திருவண்ணாமலை - 0521. ஆலவிழி நீல
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆலவிழி நீல (திருவருணை)

திருவருணை முருகா!
உயிர் விடும் முன் அடியேனை ஆட்கொண்டு அருள்.


தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தந்ததான


ஆலவிழி நீலத் தாலதர பானத்
     தாலளக பாரக் ...... கொண்டலாலே

ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
     தாரநடை யால்நற் ...... கொங்கையாலே

சாலமய லாகிக் காலதிரி சூலத்
     தாலிறுகு பாசத் ...... துன்பமூழ்கித்

தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
     சாவதன்மு னேவற் ...... கொண்டிடாயோ

சோலைதரு கானிற் கோலமற மானைத்
     தோளிலுற வாகக் ...... கொண்டவாழ்வே

சோதிமுரு காநித் தாபழய ஞானச்
     சோணகிரி வீதிக் ...... கந்தவேளே

பாலகக லாபக் கோமளம யூரப்
     பாகவுமை பாகத் ...... தன்குமாரா

பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
     பாடுமவர் தோழத் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


ஆலவிழி நீலத்தால், தர பானத்-
     தால், ளக பாரக் ...... கொண்டலாலே,

ஆர நகையால், வில் போர் நுதலினால், வித்-
     தார நடையால், நல் ...... கொங்கையாலே,

சால மயல் ஆகி, கால திரி சூலத்-
     தால் இறுகு பாசத் ...... துன்பம் மூழ்கி,

தாழ்வில் உயிர் வீழ்பட்டு, ழ்வினை விடாமல்
     சாவதன் முன், ஏவல் ...... கொண்டிடாயோ?

சோலைதரு கானில் கோல மற மானைத்
     தோளில் உறவு ஆகக் ...... கொண்ட வாழ்வே!

சோதி முருகா! நித்தா! பழய ஞானச்
     சோணகிரி வீதிக் ...... கந்தவேளே!

பாலக! கலாபக் கோமள மயூரப்
     பாக! உமை பாகத் ...... தன் குமாரா!

பாதமலர் மீதில் போதமலர் தூவிப்
     பாடும் அவர் தோழத் ...... தம்பிரானே!.


பதவுரை


         சோலை தரு கானில் --- சோலைகள் நிறைந்த கானகத்தில், 

       கோல மற மானை --- அழகிய வேடர் குலத்து மான் போன்ற வள்ளிப் பிராட்டியை, 

      தோளில் உறவாகக் கொண்ட வாழ்வே --- திருத்தோளில் உறவு பூண்டு தழுவிக்கொண்ட செல்வமே!

         சோதி முருகா --- சோதி வடிவாகிய முருகக் கடவுளே!

          நித்தா --- அழிவில்லாதவரே!

பழைய ஞானச் சோணகிரி வீதி கந்தவேளே --- பழமையானதும், ஞான பூமியானதும் ஆகிய திருவண்ணாமலையில் திருவீதியில் வீற்றிருக்கும் கந்தக் கடவுளே,

         பாலக --– குழந்தை வடிவானவரே,

         கலாபக் கோமள மயூரப் பாக --– தோகையும் அழகும் உடைய மயிலை நடாத்துபவரே!

         உமை பாகத்தன் குமாரா --- உமை பங்கனாகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

         பாதமலர் மீதில் போதமலர் தூவிப் பாடும் அவர் தோழத் தம்பிரானே --- திருவடி மலரில் ஞானமலரை இட்டுப் பாடித் தொழுபவர்களின் தோழரே, தனிப்பெரும் தலைவரே!

