அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சினமுடுவல்
(திருவருணை)
திருவருணை முருகா!
அடியார்களுடன் கூடி உனக்குத்
தொண்டு புரியத்
திருவுள்ளம் பற்றுவாய்.
தனதனன
தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததான
சினமுடுவல்
நரிகழுகு டன்பருந் தின்கணங்
கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்
செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந் ......துன்பமேவு
செனனவலை
மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்
தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்
சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந்
.....தொன்றுநாயேன்
கனகபுவி
நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்
குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்
கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண்டு
...... அன்பரோடே
கலவிநல
மருவிவடி வஞ்சிறந் துன்பதம்
புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்
கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன் .....சிந்தியாதோ
தனனதன
தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்
தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங்
குந்தடர்ந்து ......அண்டர்பேரி
தடுடுடுடு
டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்
கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் ...... சிந்திமாளச்
சினமுடுகி
அயிலருளி யும்பரந் தம்பரந்
திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்
செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண்டு
......அஞ்சல்பாடத்
திருமுறுவ
லருளியென தெந்தையின் பங்குறுங்
கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந்
திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந்
...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
சின
முடுவல், நரி, கழுகுடன், பருந்தின் கணம்,
கொடி, கெருடன், அலகை, புழு, உண்டு கண்டு இன்புறும்
செடம் அளறு மலசலமொடு என்பு துன்றும், கலம், ......துன்பம்
மேவு
செனனவலை, மரணவலை, இரண்டு முன்பின் தொடர்ந்து
அணுகும் உடலம் நெக, வடிவு இங்கு அடைந்து, அம்பரம்
சிறுமணலை அளவிடினும் அங்குஉயர்ந்து, இங்கு உலந்து......ஒன்று நாயேன்
கனக
புவி நிழல் மருவி அன்பு உறும் தொண்டர் பங்கு
உறுக, இனி அருள் கிருபை வந்து தந்து, என்றும் உன்
கடன், எனது உடல் உயிரும் உன்பரம், தொண்டுகொண்டு,...அன்பரோடே
கலவி
நலம் மருவி, வடிவம் சிறந்து, உன்பதம்
புணர் கரண மயில் புறமொடு, இன்பு கொண்டு, அண்டரும்
கனக மலர் பொழிய, உனது அன்பு உகந்து, இன்று முன் .....சிந்தியாதோ?
தனனதன
தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்
தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங்
குந்தடர்ந்து ......அண்டர்பேரி
தடுடுடுடு
டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்பு திண்
கடை யுகமொடு ஒலிய, கடல் அஞ்ச வஞ்சன் குலம் ...... சிந்திமாள,
சினம்
முடுகி, அயில்அருளி, உம்பர் அந்தம் பரந்து,
திகை உரகர் புவி உளது மந்தரம், பங்கயன்
செகம் முழுதும் மகிழ, அரி அம்புயன் தொண்டுகொண்டு,...... அஞ்சல்
பாட,
திரு
முறுவல் அருளி எனது எந்தையின் பங்கு உறும்
கவுரி மனம் உருக, ஒரு கங்கை கண்டு அன்பு உறும்,
திரு அருணகிரி மருவு சங்கரன் கும்பிடும்
...... தம்பிரானே.
பதவுரை
தனனதன தனனதன தந்தனந்
தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங்கும் தடம் தவில்முரசு பறைதிமிலை
டிங்குடிங்குந்த அடர்ந்து --- தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்கு டங்கும் என்று ஒலிக்கின்ற வளைவுள்ள தவிலும், முரசு வாத்தியமும், பறை என்னும் வாத்தியமும், திமிலை என்ற பறை வாத்தியமும், டிங்கு டிங்குந்த என்று ஒன்று கூடி
பேரொலி எழுப்ப,
அண்டர் பேரி
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண் கடையுகமொடு ஒலிய --– தேவர்களுடைய பேரி வாத்தியம், தடுடுடுடு டுடுடுடுடு டுண்டு டுண்டுண்டு
டுண் டிமிடிமிட டகுர்திகுகு என்ற ஒலியுடன் ஒலி செய்ய,
கடல் அஞ்ச --- கடல் அஞ்சுமாறும்,
வஞ்சன் குலம் சிந்தி மாள --- வஞ்சகனாகிய
சூரபன்மனுடைய குலமானது சிதறுண்டு அழியவும்,
சினம் முடுகி அயில் அருளி
---
மிகுந்த சீற்றத்துடன் வேலாயுதத்தைச் செலுத்தி,
உம்பர் --- தேவர்களும்,
அந்த அம்பரம் --- அந்தக் கடலும்,
திகை --- திசைகளில் உள்ளவர்களும்,
உரகர் --- நாகர்களும்,
புவி உளது --- பூமியில் வாழ்பவர்களும்,
மந்தரம் --- மந்தர மலையில்
வாழ்பவர்களும்,
பங்கயன் செகம் --- பிரமனுடைய உலகத்தில்
உறைபவர்களும்
முழுது மகிழ -- யாவரும் மகிழ்ச்சி
அடைய,
அரி --- திருமாலும்
அம்புயன் --- பிரமதேவரும்
தொண்டு கொண்டு --- அடிமை பூண்டு
அஞ்சல் பாட --– அபயம் கொடு என்று
ஒலமிடும் பாடல்களைப் பாட,
திருமுறுவல் அருளி --- அழகிய புன்னகை
பூத்து அருளி,
எனது எந்தையின் பங்கு உறும் கவுரி மனம்
உருக --- எனது தந்தையாகிய சிவபெருமானுடைய பக்கத்தில் உள்ள உமாதேவியார் மனம்
உருக,
ஒரு கங்கை கண்டு அன்புறும் --- ஒப்பற்ற
கங்காதேவி உமது ஆடலைப் பார்த்து அன்பு கொள்ளும்,
திருஅருணகிரி மருவு சங்கரன் கும்பிடும்
தம்பிரானே --- திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவபிரான் கும்பிடும் தனிப் பெருந்தலைவரே!
