சிதம்பரம் - 0609. எழுகடல் மணலை
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எழுகடல் மணலை (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பிறவா வரம் தந்து திருவடிப் பேற்றையும் அருள்.


தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான


எழுகடல் மணலை அளவிடி னதிக
     மெனதிடர் பிறவி ...... அவதாரம்

இனியுன தபய மெனதுயி ருடலு
     மினியுடல் விடுக ...... முடியாது

கழுகொடு நரியு மெரிபுவி மறலி
     கமலனு மிகவு ...... மயர்வானார்

கடனுன தபய மடிமையு னடிமை
     கடுகியு னடிகள் ...... தருவாயே

விழுதிக ழழகி மரகத வடிவி
     விமலிமு னருளு ...... முருகோனே

விரிதல மெரிய குலகிரி நெரிய
     விசைபெறு மயிலில் ...... வருவோனே

எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
     யிரைகொளும் அயிலை ...... யுடையோனே

இமையவர் முநிவர் பரவிய புலியு
     ரினில்நட மருவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


எழுகடல் மணலை அளவு இடின் அதிகம்,
     எனது இடர் பிறவி ...... அவதாரம்,

இனி உனது அபயம், னதுஉயிர் உடலும்,
     இனி உடல் விடுக ...... முடியாது,

கழுகொடு நரியும் எரிபுவி மறலி
     கமலனும் மிகவுமு ...... அயர்வுஆனார்,

கடன் உனது அபயம், டிமை உன் அடிமை,
     கடுகி உன்அடிகள் ...... தருவாயே,

விழு திகழ் அழகி, மரகத வடிவி,
     விமலி முன் அருளும் ...... முருகோனே!

விரிதலம் எரிய, குலகிரி நெரிய,
     விசைபெறு மயிலில் ...... வருவோனே!

எழுகடல் குமுற, அவுணர்கள் உயிரை
     இரைகொளும் அயிலை ...... உடையோனே!

இமையவர் முநிவர் பரவிய புலியு-
     ரினில் நடம் மருவு ...... பெருமாளே.

பதவுரை

         விழு --- சிறப்பு உடையவரும்,

      திகழ் --- கருணையால் திகழ்பவளும்,

      அழகி --- அழகின் மிக்கவரும்,

      மரகத வடிவி --- மரகதம் போன்ற பச்சை வடிவினளும்,

         விமலி -- அநாதியே மலத்தினின்றும் நீங்கியவரான உமாதேவியார்

      முன் அருளும் --- முன்னாளில் ஈன்று அருளிய

      முருகோனே --- முருகப் பெருமானே!

         விரிதலம் எரிய --- விரிந்த பூமியானது எரியவும்,

        குலகிரி நெரிய --- எட்டு குல மலைகளும் நெரிந்து பொடிபடவும்,

         விசைபெறு மயிலில் --- வேகத்துடன் கூடிய மயில்வாகனத்தின் மீது,

       வருவோனே --- எழுந்தருளி வருபவரே!

         எழுகடல் குமுற --- ஏழு கடல்களும் ஒலிக்க

         அவுணர்கள் உயிரை இரைகொளும் --- இராக்கதர்களின் உயிரை இரையாகக் கொள்ளும்,

        அயிலை உடையோனே --- வேலாயுதத்தை உடையவரே!

         இமையவர் முநிவர் ---  தேவர்களும், முனிவர்களும்

        பரவிய புலியுரினில் --- வணங்கித் துதித்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் 

         நடம் மருவு பெருமாளே --- திருநடனம் புரிந்தருளும் பெருமையின் மிக்கவரே!

         எழுகடல் மணலை --- ஏழு கடல்களின் கரையிலுள்ள சிறு மணல்களின் குவியலை எல்லாம்

        அளவிடின் --- அளவிட முடியாத அவைகளை இத்துணை மணல் என்று அளவிட்டால்,

         எனது இடர் பிறவி அவதாரம் அதிகம் --- நான் உலகில் அவதாரம் புரிந்த துன்பத்துடன் கூடிய என் பிறவி அதிகமாகும்.


