அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கேதகையபூ முடித்த
(திருவருணை)
திருவருணை முருகா!
அடியேனுக்கு வீடு பேற்றை
அருளி ஆட்கொள்ள
வேல் தாங்கி, மயில் மீது
எழுந்தருள வேண்டும்.
தானதன
தானதத்த தானதன தானதத்த
தானதன தானதத்த ...... தனதான
கேதகைய
பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
கேவலம தானஅற்ப ...... நினைவாலே
கேள்வியதி
லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே
வேதனையி
லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
மேதினியெ லாமுழற்று ...... மடியேனை
வீடுதவி
யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே
நீதிநெறி
யேயழித்த தாருகனை வேரறுத்து
நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற
நீடருளி
னால்விடுத்த பாலகும ராசெழித்த
நீலநிற மால்தனக்கு ...... மருகோனே
சோதியன
லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கேதகைய
பூ முடித்த மாதர் தம் மயாலில் உற்று,
கேவலம் அது ஆன அற்ப ...... நினைவாலே,
கேள்வி
அது இலாது இருக்கும் ஊழ்வினையினால், மிகுத்த
கேடு உறுகவே நினைக்கும் ...... வினையாலே,
வேதனையிலே
மிகுத்த பாதகனுமாய், அவத்தில்
மேதினி எலாம் உழற்றும் ...... அடியேனை,
வீடு
உதவி ஆள, வெற்றி வேல் கரம் அதே
எடுத்து,
வீறுமயில் மீதில் உற்று ...... வருவாயே.
நீதி
நெறியே அழித்த தாருகனை வேர் அறுத்து,
நீடுபுகழ் தேவர் இல்கள் ...... குடி ஏற,
நீடு
அருளினால் விடுத்த பாலகுமரா! செழித்த
நீலநிற மால்தனக்கு ...... மருகோனே!
சோதி
அனலா உதித்த சோணகிரி மாமலைக்குள்
சோபை வட கோபுரத்தில் ...... உறைவோனே!
சோனை
மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள,
வெற்றி
தோளின் மிசை வாள் எடுத்த ...... பெருமாளே.
பதவுரை
நீதிநெறியே அழித்த
தாருகனை வேர் அறுத்து --- நீதியையும் நெறியையும் அழித்தவனாகிய
தாருகாசுரனை அவன் வமிசத்தின் வேருடன் களைந்து,
நீடுபுகழ் தேவர் இல்கள் குடியேற --- புகழினால்
நீண்ட தேவர்கள் தத்தம் வீடுகளில் குடியேறி இன்புறுமாறு
நீடு அருளினால் விடுத்த பாலகுமரா ---
எல்லையற்ற கருணையினால் நிலைபெறச் செய்து அருளிய என்னும் அகலாத இளமை உடையவரே!
செழித்த நீல நிற மால்
தனக்கு மருகோனே --- செழிப்பு உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய
நாராயணமூர்த்தியின் திருமருகரே!
சோதி அனலா உதித்த சோணகிரி மாமலைக்குள் --- பிரமவிட்டுணுக்கள் மலைவு தீரும்
பொருட்டு, இருவருக்கும் நடுவே
சோதிப் பிழம்பான நெருப்பு வடிவமாகத் தோன்றி நின்ற திருவண்ணாமலை என்னும் பெருமை
தங்கிய திருத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் வடபுறம் அமைந்துள்ள
சோபை வட கோபுரத்தில் உறைவோனே --- அழகிய
கோபுர வாசல் அருகில் எழுந்தருளி இருப்பவரே!
சோனை மழை போல்
எதிர்த்த தானவர்கள் மாள ---
விடாமழை
போல் போர்க்களத்தில் எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்துபட,
வெற்றி தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே --- வெற்றியை உடைய
திருத்தோளின் மீது ஞானவாளை எடுத்தருளிய பெருமையின் மிக்கவரே!
