அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சுக்கிலச் சுரொணித
(திருவருணை)
திருவருணை முருகா!
பயனில்லாத நூல்களைக் கற்று, வெற்று அறிவு பெற்று அழியாமல்
காத்து அருள்.
தத்த
தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான
சுக்கி
லச்சுரொணி தத்தி லுற்றநளி
னத்தி லப்புவென ரத்த முற்றிசுக
சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை
...... வந்துகோலத்
தொப்பை
யிட்டவயி றிற்பெ ருத்துமிக
வட்ட மிட்டுடல வெப்ப முற்றுமதி
சொற்ற பத்தின்மறி யக்ஷ ரத்தினுடை ......
விஞ்சையாலே
கக்க
நற்புவியி லுற்ற ரற்றிமுலை
யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர்
கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை ......
அந்தமேவிக்
கற்று
வெற்றறிவு பெற்று தொக்கைமயி
லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி
கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல ...... மங்குவேனோ
தெற்க
ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட
ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு
சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் ...... மருகோனே
செக்க
ரத்தின்மலை முப்பு ரத்திலெரி
யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு
சித்த னைத்தையும்வி ழித்த சத்தியுமை ......
தந்தபாலா
தர்க்க
மிட்டசுர ரைக்கெ லித்துமலை
யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்டதிசை
தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின் ...மண்டும்வேலா
தத்தை
வித்ருமநி றத்தி முத்தணிகு
றத்தி கற்பகவ னத்தி சித்தமவை
தக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ் ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
சுக்கிலச்
சுரொணிதத்தில் உற்ற நளி-
னத்தில் அப்பு என, இரத்தம் முற்றி, சுக
சுக்கிலக் குளிகை ஒத்து, கெர்ப்ப குகை ...... வந்து, கோலத்
தொப்பை
இட்ட வயிறில் பெருத்து, மிக
வட்டம் இட்டு, உடல வெப்பம் உற்று, மதி
சொற்ற பத்தின் மறி, அட்சரத்தின்உடை
...... விஞ்சையாலே
கக்க, நல் புவியில் உற்று, அரற்றி, முலை-
யைக் கொடுக்க, அமுர்தைப் புசித்து, வளர்-
கைக்கு, அசத்தியொடு உழைத்து
தத்து நடை ......அந்தம்
மேவிக்
கற்று, வெற்று அறிவு பெற்று, தொக்கை மயில்
ஒத்த மக்கள் மயலில் குளித்து, நெறி
கட்டி இப்படி பிறப்பில் உற்று, உடலம்...... மங்குவேனோ?
தெற்கு
அரக்கர் பவிஷைக் குலைத்து, விட-
ணற்கு நத்து அரசு அளித்து, முத்திகொடு
சித்திரத் திரு, உரத்த சக்கிரி தன் ...... மருகோனே!
செக்கரத்தின்
மலை முப்புரத்தில் எரி
இட்ட சத்தி சிவன் உற்று நத்த, மிகு
சித்து அனைத்தையும் விழித்த சத்தி, உமை ......தந்தபாலா!
தர்க்கம்
இட்ட அசுரரைக் கெலித்து, மலை
உக்க, எழுக்கடல் கொளுத்தி, அட்டதிசை
தட்ட முட்டை அடைய, கொடிப் புகையின் .....மண்டும்வேலா!
தத்தை, வித்ரும நிறத்தி, முத்து அணி
குறத்தி, கற்பக வனத்தி, சித்தம் அவை
தக்கு நத்த, அருணைக் கிரிக்குள் மகிழ்
...... தம்பிரானே.
பதவுரை
தெற்கு அரக்கர்
பவிஷைக் குலைத்து --- தென்திசையில் உள்ள அரக்கர்களின்
செருக்கை அழித்து,
விடணற்கு நத்து அரசு அளித்து --- விபீடணருக்கு விரும்பத்தக்க அரசாட்சியை
அளித்து,
முத்திகொடு --- முத்தியைக்
கொடுத்தவரும்,
சித்திரத் திரு உரத்த சக்கிரி தன்
மருகோனே --- அழகிய திருமகளைத் தருமார்பில் தரித்தவரும், சக்கராயுதத்தை ஏந்தியவரும் ஆன
திருமாலின் மருகரே!