        எனது உயிர் உடலும் --- அடியேனது உடலும், உயிரும், பொருளும்,

        
        இனி உனது அபயம் --- இனி தேவரீருக்கே அடைக்கலம்,

         இனி உடல் விடுக முடியாது --- இனியும் உமது அருளைப் பெறாமல் இந்த உடலை விட என்னால் முடியாது.

         கழுகொடு நரியும் எரி புவி --- கழுகு, நரி, நெருப்பு, பூமாதேவி,,

         மறலி --- கூற்றுவன்,

       கமலனும் --- பிரமதேவனும்,

       மிகவும் அயர்வானார் --- என் விஷயத்தில் சோர்வடைந்து விட்டார்கள்.

         கடன் உனது --- அடியேனை ஆட்கொள்ளுவது உமது கடன் ஆகும்.

       அபயம் --- உமது திருவடிக்கு அபயம்,

         அடிமை உன் அடிமை --- அடியேன் தேவரீரது அடிமை ஆகும்.

         கடுகி உன் அடிகள் தருவாயே --- விரைவில் தேவரீருடைய திருவடிக் கமலங்களைத் தந்து அருளுவீர்.


பொழிப்புரை


         சிறப்பு உடையவரும், கருணையால் திகழ்பவளும், அழகின் மிக்கவரும், மரகதம் போன்ற பச்சை வடிவினளும், அநாதியே மலத்தினின்றும் நீங்கியவரான உமாதேவியார் முன்னாளில் ஈன்று அருளிய முருகப் பெருமானே!

         விரிந்த பூமியானது எரியவும்,  எட்டு குல மலைகளும் நெரிந்து பொடிபடவும், வேகத்துடன் கூடிய மயில்வாகனத்தின் மீது, எழுந்தருளி வருபவரே!

         ஏழு கடல்களும் ஒலிக்க இராக்கதர்களின் உயிரை இரையாகக் கொள்ளும் வேலாயுதத்தை உடையவரே!

         தேவர்களும், முனிவர்களும் வணங்கித் துதித்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் திருநடனம் புரிந்தருளும் பெருமையின் மிக்கவரே!

         ஏழு கடல்களின் கரையிலுள்ள சிறு மணல்களின் குவியலை எல்லாம்  அளவிட முடியாத அவைகளை இத்துணை மணல் என்று அளவிட்டால், நான் உலகில் அவதாரம் புரிந்த துன்பத்துடன் கூடிய என் பிறவி அதிகமாகும்.

     அடியேனது உடலும், உயிரும், பொருளும், இனி தேவரீருக்கே அடைக்கலம்,

         இனியும் உமது அருளைப் பெறாமல் இந்த உடலை விட என்னால் முடியாது.

         கழுகு, நரி, நெருப்பு, பூமாதேவி, கூற்றுவன், பிரமதேவனும், என் விஷயத்தில் சோர்வடைந்து விட்டார்கள்.

         அடியேனை ஆட்கொள்ளுவது உமது கடன் ஆகும். உமது திருவடிக்கு அபயம். அடியேன் தேவரீரது அடிமை ஆகும்.

         விரைவில் தேவரீருடைய திருவடிக் கமலங்களைத் தந்து அருளுவீர்.


விரிவுரை


எழுகடல் மணலை அளவிடின்..................  பிறவி அவதாரம் ---

பிறவித் துன்பத்தையும், அளவிடற்கரிய பிறப்புக்களை நாம் எடுத்தோம் என்பதையும் இத் திருப்புகழ் இனிது விளக்குகின்றது. பாடலின் நடை மிகவும் அழகாக அமைந்துள்ளது. சிறிய சிறிய சொற்களால் பெரிய பெரிய கருத்துக்களை விளக்குகின்றனர். அன்பர்கள் எத்தனை முறை ஓதினாலும் தெவிட்டாத தேன் போல் தித்திக்கின்றது.

