப் பாடுகின்ற பாவாணர்கட்கு முருகன் எளியராக இருந்து அருள் பாலிக்கின்றார்.

இதனால், சிவனே முருகன் என்பது விளங்குகின்றது.

புயல் இளைப்பாறு பொன் சயிலம் ---

வள்ளிமலை உயர்ந்த மலை.  வளமையான மலை.  ஆதலால், மேகங்கள் தங்கி இளைப்பாறுகின்றன.  பொன் சயிலம் - அழகிய மலை.

சாரலில் புனமறப் பாவையைப் புணர்வோனே ---

வள்ளி மலைப்புறத்தில் தினைப்புனம் காத்த வள்ளிநாயகியாகிய இச்சா சத்தியைத் தழுவுகின்றவர்.  ஆன்மகோடிகட்கு அருள் புரியும் திறம் இது என உணர்க.

பொடிபடப் பூதரத்தொடு கடல் சூரனைப் பொரு ---

பூமியைத் தாங்குவதனால் மலை பூதரம் எனப் பெற்றது.  மலையைப் பூமி தாங்குவதாகப் பலர் கருதுவர். உண்மை அது அன்று. மலைதான் பூமியைத் தாங்குகின்றது. பூமியின் கீழ் மலை பரந்து நின்று தாங்குகின்றது.

போர்க்களத்தில் சூரபன்மனுக்கு உதவியாக அசுரர்கள் மலை வடிவாகி நின்றார்கள். முருகவேள் வேலை ஏவி, அம் மலைகளைப் பொடியாக்கிக் கடலில் ஒளிந்த சூரனுடன் போர் புரிந்து அவனுடைய செருக்கை அடக்கி அருள் புரிந்தார்.

கருத்துரை 

அருணை மேவும் முழுச் சேவகனே, இயமனிடமிருந்து விலக்கி அடியேனை ஆண்டருள்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...