செ கரத்தின் மலை --- செம்மையான திருக்கரத்தில்
மேரு மலையாகிய வில்லை ஏந்தி,
முப்புரத்தில் எரி இட்ட சத்தி, சிவன் உற்று நத்த --- முப்புரங்களையும் தீயிட்ட வன்மை உடைய
சிவபெருமான் உடன் இருந்து விரும்ப,
மிகு சித்து அனைத்தையும் விழித்த சத்தி
--- மிகுந்த சித்துக்கள் எல்லாவற்றையும் கண்ட சத்தியாகிய
உமை தந்த பாலா --- உமாதேவி பெற்றருளிய
குழந்தையே!
தர்க்கம் இட்ட
அசுரரைக் கெலித்து --- வாதிட்டு வந்த அசுரர்களை வென்று,
மலை உக்க, எழுக்கடல் கொளுத்தி --- மலைகள்
பொடியாக, எழு கடல்களையும்
எரியிட்டு,
அட்டதிசை தட்ட முட்ட அடைய -- எட்டுத்
திசைகளும் நொறுங்க, தவிடுபட,
கொடிப் புகையின் மண்டும் வேலா --- நெருப்பின்
புகைக்கொடியுடன் விரைந்து நெருங்கும் வேலாயுதரே!
தத்தை --- கிளி
போன்றவளும்,
வித்ரும நிறத்தி --- பவள நிறம் உடையவளும்,
முத்து அணி குறத்தி --- முத்து மாலை அணிந்தவளும் ஆகிய வள்ளி
பிராட்டி,
கற்பக வனத்தி ---
கற்பக
வனத்தில் வாழ்கின்ற தெய்வயானை என்ற இருவருடைய
சித்தம் அவை தக்கு நத்த --- உள்ளங்களும் பொருந்தி விரும்புமாறு,
அருணைக் கிரிக்குள் மகிழ் தம்பிரானே --- திருவண்ணாமலையில் மகிழ்கின்ற
தனிப்பெரும் தலைவரே!
சுக்கிலச்
சுரொணிதத்தில் உற்ற --- சுக்கிலமும் சுரோணிதமும் ஒன்றுபட,
நளினத்தில் அப்பு என --- தாமரை இலை
நீர் போல,
ரத்தம் முற்றி --- உதிரம்
நிறைந்து,
சுக சுக்கிலக் குளிகை ஒத்து --- சுகம்
தரும் சுக்கிலத்தால் ஆய மந்திர சத்தி உள்ள ஒரு மாத்திரையைப் போல்
கெர்ப்ப குகை வந்து --- கருப்பையில்
தோன்றி,
கோலத் தொப்பை இட்ட
வயிறில் பெருத்து --- அழகிய தொப்பை இடுகின்ற தாயின் வயிற்றில்
பெருத்து வளர்ந்து,
மிக வட்டம் இட்டு --- அந்த வயிற்றில்
மிகவும் சுழலுதல் உற்று,
உடல் வெப்பம் உற்று --- உடலில் சூடு வரப்பெற்று,
மதி சொற்ற பத்தில் --- கணக்கிட்டுச் சொல்லப்பட்ட பத்தாவது
மாதத்தில்,
மறி --- கீழ் மேலாக,
அக்ஷரத்தினுடை விஞ்சையாலே கக்க --- பிரமன் தலையில்
எழுதிய எழுத்தின் மந்திர சத்தியினால் வெளியிலே தள்ளி விட,
நல் புவியில் உற்று, அரற்றி --- நல்ல
இந்தப் பூமியில் பிறந்து, அழுது,
முலையைக் கொடுக்க, அமுர்தைப் புசித்து --- தாயார் முலைப் பாலைத் தர, அந்த அமுதத்தை உண்டு,
வளர்கைக்கு அசத்தியொடு உழைத்து --- வளர்வதற்கு
வலியின்மையால், முயற்சி செய்து,
தத்து நடை அந்தம் மேவி --- தத்தித்
தத்தி நடக்கும் நடையழகைப் பெற்று,
கற்று, வெற்று அறிவு பெற்று --- நூல்களைப் படித்து, பயனில்லாத அறிவைப் பெற்று,
தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில்
குளித்து --- தோகை மயில் போன்ற
பெண் மக்களின் மையலில் மூழ்கி,
நெறி கட்டி ---
விதியினால்
கட்டுண்டு,
இப்படி பிறப்பில் உற்று --- இவ்வண்ணம் பிறவியை அடைந்து,
உடலம் மங்குவேனோ --- முடிவில் உடல்
அழிந்து இறந்து படுவேனோ?
