அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கெஜநடை மடவார்
(திருவருணை)
திருவருணை முருகா!
உனது திருவடி நிழலைத்
தந்து அருள்
தனதன
தனனா தனதன தனனா
தனதன தனனா ...... தனதான
கெஜநடை
மடவார் வசமதி லுருகா
கிலெசம துறுபாழ் ...... வினையாலே
கெதிபெற
நினையா துதிதனை யறியா
கெடுசுக மதிலாழ் ...... மதியாலே
தசையது
மருவீ வசையுட லுடனே
தரணியில் மிகவே ...... யுலைவேனோ
சததள
மலர்வார் புணைநின கழலார்
தருநிழல் புகவே ...... தருவாயே
திசைமுக
வனைநீள் சிறையுற விடுவாய்
திருநெடு கருமால் ...... மருகோனே
திரிபுர
தகனா ரிடமதில் மகிழ்வார்
திரிபுரை யருள்சீர் ...... முருகோனே
நிசிசர
ருறைமா கிரியிரு பிளவா
நிறையயில் முடுகா ...... விடுவோனே
நிலமிசை
புகழார் தலமெனும் அருணா
நெடுமதில் வடசார் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கெஜநடை
மடவார் வசம் அதில் உருகா,
கிலெசம் அது உறு பாழ் ...... வினையாலே,
கெதிபெற
நினையா, துதிதனை அறியா,
கெடுசுகம் அதில் ஆழ் ...... மதியாலே,
தசை
அது மருவீ, வசை உடல் உடனே,
தரணியில் மிகவே ...... உலைவேனோ?
சததள
மலர் வார் புணை நின கழலார்
தருநிழல் புகவே ...... தருவாயே,
திசை
முகவனை நீள் சிறை உற விடுவாய்,
திருநெடு கருமால் ...... மருகோனே!
திரிபுர
தகனார் இடம் அதில் மகிழ்வார்
திரிபுரை அருள் சீர் ...... முருகோனே!
நிசிசரர்
உறை மா கிரி இரு பிளவா
நிறை அயில் முடுகா ...... விடுவோனே!
நிலமிசை
புகழ் ஆர் தலம் எனும் அருணா
நெடுமதில் வடசார் ...... பெருமாளே.
பதவுரை
திசைமுகவனை நீள் சிறை
உற விடுவாய்
--- பிரமதேவனை நீண்ட சிறையுல் புக விட்டவரே!
திருநெடு கருமால்
மருகோனே ---
அழகிய பெரிய கரிய நாராயணருடைய மருகரே!
திரிபுர தகனார்
இடமதில் மகிழ்வார் --- முப்புரங்களை எரித்த
சிவபெருமானுடைய இடப்பாகத்தில் மகிழ்கின்ற
திரிபுரை அருள்சீர்
முருகோனே --- பார்வதி தேவி பெற்ற சிறந்த முருகவேளே!
நிசிசரர் உறை மாகிரி
இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே --- அசுரர்கள் இருந்த
பெரிய கிரவுஞ்சமலை இரு பிளவு ஆகும்படி மாட்சிமை உடைய வேலாயுதத்தை வேகத்துடன்
செலுத்தியவரே!
நிலமிசை புகழார் தலம்
எனும் அருணா நெடுமதில் வடசார் பெருமாளே --- பூமியில் புகழ்
நிறைந்த திருத்தலம் என்று பேர் பெற்ற திருவண்ணாமலையில் பெரிய மதிலின் வடபுறத்தே
வீற்றிருக்கின்ற பெருமையில் மிகுந்தவரே!
கெஜநடை மடவார் வசம்
அதில் உருகா ---
பெண் யானையின் நடையினை உடைய மாதர்களுக்கு வசப்பட்டு உருகி
கிலெசம் அது உறுபாழ் வினையாலே ---
துன்பத்தைத் தருகின்ற பாழான வினையின் பயனால்,
கெதிபெற நினையா --- நற்கதியைப்
பெறுதற்கு நினையாமலும்,
துதிதனை அறியா --- தேவரீரைத் துதிசெய்ய அறியமாலும்,
கெடுசுகம் அதில் ஆழ் மதியாலே --- அழிவைத்
தரும் சிற்றின்பத்தில் ஆழ்ந்து போகின்ற அறிவினால்,
தசை அது மருவி வசை உடல் உடனே --- சதை கொண்டதும், பழிப்புக்கு இடமானதும் ஆன இந்த
உடம்புடன்
தரணியில் மிகவே உலைவேனோ --- இந்த
உலகத்தில் மிகவும் அலைவேனோ?
