திருவண்ணாமலை - 0545. கறுவுமிக்கு ஆவியை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கறுவுமிக்கு ஆவி (திருவருணை)

திருவருணை முருகா!
துன்பமே விளைக்கும் பொதுமாதர் உறவு விட்டு,
பேரின்பமே தரும் உனது திருவடியைத் தொழுது உய்ய அருள்.


தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான


கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்
     திலகுகட் சேல்களிப் ...... புடனாடக்

கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்
     களவினிற் காசினுக் ...... குறவாலுற்

றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்
     றுயர்பொருட் கோதியுட் ...... படுமாதர்

ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்
     புணையிணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ

மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்
     செறிதிருக் கோலமுற் ...... றணைவானும்

மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்
     றிடஅடற் சூரனைப் ...... பொரும்வேலா

அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்
     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே

அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
     றயருமச் சேவகப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கறுவு மிக்கு ஆவியைக் கலகும் அக்காலன் ஒத்து
     இலகு கண் சேல் களிப் ...... புடன் நாட,

கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி, உள்
     களவினில் காசினுக்கு ...... உறவால் உற்று,

உறுமலர்ப் பாயலில் துயர் விளைத்து, டல் உற்று,
     உயர் பொருட்கு ஓதி, ட் ...... படு மாதர்,

ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன், யிர்ப்
     புணை இணைத் தாள்தனைத் ...... தொழுவேனோ?

மறை எடுத்து ஓதி, வச்சிரம் எடுத்தானும், மைச்
     செறி திருக்கோலம் உற்று ...... அணைவானும்,

மறைகள் புக்கார் எனக் குவடு நெட்டு ஆழி வற்-
     றிட அடல் சூரனைப் ...... பொரும்வேலா!

அறிவுடைத்தாரும் மற்று உடன் உனைப் பாடல் உற்று,
    அருணையில் கோபுரத்து ...... உறைவோனே!

அடவியில் தோகை பொன் தடமுலைக்கு ஆசை உற்று,
     அயரும் அச் சேவகப் ...... பெருமாளே.


பதவுரை


      மறை எடுத்து ஓதி --- வேதங்களை எடுத்து ஓதுகின்ற பிரமதேவனும்,

     வச்சிரம் எடுத்தானும் --- வச்சிராயுதத்தைத் தாங்கும் தேவேந்திரனும்,

     மைச் செறி திருக் கோலம் உற்று அணைவானும் --- கரிய நிறம் உடைய அழகிய வடிவத்தைக் கொண்டு வருகின்ற திருமாலும்,

      மறைகள் புக்கார் என --- சூரனுக்கு அஞ்சி மறைவிடம் புகுந்து  அடைக்கலமாகப் புகுந்தார்கள் என்ற காரணத்தால்,

     குவடு நெட்டு ஆழி வற்றிட --- மலைகளைக் கொண்ட நீண்ட கடல் வற்றிப் போகும்படி,

     அடல் சூரனைப் பொரும் வேலா --- வலிமை நிறைந்த சூரபன்மனுடன் போர் புரிந்த வேலாயுதரே!

         அறிவு உடைத்தாரும் மற்று உடன் உனைப் பாடல் உற்று --- அறிவு நிறைந்த பெரியோர்களும், அடியேன் பாடும் சந்தப் பாடல்களை அடியேனுடன் கூடி உம்மைப் பாட,

     அருணையில் கோபுரத்து உறைவோனே --- திருவண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவரே!

         அடவியில் தோகை பொன் தடமுலைக்கு ஆசை உற்று அயரும் --- கானகத்தில், மயில் போன்ற வள்ளி நாயகியின் அழகிய கொங்கை மீது காதல் கொண்டு, அயர்ச்சி கொண்ட

     அச் சேவகப் பெருமாளே --- அந்த ஆற்றல் நிறைந்த பெருமையில் சிறந்தவரே!