கடலின் மருங்கில் உள்ள மணல்களை நாம் கண்டிருக்கின்றோம்.  மிகவும் பொடி மணல்கள். அவற்றை யாராவது எண்ணி அளவிட முடியுமா? ஒரு கடலின் அருகில் உள்ள மணல்களையே அளவிட முடியாது எனின், ஏழு கடல்களின் மணல்களை அளவிட வல்லார் யாவர்?  ஒரு பெரிய குழு அமைத்து, கணக்கில் வல்லமை உடைய அக் குழுவினர் இராப்பகலாக முயன்று, பல ஆண்டுகளாக உழைத்து ஒரு வேளை, கடலின் மருங்கில் உள்ள மணல்களை ஒருவாறு அளவிட்டு, அதை ஏழால் பெருக்கி, ஏழு கடல்களின் மணல்களையும் அளவிட்டாலும் அளவிட்டு விடலாம். நாம் பிறந்த பிறப்புக்களை அளவிட முடியாது. ஏன்? அவற்றை விட அதிகம் ஆதலின்.  நினைக்கும்பொழுதே தலை சுற்றுகின்றது. அம்மா! எவ்வளவு பிறப்புக்களை எடுத்து விட்டோம். மேலும் மேலும் வினைகளைப் புரிந்துகொண்டு இருந்தால், இன்னும் எத்தனைப் பிறப்புக்கள் எடுக்கவேண்டுமோ?

என்று நீ, அன்று நான் என்ற திருவாக்கின்படி, இறைவன் உள்ள காலம் தொட்டு, உயிர்களாகிய நாமும் இருக்கின்றோம். மாறி மாறிப் பலப்பல பிறப்புக்களை எடுக்கின்றோம். நாம் எடுக்காத பிறவி இல்லை. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் என்கின்றார் மணிவாசகப் பெருமான்.

அருள்பழுத்து அளிந்த கருணை வான்கனி!
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு அமிர்த வாரி! நெடுநிலை
மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாண!நின்

வழுவாக் காட்சி, முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி!
யான்ஒன்று உணர்த்துவன், எந்தை! மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்ற நீ நினைந்த நாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயரு ஆகியும் தந்தையர் ஆகியும்
வந்து இலாதவர் இல்லை, யான் அவர்
தந்தையர் ஆகியும், தாயரு ஆகியும்

வந்து இராததும் இல்லை, முந்து
பிறவா நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை,
யான் அவை

தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை,
அனைத்தே காலமும் சென்றது, யான்இதன்
மேல் இனி
இளைக்குமாறு இலனே, நாயேன்
நந்தாச் சோதி!நின் அஞ்செழுத்து நவிலும்

தந்திரம் பயின்றதும் இலனே, தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே, ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலரா,
சொன்னது மந்திரமுஆக, என்னையும்
இடர்ப்பிறப் பிறப்புஎனும் இரண்டின்

கடல் படா வகை காத்தல்நின் கடனே.  --- பட்டினத்தார்.

அப்படி ஏழும் ஏழும் வகுத்து வழாது போதினின்
     அக்ரம் வியோம கோளகை ...... மிசைவாழும்
அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி,
     அனைத்துஉரு ஆய காயம் ...... அதுஅடைவேகொண்டு,

இப்படி யோனி வாய்தொறும் உற்பவியா விழா, ல-
     கில் தடுமாறியே திரி ...... தருகாலம்,
எத்தனை ஊழி காலம் எனத்தெரி யாது, வாழி,
     இனிப் பிறவாது நீ அருள் ...... புரிவாயே... --- திருப்புகழ்.