பொழிப்புரை
தென்திசையில் உள்ள அரக்கர்களின்
செருக்கை அழித்து, விபீடணருக்கு
விரும்பத்தக்க அரசாட்சியை அளித்து,
முத்தியைக்
கொடுத்தவரும், அழகிய திருமகளைத்
தருமார்பில் தரித்தவரும், சக்கராயுதத்தை
ஏந்தியவரும் ஆன திருமாலின் மருகரே!
செம்மையான திருக்கரத்தில் மேலு மலையாகிய
வில்லை ஏந்தி, முப்புரங்களையும்
தீயிட்ட வன்மை உடைய சிவபெருமான் உடன் இருந்து விரும்ப, மிகுந்த சித்துக்கள் எல்லாவற்றையும்
கண்ட சத்தியாகிய உமாதேவி பெற்றருளிய குழந்தையே!
வாதிட்டு வந்த அசுரர்களை வென்று, மலைகள் பொடியாக, எழு கடல்களையும் எரியிட்டு, எட்டுத் திசைகளும் நொறுங்க, தவிடுபட, நெருப்பின் புகைக்கொடியுடன் விரைந்து
நெருங்கும் வேலாயுதரே!
கிளி போன்றவளும், பவள நிறம் உடையவளும், முத்து மாலை அணிந்தவளும் ஆகிய வள்ளி
பிராட்டி, கற்பக வனத்தில்
வாழ்கின்ற தெய்வயானை என்ற இருவருடைய உள்ளங்களும் பொருந்தி விரும்புமாறு, திருவண்ணாமலையில் மகிழ்கின்ற
தனிப்பெரும் தலைவரே!
சுக்கிலமும் சுரோணிதமும் ஒன்றுபட, தாமரை இலை நீர் போல, உதிரம் நிறைந்து, சுகம் தரும் சுக்கிலத்தால் ஆய மந்திர
சத்தி உள்ள ஒரு மாத்திரையைப் போல் கருப்பையில் தோன்றி, அழகிய
தொப்பை இடுகின்ற தாயின் வயிற்றில் பெருத்து வளர்ந்து, அந்த வயிற்றில் மிகவும் சுழலுதல் உற்று, உடலில் சூடு வரப்பெற்று, கணக்கிட்டுச்
சொல்லப்பட்ட பத்தாவது மாதத்தில்,
கீழ்
மேலாக, பிரமன் தலையில்
எழுதிய எழுத்தின் மந்திர சத்தியினால் வெளியிலே தள்ளி விட, நல்ல இந்தப் பூமியில் பிறந்து, அழுது, தாயார் முலைப் பாலைத் தர, அந்த அமுதத்தை உண்டு, வளர்வதற்கு வலியின்மையால், முயற்சி செய்து, தத்தித் தத்தி நடக்கும் நடையழகைப்
பெற்று, நூல்களைப் படித்து, பயனில்லாத அறிவைப் பெற்று, தோகை மயில் போன்ற பெண் மக்களின் மையலில்
மூழ்கி, விதியினால் கட்டுண்டு, இவ்வண்ணம் பிறவியை அடைந்து, முடிவில் உடல் அழிந்து இறந்து படுவேனோ?
விரிவுரை
சுக்கிலச்
சுரோணிதத்தில் உற்ற ---
ஆணின்
சுக்கிலமும், பெண்ணின் சுரோணிதமும்
ஒன்றுபட்டு கரு உற்பத்தி ஆகின்றது.
சுக்கிலக்
குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து ---
சுக்கிலத்தால்
ஒரு மந்திர சத்தியால் ஆய ஒரு மாத்திரை போல் திரண்டு கரு வளர்கின்றது.
பனியின்
விந்துளி போலவே கருவில் உறும்
அளவில்
அங்கு ஒரு சுசமாய் மிளகு துவர்
பனைதெனங்
கனிபோலவே பலகனியின் வயிறாகி... --- திருப்புகழ்.
….. ….. ஒழுகிய வந்து,
ஊறுசு
ரோணித மீது கலந்து
பனியில்
ஓர் பாதி சிறுதுளி மாது
பண்டியில்
வந்து புகுந்து திரண்டு,
பதும
அரும்பு கமடம் இது என்று,
பார்வை
மெய் வாய் செவி கால் கைகள் என்ற
உருவமும்
ஆகி, உயிர் வளர் மாதம்
ஒன்பதும்
ஒன்றும் நிறைந்து, மடந்தை
உதரம்
அகன்று புவியில் விழுந்து... ---
பட்டினத்தார்.
