அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சகசம்பக் குடைசூழ்
(சிதம்பரம்)
சிதம்பர முருகா!
பொய்யான ஆடம்பர வாழ்வை ஒழித்து,
உனது திருவடி இன்பத்தில்
திளைக்கும் வாழ்வைத் தந்து அருள்.
தனதந்தத்
தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன
தனதந்தத் தனனா தனதன ...... தனதான
சகசம்பக்
குடைசூழ் சிவிகைமெல்
மதவின்பத் துடனே பலபணி
தனிதம்பட் டுடையோ டிகல்முர ...... சொலிவீணை
தவளந்தப்
புடனே கிடுகிடு
நடைதம்பட் டமிடோல் பலவொலி
சதளம்பொற் றடிகா ரருமிவை ......
புடைசூழ
வெகுகும்பத்
துடனே பலபடை
கரகஞ்சுற் றிடவே வரஇசை
வெகுசம்பத் துடனே யழகுட ......
னிதமேவும்
விருமஞ்சித்
திரமா மிதுநொடி
மறையும்பொய்ப் பவுஷோ டுழல்வது
விடவும்பர்க் கரிதா மிணையடி ......
தருவாயே
திகுதந்தித்
திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செச் செகசே செககண ......
எனபேரித்
திமிர்தங்கற்
குவடோ டெழுகட
லொலிகொண்டற் றுருவோ டலறிட
திரள்சண்டத் தவுணோர் பொடிபட ......
விடும்வேலா
அகரம்பச்
சுருவோ டொளியுறை
படிகம்பொற் செயலா ளரனரி
அயனண்டர்க் கரியா ளுமையருள் ......
முருகோனே
அமுர்தம்பொற்
குவடோ டிணைமுலை
மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்
அருள்செம்பொற் புலியூர் மருவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
சக
சம்பக் குடைசூழ் சிவிகைமெல்
மத இன்பத்துடனே, பல பணி
தனிதம், பட்டு உடையோடு, இகல்முரசு ...... ஒலிவீணை
தவளம்
தப்புடனே கிடுகிடு
நடை தம்பட்டம் இடோல் பலஒலி
சதளம் பொன் தடிகாரரும் இவை ......
புடைசூழ,
வெகு
கும்பத்துடனே, பலபடை
கரகம் சுற்றிடவே வர, இசை
வெகு சம்பத்துடனே, அழகுடன் ...... இதமேவும்
விருமம்
சித்திரமாம் இது, நொடி
மறையும் பொய்ப் பவுஷோடு உழல்வது
விட, உம்பர்க்கு அரிதாம் இணையடி ...... தருவாயே.
திகுதந்தித்
திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செச் செகசே செககண ......
எனபேரித்
திமிர்தம்
கல் குவடோடு எழுகடல்
ஒலிகொண்டு அற்று உருவோடு அலறிட,
திரள் சண்டத்து அவுணோர் பொடிபட
......விடும்வேலா!
அகரம்
பச்சு உருவோடு ஒளி உறை
படிகம்,பொன் செயலாள், அரன்அரி
அயன் அண்டர்க்கு அரியாள் உமைஅருள்
......முருகோனே!
அமுர்தம்பொன்
குவடோடு இணைமுலை,
மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்,
அருள் செம்பொன் புலியூர் மருவிய ......
பெருமாளே.
பதவுரை
திகுதந்தித் திகுதோ
திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண என பேரி
திமிர்தம்
--- திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச்
செகசே செககண என்று பேரி வாத்தியங்கள் பேரொலி செய்ய,
கல் குவடோடு --- மலைகளோடு,
எழுகடல் ஒலி கொண்டு அற்று --- ஏழு
கடல்களும் ஒலி எழுப்பி அழிந்து,
உருவோடு அலறிட --- அச்சத்துடன் அலற,
திரள் சண்டத்து அவுணோர் பொடிபடவிடும்
வேலா --- கூட்டமாய்ச் சினந்து வந்த சூராதி அவுணர்கள் பொடிபட்டு அழிய
வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!
