9. இவர்க்கு இதில்
நினைவு
ஞானநெறி யாளர்க்கு மோட்சத்தி லேநினைவு;
நல்லறிவு
ளோர்தமக்கு
நாள்தோறும் தருமத்தி லேநினைவு; மன்னர்க்கு
இராச்சியந்
தன்னில்நினைவு;
ஆனகா முகருக்கு மாதர்மே லேநினைவு;
அஞ்சாத்
திருடருக்குஇங்கு
அனுதினம் களவிலே நினைவு; தன வணிகருக்கு
ஆதாயம்
மீதுநினைவு;
தானமிகு குடியாள ருக்கெலாம் வேளாண்மை
தனில் நினைவு; கற்பவர்க்குத்
தருகல்வி மேல்நினைவு; வேசியர்க்கு இனியபொருள்
தருவோர்கள்
மீதுநினைவு;
மானபர னுக்குமரி யாதைமேல் நினைவு; எற்கு
மாறாது உன்
மீதுநினைவு;
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு
குமரேசனே.
இதன் பொருள் ---
மயில் ஏறி
விளையாடு குகனே --- மயில் மீது
எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு
மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது
எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
ஞானநெறியாளர்க்கு
மோட்சத்திலே நினைவு ---
ஆன்ம நெறியிலே செல்கின்றவர்களுக்கு வீடுபேற்றிலேயே எண்ணம் இருக்கும்,
நல் அறிவு உளோர்க்கு
நாள்தொறும் தருமத்திலே நினைவு --- சிறந்த அறிவு உள்ளவர்களுக்கு எப்போதும் அறச் செயல்களிலே
எண்ணம் இருக்கும்,
மன்னர்க்கு
இராச்சியந்தன்னில் நினைவு --- அரசர்களுக்கு தமது இராசாங்கத்தின் மீதே எண்ணம் இருக்கும்,
ஆன காமுகருக்கு
மாதர் மேலே நினைவு --- காம உணர்வு கொண்டவர்களுக்குப் பெண்களின் மேலே எண்ணம் இருக்கும்,
அஞ்சாத
திருடருக்கு இங்கு அனுதினம் களவிலே நினைவு --- அச்சமற்ற திருடர்களுக்கு எப்போதும் திருடுவதிலேயே எண்ணம் இருக்கும்,
தன வணிகருக்கு
ஆதாயம் மீது நினைவு --- செல்வமுடைய வணிகர்களுக்கு தாம் செய்யும் வணிகத்தில் உண்டாகும் ஆதாயத்திலேயே
எண்ணம் இருக்கும்,
தானம் மிகு
குடியாளருக்கு எலாம் வேளாண்மை தனில் நினைவு --- ஈகையிலே சிறந்த
குடிகளுக்கெல்லாம் பயிரிடுவதிலேயே எண்ணம் இருக்கும்,
கற்பவர்க்குத் தரு
கல்வி மேல் நினைவு --- கல்வி பயிலுபவருர்க்குத் தாங்கள் கற்கும் கல்வியின் மேலேயே எண்ணம் இருக்கும்,
வேசியர்க்கு இனிய
பொருள் தருவோர்கள் மீது நினைவு - தமதுஉடலை விற்கும் வேசைத் தொழில்
புரிவோர்களுக்குத் தமது மனம் மகிழப் பொருள் கொடுப்பவர்கள்மேல் எண்ணம் இருக்கும்,
மானபரனுக்கு
மரியாதை மேல் நினைவு --- மானம் உடையவனுக்குத் தன் மதிப்பின்
மேல் எண்ணம் இருக்கும்,
எற்கு உன் மீது
மாறாது நினைவு --- எனக்கு உன்மேல் எப்போதும் நீங்காத எண்ணம் இருக்கும்.
கருத்து --- ஞானிகளுக்கு வீடு பேற்றைத்தவிர வேறு ஒன்றிலும் பற்று இருக்காது. "அற்றது
பற்று எனில் உற்றது வீடு". உலக இன்பத்தால் வரும் துன்பத்தை உணர்ந்தவர்கள், சிற்றின்பத்தை நாடாது பேரின்பத்தைத் தருவதாகிய வீடுபேறு ஒன்றையே
கருதி இருப்பார்கள். அது போலவே, அறிவாளிகளுக்கு அறச்செயல்களைப் புரிந்து இம்மை மறுமை நலன்களைப் பெறுவதில் நினைவு
இருக்கும். அரசாட்சி புரிவோருக்குத் தமது அரசியலிலும், காமுகருக்குப்
பெண்கள் மீதும், திருடர்க்குத் தாம் மேற்கொண்டு உள்ள திருட்டுத் தொழிலிலும், வணிகருக்கு இலாபத்திலும், குடிகளுக்கு
வேளாண்மை செய்வதிலும், மாணவர்க்குக் கல்வி மீதும் மாறாத நினைவு இருக்கும். தமது
உடலை விற்கும் விலைமளிருக்கு, பொருள்
நிறையத் தருவோரிடத்தில் தான் நினைவு இருக்கும். பொருள் இல்லாதவன் அழகனாக இருந்தாலும்
விரும்பமாட்டார்கள். மானத்தோடு வாழ்பவருக்குத் தனது உயிர் போனாலும் கூட, மானத்தில்தான்
நினைவு இருக்கும்.
No comments:
Post a Comment