      கறுவு மிக்கு ஆவியைக் கலகும் அக் காலன் ஒத்து இலகு --- கோபம் மிகுந்த, உயிரைக் கலக்குகின்ற அந்தக் காலனைப் போல் விளங்குகின்ற,

     கண் சேல் களிப்புடன் நாட –-- கண் என்ற மீன் மகிழ்ச்சியுடன் விரும்பிப் பார்க்க,

      கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி --- யோசனை செய்து முன்னதாகவே அளவான பொருள் இவ்வளவு என்று பேசி,

     உள் களவினில் --- உள்ளத்தில் வைத்த கள்ளத் தனத்தால்,

     காசினுக்கு உறவால் உற்று --- பெற்ற பணத்துக்கு ஏற்ற உறவு பூண்டு,

      உறுமலர்ப் பாயலில் துயர் விளைத்து --- பொருந்திய மலர்ப்படுக்கையில் வருத்தத்தை உண்டு பண்ணியும்,

     ஊடல் உற்று --- பிணக்கு உற்றும்,
    
     உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர் --- அதிக பணம் தரவேண்டும் என்று கூறி, அவர்கள் தந்த பெரிய தொகைக்கே உட்படுகின்ற விலைமாதர்கள்,

         ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் --- கடிந்து கூறும் செயல்களால் அடியேன் உள்ளத்தில் அறிவு கெட்டேன்,

     உயிர்ப் புணை இணைத் தாள் தனைத் தொழுவேனோ --- என் உயிருக்குத் தெப்பமாக உதவும் உமது இரு திருவடிகளைத் தொழமாட்டேனா?

பொழிப்புரை


         வேதங்களை எடுத்து ஓதுகின்ற பிரமதேவனும், வச்சிராயுதத்தைத் தாங்கும் தேவேந்திரனும், கரிய நிறம் உடைய அழகிய வடிவத்தைக் கொண்டு வருகின்ற திருமாலும், சூரனுக்கு அஞ்சி மறைவிடம் புகுந்து  அடைக்கலமாகப் புகுந்தார்கள் என்ற காரணத்தால், மலைகளைக் கொண்ட நீண்ட கடல் வற்றிப் போகும்படி, வலிமை நிறைந்த சூரபன்மனுடன் போர் புரிந்த வேலாயுதரே!

         அறிவு நிறைந்த பெரியோர்களும், அடியேன் பாடும் சந்தப் பாடல்களை அடியேனுடன் கூடி உம்மைப் பாட, திருவண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவரே!

         கானகத்தில், மயில் போன்ற வள்ளி நாயகியின் அழகிய கொங்கை மீது காதல் கொண்டு, அயர்ச்சி கொண்ட அந்த ஆற்றல் நிறைந்த பெருமையில் சிறந்தவரே!

         கோபம் மிகுந்த, உயிரைக் கலக்குகின்ற அந்தக் காலனைப் போல் விளங்குகின்ற, கண் என்ற மீன் மகிழ்ச்சியுடன் விரும்பிப் பார்க்க, யோசனை செய்து, முன்னதாகவே அளவான பொருள் இவ்வளவு என்று பேசி, உள்ளத்தில் வைத்த கள்ளத் தனத்தால், பெற்ற பணத்துக்கு ஏற்ற உறவு பூண்டு, பொருந்திய மலர்ப்படுக்கையில் வருத்தத்தை உண்டு பண்ணியும், பிணக்கு உற்றும், அதிக பணம் தரவேண்டும் என்று கூறி, அவர்கள் தந்த பெரிய தொகைக்கே உட்படுகின்ற விலைமாதர்கள், கடிந்து கூறும் செயல்களால் அடியேன் உள்ளத்தில் அறிவு கெட்டேன், என் உயிருக்குத் தெப்பமாக உதவும் உமது இரு திருவடிகளைத் தொழமாட்டேனா?

விரிவுரை


கறுவு மிக்கு ஆவியைக் கலகும் ---

கறுவுதல் - கோபித்தல்.  'கலக்கும்' என்ற சொல் 'கலகும்' என வந்தது. உயிர்களைச் சினந்து கலக்குபவன் காலன்.

காலன் ஒத்து இலகு கண் சேல் ---

மாதர்களின் கண்கள் காலனுக்கு நிகரானவை. கொல்லும் இயல்பு உடையவை. சேல் மீன் போன்றவை.