கேதகைய பூ முடித்த
மாதர் தம் மயாலில் உற்று --- தாழம்பூவைக் கூந்தலில் முடித்த
பெண்களினுடைய மயக்கத்தில் ஆழ்ந்து,
கேவலம் அது ஆன அற்ப நினைவாலே --- மிகவும்
கேவலமும் அற்பமும் உள்ள நினைவாலே,
கேள்வி அது இலாது
இருக்கும் ஊழ்வினையினால் --- ஏன் இப்படிச் செய்தாய் என்று
யாராலும் கேட்க முடியாமல் விளையக்கூடிய பண்டை ஊழ்வினையினால்,
மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே --- மிகுந்த துன்பம்
விளைவதற்குரிய சிந்தனையால் இப்பிறப்பில் செய்யும் வினைகளினால்,
வேதனையிலே மிகுத்த
பாதகனுமாய்
--- மிகுந்த மன வருத்தம் உற்று,
மிகுந்த
பழியை அடைவதோடு அன்றி,
அவத்தில் மேதினி எலாம் உழற்றும் அடியேனை ----
பாதகனுமாகி, வீணாக உலகமெல்லாம் உழன்று வாடும்
அடியவனாகிய என்னை
வீடு உதவி ஆள --- தேவரீருடைய முத்தி வீட்டைத் தந்து அருளி
ஆட்கொள்ளும் பொருட்டு,
வெற்றி வேல் கரம் அதே எடுத்து --- வெற்றி
வேலாயுதத்தைத் திருக்கரத்தில் எடுத்துக் கொண்டு,
வீறு மயில் மீதில் உற்று வருவாயே ---
பெருமை நிரம்பிய மயில் வாகனத்தின் மீது பொருந்தி வந்து அருள வேணும்.
பொழிப்புரை
நீதியையும் நெறியையும் அழித்தவனாகிய
தாருகாசுரனை அவன் வமிசத்தின் வேருடன் களைந்து, புகழினால் நீண்ட தேவர்கள் தத்தம்
வீடுகளில் குடியேறி இன்புறுமாறு எல்லையற்ற கருணையினால் நிலைபெறச் செய்து அருளிய
என்னும் அகலாத இளமை உடையவரே
செழிப்புடையவரும், நீலநிறம் கொண்டவருமாகிய
நாராயணமூர்த்தியின் திருமருகரே
பிரமவிட்டுணுக்கள் மலைவு தீரும்
பொருட்டு, இருவருக்கும் நடுவே
சோதிப் பிழம்பான நெருப்பு வடிவமாகத் தோன்றி நின்ற திருவண்ணாமலை என்னும் பெருமை
தங்கிய திருத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் வடபுறம் அமைந்துள்ள அழகிய கோபுர வாசல்
அருகில் எழுந்தருளி இருப்பவரே
விடாமழை போல் போர்க்களத்தில் எதிர்த்து
வந்த அசுரர்கள் இறந்துபட, வெற்றியை உடைய
திருத்தோளின் மீது ஞானவாளை எடுத்தருளிய பெருமையின் மிக்கவரே
தாழம்பூவைக் கூந்தலில் முடித்த
பெண்களினுடைய மயக்கத்தில் ஆழ்ந்து,
மிகவும்
கேவலமும் அற்பமும் உள்ள நினைவாலே, ஏன் இப்படிச் செய்தாய் என்று யாராலும்
கேட்க முடியாமல் விளையக்கூடிய பண்டை ஊழ்வினையினால், மிகுந்த துன்பம் விளைவதற்குரிய
சிந்தனையால் இப்பிறப்பில் செய்யும் வினைகளினால், மிகுந்த மன வருத்தம் உற்று, மிகுந்த பழியை அடைவதோடு அன்றி, பாதகனுமாகி, வீணாக உலகமெல்லாம் உழன்று வாடும்
அடியவனாகிய என்னை, தேவரீருடைய முத்தி
வீட்டைத் தந்து அருளி ஆட்கொள்ளும் பொருட்டு, வெற்றி வேலாயுதத்தைத் திருக்கரத்தில்
எடுத்துக் கொண்டு, பெருமை நிரம்பிய
மயில் வாகனத்தின் மீது பொருந்தி வந்து அருள வேணும்.
விரிவுரை
கேதகைய
பூ முடித்த மாதர் ---
கேதகை
- தாழை. தாழம்பூவை முடித்த பெண்கள் என்றனர்.
