இவர் இப்படிப்பட்டவர்.




11. இப்படிப்பட்டவர் இவர்

ராயநெறி தவறாமல் உலகபரி பாலனம்
     நடத்துபவ னேஅரசனாம்,
ராசயோ சனைதெரிந்து உறுதியா கியசெய்தி
     நவிலும்அவ னேமந்திரி,

நேயமுட னேதன் சரீரத்தை எண்ணாத
     நிர்வாகி யேசூரனாம்,
நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்துசொலும்
     நிபுணகவி யேகவிஞனாம்,

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும்
     அறியும்மதி யோன்வைத்தியன்,
அகம்இன்றி மெய்யுணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்
     டவனேமெய் ஞானியெனலாம்,

மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான
     வரபுத்ர வடிவேலவா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரே சனே.

          மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான வரபுத்திர --- திருமாலின் தங்கையான உமையம்மைக்கு அன்புடைய நல்லமகனே!

     வடிவேலவா --- வடிவேலைத் திருக்கரத்தில் ஏந்தியவனே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     ராய நெறி தவறாமல் உலக பரிபாலனம் நடத்துபவனே அரசனாம் --- அரச நெறியில் தவறாமல் உலகைக் காப்பாற்றுவோனே மன்னவன் ஆவான்,

     இராச யோசனை தெரிந்து உறுதியாகிய செய்தி நவிலும் அவனே மந்திரி --- அரசியல் சூழ்ச்சி அறிந்து நன்மை தரும் பொருளைக் கூறுவோனே அமைச்சன் ஆவான்,

     நேயமுடனே தன் சரீரத்தை எண்ணாத நிர்வாகியே சூரன் ஆம் --- தன் உடல் மேல் பற்று வைக்காத தலைவனே வீரன் ஆவான்,

     நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்து சொலும் நிபுண கவியே கவிஞன் ஆம் --- நிலையான இலக்கண இலக்கிய முறையை அறிந்து கூறும் வல்லமையுள்ள புலவனே புலவன் எனத் தக்கவன்,

     ஆயதொரு வாகடம், தாதுவின் நிதானமும் அறியும் முதியோன் வைத்தியன் --- நன்மையைத் தரும் மருத்துவ நூல்களையும், எழுவகைத் தாதுக்களின் நிலையையும் அறிந்த அறிவால் முதியவனே மருத்துவன்,

     அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்து விட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம் --- நான் எனும் அகப்பற்று இல்லாமல், மெய்ப்பொருளை அறிந்து, ஐந்து பொறிகளையும் அடக்கி விட்டவனே உண்மை ஞானி எனப்படுவான்.

          விளக்கம் --- உறுதி - நன்மை. மந்திரம் கூறுவோன் - மந்திரி. மந்திரம் - ஆராய்ச்சி.  நிபுணன் - நுண்ணுணர்வு உடையவன். வாகடம் - மருத்துவ நூல்.  நான் என்னும் அகப்பற்றினைக் கூறவே, எனது என்னும் புறப்பற்றும் அறவேண்டும் என்பது பெறப்படும்.  நான் என்பது அகங்காரம். எனது என்பது மமகாரம்.

 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...