திருவண்ணாமலை - 0534. உருகும் மாமெழுகு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உருகும் மாமெழுகு (திருவருணை)

திருவருணை முருகா!
திருவடியைத் தந்து அடியேனை ஆட்கொள்


தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான


உருகு மாமெழு காகவு மேமயல்
     பெருகு மாசையு ளாகிய பேர்வரி
          லுரிய மேடையில் வார்குழல் நீவிய ......வொளிமானார்

உடைகொள் மேகலை யால்முலை மூடியும்
     நெகிழ நாடிய தோதக மாடியு
          முவமை மாமயில் போல்நிற மேனிய ......ருரையாடுங்

கரவ தாமன மாதர்கள் நீள்வலை
     கலக வாரியில் வீழடி யேநெறி
          கருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத

கசட மூடனை யாளவு மேயருள்
     கருணை வாரிதி யேயிரு நாயகி
          கணவ னேயுன தாளிணை மாமலர் ...... தருவாயே

சுருதி மாமொழி வேதியன் வானவர்
     பரவு கேசனை யாயுத பாணிநல்
          துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே

தொலைவி லாவசு ரேசர்க ளானவர்
     துகள தாகவு மேயெதி ராடிடு
          சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே

அருணர் கோடியி னாரொளி வீசிய
     தருண வாண்முக மேனிய னேயர
          னணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே

அணிபொன் மேருயர் கோபுர மாமதி
     லதிரு மாரண வாரண வீதியு
          ளருணை மாநகர் மேவியு லாவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


உருகும் மாமெழுகு ஆகவுமே, மயல்
     பெருகும் ஆசையுள் ஆகிய பேர் வரில்,
          உரிய மேடையில் வார்குழல் நீவிய ......ஒளிமானார்,

உடைகொள் மேகலையால் முலை மூடியும்,
     நெகிழ நாடிய தோதகம் அடியும்,
          உவமை மாமயில் போல் நிற மேனியர், ...உரையாடும்

கரவு அதா மன மாதர்கள் நீள்வலை,
     கலக வாரியில் வீழ் அடியேன், நெறி
          கருத ஒணா அதிபாதகன், நேசம் ...... அது அறியாத

கசட மூடனை ஆளவுமே அருள்
     கருணை வாரிதியே! இரு நாயகி
          கணவனே! உன தாள் இணை மாமலர் ...... தருவாயே!

சுருதி மாமொழி வேதியன், வானவர்
     பரவு கேசன், ஐ ஆயுத பாணி, நல்
          துளப மாலையை மார்பு அணி மாயவன்....மருகோனே!

தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர்
     துகள் அது ஆகவுமே எதிர் ஆடிடு
          சுடரின் வேலவனே! உலகு ஏழ்வலம் ...... வருவோனே!

அருணர் கோடியினார் ஒளி வீசிய
     தருண வாள்முக மேனியனே! அரன்
          அணையும் நாயகி பாலகனே! நிறை ....கலையோனே!

அணிபொன் மேரு உயர் கோபுர மாமதில்
     அதிரும் ஆரண வாரண வீதியுள்
          அருணை மாநகர் மேவி உலாவிய ...... பெருமாளே.


பதவுரை


      சுருதி மாமொழி வேதியன் --- வேதங்களில் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணன் ஆகிய பிரமதேவனும்,

     வானவர் பரவு --- தேவர்களும் புகழ்ந்து துதி செய்கின்ற,

     கேசன் --- கேசவன், 

     ஐ ஆயுத பாணி --- ஐந்து ஆயுதங்களைத் தாங்கிய திருக்கரங்களை உடையவன்,

     நல் துளப மாலையை மார்பு அணி --- நல்ல துளவ மாலையைத் திருமார்பில் தரித்த,

     மாயவன் மருகோனே --- மாயவனாகிய திருமாலின் திருமருகரே!

      தொலைவு இலா --- அழிவு இல்லாத,

     அசுர ஈசர்கள் ஆனவர் --- அசுரர்களின் தலைவர்களான சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் என்பவர்கள்,
    
     துகள் அது ஆகவுமே ---  பொடி ஆகுமாறு,

     எதிர் ஆடிடு --- எதிர்த்துப் போர் புரிந்த,

     சுடரின் வேலவனே --- ஒளி வீசுகின்ற வேலாயுதக் கடவுளே! 

      உலகு ஏழ் வலம் வருவோனே --- ஏழு உலகங்களையும் வலமாக வந்தவரே!

