பயனற்றவை

27. பயன் என்ன?

கடல்நீர் மிகுந்து என்ன? ஒதிதான் பருத்து என்ன?
     காட்டு இலவு மலரில்என்ன?
கருவேல் பழுத்து என்ன? நாய்ப்பால் சுரந்து என்ன?
     கானில்மழை பெய்தும்என்ன?

அடர்கழுதை லத்திநிலம் எல்லாம் குவிந்து என்ன?
     அரியகுணம் இல்லாதபெண்
அழகாய் இருந்து என்ன? ஆஸ்தான கோழைபல
     அரியநூல் ஓதி என்ன?

திடம்இனிய பூதம்வெகு பொன்காத்து இருந்த் என்ன?
     திறல்மிகும் கரடிமயிர்தான்
செறிவாகி நீண்டு என்ன? வஸ்த்ரபூ டணமெலாம்
     சித்திரத்து உற்றும் என்ன?

மடமிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத
     வம்பர்வாழ் வுக்குநிகராம்.
மயில்ஏறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

          இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     கடல் நீர் மிகுந்து என்ன --- கடலிலே மிகுதியான நீர் இருந்து பயன் என்ன?

     ஒதி தான் பருத்து என்ன --- ஒதிய மரமானது பருத்து இருந்து பயன் என்ன?

     காட்டு இலவு மலரில் என்ன --- காட்டு இலவு மலர்ந்தால் பயன் என்ன?

     கரு வேல் பழுத்து என்ன --- கருவேல மரம் பழுத்துப் பயன் என்ன?

     நாய்ப்பால் சுரந்து என்ன --- நாய்க்குப் பால் சுரந்தால் பயன் என்ன?

     கானில் மழைபெய்தும் என்ன --- காட்டிலே பெய்த மழையால் யாருக்குப் பயன்?

     அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன --- கழுதைச் சாணம் அடர்த்தியாக நிலம் முழுதும் குவிந்தாலும் பயன் என்ன?,

     அரிய குணம் இல்லாத பெண் அழகாய் இருந்து என்ன ---நற்குணங்கள் பொருந்தி இராத பெண் ஒருத்தி அழகாய் இருந்து என்ன பயன்?

     ஆஸ்தான கோழை பல அரியநூல் ஓதி என்ன --- அவையிலே பேசுவதற்கு அஞ்சுகின்ற கோழை ஒருவன் அருமையான நூல்கள் பலவற்றைக் கற்றும் என்ன பயன்?

     திடம் இனிய பூதம் வெகு பொன் காத்திருந்து என்ன --- ஆற்றல் உடைய பூதமானது மிகுந்த செல்வத்தைக் காத்திருந்தாலும், அது அடையும் பயன் என்ன?

     திறல் மிகும் கரடி மயிர் தான் செறிவாகி நீண்டு என்ன?
--- வலிமை மிக்க கரடிக்கு அடர்த்தியான நீண்ட மயிர் இருப்பதால் என்ன பயன்?

     வஸ்த்ர பூடணம் எல்லாம் சித்திரத்து உற்றும் என்ன --- ஆடை அணிகலன்கள் ஓவியத்திற்கு அணியப்பட்டு இருப்பதால் என்ன பயன்?

     இவை எல்லாம்,

     மடம் மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் --- அறியாமை மிகுந்து இருந்து, பிறர் யாருக்கும் பயன்படாத வீணரின் வாழ்வுக்கு நிகர் ஆகும்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...