அக்ஷரத்தின்
உடை விஞ்சையாலே ---
குழந்து
பிறக்கு முன் அதன் தலையில் பிரமதேவன், அதன்
வாழ்க்கைத் திறத்தை எழுதி விடுகின்றான்.
அந்த விதிப்படியே யாவும் நடைபெறும்.
வினைப்
பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்து
ஆய நூல்அகத்தும் இல்லை --- நினைப்பதுஎனக்
கண்ணுறுவது
அல்லால் கவலைப்படேல் நெஞ்சே,மெய்
விண்
உறுவார்க்கு இல்லை விதி.
என்கின்றார்
ஔவையார் நல்வழி என்னும் நூலில்.
வளர்கைக்கு
அசத்தியோடு உழைத்து ---
வளர்கைக்கு
அசத்தியொடு உழைத்து - பிறந்த குழந்தை பாலுண்டு, கவிழ்ந்து படுக்கவும், எழுந்து இருக்கவும், நிற்கவும், ஆற்றலின்றி முயன்று முயன்று
செய்கின்றது.
தத்து
நடை அந்தம் மேவி ---
குழந்தை
மெல்ல மெல்லத் தளர்நடை இட்டு நடக்கும் அழகு, பெற்றாரையும் உற்றாரையும்
மகிழ்விக்கும். அந்த நடை மிக அழகியது.
கற்று
வெற்றறிவு பெற்று ---
படிக்கவேண்டிய
நூல்களைப் படிக்கவேண்டும். பிழைகள் அனைத்துக்கும்
தலையாய பிழை அறிவு நூல்களைக் கல்லாததுவே ஆகும்.
ஆதலால், பட்டினத்து அடிகளார், எடுத்த எடுப்பிலேயே "கல்லாப்
பிழையும்" என்றார். "அறிவு நூல் கல்லா மூடர்" என்கின்றார்
அருணகிரிநாதர். "கற்பவை கற்க" என்றார் திருவள்ளுவர்.
அறிவுநூல்
இன்னதென்றே உணராது, உலக நூல்களைக் கற்று, பயனற்ற அறிவைப் பெற்று மாந்தர்
அவலமுறுகின்றனர்.
அலகு
சால் கற்பின், அறிவன் நூல் கல்லாது,
உலக
நூல் ஓதுவது எல்லாம், கலகல
கூஉம்
துணை அல்லால், கொண்டு, தடுமாற்றம்
போஒம்
துணை அறிவார் இல். --- நாலடியார்.
ஆய்ந்து
அறிந்து நல்ல அறிவு நூல்களைக் கல்லாது, இவ்வுலக
வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல என்று கூவித்
திரியும் ஆரவார வாழ்க்கைக்கு உதவுமே அல்லாது, அந்த நூல்கள் பிறவித் துயரில்
இருந்து விடுபடத் துணையாக மாட்டா.
தொக்கை
மயில் ஒத்த மக்கள் ---
"தோகை"
என்ற சொல் சந்தத்தை நோக்கி, "தொக்கை" என
வந்தது. மயில்போன்ற சாயலுடைய விலைமகளிரது
மயல் கடலில் மக்கள் மூழ்கி அல்லல் படுகின்றார்கள்.
விடணற்கு
அரசு அளித்து
---
வீடணன்
என்ற சொல் விடணன் என வந்தது.
விபீஷணன்
என்ற வடமொழிச் சொல், தமிழில் வீடணன் என
வந்தது.
விபீஷணன்
என்ற பேர் சிவசகஸ்ர நாம மந்திரங்களில் ஒன்று.
இச்சொல்லுக்குப் பயமற்றவர் என்பது பொருள்.
மகாபாரதம், சாந்தி பர்வத்திலே, 296-ஆவது அத்தியாயத்தில்
தட்சப் பிரஜாபதி, சிவமூர்த்தியை சகஸ்ர
நாமங்களால் துதி செய்யும் இடத்தில்,
"விபீஷணாய
நம" என்று வருகின்றது.
இந்தச்
சிவநாமத்தை இராவணனுடைய தம்பிக்குச் சூட்டினார்கள்.
தன்பால்
அடைக்கலம் புகுந்த விபீஷணருக்கு இராமர், அபயம்
தந்து, இலங்கை சாம்ராஜ்யமும், முடிவில் முத்தியும் தந்தருளினார்.
ஆதிநாயகன்
ஆக்கிய நூல்முறை
நீதியானை
நெடுமுடி சூட்டுவாய்
என்று
இராமர் இலக்குமணனுக்குக் கட்டளையிட்டார்.