      அருணர் கோடியினார் ஒளி வீசிய --– கோடிக் கணக்கான சூரியர்கள் ஒளி வீசும், 

     தருண வாள்முக மேனியனே --- இளமை ஒளி விளங்கும் திருமுகத்தை உடைய திருமேனியரே!

         அரன் அணையும் நாயகி பாலகனே --- சிவபெருமான் தழுவுகின்ற பார்வதியின் பாலகரே!

         நிறை கலையோனே --- நிறைந்த கலைப் புலவரே!

         அணி பொன் மேரு உயர் கோபுரம் --- அழகிய பொன் மேரு மலைபோல் உயர்ந்த கோபுரமும்,

     மாமதிள் --- பெரிய மதில்களும்,

     அதிரும் ஆரணம் --- வேத ஒலி முழங்குவதும்,

     வாரண வீதி உள் --- யானைகள் உலாவுவதும் ஆகிய வீதிகளும் உள்ள,

     அருணை மாநகர் மேவி உலாவிய பெருமாளே --- அண்ணாமலையாகிய பெருமை தங்கிய நகரில் விரும்பி உலாவுகின்ற பெருமையில் சிறந்தவரே!

      உருகு மாமெழுகு ஆகவுமே --- உருகி ஒழுகும் நல்ல மெழுகுபோல்,

     மயல் பெருகும் ஆசை உள் ஆகிய பேர் வரில் --- மயக்கம் பெருகும் காமத்தில் உட்பட்ட பேர்வழிகள் வந்தால்,

     உரிய மேடையில் --- தமக்கு உரிய மாடிமேல் இருந்து,

     வார்குழல் நீவிய --– நீண்ட குழலை வாரி முடித்துக் கொள்ளும்,  

     ஒளி மானார் --- அழகிய விலைமாதர்கள்,

     உடைகொள் மேகலையால் முலை மூடியும் --- மேலாடையால் முலைகளை மூடியும், 

     நெகிழ நாடிய தோதகம் ஆடியும் --- அந்த ஆடை நெகிழ்வதற்கு வேண்டிய ஜால வித்தைகள் ஆடியும், 

     உவமை மாமயில் போல் நிற --– உவமை கூறப்படும் சிறந்த மயில் போன்ற நல்ல நிறம் கொண்ட,

     மேனியர் --- உடலழகியர்,

     உரையாடும் கரவு அது ஆம் மன மாதர்கள் --- பேசுவதில் திருட்டுத்தனம் அமைந்த மனமுடைய மாதர்களான அப் பொதுமகளிரின், 

     நீள்வலை --- நீண்ட வலையாகிய,

     கலக வாரியில் வீழ் அடியேன் --- கலகக் கடலில் விழ்கின்ற அடியேன்,

     நெறி கருத ஒணா அதி பாதகன் --- நன்னெறியை நினைக்க மாட்டாத பெரும் பாதகன்,

     நேசம் அது அறியாத --– அன்பு என்பதையே அறியாத, 

     கசட மூடனை --- குற்றமுள்ள மூடனை,

     ஆளவுமே அருள் கருணை வாரிதியே --- ஆட்கொண்டு அருளிய கருணைக் கடலே!

     இரு நாயகி கணவனே --- வள்ளி தேவயானை என்ற இரு மனைவியர்களின் நாயகரே!

     உன தாள் இணை மாமலர் தருவாயே --- உமது இரு திருவடிகளாகிய சிறந்த மலர்களைத் தந்தருளுவீராக.

   
பொழிப்புரை


         வேதங்களில் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணன் ஆகிய பிரம தேவனும், தேவர்களும் புகழ்ந்து துதி செய்கின்ற, கேசவரும், ஐந்து ஆயுதங்களைத் தாங்கிய திருக்கரங்களை உடையவரும், நல்ல துளவ மாலையைத் திருமார்பில் தரித்த, மாயவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

         அழிவு இல்லாத அசுரர்களின் தலைவர்களான சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் என்பவர்கள் பொடியாகுமாறு எதிர்த்துப் போர் புரிந்த ஒளி வீசுகின்ற வேலாயுதக் கடவுளே! 

         ஏழு உலகங்களையும் வலமாக வந்தவரே!

         கோடிக் கணக்கான சூரியர்கள் ஒளி வீசும் இளமை ஒளி விளங்கும் திருமுகத்தை உடைய திருமேனியரே!

         சிவபெருமான் தழுவுகின்ற பார்வதியின் பாலகரே!

         நிறைந்த கலைப் புலவரே!

         அழகிய பொன் மேரு மலைபோல் உயர்ந்த கோபுரமும், பெரிய மதில்களும், வேத ஒலி முழங்குவதும், யானைகள் உலாவுவதும் ஆகிய வீதிகளும் உள்ள அண்ணாமலையாகிய பெருமை தங்கிய நகரில் விரும்பி உலாவுகின்ற பெருமையில் சிறந்தவரே!