கருதி முற்பாடு ---

கருதி - திட்டமிட்டு. முற்பாடு - முன்னரேயே ஏற்பாட்டுடன் பொருள் பறிக்க முயலுவர் பொதுமாதர்.

கட்டளை உடல் ---

கட்டளை உடல் - அளவான பொருள்.  ஆரம்பத்தில் அளவாகப் பொருள் கேட்டு, பிறகு அதிகம் கேட்டு அல்லல் படுத்துவார்கள்.

உள் களவினில் காசினுக்கு உறவாகி ---

களவு - திருட்டுத்தனம்.  உள்ளே களவான எண்ணத்தை வைத்து உறவு கொள்வர்.

ஊடல் உற்று உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர் ---

கூடுகின்ற போது ஊடல் கொண்டு நிரம்பப் பணம் தரவேண்டும் என்று கேட்டு, அதிகப் பணம் வாங்கி இணங்குகின்றவர் அம்மகளிர்.

ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் ---

ஒறுத்தல் - துன்புறுத்தல்.  துன்பப் படுத்தும் அம் மாதரது செயல்களால் அடியேன் அறிவு கெட்டேன்.

உயிர்ப் புணை ---

புணை - தெப்பம்.  பிறவிப் பெருங்கடலுக்குத் தெப்பம் போன்றது இறைவனுடைய திருவடிகள்.

உறவுமுறை மனைவிமகவு எனும்அலையில் எனது இதய
உருவுடைய மலினபவ ஜலராசி ஏறவிடும்
உறுபுணையும் ….         சீறடியே       ---  சீர்பாத வகுப்பு.

மறை எடுத்து ஓதி ---

ஓதி - ஓதுபவன்.  மறைகளை ஓதுகின்ற பிரமதேவன். வேதம் ஓதுவதால் பிரமன், வேதன் எனப் பேர் பெற்றனன்.

வச்சிரம் எடுத்தான் ---

ததீசி முனிவருடைய முதுகெலும்பால் செய்து அமைந்தது வச்சிராயுதம். இது இந்திரனுடைய ஆயுதம். குலிசம் என்றும் கூறப்படும்.


மைச் செறி திருக்கோலம் உற்று அணைவானும் ---

திருமால் கரிய நிறம் படைத்தவர். நீலமேகம் போன்ற அழகிய திருமேனி உடையவர்.

மறைகள் புக்கார் ---

பிரமனும், இந்திரனும், திருமாலும் சுரபன்மனுடைய கொடுமைக்கு ஆற்றாது அஞ்சி, மறைவிடங்களைத் தேடி ஒடி ஒளிந்தார்கள்.  பின்னர் முருகவேளைத் தஞ்சம் புகுந்து வேண்டி நின்றார்கள்.  அதனால் முருகவேள் சூரனை வதைத்து, அத் தேவர்கட்கு வாழ்வும் வளமும் வழங்கி அருளினார்.

குவடு நெட்டு ஆழி வற்றிட ---

குவடு - மலை. கடலில் பல மலைகள் உள்ளன. நெட்டாழி - நீண்ட கடல்.  கடல் என்பது பிறவி.  குவடுகள் என்பவை வினைக் குன்றங்கள்.  சூரன் ஆணவமலம்.

ஞானமாகிய வேலினால், வினைக் குன்றங்களுடன் கூடிய பிறவிப் பெருங்கடலை வற்றச் செய்து, ஆணவ மலத்தை அடக்கி, அமரர்களாகிய ஆன்மாக்களுக்கு ஆறுமுக அண்ணல் அருள் புரிந்தார்.

அறவு உடைத்தாரும் மற்று உடன் உனைப் பாடலுற்று ---

அருணகிரிநாதர் திருப்புகழாகிய சந்தப் பாடல்களைப் பாடும்போது, அறிவுடைய ஞானிகள் பலர் அவருடன் இருந்து பாடிப் பதம் பெற்றார்கள்.

 
கருத்துரை

 
அருணை உறை முருகா, உன் திருவடியைத் தொழ அருள் செய்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...