      ஆல விழி நீலத்தால் ---- நஞ்சு போன்ற கண்களாகிய நீலோற்பல மலராலும்,

     அதர பானத்தால் --- வாயிதழ் ஊறலைப் பருகுவதாலும்,

     அளக பாரக் கொண்டலாலே --- கூந்தல் பாரமாம் மேகத்தாலும்,

     ஆர நகையால் --- முத்துப் போன்ற பற்களாலும்,

     வில் போல் நுதலினால் --- போருக்கு உரிய வில்லைப் போன்ற நெற்றியாலும்,

     வித்தார நடையால் --- விரிவான பலவித நடையாலும்,

      நல் கொங்கையாலே --- நல்ல கொங்கைகளாலும்,

     சால மயல் ஆகி --- மிகவும் மோக மயக்கம் கொண்டவனாய்,

     கால திரி சூலத்தால் --- காலனுடைய முத்தலைச் சூலத்தைக் கண்டு,

     இறுகு பாசத் துன்பம் மூழ்கி --- அவன் கட்டும் பாசக் கயிற்றினால் துன்பத்தில் ஆழ்ந்து, 

     தாழ்வில் உயிர் வீழ்பட்டு --- அத்துயரில் உயிர் வீழுதல் உற்று, 

     ஊழ்வினை விடாமல் --- ஊழ்வினை விடாதபடி,

     சாவதன் முன் --- அடியேன் அவமே இறந்து போவதற்கு முன்,

     ஏவல் கொண்டிடாயோ --- அடியேனை ஆட்கொள்ள மாட்டீரோ.

பொழிப்புரை

         சோலைகள் நிறைந்த கானகத்தில் அழகிய வேடர் குலத்து மான் போன்ற வள்ளிப் பிராட்டியைத் திருத்தோளில் உறவு பூண்டு தழுவிக்கொண்ட செல்வமே!

         சோதி வடிவாகிய முருகக் கடவுளே! 

         அழிவில்லாதவரே!

         பழமையானதும், ஞான பூமியானதும் ஆகிய திருவண்ணாமலையில் திருவீதியில் வீற்றிருக்கும் கந்தக் கடவுளே!

         குழந்தை வடிவானவரே!

         தோகையும் அழகும் உடைய மயிலை நடாத்துபவரே!

         உமை பங்கனாகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

         திருவடி மலரில் ஞானமலரை இட்டுப் பாடித் தொழுபவர்களின் தோழரே!

தனிப்பெரும் தலைவரே!

         நஞ்சு போன்ற கண்களாகிய நீலோற்பல மலராலும், வாயிதழ் ஊறலைப் பருகுவதாலும், கூந்தல் பாரமாம் மேகத்தாலும், முத்துப் போன்ற பற்களாலும், போருக்கு உரிய வில்லைப் போன்ற நெற்றியாலும், விரிவான பலவித நடையாலும், நல்ல கொங்கைகளாலும், மிகவும் மோக மயக்கம் கொண்டவனாய்,  காலனுடைய முத்தலைச் சூலத்தைக் கண்டு, அவன் கட்டும் பாசக் கயிற்றினால் துன்பத்தில் ஆழ்ந்து,  அத்துயரில் உயிர் வீழுதல் உற்று,  ஊழ்வினை விடாதபடி, அடியேன் அவமே இறந்து போவதற்கு முன், அடியேனை ஆட்கொள்ள மாட்டீரோ.

விரிவுரை


         இத் திருப்புகழில் முதல் இரண்டடிகள் பொது மகளிரது அங்கங்களால் இளைஞர் ஈடழிவதைக் கூறுகின்றார்.


ஆலவிழி நீலத்தால் ---

மாதர்களின் கண்கள் ஆலம்போலும் நீலம்போலும் விளங்கும். ஆலவிழி, நீலவிழி என்று அழகுறக் கூறுகின்றார்.

ஆலம் - உண்டாரைக் கொல்லும், மாதர்விழி - கண்டாரையே கொல்லும் கொடுமை உடையது.

நீலோற்பல மலரைப் போல் அழகியது. இக் கண்ணழகால் ஆடவர் மயங்கி ஆவி சோர்வார்கள்.

அதர பானத்தால் ---

காமுகர் தம் மோக விடாய் தீரத் தாம் விரும்பிய மாதரது அதரபானத்தைப் பருகி இன்புறுவர்.

