காதவழி பேர் இல்லான் கழுதை




25. காதவழி பேர் இல்லான் கழுதை.

ஓத அரிய தண்டலையார் அடிபணிந்து,
     நல்லவன்என்று உலகம் எல்லாம்
போதம் மிகும் பேருடனே புகழ் படைத்து
     வாழ்பவனே புருடன், அல்லால்,
ஈதல் உடன் இரக்கம் இன்றிப் பொன்காத்த
     பூதம் என இருந்தால் என்ன?
காதவழி பேர் இல்லான் கழுதையோடு
      ஒக்கும்எனக் காண லாமே!

         இதன் பொருள் ---

     ஓத அரிய தண்டலையார் அடி பணிந்து --- சொல்லுதற்கு அரிய புகயை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் இறைவரின் திருவடிகளைப் பணிந்து,

     உலகம் எல்லாம் நல்லவன் என்று போதம் மிகும் பேருடனே --- உலகில் உள்ளோர் எல்லாம் ‘இவன் நல்லவன்' என்று போற்றும் அறிவு மிக்க நற்பெயருடன்,

     புகழ் படைத்து வாழ்பவனே புருடன் --- புகழையும் படைத்து வாழ்கின்றவனே ஆண்மகன் ஆவான்,

     அல்லால் --- அவ்வாறு இல்லாமல், 

     ஈதலுடன்  இரக்கம்  இன்றி --- இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாது கொடுத்து உதவும் கொடைப் பண்பும், உயிர்கள் மீது தயவும் இல்லாமல்,

     பொன்காத்த பூதம் என இருந்தால் என்ன --- பொன்னைக்  காக்கும் பூதம்போல, தான் ஈட்டிய பொருளைக் காத்து வைத்து இருப்பதால் பயன் என்ன?

     காதவழி பேர் இல்லான் கழுதையோடு ஒக்கும் எனக் காணலாமே --- காத தூரம் தன்னுடைய புகழ் விளங்குமாறு வாழாதவன் கழுதைக்குச் சமமாவான் என்று அறியலாம்.

     விளக்கம் --- ஓதுதல் - சொல்லுதல். ஓதுதலாவது இறைவனுடைய பொருள் சேர் புகழை எப்பொழுதும் சொல்லுதல். "பொருள் சேர் புகழ் புரிந்தார்" என்னும் திருக்குறள் சொல்லுக்கு, "புரிதல்" என்பது எப்பொழுதும் சொல்லுதல் எனப் பரிமேலழகர் கூறியருளியது காண்க. அரிது என்பது இறைவனுடைய புகழைச் சொல்லி மாளாது எட்டும் கருத்தில் வந்தது.  "காணலாம்" என்பது உலகத்தார் சொல்லுவதை அறியலாம் என்று கொள்க.  காத தூரம் என்பது ஒரு அளவுக்காகச் சொல்லப்பட்டது.

     "செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்பது புறநானூற்றுப் பாடல் வரி. செல்வத்தை ஒருவன் படைத்து இருப்பதன் பயன் பிறர்க்குக் கொடுத்து உதவுவதற்கே. நாமே இச் செல்வம் முமுழுதையும் அனுபவித்துக் கழிக்கலாம் என்றால், அது தப்பிப் போகும். எப்படித் தப்பும்? ஒன்று வாழ்நாள் முடியும். அல்லது, எவ்விதத்திலாவது இழப்பாய் முடியும். செல்வத்தினால் ஆய பயனைப் பெறாது வைத்து இருப்பதும், இழப்பாகவே கருதப்படும் என்கின்றது நாலடியார்.

உண்ணான், ஒளிநிறான், ஓங்குபுகழ் செய்யான்,
துன்அரும் கேளிர் துயர் களையான் --- கொன்னே
வழங்கான், பொருள் காத்து இருப்பானேல், ஆஆ,
இழந்தான் என்று எண்ணப்படும்.

தானும் உண்ணாமல், பிறருக்கு உதவிப் பெருமைப் படாமல், புகழை ஈட்டாமல், தன் சுற்றத்தார் துயர் துடைக்கப் பொருளைத் தந்து உதவாமல், தேடிய செல்வத்தை வீணே பூட்டி வைத்துக் காத்து இருப்பவன் வாழ்க்கை, சீ சீ வாழ்க்கையா அது? அப்படிப்பட்டவன் இருந்து என்ன? இறந்து என்ன? அவன் இருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுவான்.

அவன் கேடு கெட்டவனாக உலகத்தாரால் கருதப்படுவான்.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைபு புதைத்து வைத்துக்
கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள் --- கூடுவிட்டுஇங்கு
ஆவிதான் போயினபின் யாரே அனுவிப்பார்?
பாவிகாள்! அந்தப் பணம்.

என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.

நாயின் பால் நாய்க்குத் தான் பயன்படும். நல்லவர்களுக்குப் பயன்படாது. அப்படிப்பட்ட பாவிகளின் பணமானது அவரைத் தண்டிப்பவர்களுக்கே பயன் தரும். இறைவன் அன்பர்களுக்குக் கிட்டாது.

பாவிதனம் தண்டிப்போர் பால் ஆகும், அல்லது அருள்
மேவு சிவன் அன்பர் பால் மேவாதே --- ஓவியமே!
நாயின்பால் அத்தனையும் நாய்தனக்கு ஆம், அன்றியே
தூயவருக்கு ஆகுமோ? சொல்.

என்கின்றது நீதி வெண்பா.

எனவே, "ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்றார் திருவள்ளுவ நாயனார்.

இல்லாதார்க்கு ஈதல், இறைவனுடைய புகயை ஓதல் ஆகிய இரண்டும் இல்லாதவன், பயன்றறவன்.

     கொடைப் பண்பு ஆகிய ஆன்ம நேயமும், உயிர்க்கு இரங்குவதாகிய அருள் பண்பு என்னும் ஜீவகாருண்ணியமும் கொண்டவர்களே அடியவர்கள்.  இதனைப் பின் வரும் அருட்பாடல்களால் அறியலாம்..

வாள்ஆர்கண் செந்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை
தோள்ஆகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்குஇருக்கும்
தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பரிய
தொன்மையான் தோற்றம்கேடு இல்லாதான் தொல்கோயில்
இன்மையால் சென்றுஇரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.   --- திருஞானசம்பந்தர்.

பொன்னிநீர் நாட்டின் நீடும் பொற்பதி, புவனத்து உள்ளோர்
இன்மையால் இரந்து சென்றார்க்கு இல்லைஎன்னாதே ஈயும்
தன்மையார் என்று, நன்மை சார்ந்த வேதியரை, சண்பை
மன்னனார் அருளிச் செய்த மறைத்திரு ஆக்குஊர் ஆக்கூர்.  --- பெரியபுராணம்.

ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்தபோது, அடியில்  தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க, முன்பு நின்று இனிய கூறி,
நாளும்நல் அமுதம் ஊட்டி, நயந்தன எல்லாம் நல்கி,
நீளும் இன்பத்துள் தங்கி, நிதிமழை மாரி போன்றார்.    --- பெரியபுராணம்.

இதையே அருணகிரிநாதப் பெருமானும் திருப்புகழில் கூறுமாறு காண்க.

ஈதலும், பல கோலால பூஜையும்,
     ஓதலும், குண ஆசார நீதியும்,
          ஈரமும் குரு சீர்பாத சேவையும் ...... மறவாத,

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
     சோழ மண்டல மீதே, மனோகர!
          ராஜ கெம்பிர நாடு ஆளும் நாயக! ...... வயலூரா!

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...