ஒவ்வொரு பிறப்பிலும் வந்த தாயர்கள் தந்த முலைப்பாலை முழுவதும் ஒருங்கு கூட்டின், திருமால் பள்ளிகொள்ளும் பாற்கடல் சிறிது. அதனினும் அதிக பாலை அருந்தினோம் என்கின்றார் குருநமசிவாயர்.

எடுத்த பிறப்பு எல்லாம் எனக்கு வந்த தாயர்
கோடுத்த முலைப்பால் அனைத்தும் கூட்டினும் --- அடுத்தவிறல்
பன்நாக அணைத் துயில் மால் பால்ஆழியும் சிறிதாம்,
மன்னா! சிதம்பர தேவா.

மேலும் பிறவியைப் பெரும் கடல் என்றார் திருவள்ளுவ தேவர். கடலை அளவிட வல்லவர் யாவர். அதில் தோன்றும் அலைகளை எண்ணுதற்கு இயலுமோ? அதுபோல எடுத்த பிறப்பும் அளவற்றவை.

பிறவிப் பெருங் கடல் நீந்துவர், நீந்தார்
இறைவன் அடி சேராதார்.

உலகில் உள்ளெல்லா ஊர்களிலும் பிறந்தோம். எல்லாப் பேர்களையும் தாங்கினோம். எல்லா மொழிகளையும் பேசினோம்.  எல்லா வீடுகளையும் சொந்தம் என்றோம். எல்லோரும் நமக்குத் தாய் தந்தையர் ஆயினர். எல்லோரையும் நாம் பெற்று வளர்த்தனம்.

எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய் ? பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டு அழைக்க ஏன் என்றேன் - நித்தம்
எனக்குக் கலை ஆற்றாய், ஏகம்பா, கம்பா,
உனக்குத் திருவிளையாட்டோ?                --- பட்டினத்தார்.

இங்ஙனம் அனந்த பிறப்பு வருவதற்குக் காரணம் கன்மமே.  ஓயாது கன்மங்களைப் புரிவதால், அக் கன்மம் காரணமாக பலப்பல பிறப்புக்கள் ஒழியாது வந்துகொண்டே இருக்கின்றன.  கடல் எவ்வளவு விசாலமோ, மலை எவ்வளவு உயரமோ, அவ்வளவு கன்மங்களைப் புரிந்தோம்.  அதனால் கடல் மணல் எவ்வளவோ, அவ்வளவு பிறப்புக்களை எடுத்தோம் என்கின்றார் தாயுமானார்.

கடல் எத்தனை, மலை எத்தனை, அத்தனை கன்மம், தற்கு
உடல் எத்தனை, த்தனை கடல் நுண்மணல் ஒக்கும், ந்தச்
சடலத்தை நான்விடு முன்னே உனைவந்து சார,இருட்
படலத்தை மாற்றப் படாதோ நிறைந்த பராபரமே.

இனி, சுவாமிகள் பிறவி என்னாமல் "இடர் பிறவி" என்பதும் சிந்திக்கற்பாலது. கருவில் உறையும்போது உண்டாகும் வேதனையும், ஆலையில் இட்ட கரும்பு போல் நொந்து பிறக்கும்போது உண்டாகும் வாதனையும், பேயினாலும், பல்வேறு நோயினாலும், பசி, காமம், மயக்கம், நித்திரை, மூப்பு, மரணம் முதலியவைகளால் உண்டாகும் அளவிடற்கரிய துன்பமும் விளைவதால், இடர் பிறவி என்றனர். இப் பிறவித் துன்பத்தை ஒழிப்பதுவே பிறப்பினால் ஆய பயன் ஆகும். எடுத்த இப் பிறப்பைக் கொண்டு, இனி பிறப்பு எடாத வகையை முயன்று செய்தல் வேண்டும்.  அவ்வகை தான் யாதோ எனின், பிறவா யாக்கைப் பெரியோன் ஆகிய உறைவனுடைய திருவடியை வழிபடுவதே ஆகும்.