குமுத அமுத இதழ் பருகி உருகி மயல்
கொண்டுற்றிடு நாயேன்                       ---  (கொலைமத) திருப்புகழ்.

அளகபாரக் கொண்டலாலே ---

ஆடவரைப் பொதுமகளிர் அதிகமாகக் கவர்ந்து மயக்குவதற்குக் கருவியாகக் கொள்வது கூந்தல்தான்.

மாதர்கள் கூந்தலாகிய காட்டிலே, தங்கள் கண்களாகிய வலையே வைத்து ஆடவருடைய உயிராகிய பறவையைப் பிடித்து விடுவார்களாம்.

திண்ணிய நெஞ்சப் பறவை சிக்க, குழல்காட்டில்
கண்ணி வைப்பார் மாயம் கடக்குநாள் எந்நாளோ?        --- தாயுமானார்.

ஆர நகையால் ---

ஆரம் - முத்து.  முத்துப் போன்ற புன்சிரிப்பால் ஆடவரை மயக்குவர் பொதுமாதர்.

விற்போர் நுதலினால் ---

போருக்குரிய வில்லைப் போல் வளைந்து அழகு செய்வது பெண்களின் நெற்றி. அது அஷ்டமி திதியிலே தோன்றும் சந்திரனைப் போல் விளங்கும்.

வித்தார நடையால் ---

வித்தாரம் - பலவகையில் விரிவாக விளங்குவது.

அன்னம்போலும், கஜம்போலும், மஞ்ஞைபோலும் பல வகையாக இனிமையாக நடந்து ஆடவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்வார்கள்.

சால மயல் ஆகி ---

மேலே கூறிய பலவகையான மாதர் அங்கங்களின் வனப்பினால் அதிகம் மோக மயக்கம் கொண்டு காலத்தை வீணே கழிப்பர்.

கால திரிசூல ---

காலன் - இயமனுடைய அமைச்சன். காலம் பார்த்து வருபவன்.  அதனால் காலன் எனப்பட்டான்.  இவன் கையில் திரிசூலம் தாங்கி இருப்பான்.

இறுகு பாசத் துன்பம் மூழ்கி ---

காலன் வந்து உயிரை பாசக் கயிற்றால் இறுக்கிக் கட்டிக் கொண்டு போவான். அப்போது உயிர் துன்பத்தில் முழுகித் துடிக்கும்.

தாழ்வில் உயிர் வீழ்பட்டு ---

அத் தாழ்வினால் உயிர் வாழ்தல் உற்றுத் துயருறும்.

ஊழ்வினை விடாமல் ---

முன் செய்த ஊழ்வினையின்படி மரணம் வந்து எய்தும்.

சாவதன் முன்ஏவல் கொண்டிடாயோ ---

"அடியேன் அவ்வாறு இறப்பதற்கு முன், முருகா! உன் திருவடியில் என்னைத் தொண்டுகொண்டு காத்தருள் புரிவாயாக" என்று அடிகளார் வேண்டுகின்றார்.

குறமானைத் தோளில் உறவாகக் கொண்ட வாழ்வே ---

வள்ளிபிராட்டியை முருகப் பெருமான் தமது பன்னிரு தோள்களால் தழுவி அருள்புரிந்தார்.

உரத்தோள் இடத்தில் குறத்தேனை வைத்திட்டு
ஒளித்து ஓடும் வெற்றிக் குமரேசா   –--  (அருக்கார்) திருப்புகழ்

சோதி முருகா --- 

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு அது ஓர் மேனியாக உதித்தவர் முருகப் பெருமான். அருட்பெருஞ்சோதியாக நிற்பவர் முருகர்.  அதனால் சோதி முருகா எந்றார்.

நித்தா ---

நித்தம் - அழிவில்லாதது. கடல், விண், மண், கதிர், மதி, மலை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோம். இறைவன் ஒருவன் என்றும் அழிவின்றி நிற்பவன். ஆதலால், நித்தா என்றார்.  அழிவின்மையை நாடுபவர் அழிந்துபோகின்ற பொருள்களைச் சாராமல், அழியாத இறைவனைச் சார்ந்து, அழிவின்மையைப் பெறுதல் வேண்டும்.

