சருக்கரைப் பந்தலிலே தேன் மழை





10. சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி

பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும்
     கொடுப்பதென்ன பொருளோ? என்று
நற்கமல முகம்மலர்ந்தே உபசாரம்
     மிக்கஇன்சொல் நடத்தல் நன்றே;
கற்கரையும் மொழிபாகர் தண்டலையார்
     வளநாட்டிற் கரும்பின் வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
     பொழிந்துவிடும் தன்மை தானே!


     இதன் பொருள் ---

     கல் கரையும் மொழி பாகர் தண்டலையார் வளநாட்டில் --- கல்லும் கரையும்படியான இனிய சொற்களை உடைய  உமாதேவியாரை இடப்பக்கத்தில் கொண்ட திருத்தண்டலை  இறைவருடைய வளம் பொருந்திய நாட்டிலே,

     பொன் குடையும்  பொன்  துகிலும்  பொன்  பணியும்  கொடுப்பது  என்ன பொருளோ --- பொன்னாலான  குடையும்  அழகிய ஆடைகளையும்,  பொன்னால் ஆன அணிகலன்களையும் கொடுப்பது என்ன சிறப்பு உடையது தானா,

     என்று --- என்பதை அறிந்து,

     நல் கமலம் முகம் மலர்ந்தே உபசாரம் மிக்க இன்சொல் நடத்தல் நன்றே --- அழகிய தாமரை மலர் போல, முகத்திலே மலர்ச்சியுடன், ஆதரித்து, மிகுந்த இனிய மொழிகளைக் கூறுதலே  நல்லது,

(அவ்வாறு  செய்வது) 

     கரும்பின் வேய்ந்த சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்து விடும் தன்மை --- கரும்பினால் ஆக்கப்பட்ட சர்க்கரைப்  பந்தலிலே, தேன்மழை பொழிந்து  விடுவது போல ஆகும்.

          கருத்து --- 'சர்க்கரைப்  பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போல' என்பது பழமொழி. அகம் மலர்ந்தால் முகமும் மலரும் என்பதால் "முகம் மலர்ந்தே" என்றார். "ஆதரித்தல்" என்பது உள்ளத்தின் தொழில். "ஆதரிக்கின்றது உள்ளம்" என்றார் திருஞானசம்பந்தப் பெருமானார். உள்ளமும் முகமும் மலர்ந்து தருவது இல்லாத கொடையால் பயனில்லை என்பது கருத்து.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...