கன்று எடுத்துவிளவு எறிந்து கால்எடுத்த
மழைக்கு உடைந்த காலிக்காக,
குன்று எடுத்த மால்விடையின் கொடிஎடுத்து
வடிவு எடுத்துக் கூற ஒணாத
மன்று எடுத்த சேவடியின் மலர் எடுத்துச் சாத்தி
அன்பின் வழிபட்டோர்கள்
இன்று எடுத்த உடல்பிறவி இனிஎடாவண்ணம்
எண்ணம் எய்துவாரே.                    --- சிவரகசியம்.

மேலும் பிறவி என்று மட்டும் கூறினால் அமையும். அங்ஙனம் கூறாமல், "எனது இடர் பிறவி அவதாரம்" என்றனர். 

அவதாரம் என்பதற்கு இறங்குதல் என்று பொருள். கீழ் நிலையில் உள்ள மாந்தர்களைக் கை தூக்கிக் கரை ஏற்றும் பொருட்டு, மேல் நிலையில் உள்ள தேவர்களோ, அருளாளர்களோ மண்மிசை வந்து பிறப்பதற்கு அவதாரம் என்று பேர். திருமால் பத்து முறை அவதரித்தார்.  எதன் பொருட்டு? உலகம் உய்யும் பொருட்டு.  "ஆண்டவனே! அடியேன் எடுத்த அவதாரத்திற்கு அளவில்லை" என்று கூறும் சொல் திறம் உன்னி உன்னி உவக்கத்தக்கது.

இனி உனது அபயம் எனது உயிர் உடலும் ---

பிறவித் துன்பத்தை உணர்ந்தேன். ஆதலின், உமது திருவடிக்கு அடைக்கலம் புகுந்தேன். அடியேனுடைய உயிர் உடல் பொருள் மூன்றும் உன்னுடையவே. ஆதலின், என்னைக் கை நழுவ விடாதீர் என்று சுவாமிகள் வேண்டுகின்றார்.

இனி உடல் விடுக முடியாது ---

இனி திருவருள் பெறாமல் இந்த உடலை அடியேன் வீணே விடமாட்டேன்.

உடலோடு கூடி வாழ முடியாது என்று உரை கூறுவாரும் உளர். அது பொருந்துமாறு இல்லை.

கழுகொடு நரியும்.................கமலனும் மிகவும் அயர்வானார் ---

ஒவ்வொரு பிறப்பிலும் வந்த உடம்பைக் கொத்தித் தின்று தின்று கழுகும் நரியும் இளைத்தன. எரித்து எரித்து நெருப்பும் அலுத்து விட்டது.  புதைத்துப் புதைத்துப் பூமியும் இடர் உற்றது. பிடித்துப் பிடித்துக் கூற்றுவனும் அலுத்து விட்டான். விதி விலக்கு எழுதி அயனும் அயர்த்தனன். "இறைவனே! அடியேன் பல பிறவிகளை எடுப்பதனால் துன்பம் என்னோடு மட்டும் அல்லாமல் பலர்க்கும் துன்பம் எய்துகின்றது. என்னால் பிறருக்கு நன்மை இல்லையாயினும் தீமை இல்லாமலாவது இருக்க வேண்டாமா?  ஆதலினால் பிறவி வேண்டாம்.

மண்ணும் தணல் ஆற, வானும் புகை ஆற,
எண்ணரிய தாயும் இளைப்பு ஆற --- பண்ணும்அயன்
கை ஆறவும், அடியேன் கால் ஆறவும் கண்பார்,
ஐயா, திருவை யாறா.

மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்,
வேதாவும் மை சலித்து விட்டானே --- நாதா
இருப்பையூர் வாழ் சிவனை, இன்னம் ஓர்அன்னை
கருப்பை ஊர் வாராமல் கா.                   --- பட்டினத்தார்.