         உருகி ஒழுகும் நல்ல மெழுகு போல் மயக்கம் பெருகும் காமத்தில் உட்பட்ட பேர்வழிகள் வந்தால், தமக்கு உரிய மாடிமேல் இருந்து, நீண்ட குழலை வாரி முடித்துக் கொள்ளும் அழகிய விலைமாதர்கள் மேல் ஆடையால் தனங்களை மூடியும்,  அந்த ஆடை நெகிழ்வதற்கு வேண்டிய ஜால வித்தைகள் ஆடியும், உவமை கூறப்படும் சிறந்த மயில் போன்ற நல்ல நிறம் கொண்ட உடலழகியர், பேசுவதில் திருட்டுத்தனம் அமைந்த மனமுடைய மாதர்களான அப் பொதுமகளிரின்,   நீண்ட வலையாகிய கலகக் கடலில் விழ்கின்ற அடியேன் நன்னெறியை நினைக்க மாட்டாத பெரும் பாதகன்,  அன்பு என்பதையே அறியாத இந்த குற்றமுள்ள மூடனை ஆட்கொண்டு அருளிய கருணைக் கடலே! வள்ளி தேவயானை என்ற இரு மனைவியர்களின் நாயகரே! உமது இரு திருவடிகளாகிய சிறந்த மலர்களைத் தந்தருளுவீராக.


விரிவுரை


உருகி மெழுகு ஆகவுமே ---

         பெண்களாகிய நெருப்பிடம் ஆண்கள் மெழுகைப் போல் உள்ளம் உருகிவிடுவார்கள்.

"அங்கார ஸத்ருசீ நாரீ க்ருத கும்ப சம: புமான்"  என்கிறது நாரத பரிவ்ராஜகம் என்ற உபநிடதம்.

அங்காரம் --- நெருப்பு.
நாரீ --- பெண்
க்ருத கும்பம் --- நெய்க்குடம்
புமான் --- ஆண்.

பெண்ணாகிய நெருப்பை நெருங்கினால், நெய்க்குடம் போன்ற ஆண்மகன் உள்ளம் உருகி விடுகின்றது.

இந்த உபநிடதக் கருத்தை அருணகிரியார் இந்த அடியில் கூறினார்.

மயல் பெருகும் ஆசை உள பேர் வரின் ---

ஆசை மயக்கத்தைப் பெருக்குகின்றது. இன்னது செய்வது, இது செய்யத்தகாதது என்ற தெளிவைப் போக்கி, எதனையும் துணிந்து செய்யும் மயக்கத்தைத் தருகின்றது. காமமாகிய ஒன்று இருளைப் பொருள் படுத்தாது. மரண பயத்தையும் மறக்கச் செய்து கோர நயனம் புரிவது காமம்.

காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம்,
காமமே தரித்திரங்கள் அனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம்,
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழி அடைக்கும் கபாடம்,
காமமே அனைவரையும் பகை ஆக்கிக் கழுத்து அரியும் கத்தி தானே.
                                                               --- விவேக சிந்தாமணி.

உரிய மேடையில் வார்குழல் நீவிய ---

தம் மீது ஆசை கொண்ட ஆடவர்கள் தம்மிடம் வந்தவுடன், தமக்குரிய மாடிமீது அமர்ந்து, கூந்தலை வாரி அழகாக முடித்துக் கொள்வார்கள்.  பொதுமகளிர் விதம் விதமாக முடிப்பார்கள்.

கரவு அது ஆம் மன மாதர்கள் ---

அப்போது மாதர்கள் கரவுத்தனத்தை உள்ளடக்கி இனிமையாகப் பேசுவார்கள். உதட்டில் தேனும் நெஞ்சில் வஞ்சகமாகிய நெருப்பும் இருக்கும்.

நீள்வலை கலகவாரியில் வீழ் ---

மையலாகிய நீண்ட வலையுடன் கூடிய, கலகமாகிய கடலில் வீழ்ந்து ஆடவர் கரை காணாது கலக்கம் அடைவார்கள்.

நெறி கருத ஒணா அதி பாதகன் ---

உய்யும் நெறிய யாது? நாம் ஏன் பிறந்தோம்? இந்த உடம்பு எவ்வாறு வந்தது? தானே வந்ததா? ஒருவன் தந்து வந்ததா? தந்தவன் எதற்காகத் தந்தான்? தந்த தலைவன் எத்தன்மையன்? அவனை அடைந்துவர் யார்? அடையும் வழி எது? என்பன போன்ற சிந்தனையே இல்லாது, உண்பதும் உறங்குவதும் ஆகவே மாந்தர் வாழ்ந்து வீழ்கின்றனர்.

