உருத்திராக்கப் பூனை
29. உருத்திராக்கப் பூனை!

காதிலே திருவேடம்! கையிலே
   செபமாலை! கழுத்தின் மார்பின்
மீதிலே தாழ்வடங்கள்! மனத்திலே
   கரவடம்ஆம் வேடம் ஆமோ?
வாதிலே அயன்தேடும் தண்டலைநீள்
   நெறியாரே! மனிதர் காணும்
போதிலே மௌனம்! இராப் போதிலே
   ருத்திராக்கப் பூனை தானே!

               இதன் பொருள் ---

     வாதிலே அயன் தேடும் தண்டலைநீள் நெறியாரே --- திருமாலும் பிரமனும் தாமே பரம்பொருள் என்று தருக்குற்று வாது புரிந்த போது, அழல் பிழம்பாகத் தோன்றிய சிவபெருமானுடைய திருமுடியைக் காண பிரமன் தேடிய திருத்தண்டலை நீள்நெறி இறைவரே!

     காதிலே திருவேடம் --- காதில் உருத்திராக்கம் அணிந்த சைவ வேடமும்,

     கையிலே செபமாலை --- கையில் செபமாலையும்,

     கழுத்தில் மார்பின் மீதில் தாழ்வடங்கள் --- கழுத்திலும் மார்பிலும் அணிந்துள்ள உருத்திராக்க மாலைகளையும் உடையோராய்,

     மனத்திலே கரவடம் ஆம் வேடம் ஆமோ --- உள்ளத்திலே வஞ்சகம் ஆகிய தோற்றம் தக்கது ஆகுமா?

இப்படி வஞ்சக வேடம் பூண்டோர் எல்லாம்,

     மனிதர் காணும் போதிலே மௌனம் --- மக்கள் பார்க்கும் போது கண் மூடி, வாய் பேசா மௌனியாய் இருப்பர்,

     இராப் போதிலே உருத்திராக்கப் பூனைதான் --- இரவிலே தாம் பூண்டிருந்து வேடத்திற்குப் பொருந்தாத செயல்களைப் புரியும் இவர்கள் நிலையானது, பூனையைப் போன்று இருப்பதால், இவர்களை உருத்திராக்கப் பூனை என்றே சொல்லலாம்.


     விளக்கம் --- திருமாலும் நான்முகனும் தாமே பெரியவர் எனத் தனித்தனிச் செருக்கிய போது, சிவபெருமான் அவர்கள் இடையிலே நெருப்பு உருவாகத் தோன்றினர். அதனைக் கண்ட இருவரும் திகைத்து, தம்மில் எவர் அதன் அடியையும் முடியையும் காண்கின்றாரோ, அவரே பெரியர் என முடிவு செய்து திருமால் பன்றியாகி திருவடியையும், பிரமன் அன்னப் பறவை வடிவமாகி முடியையும் தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர்.

"பிரமன் அரி என்று இருவரும் தம் பேதைமையால்,
பரமம், யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,
அரனார் அழல் உருவாய் ஆங்கே அளவிறந்து
பரம் ஆகி நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ"

என்னும் திருவாசகப்பாடல் காண்க.

கர வடம் - வஞ்சகம். உள் ஒன்றும் புறம்பு ஒன்றுமாகத் திரிவோரை ‘உருத்திராக்கப் பூனை' என்பது மரபு.  "உள் ஒன்று வைத்து, புறம்பு ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்றார் வள்ளல் பெருமான்.

"பூனைக்கு இல்லை தவமும் தயையும்" என்கின்றது நறுந்தொகை.

பூனையானது கண்ணை மூடிக் கொண்டு இருப்பதால் அது தவம் புரிகின்றது என்பதாக இல்லை. அதனிடத்து தவம் புரிவோருக்கு அமைந்திருக்க வேண்டிய பூத தயை என்னும் உயிர் இரக்கம் இல்லை. கண்ணை மூடிக் காண்டு இருக்கும் வேளையில் எலியினது ஒசை கேட்டால் உடனே பாய்ந்து, அதனைக் கவ்வித் தின்னும்.
  
வேடத்தைப் புனைந்து கொண்டு, தவ ஒழுக்கமும், சீவகாருணியமும் உடையவர் போல் காணப்படுகிறவர்கள் அவை இல்லாமலும் இருப்பர். வேநெறி நில்லாதவர்கள்.  இவர்கள் "பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பலனாக". புற வேடத்தினாலேயே ஒருவரை மதிக்கலாகாது.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...