அகரம் --- அகர எழுத்தைப்
போல் எல்லாவற்றுக்கும் முதலாய்,
பச்(சை) உருவோடு --- பச்சை நிறம் பொருந்தியவளாய்,
ஒளிஉறை படிகம் --- ஒளி பொருந்திய
படிகம் போன்றவளாய்,
பொன் --- பொன்னைப் போலும் திருமேனி உடையவளாய்,
செயலாள் --- அண்ட சராசரங்களை எல்லாம்
படைத்துக் காக்கின்ற அருட்செயல் உடையவளாய்,
அரன் அரி அயன் அண்டர்க்கும் அரியாள் ---
உருத்திரன், திருமால், பிரமன், என்னும் மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும்
கிட்டாத அருமை வாய்ந்தவளாயும் உள்ள
உமை அருள் முருகோனே --- உமாதேவியார்
ஈன்று அருளிய முருகப் பெருமானே!
அமுர்தம் --- அமுதம்
பொதிந்துள்ளதும்,
பொன் குவடோடு இணைமுலை --- அழகிய மலை
போலும் இணை முலைகளும்,
மதி துண்டம் --- சந்திரனை ஒத்த
திருமுகமும் உடையவளும்,
புகழ் மான் மகளொடும் --- புகழ்ந்து
சொல்லப்படும் மானின் வயிற்று உதித்தவளும் ஆகிய வள்ளிநாயகியோடு,
அருள் செம்பொன் புலியூர் மருவிய பெருமாளே
--- உயிர்களுக்குத் திருவருள் பாலிக்கும் அழகிய பெரும்பற்றப்புலியூர் என்னும் உள்ள
சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
சக சம்பக்குடை சூழ்
சிவிகை மெல் ---
உலகில் உள்ளோர் மெச்சும்படி விருதாகப் பிடிக்கும் குடை சூழும் பல்லக்கின் மேல்
மத இன்பத்துடனே --- மகிழ்ச்சி மிக்க
இன்பத்துடனே,
பல பணி --- பல வேறு ஆபரணங்களுடன்
பட்டு உடையோடு --- பட்டு ஆடையோடு,
தனிதம் இகல் முரசு
ஒலி
--- மேகங்கள் மோதுவதால் உண்டாகின்ற இடி முழக்கத்திலும் மாறுபடுகின்ற முரசு முழங்க,
வீணை தவளம் தப்பு உடனே --- வீணை, வெண் சங்கு, பறையுடன்,
கிடுகிடு நடை --- கிடுகிடு என்ன ஒலிக்க,
தம்பட்டம் இடோல் பல ஒலி --- தம்பட்டம் என்ற ஒரு
வகையான பறை, டோல் என்னும்
வாத்தியம் இவை பலவற்றின் ஒலி எழ,
சதளம் --- மக்கள் கூட்டமும்,
பொன் தடிகாரரும் --- பொன்னாலாகிய
தடியை ஏந்திய சேவகர்கள்
இவை புடைசூழ --- இவை எல்லாம்
பக்கங்களில் சூழ்ந்து வர,
வெகு கும்பத்துடனே --- மிகுதியான பூரண
கும்பங்களுடன்
பலபடை கரகம் சுற்றிடவே வர ---
பலவிதமான படைகளும் கரகங்களும் சுற்றியும் வர,
இசை வெகு சம்பத்துடனே --- புகழோடு மிக்க
செல்வத்துடனும்
அழகுடன் --- அழகுடனும்
நிதம் மேவும் விருமம், சித்திரம் ஆம் --- நாள்தோறும் பொருந்தி வரும் இவை எல்லாம் வெறும் மயக்கமாகும். வெறும் கோலமாகும்.
இது நொடி மறையும் --- ஒரு நொடிப் பொழுதில் இவை எல்லாமும் மறைந்து போகும்.
பொய்ப் பவுஷோடு
உழல்வது விட
--- எனவே, இத்தகு பொய்யான
ஆடம்பரங்களிலே உழல்வதை விட்டு ஒழிக்க
உம்பர்க்கு
அரிதாம் இணை அடி தருவாயே --- தேவர்களுக்கும் காண்பதற்கு அரிதான திருவடி
இணையைத் தந்து அருள் புரிக.