நேசம் அறியாத கசட மூடனை ---

நேசம் - அன்பு.  இறைவனை அடையும் நெறி அன்பு ஒன்றே தான். இறைவன்பால் அன்பை வைத்தால் அருன் அருளைத் தருகின்றான்.

அன்பு இன்னதென்றே அறியாத குற்றும் நிறைந்த மூடன்.

ஆளவுமே அருள் ---

இத்தகைய நன்னெறி அறியாத மூடனாகிய அடியேனை ஆட்கொண்டு அருளினான் முருகன் என்று அடிகளார் இந்த அடியில் கூறுகின்றார். சிறியேனுடைய பக்குவத்தையோ தகுதியையோ கருதி முருகன் ஆட்கொள்ளவில்லை. ஆட்கொண்டதற்குக் காரணம் அப் பெருமானுடைய அளப்பற்ற கருணையே.  காரணமில்லாத கருணை. இதனை அவ்யாஜ கருணை என்பர் வடநூலார்.

அப்பரடிகள் தன்னை இறைவன் ஆண்ட கருணையைக் கூறுகின்ற அழகிய அருட்பாடலை இத்துடன் ஒப்பு நோக்குக.

அத்தாஉன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்,
         அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய்,
எத்தனையும் அரியைநீ எளியை ஆனாய்,
         எனைஆண்டு கொண்டுஇரங்கி ஏன்று கொண்டாய்,
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
         பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாய்அன்றே,
இத்தனையும் எம்பரமோ? ஐய! ஐயோ!
         எம்பெருமான் திருக்கருணை இருந்த வாறே!

கருணை வாரிதியே ---

இறைவன் கருணைக் கடலாக விளங்குகின்றார்.

கருணை மேகமே ஈறில் கருணை மேருவே தூய
கருணை வாரியே தேவர் பெருமாளே.

என்னும் பிறிதொரு பாடலில் முருகனை அடிகளார் துதிக்கின்றார்.

அழுக்கு மயமான அசுத்த நீர் கடலில் கலந்தவுடன் அதன் அழுக்கு நீங்கப் பெற்று கடல் நீராக மாறுவதுபோல், தீயவர்களையும் இறைன் தூயவராக்கி தன்னில் சேர்த்து அருள் புரிகின்றான்.

தீயவை புரிந்தாரேனும் முருகவேள் திருமுன் உற்றால்
தூயவர்ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும்கொல்லோ, அடுசமர் இந்நாள் செய்த
மாயையின் மகனும்அன்றோ வரம்பிலா அருள்பெற்று உய்ந்தான்.   ---  கந்தபுராணம்.

இருநாயகி கணவனே ---

வள்ளி தெய்வயானை ென்ற இரு தேவியர்க்கு நாயகன் முருகன்.

வள்ளி - இச்சா சத்தி,
தெய்வயானை - கிரியா சத்தி,

இரு சத்திகளைக் கொண்டு உயிர்களுக்கு முருகன் அருள் புரிகின்றான்.

தாள் இணை மலர் தருவாயே ---

இறைவனுடைய இரு திருவடிகள் அபரஞானம், பரஞானம் என்ற இரு ஞானங்கள் ஆகும் என உணர்க.

சுருதிமொழி வேதியன் ---

சுருதி - வேதம். செவியால் கேட்டு உணர்வது வேதம். ஆதலால், சுருதி எனப்பட்டது. எழுதாக் கிளவி வேதம். வேதத்தில் சிறந்த மொழிகளை ஓதுபவர் பிரமதேவர். அப் பிரமதேவரால் துதி செய்யப்பெற்றவர் திருமால்.

வானவர் பரவு கேசனை ---

கேசவன் என்ற சொல், கேசன் எனக் குறுகியது. தேவர்கள் துதித்துப் போற்றுகின்ற மூர்த்தி கேசவர்.

ஐ ஆயுத பாணி ---

திருமாலுக்கு ஐந்து ஆயுதங்கள். சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்பவை. பஞ்சாயுதன்.

அதிரும் ஆரண வாரண வீதி ---

ஆரணம் - வேதம். வாரணம் - யானை.  திருவண்ணாமலையில் வேதங்கள் முழங்குகின்றன. யானைகள் கெம்பீரமாக உலாவுகின்றன.

கருத்துரை


அருணாசலம் மேவும் அண்ணலே, உன் அடி மலரைத் தந்தருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...