இதனைத் திருவள்ளுவர் அழகாக உணர்த்துகின்றார்....

சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்று அழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.

பழைய ஞானச் சோணகிரி வீதிக் கந்தவேளே ---

திருவண்ணாமலை பல யுகங்கட்குமுன் தோன்றிய திருத்தலம்.  அதனால், பழைய என்றார்.

ஞானபூமியாக விளங்குவது. பல ஞானியர் இத்தலத்தில் அவதரித்தார்கள். பலர் இங்கு வந்து ஞானம் பெற்றார்கள்.  சில ஆண்டுகட்கு முன்னும் ஞானிகள் பலர் இங்கு தங்கி ஞானவொளியைப் பரப்பினார்கள. குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், முதலிய மகான்கள் தங்கித் தவம் செய்த அரிய திருத்தலம் திருவண்ணாமலை.

சோணம் - சிவப்பு.  சிவந்த மலை.  அதனால் சோணகிரி, சோணாத்திரி, சோணசைலம் முதலிய பேர்கள் பெற்றது.

பாதமலர் மீதில் போதமலர் தூவிப் பாடும் அவர் தோழ ---

போதமலர் - ஞானமாகிய மலர்.

ஞானம் வீசிப்ரகாசியா நிற்ப..... புட்பமாலை
…..  அணிவேனோ.                         – (ஆசைகூர்) திருப்புகழ்.

ஞானபூசை செய்வார் இறைவனுக்குச் சாத்தும் மலர்கள் இவை.

கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்ற அஷ்ட மலர்களாகும்.

மேவிய ஞானத்தில் மிக்கிடில், மெய்ப்பரன்
ஆவயின் ஞானநெறி நிற்றல் அர்ச்சனை;
ஓ அற உள்பூசனை செய்யில் உத்தமம்;
சேவடி சேரல் செயல் அறல் தானே.  ---  திருமந்திரம்.

ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்,
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்,
ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு,
ஞானத்தாய், உனை நானும் தொழுவனே.      --- அப்பர்.

தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துஉளே அழுந்து கின்றீர்,
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்,
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே. ---  அப்பர்.

பின்னுவார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்உள், தொல்வினை தீர வேண்டின்,
மன்னுவான் மறைகள் ஓதி, மனத்தின்உள் விளக்கு ஒன்று ஏற்றி
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே.    ---  அப்பர்.

போதம் - ஜீவபோதம்.

நான் நான் என்ற ஜீவபோதத்தை இறைவன் திருவடியிலே சாத்திவிட்டு, நான் அற்ற நிலையில் நின்ற தானாம் தன்மை பெற்று அந்த நிலையில் பாடும் பரம பக்தருடைய தோழன் முருகன் என்று பொருள்படும்.

நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு
நாடி அதில் நின்று தொழுகேனோ   

என்று திருப்புகழ் (வாதினையடர்ந்த) அடியின் நயமும் இங்கு காண்க.

நாகம் அணிகின்ற – நாஹம் என்ற சொல் நாகம் என்று வந்தது.

நாஹம் - ந அஹம். ந - இல்லை. அஹம் - நான்.

நான் இல்லை. நான் அற்ற இடம் தானாகிய தற்பரமாகின்றது.

எனவே, முருகன் திருவடியிலே நான் நான் என்று எண்ணுகின்ற ஜீவபோதமாகிய மலரை அர்ச்சித்து விட்டு, நான் போய் தானாய் நிற்கவேண்டும் என்ற தத்துவத்தைச் சுவாமிகள் இங்கு அற்புதமாக உபதேசிக்கின்றார்.

கருத்துரை 

அருணாபுரி விதியில் நிற்கும் வேலவா, இறவா முன் என்னை ஏவல் கொண்டு காத்தருள்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...