44. நன்று தீது ஆதல்
வான்மதியை
நோக்கிடின் சோரர்கா முகருக்கு
மாறாத வல்வி டமதாம்!
மகிழ்நன் தனைக்காணில் இதமிலா விபசரிய
மாதருக் கோவி டமதாம்!
மேன்மைதரு
நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்
மிக்கபேர்க் கதிக விடமாம்!
வித்தியா திபர்தமைக் கண்டபோது அதிலோப
வீணர்க்கெ லாம்வி டமதாம்!
ஈனம்மிகு
புன்கவி வலோர்க்கு அதிக சபைகாணில்
ஏலாத கொடிய விடமாம்!
ஏற்றம்இல் லாதபடு பாவிகட்கு அறம் என்னில்
எந்நாளும் அதிக விடமாம்!
ஆனதவ
யோகியர்கள் இதயதா மரைஉறையும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
ஆன தவயோகியர்கள் இதய தாமரை உறையும்
அண்ணலே
--- ஆக்கம் என்னும் வீடுபேற்றைத் தரும் தவயோகத்தைப் பயிலுகின்றவரின் இதயத் தாமரை மலரில்
எழுந்தருளி இருக்கும் பெரியோனே!
அருமை மதவேள் --- அருமை மதவேள்
என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே ---
சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
சோரர் காமுகருக்கு வான்மதியை நோக்கிடின்
மாறாத வல்விடமது ஆம் --- திருடருக்கும் காமாந்தகாரர்களுக்கும் வானத்தில் தோன்றும்
முழுநிலவானது நீங்காத கொடிய நஞ்சு போல வெறுப்பைத் தரும்.
இதம் இலா விபசரிய மாதருக்கு மகிழ்நன் தனைக் காணில் விடமது
ஆம் ---
உள்ளத்திலே நன்மை இல்லாத, பரத்தைத் தொழில்
உடைய
மாதருக்குத் தனது கணவனைப் பார்த்தால் நஞ்சு போல் இருக்கும்,
சுர ரோகம் மிக்க பேர்க்கு மேன்மை தரு
நல்சுவை பதார்த்தமும் அதிக விடம் ஆம் --- காய்ச்சல் நோய்
மிகுந்தவர்க்கு உயர்ந்த இனிய சுவைமிக்க பதார்த்தங்கள் மிகுந்த விடத்தைப் போல வெறுப்பை
உண்டாக்கும்.
அதி லோப வீணர்க்கு எலாம் வித்தியாதிபர்
தமைக் கண்டபோது விடமது ஆம் --- மிகுந்த ஈகைப் பண்பு இல்லாத வீணர்கள்
யாவருக்கும் கலைவாணரைக் கண்டால், நஞ்சினைக் கண்டது
போல வெறுப்பு உண்டாகும்.
ஈனம் மிகு புன்கவி வலோர்க்கு அதிக சபை
காணில் ஏலாத கொடிய விடம் ஆம் --- இழிவு மிக்க புன்மையான கவிகளைப்
பாடுகின்றவருக்கு, அறிவுடையோர்
கூடியுள்ள சபையைக் கண்டால், பொறுக்க முடியாத கொடிய
விடத்தைக் கண்டது போல் இருக்கும்.
ஏற்றம் இல்லாத படுபாவிகட்கு அறம் என்னில்
எந்நாளும் அதிகவிடம் ஆம் --- மேன்மைக் குணம் இல்லாத பெரும் பாவிகளுக்கு அறம் என்றால்
எப்போதும் பெருநஞ்சு போல வெறுப்பை உண்டாக்கும்.
விளக்கம் --- நிலவு
ஒளியை உலகில் உள்ளோர் யாவரும் விரும்புவார்கள். ஆனால், அது திருடர்களுக்கும், காமுகர்களுக்கும்
இனிமையைத் தராது. மகளிருக்குத் தனது கணவனைக் கண்டால் பெருமகிழ்ச்சி உண்டாகும்.
பள்ளத்தை நோக்கிப் பாயும் வெள்ளம்போல் கணவைனைக் கண்டவுடன் பெருமகிழ்ச்சி
உண்டாகும். ஆனால், பரத்தைத் தொழிலிலே ஈடுபட்டு உள்ள பெண்ணுக்குக் கணவனைக்
கண்டால் வெறுப்புத் தோன்றும். காய்ச்சல் நோயாளனுக்கு நாவிலே கசப்பு உணர்வு
இருக்கும். எல்லோராலும் விரும்பப்படும் இனிய சுவை உணவு அவனுக்கு கசக்கும். வெறுப்புணர்வை
உண்டாக்கும். யாருக்கும் உதவாமல் உள்ள, கஞ்சப் புத்தி உள்ளவனுக்கு, அறிவு உடைய புலவர்களைக்
கண்டால் பிடிக்காது. பாவத்தையே பயின்று வருபவனுக்கு அறம் செய்வது பிடிக்காது. ஆக, நல்ல நிலையில் இல்லாதவர்க்கு, நல்லவையும் தீயவையாய்த்
தோன்றும்.
No comments:
Post a Comment