திருவண்ணாமலை - 0527. இரவியும் மதியும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இரவியும் மதியும் (திருவருணை)

திருவருணை முருகா!
கூ கா என என் கிளை கூடி அழப் போகா வகை
திருவடி தந்து ஆள்வாய்.


தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான


இரவியு மதியுந் தெரிவுற எழுமம்
     புவிதனி லினமொன் ...... றிடுமாதும்

எழில்புதல் வருநின் றழுதுள முருகும்
     மிடர்கொடு நடலம் ...... பலகூறக்

கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்
     டுயிரினை நமனுங் ...... கருதாமுன்

கலைகொடு பலதுன் பமுமக லிடநின்
     கழலிணை கருதும் ...... படிபாராய்

திருமரு வியதிண் புயனயன் விரியெண்
     டிசைகிடு கிடவந் ...... திடுசூரன்

திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்
     சிடவலி யொடுகன் ...... றிடும்வேலா

அருமறை யவரந் தரமுறை பவரன்
     புடையவ ருயஅன் ...... றறமேவும்

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
     கருணையி லுறையும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இரவியும் மதியும் தெரிவு உற எழும் அம்-
     புவி தனில் இனம் ஒன் ...... றிடு மாதும்,

எழில் புதல்வரும், நின்று அழுது உளம் உருகும்
     இடர் கொடு, நடலம் ...... பலகூற,

கருகிய உருவம் கொடு, கனல் விழி கொண்டு,
     உயிரினை நமனும் ...... கருதா முன்,

கலைகொடு பல துன்பமும் அகலிட, நின்
     கழல் இணை கருதும் ...... படி பாராய்.

திரு மருவிய திண் புயன, யன், விரி எண்
     திசை கிடுகிட வந் ...... திடுசூ ரன்

திணி புயம் அது சிந்திட, அலை கடல் அஞ்-
     சிட, வலியொடு கன் ...... றிடும் வேலா!

அரு மறையவர், அந்தரம் உறைபவர், ன்பு
     உடையவர் உய, அன்று ...... அறமேவும்

அரிவையும், ஒரு பங்கு இடம் உடையவர் தங்கு
     அருணையில் உறையும் ...... பெருமாளே.


பதவுரை


      திரு மருவிய திண் புயன் ---- இலக்குமிதேவி பொருந்தியுள்ள வலிமைமிக்க தோள்களை உடையவராகிய நாராயணரும், 

     அயன் --- பிரமதேவனும்,

     விரி எண் திசை --- விரிந்துள்ள எட்டுத் திசைகளின் உள்ள அனைவரும்,

     கிடுகிட வந்திடு சூரன் --- நடுநடுங்குமாறு வந்த சூரபன்மனுடைய,

     திணி புயம் அது சிந்திட --– வலிய தோள்கள் அறுபட்டு விழுமாறும், 

     அலைகடல் அஞ்சிட --– அலைகளை வீசும் கடல் அஞ்சுமாறும்,

     வலியொடு கன்றிடும் வேலா --- வலிமையுடன் சீறிய வேலாயுதத்தை உடையவரே!

      அரு மறையவர் --- அரிய வேதங்களில் வல்ல அந்தணர்களும்,   

     அந்தரம் உறைபவர் --- வானில் வாழும் தேவர்களும்,

     அன்பு உடையவர் உய --- அன்புடைய அடியார்களும் பிழைக்கும் வண்ணம்,

     அன்று அறம் மேவும் --- அந்நாள் முப்பத்திரண்டு அறங்களை விரும்பிச் செய்த,

     அரிவையும் --- பார்வதி தேவி,

     ஒரு பங்கு இடம் உடையவர் தங்கு --- இடப்புறத்தில் உறைகின்ற சிவபிரான் வாழும், 

     அருணையில் உறையும் பெருமாளே --- திருவண்ணாமலையில் வாழுகின்ற பெருமையில் சிறந்தவரே!

      இரவியும் மதியும் தெரிவுற எழும் ---  சூரியனும் சந்திரனும் தெரியும்படி தோன்றி வரும்

     அம் புவிதனில் இனம் --- இப் பூதலத்தில் உற்ற சுற்றத்தவரும், 

     ஒன்றிடு மாதும் --- பொருந்தி வாழ்ந்த மனைவியும்,

     எழில் புதல்வரும் --- அழகிய மைந்தர்களும்,

     நின்று அழுது --- சுற்றி நின்று அழுது,

     உளம் உருகும் இடர் கொடு --- உள்ளம் உருகும்படியான வருத்தத்தைக் கொண்டு, 

     நடலம் பல கூற --– துன்ப வார்த்தைகள் பற்பல சொல்ல,

     கருகிய உருவம் கொடு --- கரிய வடிவத்துடனும்,

     கனல் விழி கொண்டு --- நெருப்புப் பொறிகள் வீசும் கண்களையும் கொண்டு,

     நமனும் --- கூற்றுவன்,

     உயிரினை கருதா முன் --- அடியேனுடைய உயிரைப் பிடிக்க நினைத்து வருவதற்கு முன்னரேயே,

     கலைகொடு --- கற்ற கல்வியுடன்,

     பல துன்பமும் அகலிட --- பல வகையான துன்பங்களும் நீங்குமாறு,

     நின் கழல் இணை கருதும்படி பாராய் --- தேவரீருடைய இரு திருவடிகளைத் தியானிக்குமாறு திருக்கண் பார்த்து அருளுவீராக.