பொழிப்புரை
திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித்
திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண என்று பேரி வாத்தியங்கள் பேரொலி
செய்ய, மலைகளோடு, ஏழு கடல்களும் ஒலி எழுப்பி அழிந்து, அச்சத்துடன் அலற, கூட்டமாய்ச் சினந்து வந்த சூராதி அவுணர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!
அகர எழுத்தைப் போல் எல்லாவற்றுக்கும்
முதலாய், பச்சை நிறம்
பொருந்தியவளாய், ஒளி பொருந்திய படிகம்
போன்றவளாய், பொன்னைப் போலும்
திருமேனி உடையவளாய், அண்ட சராசரங்களை
எல்லாம் படைத்துக் காக்கின்ற அருட்செயல் உடையவளாய், உருத்திரன், திருமால், பிரமன், என்னும் மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும் கிட்டாத அருமை
வாய்ந்தவளாயும் உள்ள உமாதேவியார் ஈன்று அருளிய முருகப் பெருமானே!
அமுதம் பொதிந்துள்ளதும், அழகிய மலை போலும் இணை முலைகளும், சந்திரனை ஒத்த திருமுகமும் உடையவளும், புகழ்ந்து சொல்லப்படும் மானின் வயிற்று
உதித்தவளும் ஆகிய வள்ளிநாயகியோடு, உயிர்களுக்குத்
திருவருள் பாலிக்கும் அழகிய பெரும்பற்றப்புலியூர் என்னும் உள்ள சிதம்பரத்தில்
வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
உலகில் உள்ளோர் மெச்சும்படி விருதாகப்
பிடிக்கும் குடை சூழும் பல்லக்கின் மேல் மகிழ்ச்சி மிக்க இன்பத்துடனே, பல வேறு ஆபரணங்களுடன், பட்டு ஆடையோடு, இடி முழக்கத்தை ஒத்த முரசு முழங்க, வீணை, வெண் சங்கு, பறையுடன் கிடுகிடு என்ன ஒலிக்க, தம்பட்டம் என்ற ஒரு வகையான பறை, டோல் என்னும் வாத்தியம் இவை பலவற்றின்
ஒலி எழ, மக்கள் கூட்டமும், பொன்னாலாகிய தடியை
ஏந்திய சேவகர்கள் இவை எல்லாம் பக்கங்களில் சூழ்ந்து வர, மிகுதியான பூரண கும்பங்களுடன் பலவிதமான
படைகளும் கரகங்களும் சுற்றியும் வர,
புகழோடு
மிக்க செல்வத்துடனும் அழகுடனும் நாள்தோறும் பொருந்தி வரும் இவை எல்லாம் வெறும்
மயக்கமாகும். வெறும் கோலமாகும். ஒரு நொடிப் பொழுதில் இவை எல்லாமும் மறைந்து போகும். எனவே, இத்தகு பொய்யான ஆடம்பரங்களிலே உழல்வதை
விட்டு ஒழிக்க தேவர்களுக்கும்
காண்பதற்கு அரிதான திருவடி இணையைத் தந்து அருள் புரிக.
விரிவுரை
இத்
திருப்புகழில் வெற்றுக் கல்வியும்,
பொன்னும்
பொருளும்,
மண்ணும் பெற்றவர்களின் பொய்யான
வாழ்வைக் கண்டித்து அடிகளார் பாடி அருளுகின்றார்.
படர்
புவியின் மீது மீறி வஞ்சர்கள்
வியனின் உரை பானுவாய் வியந்து உரை
பழுதில் பெரு சீலநூல்களும், தெரி ......
சங்கபாடல்
பனுவல்,
கதை, காவ்யம் ஆம் எணஎ எண்கலை
திருவளுவ தேவர் வாய்மை என்கிற
பழமொழியை ஓதியே உணர்ந்து, பல்
......சந்தமாலை,
மடல்,பரணி, கோவையார், கலம்பகம்
முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்,
வகை வகையில் ஆசு சேர் பெருங்கவி .....
