பலர்க்கும் பயன்படுபவை
16. பலர்க்கும் பயன்படுவன

கொண்டல்பொழி மாரியும், உதாரசற் குணம் உடைய
     கோவும், ஊருணியின் நீரும்,
கூட்டமிடும் அம்பலத்து உறுதருவின் நீழலும்,
     குடியாளர் விவசாயமும்,

கண்டவர்கள் எல்லாம் வரும்பெரும் சந்தியில்
     கனிபல பழுத்தமரமும்,
கருணையுட னேவைத் திடுந்தணீர்ப் பந்தலும்,
     காவேரி போல் ஊற்றமும்,

விண்தலத்து உறைசந்தி ராதித்த கிரணமும்,
     வீசும்மா ருதசீதமும்,
விவேகி எனும் நல்லோர் இடத்தில் உறு செல்வமும்,
     வெகுசனர்க்கு உபகாரம் ஆம்,

வண்டுஇமிர் கடப்பமலர் மாலையணி செங்களப
     மார்பனே! வடிவேலவா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரஈசனே.

     இதன் பொருள் ---

     வண்டு இமிர் கடப்ப மலர்மாலை அணி செங்களப மார்பனே --- வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற கடப்பமலர் மாலை அணிந், சிவந்த கலவைச் சந்தனம் கமழும் திருமார்பை உடையவனே!

     வடிவேலவா --- கூர்மை பொருந்திய வேலாயுதத்தை ஏந்தியவனே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     கொண்டல் பொழி மாரியும் --- மேகமானது பெய்யும் மழையும்,

     உதார சற்குணம் உடைய கோவும் --- கொடைப் பண்பும், நற்குணங்களும் உடைய அரசனும்,

     ஊர் உணியின் நீரும் --- ஊராருக்குப் பொதுவான நீர்நிலையில் உள்ள தண்ணீரும்,

     கூட்டம் இடும் அம்பலத்து உறு தருவின் நீழலும் --- ஊர்ப் பொதுக்கூட்டங்கள் கூடும் மேடையான இடத்திலே தழைத்த மரத்தின் நிழலும்;

     குடியாளர் விவசாயமும் --- குடிகள் செய்யும் வேளாண்மையும்,

     கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் பல கனி பழுத்த மரமும் --- எல்லோரும் வருகின்ற பெரிய சந்திப்பான இடத்திலே பல பழங்களுடன் நிற்கும் மரமும்,

     கருணையுடனே வைத்திடும் தண்ணீர்ப் பந்தலும் --- கருணை உள்ளத்தோடு அமைக்கப் பெற்ற தண்ணீர்ப் பந்தலும்,     

      காவேரி போல் ஊற்றமும் --- காவிரி ஆற்றைப்  போல வற்றாது சுரக்கும் நீர் ஊற்றும்,

     விண்தலத்து உறை சந்திர ஆதித்த கிரணமும் --- வானிலே உலவும் சந்திரன், சூரியன் ஒளியும்,

     வீசும் மாருத சீதமும் --- வீசுகின்ற காற்றின் குளிர்ச்சியும்,

     விவேகி எனும் நல்லோர் இடத்தில் உறு செல்வமும் ---அறிவு உள்ள நல்லவரிடத்திலே உண்டாயிருக்கும் செல்வமும்,

ஆகிய இவை எல்லாம்,

     வெகுசனர்க்கு உபகாரம் ஆம் -- எல்லா மக்களுக்கும் பயனைத் தரும்.

        விளக்கம் --- ஊருணி - ஊர் உணி, ஊராரால் உண்ணப்படும் நீர் நிலை என்பதால் ஊருணி எனப்பட்டது. ஊருக்குப் பொதுவான இடத்திலே பெரிய மரத்தடியிலே உள்ள மேடையே சபை நடைபெறும் இடம். "ஊருணி நீர் நிறைந்து அற்றே, உலகு ஆவாம் பேர் அறிவாளன் திரு" என்னும் திருக்குறள் கருத்தை இதனோடு சேர்த்து எண்ணுக. "பயன்மரம் உள்ளூர் பழுத்து அற்றால், செல்வம் நயன் உடையான்கண் படின்" என்றார் நாயனார்.

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...