பொழிப்புரை

         இலக்குமிதேவி பொருந்தியுள்ள வலிமைமிக்க தோள்களை உடையவராகிய நாராயணரும், பிரமதேவனும், விரிந்துள்ள எட்டுத் திசைகளில் உள்ள அனைவரும்,  நடுநடுங்குமாறு போருக்கு வந்த சூரபன்மனுடைய வலிமைமிக்க தோள்கள் அறுபட்டு விழுமாறும், அலைகளை வீசும் கடல் அஞ்சுமாறும், வலிமையுடன் சீறிய வேலாயுதத்தை உடையவரே!

         அருமையான வேதங்களில் வல்ல அந்தணர்களும், வானில் வாழும் தேவர்களும், அன்புமிக்க அடியார்களும் உய்யும்படி, அந்நாள் முப்பத்திரண்டு அறங்களை விரும்பிச் செய்த பார்வதி தேவி இடப்புறத்தில் உறைகின்ற சிவபிரான் வாழும்
திருவண்ணாமலையில் வாழுகின்ற பெருமையில் சிறந்தவரே!

          சூரியனும் சந்திரனும் தெரியும்படி தோன்றி வரும் இப் பூதலத்தில் உற்ற சுற்றத்தவரும், பொருந்தி வாழ்ந்த மனைவியும், அழகிய மைந்தர்களும் சுற்றி நின்று அழுது, உள்ளம் உருகும்படியான வருத்தத்தைக் கொண்டு,  துன்ப வார்த்தைகள் பற்பல சொல்ல, கரிய வடிவத்துடனும்,  நெருப்புப் பொறிகள் வீசும் கண்களையும் கொண்டு கூற்றுவன், அடியேனுடைய உயிரைப் பிடிக்க நினைத்து வருவதற்கு முன்னரேயே, கற்ற கல்வியுடன், பல வகையான துன்பங்களும் நீங்குமாறு, தேவரீருடைய இரு திருவடிகளைத் தியானிக்குமாறு திருக்கண் பார்த்து அருளுவீராக.

விரிவுரை

உளம் உருகும் இடர்கொடு நடலம் பல கூற ---

நடலம் - துன்பவுரை.  உள்ளம் உருகும் துயரத்தைக் கொண்டு, "இனி எங்களுக்கு யார் துணை? எங்களை அவலமாகத் தவிக்கவிட்டுச் சென்றீரே? அந்தோ! இனி உமது மலர் முகத்தை என்று காண்போம்? " என துன்ப மொழிகளை சுற்றத்தாரும், தன்னோடும் பொருந்தி வாழ்ந்த மனைவியும், அன்புடன் வளர்த்த அழகிய புதல்வர்களும் நின்று பார்த்துத் தேம்பி அழுவார்கள்.

கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு உயிரினை நமனும் கருதா முன் ---

இயமனுடைய வடிவம் கருமையானது.  அச்சத்தைத் தருவது.  கண்களில் கனல்பொறி பறக்க வந்து இயமன் உயிரைப் பிடித்து இழுத்துச் செல்லுவான்.  அப்படி இயமன் வந்து உயிரைப் பற்றுவதன் முன் முருகனுக்கு அடிமையாக வேண்டும்.

கலைகொடு, பல துன்பமும் அகலிட ---

கலைகளும் மிகுதியாகக் கற்பதினால் துன்பத்தையே தரும்.  அதனால்தான் மணிவாசகர், "கற்பனவும் இனி அமையும்" என்றும் "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்" என்றும் அருளினார்.

எனவே, கற்ற கலைகளின் துன்பமும், வேறு பல துன்பங்களும் அகல வேண்டும்.

கழல் இணை கருதும்படி பாராய் ---

முருகன் திருவடியை இடையறாது தியானம் புரிந்தால் எல்லாத் துயரங்களும் விளக்கின் முன் இருள்போல் விலகும்.

துன்பங்கள் அஞ்ஞானத்தால் எய்துகின்றன. ஞானத்தால் துன்பம் அகன்று இன்பம் எய்துகின்றது. இறைவன் திருவடி ஞானமே ஆகும் என உணர்க.

வள்ளல் தொழு ஞானக் கழலோனே –-- (துள்ளுமத) திருப்புகழ்.

எனவே, ஞானமேயாய திருவடியைத் தியானித்தால் அறியாமை விலகும்.  அதனால் துன்பங்கள் அனைத்தும் தொலைகின்றன. ஆதலால், ஒவ்வொருவரும் எம்பிரானுடைய ஞானத் திருவடியைத் தியானித்துத் துன்பமற்று இன்பமுற்று உய்வார்களாக.

கருத்துரை

அருணை மேவும் அண்ணலே, உனது பாதமலரைத் தியானம் செய்ய அருள் செய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...