சததள மலர் --- நூற்றிதழ்த் தாமரை
போன்றதும்,
வார் புணை --- பிறவிப் பெருங்கடலைக்
கடத்தும் நீண்ட தெப்பம் போன்றதுமான,
நின கழல் ஆர் தருநிழல் புகவே தருவாயே ---
உமது திருவடிகள் நிரம்பத் தருகின்ற நிழலில் அடியேன் சேருமாறு அருள் தருவீராக.
பொழிப்புரை
பிரமதேவனை நீண்ட சிறையுல் புக விட்டவரே!
அழகிய பெரிய கரிய நாராயணருடைய மருகரே!
முப்புரங்களை எரித்த சிவபெருமானுடைய இடப்பாகத்தில்
மகிழ்கின்ற பார்வதிதேவி பெற்ற சிறந்த முருகவேளே!
அசுரர்கள் இருந்த பெரிய கிரவுஞ்சமலை இரு
பிளவு ஆகும்படி மாட்சிமை உடைய வேலாயுதத்தை வேகத்துடன் செலுத்தியவரே!
பூமியில் புகழ் நிறைந்த திருத்தலம்
என்று பேர் பெற்ற திருவண்ணாமலையில் பெரிய மதிலின் வடபுறத்தே வீற்றிருக்கின்ற
பெருமையில் மிகுந்தவரே!
பெண் யானையின் நடையினை உடைய
மாதர்களுக்கு வசப்பட்டு உருகி துன்பத்தைத் தருகின்ற பாழான வினையின் பயனால், நற்கதியைப் பெறுதற்கு நினையாமலும், தேவரீரைத் துதிசெய்ய அறியமாலும், அழிவைத் தரும் சிற்றின்பத்தில் ஆழ்ந்து
போகின்ற அறிவினால், சதைகொண்டதும், பழிப்புக்கு இடமானதும் ஆன இந்த
உடம்புடன் இந்த உலகத்தில் மிகவும் அலைவேனோ? நூற்றிதழ்த் தாமரை போன்றதும், பிறவிப் பெருங்கடலைக் கடத்தும் நீண்ட
தெப்பம் போன்றதுமான, உமது திருவடிகள்
நிரம்பத் தருகின்ற நிழலில் அடியேன் சேருமாறு அருள் தருவீராக.
விரிவுரை
கெஜநடை
மடவார் ---
பெண்
யானையின் நடைபோல பெண்கள் அழகாக நடப்பார்கள்.
வசம்
அதில் உருகா ---
மாதர்
வசப்பட்டு, அழலிடைப்பட்ட
மெழுகுபோல ஆடவர் உள்ள உருகுவர். மாதர்
வசப்பட்டோர் நரகில் வேதனை அடைவர்.
மாதர்
வசமாய் உற்று உழல்வோரும்,
மாதவம்
எணாமல் திரிவாரும்,
தீதுஅகல
ஓதிப் பணியாரும்,
தீ
நரகம் மீதல் திகழ்வாரே ---
திருப்புகழ்.
கிலெசம்
அது உறு பாழ் வினையாலே ---
கிலேசம்
என்ற சொல் சந்தத்தை வேம்டி கிலெசம் என்று குறுகிற்று. கிலேசம் - துன்பம். துன்பம் இருவகைப்படும். ஒன்று உடம்புக்கு வருவது. ஒன்று உள்ளத்துக்கு வருவது. "புந்திக்
கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே" என்கின்றார் கந்தர் அலங்காரத்தில்.
இடையறாது
துன்பத்தை விளைவிக்கின்ற பாழும் வினையில் கிடந்து மாந்தர் உழலுகின்றனர்.
கெதி
பெற நினையா ---
உய்யும்
நெறி இது என உணராது அவலமுறுகின்றார்கள்.
உய்யும் நெறி எது என்று அருணகிரியார் கந்தரனுபூதியில் உபதேசிக்கின்றார்.
"கெடுவாய் மனனே, கதிகேள், கரவாது
இடுவாய்
வடிவேல் இறைதாள் நினைவாய்"
துதிதனை
அறியா ---
முருகனை
நாவாரத் துதி செய்ய வேண்டும். முருகனைத் துதித்தவர் உலகம் துதி செய்ய உயர்ச்சி
பெறுவர். இறைவன் தந்த நாவினால் அப்
பரமனைத் துதி செய்யாதோர் நன்றி மறந்தவர் ஆவார்.