மலர்கள் பல இருக்க, தாழம்பூவைக்
கூறுவானேன் என்ற ஐயம் நிகழ்கின்றது.
சிறிய
மடல்களை உடைய மகிழம்பூ, ஜாதிமல்லிகை முதலிய
மலர்களில் உள்ள நறுமணம், பெரிய மடல்களை உடைய
தாழையில் இராது.
அதுபோல், குலமகளாகிய மனைவிடமுள்ள நற்குணங்கள்
விலைமகளிடம் காணமுடியாது.
தாழை
எப்படி பெரிய மடல்களோடு கூடியிருக்கின்றதோ அதுபோல் விலைமகளிர் மிக்க ஆடம்பரமான
பகட்டுடன் இருப்பர்.
தவிர, தாழம்பூவிடம் அரவு இனங்கள் வாழும்.
விலைமகளிரிடமும் பல தீயவர்கள் இருப்பர்.
தாழை
சேற்றில் முளைக்கும். அதுபோல, விலைமகளிரும்
பாவமாகிய சேற்றில் வாழ்வர்.
ஆதலினால், அவ் விலைமகளிர் ஆசையை அறவே ஒழிக்கவேண்டும்
என்று சுவாமிகள் குறிப்பாகக் கூறுகின்றனர்.
கேள்வி
அது இலாது இருக்கும் ஊழ்வினை ---
பண்டைப்
பிறப்புக்களில் செய்த நன்மை தீமைகளுக்குத் தக்கவாறு, அவைகளின் பயனாக் ஊழ்வந்து இப்பிறப்பில்
மூள்கின்றது. அது ஏன் அவனைப் பற்றுகின்றனை என்று யாராலும் கேட்டுத் தடுக்கமுடியாதது.
ஊழில்
பெருவலி யாஉள, மற்றுஒன்று
சூழினும்
தான்முந்து உறும்.
என்றார்
தெய்வப்புலவர். அவ் ஊழ் வந்து தொடர்கின்ற போது, அதனை ஞானிகளாலும் தடுக்கமுடியாது. ஆனால், ஞானிகள் உடல்வேறு தான் வேறாகத்
திகழ்பவர் ஆதலின், அவர்கட்கு அது
உடலூழாய் கழியும்.
கடல்அளவு
உரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்
காணும் படிக்கு உரைசெய்வர்,
காசினியின் அளவுபிர மாணம்அது சொல்லுவார்,
காயத்தின் நிலைமை அறிவார்,
விடல்அரிய
சீவநிலை காட்டுவார், மூச்சையும்
விடாமல் தடுத்து அடக்கி
மேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டி
விண்மீதி னும்தா வுவார்,
தொடலரிய
பிரமநிலை காட்டுவார், எண்வகைத்
தொகையான சித்தி அறிவார்,
சூழ்வினை வரும்பொழுது சிக்கிஉழல் வார்! அது
துடைக்கஒரு நான்மு கற்கும்
அடைவுஅல
எனத்தெரிந்து அளவில்பல நூல்சொல்லும்,
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! --- அறப்பளீசுர சதகம்.
முதிர்தரு
தவம்உடை முனிவர் ஆயினும்
பொதுஅறு
திருவொடு பொலிபவர் ஆயினும்
மதியினர்
ஆயினும் வலியர் ஆயினும்
விதியினை
யாவரே வெல்லும் நீர்மையார். ---
கந்தபுராணம்.
என்
செயல்ஆவது யாதுஒன்றும் இல்லை இனி, தெய்வமே!
உன்
செயலே என்று உணரப் பெற்றேன், இந்த ஊன் எடுத்த
பின்
செய்த தீவினை யாதொன்றும் இல்லை, பிறப்பதற்கு
முன்
செய்த தீவினையோ, இங்ஙனே வந்து மூண்டதுவே. --- பட்டினத்தடிகள்.
கேடு
உறுகவே நினைக்கும் வினை ---
மறுமையில்
கேடு உறும்படி இம்மையில் செய்யும் வினை ஆகாமியம். வினை மூவகைப்படும். ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்பவையாம். ஆகாமியம் இப்பிறப்பில் செய்வது. சஞ்சிதம் பக்குவப்படாமல் சிறை கட்டப்பட்டு
இருக்கும் இருப்பு. பிராரப்தம்
பக்குவப்பட்டு இப்போது புசித்து வருவது. இம்
மூன்று வகையும் முடிந்தாலொழிய பிறப்பென்னும் பெருந்துயர் நீங்காது.
