பிறப்பினால் மட்டும் பயனில்லை




15. பிறப்பினால் மட்டும் சிறப்பு இல்லை.


சிங்கார வனம் அதில் உதிப்பினும் காகமது
     தீஞ்சொல்புகல் குயில் ஆகுமோ ?
திரைஎறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி
     செங்கஞ்ச மலர் ஆகுமோ?

அங்கான கத்தில் பிறந்தாலும் முயலானது
     ஆனையின் கன்று ஆகுமோ?
ஆண்மையா கியநல்ல குடியில் பிறந்தாலும்
     அசடர்பெரி யோர்ஆவரோ?

சங்குஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான்
     சாலக்கி ராமம் ஆமோ?
தடம்மேவு கடல்நீரி லேஉப்பு விளையினும்
     சாரசர்க் கரை ஆகுமோ?

மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு உபதேசம்
     வைத்தமெய்ஞ் ஞானகுருவே!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமர ஈசனே.

     இதன் பொருள் ---

     மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு உபதேசம் வைத்த மெய்ஞ்ஞான குருவே --- குற்றமற்ற இனிய தமிழ் முனிவராகிய அகத்திய முனிவருக்கு மெய்ப்பொருளை உபதேசித்த உண்மை ஞான குருநாதனே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     காகம் அது சிங்கார வனம் அதில் உதிப்பினும் தீஞ்சொல் புகல் குயில் ஆகுமோ --- காகம் ஆனது அழகிய மலர்ச் சோலையில் பிறந்தாலும் இனிமையாகக் கூவும் குயில் ஆகுமோ?

      கொட்டி திரை எறியும் வாவியிற் பூத்தாலும் செங்கஞ்ச மலர் ஆகுமோ ---  நீர் நிறைந்து அலைவீசும் பொய்கையிலே மலர்ந்ததாலேயே கொட்டியானது, செந்தாமரை மலரைப்போல் சிறப்புப் பெறுமோ?,

     முயலானது அம் கானகத்தில் பிறந்தாலும் ஆனையின் கன்று ஆகுமோ --- அழகிய காட்டிலே பிறந்ததாலேயே முயலானது, யானைக் கன்றைப்போல் ஆகுமோ?

     அசடர் ஆண்மையாகிய நல்ல குடியில் பிறந்தாலும் பெரியோர் ஆவரோ --- வீரம் பொருந்திய உயர்ந்த மரபிலே பிறந்தாலும் அறிவற்ற பேதைகள், பெரியோராக மதிக்கப்படுவரோ?

     சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ --- சங்குகள் உலாவும் பாற்கடலிலே தோன்றியதாலேயே கருநிறம் பொருந்திய நத்தையானது சாலக்கிராமம் ஆகுமோ?

     தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ --- விரிந்து பரந்துள்ள கடலிலே வெண்ணிறமுள்ள உப்புத் தோன்றினாலும் அது இனிய சர்க்கரை ஆகுமோ?

     விளக்கம் --- காக்கையும் குயிலும் நிறத்தால் கருமையாகவே இருப்பன. காக்கையானது கா கா என்று கரையும். அதில் இனிமை இருக்காது. ஆனால், குயில் இனிமையாகக் கூவும். தாமரை பூக்கின்ற தடாகத்திலேதான் கொட்டியும் பூக்கின்றது. தடாகத்தில் பூத்ததாலேயே கொட்டி, தாமரை ஆகாது. கடலிலே தோன்றுகின்ற நத்தையானது கருநிறம் பொருந்தி இருக்கும்.  சாளக்கிராமம் திருமால் அடியார்க்கு மிகவும் விருப்பமானது. கூழாங்கல்லைப் போன்று கருமையாக இருக்கும். திருமால் பள்ளிகொண்டு இருக்கும் பாற்கடலில் பிறந்து கருநிறம் பொருந்தி இருப்பதாலேயே, நத்தையை சாளக்கிராமம் என்று திருமால் அடியார் கொள்ள மாட்டார்கள். கடல் நீரிலே தோன்றி வெண்மை நிறம் பொருந்தியதாக இருப்பதால், அது சருக்கரை ஆகாது. உப்பும் சருக்கரையும் நிறத்தில் வெண்மையாகவே உள்ளவை. சருக்கரை இனிப்பதால் அதை தனித்தும் உண்ணலாம். ஆனால், உப்பை தனித்து உண்ண முடியாது. பண்டத்திற்குச் சுவை கூட்டவே அது பயன்படும்.

     இவை போலவே, உயர்ந்த குடியில் பிறந்து விட்டதாலேயே, அறிவற்றவனையும் உயர்ந்தவன் என்று கொண்டாட மாட்டார்கள் என்றார். பிறப்பினால் யாருக்கும் சிறப்பு வராது. பண்பினால் தான் சிறப்பு என்கின்றார் ஆசிரியர்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...