கெடுசுகம்
அதில் ஆழ் மதியாலே ---
இறைவனுடன்
தேர்ந்து நுகர்கின்றது பேரின்பம். உலக
இன்பங்கள் அணுத்துணையானவை. அழிவைத்
தருகின்ற இச் சிற்றின்பத்தில் அமிழ்ந்து அழிகின்ற அறிவு அகலவேண்டும்.
தசையது
மருவீ வசையுடலுடனே தரணியில் மிகவே உலைவேனோ ---
இந்த
உடம்பு வெறும் தசையினால் ஆனது. மலரம் நீர்
சீழ் முதலிய அருவருப்பு உடைய பொருள்கள் நிறைந்தது. நாற்றம் உடையது. ஆன்றோர்களால் பழிக்கக் கூடியது. இந்த உடம்பைப் பழிக்கின்றார் தாயுமானார்...
"சுக்கிலமும் நீரும்
சொரிமலமும் நாறும்உடல்
புக்கு
உழலும் வாஞ்சை இனிப்போதும் என்பது எந்நாளோ"
"காக்கைநரி செந்நாய்
கழுகு ஒருநாள் கூடிஉண்டு
தேக்கு
விருந்தாம் உடலைச் சீ என்பது எந்நாளோ"
"நாற்றம்
மிகக்காட்டும் நவவாயில் பெற்ற பசும்
சோற்றுத்
துருத்தி சுமை என்பது எந்நாளோ"
"உருவிருப்ப உள்ளேதான்
ஊறும் மலக்கேணி
அருவருப்பு
வாழ்க்கையைக் கண்டு அஞ்சுநாள் எந்நாளோ"
உடல்
பற்றை ஒழித்து, இதனைப் பழித்த நாள்
பிறப்பு ஒழியும் நாள் என்று சிவபோக சாரம் கூறுகின்றது.
"தன்பெருமை எண்ணாமை, தற்போதமே இறத்தல்,
மின்பெருமையாம்
சுகத்தை வேண்டாமை - தன்பால்
உடலைத்
தினம்பழித்தல், ஓங்குசிவத்து ஒன்றல்,
நடலைப்
பிறப்பு ஒழியும் நாள்”.
"மானார் விழியைக்
கடந்து ஏறிவந்தனன், வாழ்குருவும்
கோன்ஆகி
என்னைக் குடிஏற்றிக் கொண்டனன், குற்றம் இல்லை
போனாலும்பேறு, இருந்தாலும்
நல்பேறு,
இதுபொய்அன்றுகாண், ஆனாலும் இந்த
உடம்போடு இருப்பது அருவருப்பே"
என்கின்றார்
பட்டினத்தடிகளார்.
ஆதலால், இந்த இழிந்த உடலுடன் இருக்க விரும்புதல்
கூடாது.
சததள
மலர் வார் புணை நின கழல் ---
முருகப்
பெருமானுடைய திருவடி நூற்றிதழ்த் தாமரை மலர் போன்றது. தாமரையில் தேன் துளிர்ப்பது போல் முருகன்
திருவடியில் கருணை துளிர்க்கின்றது.
புணை
- தெப்பம்.
பிறவிப்
பெரும் கடலைத் தாண்ட வைக்கும் தெப்பம் போன்றது முருகன் திருவடி.
"உறவுமுறை மனைவிமகவு
எனம்அலையில் எனதுஇதய
உருவுடைய
மலினபவ சலராசி ஏறவிடும்
உறுபுணையும்......... சீறடியே”. ---
சீர்பாத வகுப்பு.
ஆர்தரு
நிழல் புகவே தருவாயே ---
அர்
- நிறைவு. இறைவனுடைய திருவடி நிறைந்த நிழல் தரும் பெருமை உடையது. திருவடி நிழல்
மிகவும் குளிர்ச்சி ஆனது. திருவடி நிழலின்
பெருமையை அப்பர் பெருமான் கூறுமாறு காண்க...
"மாசுஇல் வீணையும், மாலை மதியமும்,
வீசு
தென்றலும், வீங்குஇள வேனிலும்,
மூசுவண்டு
அறை பொய்கையும் போன்றதே
ஈசன்
எந்தை இணையடி நீழலே”.
கருத்துரை
அருணை
மேவும் அண்ணலே, உன் திருவடி நிழலைத்
தந்து அருள்க.
No comments:
Post a Comment