ஒருவன்
வயலில் 10 கலம் நெல்லை
விதைத்துப் பயிரிடுகின்றான். இருப்பாக 100 கலம் நெல்லைக் குதிரில் சேமித்து
வைத்தான். 35 கலம் நெல்லைக் குத்தி உணவுக்கு
மனைவியிடம் கொடுத்தான். வயலில் விளைத்தானே
அது இப்போது விளையும் ஆகாமியம். குதிரில்
வைத்த சேமிப்பு சஞ்சிதம். உணவுக்குத்
தந்தது பிராரப்தம். மழை பொழியாமல்
விதைத்தது தீய்ந்துவிட்டது. வீடு
தீப்பிடித்து குதிரில் உள்ள நெல் கரிந்துவிட்டது. உணவுக்குக் கொடுத்தது உண்டு
முடிந்தது. எனவே, மூன்றும் காலியாயின. அதுபோல் ஆகாமியம் செய்யாமலும், சஞ்சிதம் ஞானாக்கினியால் எரிந்தும், பிராரப்தம் உடல் ஊழாய்த் துய்த்து
முடிந்தும் மூவகையான வினைகளும் காலியானால் பிறப்பு நீங்கி விடுகின்றது.
வினையின் விளக்கம்
உலகில்
உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்பதுன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின்
எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்? உயர்குடியில்தானே
பிறக்கும்?
இறைவன்
ஆணையின் வழி இவை நிகழ்கின்றன. அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன்
ஆகின்றான். இறைவனுடைய அருட்குணத்திற்கு
முரணும். உயிர்களின் இருவினைக்கு ஏற்ப, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும்
புரிகின்றான். அதனால் இறைவனுக்குப்
பட்சபாதம் இன்று என்று அறிக.
நிமித்தகாரணன்
ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும்
துணைக் காரணம் என்க.
வினையின்
வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால்,
இறைவன்
எதற்கு? எனின், வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது. ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு
இறைவன் வேண்டும் என்று உணர்க.
இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து
நுகருமே? ஆதலின் வினைகளை
ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனின், உயிர்கள் தாமே அறியா. அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன்
இன்றியமையாதவன் ஆகின்றான்.
அப்படி
ஆயின், வினையின் வழியே
உயிர்கட்கு, இறைவன்
சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய
சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே எனின், எய்தாது
என்க. குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப
அரசன் அருளும் தண்டமும் செய்வதனால்,
அரசனுடைய
சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை,
அல்லவா
வினை
ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு.
ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற
சற்காரிய வாதம் பிழைபடும். ஆகவே, வினை அநாதியே உண்டு என்க. அது எதுபோல்
எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.
நெல்லிற்கு
உமியும், நிகழ்செம்பினில்
களிம்பும்,
சொல்லில்
புதிதுஅன்று, தொன்மையே, ---
வல்லி
மலகன்மம்
அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம்
செய்கமலத்து ஆம்.
இருவினையின் காரியமான
இன்பதுன்ப முதலாயின
வினை மூவுருவம்
கொள்ளும்
வினை, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய
அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள்
என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும்.
பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்திதத்துவத்தினிடமாக
மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர்
பெறும்.
வினை
பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள்
எல்லாவற்றோடும் கூடுதல் என அறிக.
அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆண்நிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால்
பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப்
பெயர் பெறும்.
எனவே
ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.
ஆகாமியம்
- செய்யப்படுவது.
சஞ்சிதம்
- பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.
பிராரத்தம்
- அநுபவிப்பது.
இனி, பிராரத்தம் ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும்
என்றோமே, அதன் விவரம்
வருமாறு....
(1) ஆதி தைவிகம் --- தெய்வத்தால்
வரும் இன்பதுன்பங்கள்.
அவை
--- கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப
துன்பங்களாம்.
கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்
திரைநரைமூப்பில்
திளைத்து, செத்து --- நரகத்தில்
ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்
ஊழ்உதவு
தைவிகம்என்று ஓர்.
(2) ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம்.
அவை
--- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம், மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப
இன்பங்களாம்.
தன்னால்
பிறரால் தனக்குவரும் தீங்குநலம்
இன்னா
விலங்குஅலகை தேள்எறும்பு – செல்முதல்நீர்
அட்டை
அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்
கட்டமும்
இங்கு ஆன்மிகமே காண்.
(3) ஆதிபௌதிகம் --- மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள்.
அவை
--- குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி, தென்றல் முதலியன.
பனியால்
இடியால் படர்வாடை யினாலும்
துணிதென்றலினாம்
சுகமும் --- தனைஅனைய
நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு
ஓரில்
பவுதிகம் ஆகும்.
இன்னும்
உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.
3. அத்தியான்மிக வினை --- வேதநெறியால் செய்யும் பூசனை துறவு
முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில்
அடங்கிய புவன போகங்களைத் தருவது.
4. அதிமார்க்க வினை --- இயமம் நியம் முதலிய யோகப் பயிற்சியால்
உண்டாவதாய், சாந்திகலையில்
அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
5. மாந்திர வினை --- சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய
ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத
கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.
இதுகாறும்
ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை
காரணம். அவ்வினை அற்றால் அன்றி பிறவி
அறாது எனத் தெளிக.
இருவினை
முமலமுற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய்
நீயும் நானுமாய்
இறுகும்வகை
பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்
ஏகநாயகா
லோகநாயகா. --- (அறுகுநுனி) திருப்புகழ்.
அவையே
தானே ஆய்இரு வினையில்
போக்குவரவு
புரிய, ஆணையில்
நீக்கம்இன்றி
நிற்கும்அன்றே.
என்ற
சிவஞானபோத இரண்டாம் சூத்திரத்தினாலும், இதற்கு
மாதவச் சிவஞான யோகிகள் எழுதிய பேருரையாலும், சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய வழிநூல்
புடைநூல்களாலும் வினையின் விளக்கத்தை விரிவாகக் கண்டு தெளிக.
வெற்றிவேல் ---
ஞானமே
எல்லாவற்றையும் வெல்லும். ஆதலின், ஞானமாகிய வேலை வெற்றிவேல் என்றனர். ஞானமே வேலாயுதம். ஞானம் கூர்மையாக இருக்கும். வேற்படையும் கூர்மையாகத் திகழும்.
சுரர்பதி
அயனும் மாலும்
முறையிட
அசுரர் கோடி
துகளெழ
விடு மெய்ஞ்ஞான அயிலோனே. ---
(ஒருவரைஒருவர்)
திருப்புகழ்.
நாளிகேரம்
வருக்கை பழுத்து உதிர்
சோலைசூழ்
பழநிப்பதி யில்திரு
ஞானபூரண
சத்தி தரித்து அருள் பெருமாளே. ---
(ஆலகாலமென)
திருப்புகழ்.
நீதி
நெறியே அழித்த தாருகன் ---
அசுரர்கள்
ஒழுகவேண்டிய நீதியையும், பிற நெறிகளையும்
தாரகன் அழித்து வானவரை அலக்கழித்து மதம் கொண்டு திரிந்தனன். சூரனுக்கு இளவலாகிய அவன் திருமாலுடைய ஆழி
ஆயுதத்தைப் பூமாலையாக மார்பில் அணிந்து கொண்ட பேராற்றல் உடையவன். அவனால் அமரர் பெரிதும் அல்லல் உற்றனர். இடுக்கணுற்ற இமையவர் முறையிட, ஐம்முகச்சிவனார் அறுமுகச்சிவானாராக
எழுந்தருளி தாரகனை அழித்து, அவனுக்குத் துணையாக
இருந்து மாயையை விளைவித்த கிரௌஞ்ச மலையயையும் தகர்த்து, அமரரை தத்தம் இல்லத்தில் குடிபுகச்
செய்தனர்.