ஐயன்
ஆணையினால் இளங் கோளரி
கையினால்
மகுடம் கவித்தனரோ --- கம்பராமாயணம்.
முன்னமே
இராமர் வாக்கினால் முடிசூட்டினார். ஆதலால், இளையோன் கையினால் முடி சூட்டினான் என்ற
நயத்தை உன்னுக.
செக்கரத்தின்
மலை
---
திரிபுரம்
எரிக்கச் சிவபெருமான் புறப்பட்டபோது தேவர்கள் மேரு மலையை வில்லாகச் செய்து
தந்தார்கள். அதனை எம்பிரான் இடக்கரத்தில்
ஏந்தி நின்றார்.
இடக்கரம்
உமாதேவியின் திருக்கரம். ஆதலால்,
அது
சத்தியின் பெருமை ஆகும்.
இதனை, வட திருமுல்லைவாயில் திருப்புகழில் அடிகள்
கூறுமாறு காண்க.
குண
வில்லதா மக மேரினை
அணி செல்வியாய் அருணாசல
குருவல்ல மாதவமே பெறு ...... குணசாத,
குடில்
இல்லமே தரு நாள் எது?
மொழி, நல்ல யோகவரே பணி
குணவல்லவா! சிவனே! சிவ ...... குருநாதா!
இக்
கருத்து அமைய அப்பர் பெருமான் பாடியருளிய திருவிருத்தப் பாடல் ஒன்றையும் காண்க.
கற்றார்
பயில்கடல் நாகைக்கா ரோணத்துஎம் கண்ணுதலே
வில்
தாங்கிய கரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே
நல்
தாள் நெடும்சிலை நாண்வலித்த கரம் நின்கரமே
செற்றார்
புரம்செற்ற சேவகம் என்னைகொல் செப்புமினே.
கற்றவர்கள் பெருகிய, கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும், நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே!
வில்லைத் தாங்கிய கை, வேல் போன்ற நீண்ட கண்களை
உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே. நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை
ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ள கையே.இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த
வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள் .
சித்து
அனைத்தையும் விழித்த சத்தி உமை ---
அட்டமாசித்திகள். அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பவை.
1. ஆன்மாப் போல் ஆதல் --- அணிமா
2. மகத்துவம் ஆதல் --- மகிமா
3. தன்னுடல்
கண்டிப்பின்றாய்க் கண்டிப்பு
உள்ளனவற்றை உருவ வல்லவனாதல் ---
கரிமா
4. இலகுத்துவம் ஆதல் --- இலகிமா
5. வேண்டுவனவற்றை அடைதல்
--- பிராத்தி
6. நிறை உளன் ஆதல் --- பிராகாமியம்
7. ஆட்சி உளன் ஆதல் --- ஈசத்துவம்
8. எல்லாம் தன்வசம் ஆக்க
வல்லவன் ஆதல் ---
வசித்துவம்.
இத்தகைய
சித்திகளின் பிறப்பிடம் தேவி. அப்
பிராட்டியின் திருவருளினாலேயே சித்திகள் சித்திக்கும்.
சித்திகள்
எட்டன்றிச் சேரெட்டி யோகத்தால்
புத்திகள்
ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள்
எண்சித்தி தானாம் திரிபுரை
சத்தி
அருள்தரத் தான்உள ஆகுமே. --- திருமந்திரம்.
சிவஞானிகளுக்குச்
சித்திகள் அடிமையாகிப் பணி புரியும்.
திக்கொடு
திகந்தமும் மனவேகம் என்னவே
சென்றுஓடி ஆடிவருவீர்;
செம்பொன்மக மேருவொடு குணமேரு என்னவே
திகழ்துருவம் அளவளாவி
உக்ரமிகு
சக்ரதரன் என்னநிற் பீர்; கையில்
உழுந்துஅமிழும் ஆசமனமா
ஓர்ழு கடலையும் பருகவல் லீர்;இந்த்ரன்
உலகும்அயி ராவதமுமே
கைக்குஎளிய
பந்தா எடுத்து விளையாடுவீர்;
ககனவட் டத்தையெல்லாம்
கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும்
காட்டுவீர்; மேலும்மேலும்
மிக்கசித்
திகளெலாம் வல்லநீர் அடிமைமுன்
விளங்கவரு சித்திஇலிரோ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. --- தாயுமானார்.
கருத்துரை
திருவருணை
மேவிய திருவேலவரே, பிறப்பு அறச்
சிறியேனுக்கு அருள் செய்க.
No comments:
Post a Comment