அவரவர் இடத்து ஒழுகும் முறை
29. அவரவரிடத்து ஒழுகும் முறை

மாதா பிதாவினுக்கு உள்ளன் புடன்கனிவு
     மாறாத நல் ஒழுக்கம்;
  மருவுகுரு ஆனவர்க்கு இனியஉப சாரம்உள
     வார்த்தைவழி பாடு அடக்கம்;

காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
     காலத்தில் நயபா டணம்;
  கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்குஎலாம்
     கருணைசேர் அருள்வி தானம்;

நீதிபெறும் மன்னவர் இடத்துஅதிக பயவினயம்;
     நெறியுடைய பேர்க்கு இங்கிதம்;
  நேயம்உள தமர்தமக்கு அகமகிழ் வுடன்பரிவு,
     நேர்அலர் இடத்தில் வைரம்;

ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்; எமது
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

      இதன் பொருள் ---

     எமது ஐயனே --- எமது தலைவனே!,

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     மாதா பிதாவினுக்கு உள் அன்புடன் கனிவு மாறாத நல் ஒழுக்கம் --- தாய் தந்தையர்களிடம் உள்ளம் நிறைந்த அன்பும், மனக் கனிவும், இடையறாத ஒழுக்கமும் வைக்க வேண்டும்.

     மருவு குரு ஆனவர்க்கு உபசாரம் உள வார்த்தை, வழிபாடு, அடக்கம் --- தனக்குப் பொருந்திய குருநாதர் பால் தக்க உபசாரங்களைச் செய்து,  இனிய மொழிகளைக் கூறி, அடக்கத்தோடு வழிபாடு செய்ய வேண்டும்.

     காது ஆர் கரும் கண் மனையாள் தனக்கோ சயனகாலத்தில் நய பாடணம் --- காது வரையில் நீண்டுள்ள கருமை பொருந்திய கண்களையுடைய இல்லத் துணைவியினிடத்து, உறங்கச் செல்லும் நேரத்தில் இனிய பேச்சு வேண்டும்.

     வரும் கற்ற பெரியோர் முதியர் ஆதுலர்க்கு எலாம் கருணை சேர் அருள் விதானம் --- நாடி வருகின்ற பெரியோர்கள், வயது முதிர்ந்தவர்கள், வறியவர்கள் ஆகிய இவர்கள் பால் பெருங்கருணை கொண்டு, வேண்டியதைக் கொடுத்தல் வேண்டும்,

     நீதிபெறும் மன்னவரிடத்து அதிக பய விநயம் --- அறநெறி வழுவாத அரசரிடம் மிகுந்த அச்சமும் வணக்கமும் வேண்டும்,

     நெறியுடைய பேர்க்கு இங்கிதம் --- நல்ல நெறியில் நடப்போரிடம் இங்கிதமாக நடந்து கொள்ளல் வேண்டும்,

     நேயம் உள தமர் தமக்கு அகம் மகிழ்வுடன் பரிவு --- அன்புடைய உறவினரிடம் உள்ளம் கனிந்த அன்பு செலுத்துதல் வேண்டும்,

     நேர் அலர் இடத்தில் வயிரம் --- பகைவரிடம் உள்ளார்ந்த, மாறாத சினம் வேண்டும்,

     ஆதி மனு நூல் சொலும் வழக்கம் இது ஆகும் --- பழைய மனு நூல் கூறும் முறைமை இது ஆகும்.

          விளக்கம் --- ஒருவனுக்குத் தாய் தந்தையரே முதல் தெய்வம்.  எனவே, அவரிடத்தில் உள்ளன்பு வைத்தல் வேண்டும். அவர் மெச்சும் விதம் ஒழுக்க நெறியில் ஒருவன் நடத்தல் வேண்டும். தாய் தந்தை இல்லாமல் யாரும் பிறக்க முடியாது.  ஆனால், தன்னை நல்வழிப்படுத்த குரு என்று ஒருவர் வாய்ப்பது நல்வினையின் பயனாகவே அமையும். குரு எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. தாய் தந்தையருக்கு அடுத்து, கடவுளாக மதித்துப் போற்ற வேண்டியவர் குரு ஆவார். இல்லத் துணைவியிடம் படுக்கையறையில் இனிய மொழி வேண்டும் என்றதால், மற்ற வேளைகளில் கூடாது என்பது கருத்து அல்ல. ‘காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம்' ஆகையால், முற்றிய இன்பம் அடைவதற்கு மனைவியின் மகிழ்ச்சியும் வேண்டும் என்பதால் அவ்வாறு ஆசிரியர் சென்னார் என்று கொள்ளுதல் வேண்டும்.

 

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...