சின முடுவல் நரி
கழுகுடன்
--- கோபம் கொள்ளும் நாயும், நரியும், கழுகும்,
பருந்தின் கணம் --- பருந்தின்
கூட்டமும்,
கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு
இன்புறும் செடம் --- காக்கையும், கருடனும், பேயும், புழுவும் உண்டும் கண்டும் மகிழ்ச்சி
உறுகின்ற உடல்,
அளறு மலசலமொடு என்பு துன்றும் கலம் ---
சேறு போன்ற மலமும், மூத்திரமும், எலும்பும் கூடியுள்ள பாத்திரம்,
துன்ப மேவு செனன வலை --- துன்பத்துடன்
கூடிய புறப்பு வலை,
மரண வலை இரண்டும் --- இறப்பு வலை
என்னும் இரண்டும்
முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் ---
முன்
பின்னாகத் தொடர்ந்து நெருங்கி வரும் உடல்,
அநெக வடிவு இங்கு அடைந்து --- பலவிதமான
வடிவங்களை அடைந்து,
அம்பரம் சிறுமணலை அளவிடினும் --- கடலின்
சிறுமணலை அளவிட்டாலும்,
அங்கு உயர்ந்து --- அந்த அளவில்
மேற்பட்டு,
இங்கு உலந்து ஒன்று நாயேன் --- இங்கு
அழிதலைப் பொருந்தும், இத்தகைய உடம்புடன்
கூடிய அடியேன்,
கனக புவி நிழல்மருவி
அன்புறும் தொண்டர் பங்கு உறுக --- பொன்னுலக நிழலில் இருந்து
தேவரீரிடம் அன்பு பூண்டுள்ள திருத்தொண்டர்களின் பக்கத்தில் சேர்ந்து பொருந்த,
இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன்
கடன் --- இனி உமது அருட்கருணையை வந்து தருவது என்றும் உமது கடமையாகும்,
எனது உடல் உயிரும் உன் பரம் ---
அடியேனுடைய உடலும் உயிரும் உமது பாரமாகும்,
தொண்டு கொண்டு --- அடியேனுடைய தொண்டினை ஏற்றுக் கொண்டு,
அன்பரோடே கலவி நலம் மருவி --- அன்பர்களுடன்
சேர்க்கை இன்பம் பொருந்தி,
வடிவம் சிறந்து --- என் வடிவம்
சிறக்கப்பெற்று,
உன் பதம் புணர் கரணம் --- உமது
திருவடியில் என் மனமானது பொருந்த,
மயில் புறமொடு இன்பு கொண்டு --- மயிலின்
புறத்தே மகிழ்ச்சி பூண்டு,
அண்டரும் கனகமலர் பொழிய --- தேவர்களும் பொன்மலர் மழை பொழிய,
உனது அன்பு உகந்து --- உமது அன்பானது
உவந்து,
இன்று முன் சிந்தியாதோ --- இன்றே
அடியேனை முன்னதாக நினைக்காதோ?