சண்டவாயு
மதுரகவி
ராஜன் நான் என், வெண்குடை,
விருதுகொடி, தாள மேள தண்டிகை,
வரிசையொடு உலாவும் மால் அகந்தை ...... தவிர்ந்திடாதோ?
இத்
திருப்புகழ்ப் பாடலுக்கு ஒப்பாக விளங்கும் மேலே குறித்த திருப்புகழ்ப் பாடலின் விளக்கத்தை
ஆங்கு அறிந்து கொள்ளவும்.
நிகமம்
எனில் ஒன்றும் அற்று, நாடொறு
நெருடு கவி கொண்டு வித்தை பேசிய
நிழலர், சிறு புன்சொல் கற்று, வீறு உள ......பெயர்கூறா,
நெளிய
முது தண்டு சத்ர சாமர
நிபிடம்இட வந்து, கைக்கு மோதிரம்,
நெடுகி அதி குண்டல ப்ரதாபமும் ...... உடையோராய்,
முகமும்
ஒரு சம்பு மிக்க நூல்களும்,
முதுமொழியும் வந்து இருக்குமோ எனில்,
முடிவில் அவை ஒன்றும் அற்று, வேறு ஒரு ...... நிறமாகி
முறியும்
அவர் தங்கள் வித்தை தான், இது
முடிய உனை நின்று பத்தியால் மிக
மொழியும், வளர் செஞ்சொல் வர்க்கமே வர ...... அருள்வாயே.
இந்தத்
திருப்புகழ் பாடலும் ஒப்பானது. அதன் விளக்கத்தையும் ஆங்கு அறிந்து கொள்க.
தினமணி
சார்ங்கபாணி என, மதிள் நீண்டு, சால
தினகரன் எய்ந்த மாளி- ...... கையில், ஆரம்
செழுமணி
சேர்ந்த பீடிகையில், இசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட, ...... இருபாலும்
இனவளை
பூண் கையார் கவரிஇட, வேய்ந்து மாலை
புழுகு அகில் சாந்து பூசி ...... அரசாகி,
இனிது
இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம்
ஒருபிடி சாம்பல் ஆகி ...... விடலாமோ? --- திருப்புகழ்.
பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை என்னும் இந்த மூவாசையும்
தவிர்க்கப்பட வேண்டியது என்பதை நெஞ்சறிவுறுத்தலாக வள்ளல் பெருமான் பாடி அருளி இருப்பதையும்
காண்க.
நின்ஆசை
என்என்பேன், நெய்வீழ் நெருப்பு எனவே
பொன்ஆசை
மேன்மேலும் பொங்கினையே, - பொன்ஆசை
வைத்து, இழந்து, வீணே வயிறு எரிந்து மண்ணுலகில்
எத்தனைபேர்
நின்கண் எதிர்நின்றார், - தத்துகின்ற
பொன்உடையார்
துன்பப் புணரி ஒன்றே அல்லது, மற்று
என்உடையார்
கண்டு இங்கு இருந்தனையே - பொன்இருந்தால்
ஆற்றல்
மிகு தாயும் அறியா வகையால் வைத்திட,
ஓர்
ஏற்றஇடம்
வேண்டும், அதற்கு என்செய்வாய், - ஏற்றஇடம்
வாய்த்தாலும், அங்கு அதனை வைத்த இடம் காட்டாமல்
ஏய்த்தால், சிவசிவ மற்று என்செய்வாய், - ஏய்க்காது
நின்றாலும், பின் அதுதான் நீடும் கரி ஆனது
என்றால், அரகர, மற்று என்செய்வாய், - நன்றாக
ஒன்று
ஒருசார் நில் என்றால் ஓடுகின்ற நீ,
அதனை
என்றும்
புரப்பதனுக்கு என் செய்வாய், - வென்றியொடு
பேர்த்துப்
புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்
ஈர்த்துப்
பறிக்கில் அதற்கு என்செய்வாய், - பேர்த்தெடுக்கக்
கை
புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி
எய்
புகுத்தக் கொட்டிடில் மற்று என்செய்வாய்,
- பொய்புகுத்தும்
பொன்காவல்
பூதம் அது போய் எடுக்கும் போது,
மறித்து
என்காவல்
என்றால், மற்று என்செய்வாய், - பொன்காவல்
வீறுங்கால், ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
ஏறுங்கால்
மற்று அதனுக்கு என்செய்வாய், - மாறும்சீர்
உன்நேயம்
வேண்டி உலோபம் எனும் குறும்பன்
இன்னே
வருவன் அதற்கு என்செய்வாய், - முன் ஏதும்
இல்லா
நமக்கு, உண்டோ இல்லையோ என்னும்
நலம்
எல்லாம்
அழியும் அதற்கு என்செய்வாய், - நில்லாமல்
ஆய்ந்தோர்
சிலநாளில் ஆயிரம்பேர் பக்கல் அது
பாய்ந்து
ஓடிப் போவது நீ பார்த்திலையே, - ஆய்ந்தோர்சொல்
கூத்து
ஆட்டு அவைசேர் குழாம்விளிந்தால் போலும் என்ற
சீர்த்தாள்
குறள்மொழியும் தேர்ந்திலையே.........
..... ..... ..... ..... இந்நிலத்தில்
நீள்மயக்கம்
பொன்முன் நிலையாய் உலகியலாம்
வீண்மயக்கம்
என்று அதனை விட்டிலையே - நீள்வலயத்து
இச்செல்வம்
இன்றி இயலாதேல், சிற்றுயிர்கள்
எச்செல்வம்
கொண்டு இங்கு இருந்தனவே - வெச்சென்ற
மண்ணாசை
கொண்டனை நீ, மண்ணாளும் மன்னர் எலாம்
மண்ணால்
அழிதல் மதித்திலையே - எண்ணாது
மண்கொண்டார்
மாண்டார்தம் மாய்ந்தஉடல் வைக்க,
அயல்
மண்கொண்டார்
தம்இருப்பில் வைத்திலரே, - திண்கொண்ட
விண்ஏகும்
கால் அங்கு வேண்டும் என ஈண்டுபிடி
மண்ணேனும்
கொண்டு ஏக வல்லாரோ - மண்நேயம்
என்னது
என்றான் முன்ஒருவன், என்னது என்றான் பின்ஒருவன்
இன்னது
நீ கேட்டு இங்கு இருந்திலையோ - மன் உலகில்
கண்காணி
யாய்நீயே காணி அல்லாய், நீ இருந்த
மண்காணி
என்று மதித்தனையே, - கண்காண
மண்காணி
வேண்டி வருந்துகின்றாய் நீ, மேலை
விண்காணி
வேண்டல் வியப்பு அன்றே, - எண்காண
அந்தரத்தில்
நின்றாய் நீ, அந்தோ? நினை விட மண்
அந்தரத்தில்
நின்றது அறிந்திலையே - தந்திரத்தில்
மண்கொடுப்பேன்
என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும்,
மண்கொடுக்கில்
நீதான் மகிழ்ந்தனையே, - வண்கொடுக்கும்
வீடு
என்றேன், மற்று அதை மண் வீடு என்றே
நீ நினைந்தாய்,
வீடு
என்ற சொல்பொருளை விண்டிலையே, - நாடொன்றும்
மண்ணால்
மரத்தால் வனைகின்ற வீடு அனைத்தும்
கண்ணாரக்
கட்டு அழிதல் கண்டிலையோ, - மண்ணான
மேல்வீடும், அங்குடைய வேந்தர்களும், மேல்வீட்டு அப்
பால்வீடும்
பாழாதல் பார்த்திலையோ, - மேல்வீட்டில்
ஏறுவனே
என்பாய், இயமன் கடா மிசை வந்து
ஏறுவனேல், உன் ஆசை என் ஆமோ, - கூறிடும்இம்
மண்அளித்த
வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்,
எண்ணம்
உனக்கு எவ்வாறு இருந்ததுவே, - மண்ணிடத்தில்
ஆகாத்
துரும்பு இடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்தன்
ஏகாப்
பெருங்காமம் என்சொல்கேன்....