கடன் உனது அபயம் ---

உயிர்களுக்குத் தனு கரண புவன போகங்களைக் கொடுத்த இறைவனுக்கு, அவ் உயிர்களை உய்யக் கொள்வது கடனே ஆகும். மக்களைக் காப்பது மாதா பிதாக்களுக்குக் கடன் போல. மரம் வைத்தவனுக்கு அவைகளைத் தண்ணீர் விட்டு வளர்த்தல் கடப்பாடே ஆகும்.

நீயே படைத்த உடல் நீ காப்பை, கா என்ன
நாயேனுக்கு என் பொறுப்பு, நாயகனே! --- ஆயும் மறைச்
சீர்கேட்கும் சோணகிரிச் சீமானே! வைத்தவரை
நீர் கேட்குமோ மரங்கள் நின்று.

காக்கக் கடவிய நீ, காவாது இருந்தக்கால்
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா.....

கலியாண சுபுத்திரன் ஆக, குறமாது தனக்கு விநோத!
     கவின்ஆரு புயத்தில் உலாவி ...... விளையாடிக்

களிகூரும் உனைத் துணை தேடும் அடியேனை சுகப்படவே வை
     கடன்ஆகும், இதுக் கனம் ஆகும் ...... முருகோனே.    --- (நிலையாத) திருப்புகழ்.

என்பன ஆதி அருள் திருவாக்குகளைச் சிந்தித்தல் வேண்டும்.

அடிமை உன் அடிமை, கடுகி உன் அடிகள் தருவாயே ---

முருகா! அடியேன் உனக்கு வழிவழியாக அடிமை ஆகும்.  இன்னும் சிலநாள் தாமதித்துக் காப்பாற்றுவோம் என்று கருதற்க. யாக்கை நீர்க்குமிழிக்கு நிகரானது ஆதலினாலும், அருள் தாகம் மேலிட்டு நாயேன் துடிக்கின்றேன் ஆதலினாலும், விரைவில் உமது தாமரைத் தாட்களைத் தந்தருள்வீர்.

விழு திகழ் அழகி ---

விழு என்பது விழுமம் என்பதன் முதல் நிலை. இப்படிப் பொருள் கொள்ளமாட்டாது, "விழிதிகழழகி" என்று திருத்தி சில பிரதிகளில் அச்சிட்டு இருப்பது தவறு.

விரி தலம் எரிய குலகிரி நெரிய விசை பெறு மயில் ---

சூரன் சக்கரவாகப் பறவை வடிவம் கொண்டு பொருத பொழுது, புள் உருவம் கொண்டவனைத் தேரில் இருந்து போரிடுவது முறை அல்ல என்று முருகப் பெருமான் கருத, அக் கருத்தை உணர்ந்த இந்திரன் மயில் உருவம் கொண்டான். அந்த மயிலின் மீது பெருமான் ஏறி, சூரனைக் கொல்ல வரும் போது விரி தலம் எரிந்தது. குலகிரி நெரிந்தது.

எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை இரைகொளும் அயில் ---

வேல், முருகவேள் திருக்கரத்தினின்றும் புறப்பட்ட போது, ஏழு கடல்களும் கதறின. குலகிரிகள் இடிந்து துகள்பட்டன.  அவுணர்கள் மடிந்து உயில் விட்டனர்.  வேலுக்கு அவுணர் உயிர் இரை ஆயிற்று.

இமையவர் முனிவர் பரவிய புலியூரினில் நடமருவும் ---

தில்லையில் எண்ணிலா முனிவரும், விபுதரும் சதா நிருத்தக் கோலம் கண்டு புகழ்ந்து பாடுகின்றனர். பொன்னம்பலத்தில் நடிக்கும் பொருளே முருகவேள். வேறு அன்று.

கருத்துரை

பார்வதி பாலா! மயில் வாகனா! வேலாயுதா! சிதம்பர நாதா! இனிப் பிறவா வரமும், உமது திருவடியும் தருவீர்.


                 

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...