பொழிப்புரை
தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு
குகுகுகுகு டங்கு டங்கும் என்று ஒலிக்கின்ற வளைவுள்ள தவிலும், முரசு வாத்தியமும், பறை என்னும் வாத்தியமும், திமிலை என்ற பறை வாத்தியமும், டிங்கு டிங்குந்த என்று ஒன்று கூடி
பேரொலி எழுப்ப, தேவர்களுடைய பேரி வாத்தியம், தடுடுடுடு டுடுடுடுடு டுண்டு டுண்டுண்டு
டுண் டிமிடிமிட டகுர்திகுகு என்ற ஒலியுடன் ஒலி செய்ய, கடல் அஞ்சுமாறும், வஞ்சகனாகிய சூரபன்மனுடைய குலமானது
சிதறுண்டு அழியவும், மிகுந்த சீற்றத்துடன்
வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்களும், கடலும், திசைகளில் உள்ளவர்களும், நாகர்களும், பூமியில் வாழ்பவர்களும், மந்தர மலையில் வாழ்பவர்களும், பிரமனுடைய உலகத்தில் உறைபவர்களும்
யாவரும் மகிழ்ச்சி அடைய, திருமாலும்
பிரமதேவரும் அடிமை பூண்டு அபயம் கொடு என்று ஒலமிடும் பாடல்களைப் பாட, அழகிய புன்னகை பூத்து அருளி, எனது தந்தையாகிய சிவபெருமானுடைய
பக்கத்தில் உள்ள உமாதேவியார் மனம் உருக, ஒப்பற்ற
கங்காதேவி உமது ஆடலைப் பார்த்து அன்பு கொள்ளும், திருவண்ணாமலையில் வீற்றிருக்கும்
தம்பிரானே!
கோபம் கொள்ளும் நாயும், நரியும், கழுகும், பருந்தின் கூட்டமும், காக்கையும், கருடனும், பேயும், புழுவும் உண்டும் கண்டும் மகிழ்ச்சி
உறுகின்ற உடல், சேறு போன்ற மலமும், மூத்திரமும், எலும்பும் கூடியுள்ள பாத்திரம், துன்பத்துடன் கூடிய புறப்பு வலை, இறப்பு வலை என்னும் இரண்டும் முன்
பின்னாகத் தொடர்ந்து நெருங்கி வரும் உடல், பலவிதமான வடிவங்களை அடைந்து, கடலின் சிறுமணலை அளவிட்டாலும், அந்த அளவில் மேற்பட்டு, இங்கு அழிதலைப் பொருந்தும், இத்தகைய உடம்புடன் கூடிய அடியேன், பொன்னுலக நிழலில் இருந்து தேவரீரிடம்
அன்பு பூண்டுள்ள திருத்தொண்டர்களின் பக்கத்தில் சேர்ந்து பொருந்த, இனி உமது அருட்கருணையை வந்து தருவது
என்றும் உமது கடமையாகும், அடியேனுடைய உடலும்
உயிரும் உமது பாரமாகும், அடியேனுடைய தொண்டினை
ஏற்றுக் கொண்டு, அன்பர்களுடன்
சேர்க்கை இன்பம் பொருந்தி, என் வடிவம்
சிறக்கப்பெற்று, உமது திருவடியில் என்
மனமானது பொருந்த, மயிலின் புறத்தே
மகிழ்ச்சி பூண்டு, தேவர்களும் பொன்மலர்
மழை பொழிய, உமது அன்பானது உவந்து, இன்றை அடியேனை முன்னதாக நினைக்காதோ?
விரிவுரை
இத்
திருப்புகழில் அருணையடிகள், உடலின்
அசுத்தத்தையும், அடியார்களின்
உறவையும் கூறி, முருகன் கருணையை
வேண்டுகின்றார்.
பின்னே
உள்ள நான்கு அடிகளில் போர்க்களத்தில் வாத்தியங்கள் ஒலிக்கும் ஆரவாரத்தை விரித்து
விளம்புகின்றார்.
சினமுடுவல்
நரி கழுகுடன் பருந்தின்கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் செடம் ---
முடுவல்
- நாய். கொடி - காக்கை, செடம் - உடம்பு.
பாலும்
தேனும் பழமும் தோறும் பலவகையான பட்சணங்களும், வறியார்க்கும் உதவாமல், காலம் தவறாது, வயிறு புடைக்க உண்டு வளர்க்கும் இந்த
அருமையான உடம்பு, முடிவில் நாயும், நரியும், பேயும், கழுகும் உண்டு மகிழ அழிகின்றது.
எரிஎனக்கு
என்னும், புழுவோ எனக்கு
என்னும், இந்த மண்ணும்
சரிஎனக்கு
என்னும், பருந்தோ எனக்கு
என்னும், தான் புசிக்க
நரிஎனக்கு
என்னும், புல்நாய் எனக்கு
என்னும், இந்நாறு உடலைப்
பிரியமுடன்
வளர்த்தேன், இதனால் என்னபேறு
எனக்கே. --- பட்டினத்தார்.
மலசலமொடு
என்பு துன்றும் கலம் ---
கலம்
- பாத்திரம்.
மலம், நீர், சீழ், தசை, எலும்பு இவைகளுடைய பாத்திரம் இவ்
உடம்பு.
தோலெலும்பு
சீநரம்பு பீளைதுன்று கோழைபொங்கு
சோரிபிண்ட
மாய்உருண்டு வடிவான தூலம்.... ---
திருப்புகழ்.