சோதி
அனலா உதித்த சோணகிரி ---
ஒருசமயம்
நான்முகக் கடவுள் "அண்ட கோடிகளை எல்லாம் படைப்பவன் ஆதலின் நானே
பரம்பொருள்" என்று தருக்குற்று மொழிந்தனர்.
திருமால், "காத்தல் கடவுள்
ஆதலால் நானே பரம்பொருள்" என்று எதிர்த்தனர்.
இங்ஙனம் இருவரும் செருக்கி நெடுங்காலம் போர் புரிந்தனர். அதனால் உலகில் உள்ள உயிர்கள் வருந்தின. உலகிற்கு உற்ற இடரும், பிரமவிட்டுணுக்களின் தருக்கும் நீங்கப்
பரசிவபெருமான் இருவருக்கும் நடுவே ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியாக –
தாணுவாக நின்றருளினர். அதுகண்ட இருவரும்
வெருவுற்று "இதன் அடியையும் முடியையும் காணுமுகத்தால் நமது வழக்கைத்
தீர்த்துக் கொள்வோம்" என்று துணிந்தனர்.
திருமால் பன்றி வடிவமெடுத்து ஆயிரம் ஆண்டு அடியைத் தேடினார். எழுலகங்களையும் அகழ்ந்து போயினார். பாதாளம் ஏழினும் கீழ் கிளைத்துச் சென்று
திருவடி காணாது திகைத்தனர், மதித்தனர், துதித்தனர், உருகினர், அன்பு பெருக்கினர், தருக்கு அகன்று வந்தித்து அருள்
பெற்றனர்.
"நான் இறைவனை
காண்பேன்" என்ற முனைப்பு உள்ளவரை காணமுடியாது. முனைப்பற்ற இடத்தே இறைவன் தானே தோன்றி நிற்பன்.
தடுங்கோள்
மனத்தை, விடுங்கோள் வெகுளியை, தானம்என்றும்
இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழுபாரும் உய்யக்
கொடும்
கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க, வைவேல்
விடும்
கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே. --- கந்தர் அலங்காரம்.
விட்டேன்
உலகம், விரும்பேன் இருவினை, வீணருடன்
கிட்டேன், அவர்உரை கேட்டும் இரேன், மெய் கெடாதநிலை
தொட்டேன், சுகதுக்கம் அற்றுவிட்டேன், தொல்லைநான் மறைக்கும்
எட்டேன்
எனும் பரம் என்னிடத்தே வந்துஇங்கு எய்தியதே. --- பட்டினத்தடிகள்.
பின்னும்
இறைவனை வெளியே தேடித் திரிவதனால் காணமுடியாது.
உயிர்க்கு உயிராய் உள்ள ஒருவன் பார்வையை அகமுகப்படுத்தி, அசைவற நிற்பார்க்கு காணக்கிடைப்பன்.
உடலும்உடல்
உயிரும்நிலை பெறுதல்பொருள் எனஉலகம்
ஒருவிவரும் மநுபவன ......
சிவயோக சாதனையில்
ஒழுகும்அவர்
பிறிதுபர வசம்அழிய விழிசெருகி
உணர்வுவிழி கொடுநியதி ......
தமதூடு நாடுவதும்,
உருஎனவும்
அருஎனவும் உளதுஎனவும் இலதுஎனவும்
உழலுவன பரசமய ......
கலைஆர வாரம்அற
உரைஅவிழ
உணர்வுஅவிழ உளம்அவிழ உயிர்அவிழ
உளபடியை உணரும்அவர் ......
அநுபூதி ஆனதுவும்... ---
சீர்பாத
வகுப்பு.
தேடிக்
கண்டுகொண்டேன், திருமாலொடு
நான்முகனும்
தேடித்
தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக்
கண்டுகொண்டேன். --- அப்பர்.
கருத்துரை
தாரகனை
வென்று தேவரை வாழ்வித்த தயாபரரே! திருமால் மருகரே! திருவருணையில் வாழ்பவரே! அவுணரை
அழித்த பெருமாளே! மாதர் மயக்கில் ஆழ்ந்து வினையினால் அடியேன் நலியாவண்ணம்
முத்திவீட்டைத் தர வேலாயுதத்துடன் வந்து காத்தருள்வீர்.
No comments:
Post a Comment