--- திருவருட்பா.
முடிசார்ந்த
மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி
சாம்பராய் வெந்து மண் ஆவதும் கண்டு,
பின்னும்
இந்தப்
படி
சார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால், பொன்னின் அம்பலவர்
அடி
சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே. ---
பட்டினத்தார்.
தண்டிகை
பல்லக்கு உடனே சகல சம்பத்துகளும்
உண்டு
என்று நம்பி உணர்வு அழிந்தேன் பூரணமே. ---
பட்டினத்தார்.
பட்டு
உடையும்,
பொன்பணியும், பாவனையும், தீவினையும்
விட்டு
விட்டு உன் பாதம் விரும்புவது எக்காலம்.
தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும்
கண்டு
களிக்கும் கருத்து ஒழிவது எக்காலம். --- பத்ரகிரியார்.
செல்வமொடு
பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்,
கல்வியில்
சிறந்தோர்,
கடுந்திறல்
மிகுந்தோர்,
கொடையில்
பொலிந்தோர்,
படையில்
பயின்றோர்,
குலத்தின்
உயர்ந்தோர்,
நலத்தினின்
வந்தோர்,
எனையர்
எம் குலத்தினர் இறந்தோர், அனையவர்
பேரும்
நின்றில போலும்,
தேரின்
நீயும்
அஃது அறிதி அன்றே, மாயப்
பேய்த்
தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே
போன்றும் நனவுப் பெயர் பெற்ற
மாய
வாழ்க்கையை மதித்து, காயத்தைக்
கல்லினும்
வலிதாக் கருதி,
பொல்லாத்
தன்மையர்
இழிவு சார்ந்தனை நீயும்... --- பதினோராம்
திருமுறை.
எந்தை
நின் திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்,
யாவையும்
எனக்குப் பொய் எனத் தோன்றி,
மேவரும்
நீயே மெய் எனத் தோன்றினை,
ஓவியப்
புலவன் சாயல் பெற எழுதிய
சிற்ப
விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது
தடவினர் தமக்குச்
சுவராய்த்
தோன்றும் துணிவு போன்று எனவே. --- பதினோராம்
திருமுறை.
அமுர்தம் பொன் குவடோடு இணைமுலை ---
அமுதம்
பொதிந்துள்ளதும், அழகிய மலை போலும் இணை
முலைகளும் என்று வள்ளிநாயகியின் திருமுறைகளை
அடிகளார் கூறுகின்றார். உயிர்களுக்கு அழியா இன்பத்தைத் தரவல்ல பரஞானம், அபரஞானம் என்னும்
இரண்டையும் வழங்க வல்லவை பெருமாட்டியின் திருமுலைகள் என்பதால் அவை அமுதம் பொதிந்தும், அழகிய மலை போன்று
பருத்தும் உள்ளதாகப் பாடுகின்றார்.
"பருத்து
முலை,
சிறுத்த
இடை,
வெளுத்த
நகை,
கறுத்த
குழல்,
சிவத்த
இதழ் மறச் சிறுமி"
என்று
சிறப்பிக்கின்றார் வேல் வகுப்பில்.
முள்ளி
நாள்முகை மொட்டுஇயல் கோங்கின்
அரும்பு தேன்கொள் குரும்பை மூவாமருந்து
உள்
இயன்ற பைம் பொன் கலசத்து இயல் ஒத்தமுலை
வெள்ளி
மால்வரை அன்னதுஓர் மேனியின்
மேவி னார்பதி வீமரு தண்பொழில்
புள்ளி
னம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.
என
வரும் தேவாரப் பாடலில், அம்பிகையின் தனங்களை, "மூவா மருந்து உள்
இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை" என்று
திருஞானசம்பந்தப் பெருமான் அருளி இருப்பதை எண்ணுக.
கருத்துரை
முருகா!
பொய்யான ஆடம்பர வாழ்வை ஒழித்து, உனது திருவடி இன்பத்தில் திளைக்கும் வாழ்வைத் தந்து
அருள்.
No comments:
Post a Comment