துன்ப
மேவு செனன வலை மரண வலை இரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் ---
பிறப்பும், இறப்பும் இரு வலைகள். உயிராகிய பறவை இவ்
வலைகளில் சிக்கிப் பலப்பல யுகங்களாகப் பரதவிக்கின்றது. பிறப்பும் இறப்பும் துன்பத்தைத் தருகின்றன. ஜனன
அவஸ்தை மரண அவஸ்தை என்பார்கள். பிறந்து
இறந்து மாறி மாறி உயிர் வேதனை அடைகின்றது.
"எல்லாப்
பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்கின்றார் மணிவாசகர். "யான் இதன்மேல்
இனி இளைக்குமாறு இலனே" என்கின்றார் பட்டினத்தார்.
அம்பரம்
சிறுமணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்று நாயேன் ---
அம்பரம்
- கடல். கடற்கரையில் உல்ள நொய் மணல்களை அளவிட்டால், அதன் அளவினும் அதிகமாகப் பிறவிகளை
எடுத்திருக்கின்றோம்.
எழுகடல்
மணலை அளவிடின் அதிகம்
எனதுஇடர்ப்
பிறவி அவதாரம் … --- திருப்புகழ்.
கடல்
எத்தனை மலை எத்தனை அத்தனை கன்மம்,
அதற்கு
உடல்
எத்தனை அத்தனை கடல் நுண்மணல் ஒக்கும், இந்தச்
சடலத்தை
நான்விடு முன்னே உனை வந்து சார, இருட்
படலத்தை
மாற்றப் படாதோ நிறைந்த பராபரமே. --- தாயுமானார்.
தொண்டர்
பங்கு உறுக
---
அடியவருடன்
கூடும் கருணையைச் செய் என்று அடிகள் ஆண்டவனிடம் வேண்டுகின்றார். "தொண்டரொடு கூட்டு கண்டாய்"
என்கின்றார் தாயுமானார். ஆவுடன் கூடிய குருட்டாவும் ஊர்புகுமாப் போல, அடியருடன் கூடிய ஆன்மா பரகதி அடையும்.
என்றும்
உன் கடன்
---
எளியேனை
ஆட்கொள்வது, முருகா உனக்குக்
கடனாகும் என்கின்றார்.
"தன்கடன்
அடியேனையும் தாங்குதல்" --- அப்பர்.
"கடன்
ஆகும் இதுக் கனம் ஆகும்" --- (நிலையாத) திருப்புகழ்.
உடல்
உயிரும் உன் பரம் ---
"அப்பனே! அடியேன் உடல்
உயிர் எல்லாம் உன்னுடைய பாரமே ஆகும். உன்
ஆட்சிக்கு உட்பட்டவை அல்லாவா? நன்றே வரினும் தீதே
விளைகினும் எனக்கென்ன? எல்லாம் உன்
பரம்" என்கின்றார்.
காக்கக்
கடவிய நீ காவாது இருந்தக்கால்
ஆர்க்குப்
பரம் ஆம் அறுமுகவா …. --- நக்கீரர்.
உன்பதம்
புணர் கரணம்
---
கரணம்
- மனம் முதலிய அந்தக்கரணங்கள். மனம்
முதலிய கரணங்கள் முருகனுடைய திருவடியில் புணரவேண்டும்.
இங்ஙனம்
"அடியேன் முருகன் அடியில் மருவி மகிழும் போது அமரர்கள் பூமாரியே சொரிய"
என்று பிறிதொரு திருப்புகழிலும் கூறுகின்றார்.
அன்பு
உகந்து இன்று முன் சிந்தியாதோ ---
"அடியேன் மீது உமது
அன்பு உவந்து இன்றே எளியேனை ஆள நீர் நினைக்கலாகாதோ" என்று அடிகளார்
எம்பிரானிடம் முறையிடுகின்றார்.
அயில்
அருளியும் பரந்த அம்பரம் ---
அயில்
அருளியும் பரந்த அம்பரம் என்று பதச்சேதம் செய்தால், பரந்த அம்பரம் என்று பொருள்படும்.
அயில்
அருளி உம்பர் அந்த அம்பரம் என்று பதச்சேதம் செய்தால், வேலை விடுத்து தேவர்களும் அந்த கடலும்
என்று பொருள்படும்.
உம்பரந்தம்பரம்
என்ற சொல்நடை இனியதாக உள்ளது.
அலங்காரத்திலும் "அம்பரம் பம்பரம் பட்டு உழல மதித்தான்
திருமருகா" என்று அழகாகச் சொற்களை அமைத்துள்ளார்.
கருத்துரை
அருணை
மேவும் அண்ணலே, கருணை உள்ளம்
நினைத்து என்னை ஆட்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment